Tuesday, May 12, 2026

P.487 - இடையாறு - ஒருமா வரைவில்

2019-10-19

P.487 - இடையாறு

--------------

(சந்த வஞ்சிவிருத்தம் - தனனா தனனா தனதானா - சந்தம். முதற்சீர் தானா என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.37.1 - "அரவச் சடைமேல் மதிமத்தம்")


1)

ஒருமா வரைவில் தனையேந்திக்

கருதார் புரமூன் றெரிசெய்தான்

இருதாள் நினைவார் இடர்தீர்ப்பான்

எருதூர் பரனூர் இடையாறே.


ஒரு மா வரைவில்தனை ஏந்திக் - ஒரு பெரிய மேருமலையால் ஆன வில்லை ஏந்தி; (வரை - மலை);

கருதார் புரம் மூன்று எரிசெய்தான் - பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரித்தவன்; (கருதார் - பகைவர்);

இருதாள் நினைவார் இடர் தீர்ப்பான் - தனது இரு-திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

எருது ஊர் பரன் ஊர் இடையாறே - இடபத்தை வாகனமாக உடைய பரமனது ஊர் திருவிடையாறு ஆகும்; (ஊர்தல் - ஏறுதல்);


2)

மடமா தொருபால் மகிழீசன்

விட(ம்)மா மணியா அணிகண்டன்

படமார் அரவைப் புனைமார்பன்

இடமாம் எழிலார் இடையாறே.


மட-மாது ஒருபால் மகிழ் ஈசன் - அழகிய உமையை ஒருபக்கம் பாகமாக விரும்பிய ஈசன்;

விடம் மா மணியா அணி கண்டன் - ஆலகாலத்தை அழகிய மணியாகக் கண்டத்தில் அணிந்தவன்;

படம் ஆர் அரவைப் புனை மார்பன் - படம் திகழும் பாம்பை மார்பில் புனைந்தவன்; (படம் - பாம்பின் படம்);

இடம் ஆம் எழில் ஆர் இடையாறே - அப்பெருமான் உறையும் இடம் ஆவது அழகிய திருவிடையாறு;


3)

அலையார் கடல்நஞ் சமுதுண்டான்

மலையான் மருகன் மழவேற்றன்

தலைமா லையினான் தலமென்பர்

இலையார் பொழில்சூழ் இடையாறே.


அலை ஆர் கடல்-நஞ்சு அமுது உண்டான் - அலை மிக்க பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதாக உண்டவன்;

மலையான் மருகன் - இமவான் மகளுக்குக் கணவன்; (அப்பர் தேவாரம் - 6.38.1 - "மலையான் மருகனாய் நின்றாய் நீயே");

மழ-ஏற்றன் - இளைய எருதை வாகனமாக உடையவன்; (மழ - இளைய);

தலைமாலையினான் தலம் என்பர் - மண்டையோட்டு-மாலையை அணிந்த பெருமான் உறையும் தலம் ஆவது;

இலை ஆர் பொழில் சூழ் இடையாறே - இலை மலிந்த சோலை சூழ்ந்த திருவிடையாறு;


4)

நிழலார் மழுவாள் தனையேந்தி

தொழிலைந் துடையான் சுடுநீற்றன்

பழியில் புகழான் பதியென்பர்

எழிலார் பொழில்சூழ் இடையாறே.


நிழல் ஆர் மழுவாள்தனை ஏந்தி - ஒளியுடைய மழுவை ஏந்தியவன்; (நிழல் - ஒளி); (ஏந்தி - ஏந்தியவன்);

தொழில் ஐந்து உடையான் - பஞ்சகிருத்தியம் செய்பவன்; (படைத்தல், காத்தல், ஒடுக்குதல், மறைத்தல், அருளல்);

சுடு-நீற்றன் - வெந்த திருநீற்றைப் பூசியவன்;

பழி இல் புகழான் பதி என்பர் - குற்றமற்ற புகழை உடைய பெருமான் உறையும் தலம்;

எழில் ஆர் பொழில் சூழ் இடையாறே - அழகிய சோலை சூழ்ந்த திருவிடையாறு;


5)

விசையார் நதிபாய் புரிவேணி

மிசைமா மதியம் புனையீசன்

திசையா டையினான் பதிவண்டின்

இசையார் பொழில்சூழ் இடையாறே.


விசை ஆர் நதி பாய் புரி வேணிமிசை மா மதியம் புனை ஈசன் - வேகம் மிக்க கங்கை பாயும் சுருண்ட சடையின்மேல் அழகிய திங்களைப் புனையும் ஈசன்; (விசை - வேகம்); (புரிதல் - முறுக்குக்கொள்ளுதல்); (வேணி - சடை); (மிசை - மேல்); (பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 12.21.92 - "மின்தயங்கு புரிவேணி வேதியனார்");

திசை ஆடையினான் பதி - திக்குகளையே ஆடையாக உடைய (திகம்பரன் - நக்கன்) பெருமான் உறையும் தலம்;

வண்டின் இசை ஆர் பொழில் சூழ் இடையாறே - வண்டுகள் செய்யும் இசை நிறைந்த சோலை சூழ்ந்த திருவிடையாறு;


6)

சனியான் மரியான் அணிகொவ்வைக்

கனிவாய் உமையாள் ஒருகூறன்

தனியே றுடையான் நமனாரை

முனிவான் இடமாம் இடையாறே.


சனியான் மரியான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; (சனித்தல் - ஜனித்தல் - பிறத்தல்); (மரித்தல் - சாதல்);

அணி கொவ்வைக்கனி-வாய் உமையாள் ஒரு கூறன் - அழகிய கொவ்வைக்கனி போன்ற செவ்வாயை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்;

தனி ஏறு உடையான் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடையவன்; (தனி - ஒப்பற்ற);

நமனாரை முனிவான் இடம் ஆம் இடையாறே - எமனைச் சினந்து உதைத்த பெருமான் உறையும் தலம் திருவிடையாறு; (நமனார் - இயமன்); (முனிதல் - சினத்தல்);


7)

மறைநான் குரைசெய் திருநாவன்

அறைவண் டணைகொன் றையு(ம்)நாகம்

பிறைவெண் மதியும் புனைகின்ற

இறைவன் பதியாம் இடையாறே.


மறை நான்கு உரைசெய் திருநாவன் - நால்வேதங்களைப் பாடியருளியவன்;

அறை-வண்டு அணை- கொன்றையும் நாகம் பிறை வெண்மதியும் புனைகின்ற - ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற கொன்றைமலரையும் பாம்பையும் வெண்திங்களையும் சூடுகின்ற; (அறைதல் - ஒலித்தல்); (அணைதல் - சார்தல்);

இறைவன் பதி ஆம் இடையாறே - இறைவன் உறையும் தலம் திருவிடையாறு;


8)

மலைபேர்க் கமுயன் றவரக்கன்

தலைதோள் நெரிசெய் தருளெம்மான்

கலைமான் மறியைக் கரமேந்தி

நிலையா கியவூர் இடையாறே.


மலை பேர்க்க முயன்ற அரக்கன் தலை தோள் நெரிசெய்து அருள் எம்மான் - கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற இராவணனது தலைகளையும் புஜங்களையும் நசுக்கி அருள்செய்த எம்பெருமான்; (நெரித்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.75.8 - "வல்லரக்கன் வரை பேர்க்க வந்தவன் தோள்முடி கல்லரக்கி");

கலைமான்-மறியைக் கரம் ஏந்தி - கலைமான்கன்றைக் கையில் ஏந்தியவன்; (மறி - மான்கன்று);

நிலை ஆகிய ஊர் இடையாறே - நீங்காமல் உறையும் தலம் திருவிடையாறு;


9)

அரிநான் முகனார் மிகநேடிப்

பெரியாய் அருளென் றடிபோற்ற

எரியாய் எழுவான் உமையாளைப்

பிரியான் பதியாம் இடையாறே.


அரி நான்முகனார் மிக நேடிப் - திருமாலும் பிரமனும் அடிமுடியை மிகவும் தேடிக் காணாராய்;

"பெரியாய் அருள்" என்று அடிபோற்ற எரியாய் எழுவான் - "பெரியவனே, அருளாய்" என்று திருவடியை வணங்கும்படி எல்லையற்ற ஜோதியாகி ஓங்கியவன்;

உமையாளைப் பிரியான் பதி ஆம் இடையாறே - உமையைப் பிரியாத பெருமான் உறையும் இடம் ஆவது திருவிடையாறு;


10)

பவநோய் அறுநீ றணியாமல்

அவமே தினமும் புரிகின்ற

தவமா உடையார்க் கருளில்லாச்

சிவனார் பதியாம் இடையாறே.


பவநோய் அறு நீறு அணியாமல் - பிறவிப்பிணியைத் தீர்க்கும் திருநீற்றைப் பூசாமல்; (பவம் - பிறவி);

அவமே தினமும் புரிகின்ற தவமா உடையார்க்கு அருள் இல்லாச் - நாள்தோறும் அவச்செயல்களையே செய்யும் தவமாகக் கொண்ட கீழோர்களுக்கு அருள் இல்லாத; (தவமா - தவமாக);

சிவனார் பதியாம் இடையாறே - சிவபெருமானார் உறைகின்ற இடம் ஆவது திருவிடையாறு;


11)

கடியார் கணைதொட் டவனாகம்

பொடியாக் கியகண் ணுதலெந்தை

கொடிமேல் விடையான் குளிர்திங்கள்

முடியான் பதியாம் இடையாறே.


கடி ஆர் கணை தொட்டவன் ஆகம் பொடி ஆக்கிய கண்ணுதல் எந்தை - வாசனை பொருந்திய அம்பை எய்த மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணுடைய எம் தந்தை; (கடி - வாசனை); (ஆகம் - உடல்); (கண்ணுதல் - நெற்றிக்கண்);

கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

குளிர்-திங்கள் முடியான் பதி ஆம் இடையாறே - குளிர்ந்த திங்களை முடிமேல் அணிந்த பெருமான் உறையும் தலம் திருவிடையாறு;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment