Showing posts with label தனதன தனதன தந்தத் தந்தத் தனதான. Show all posts
Showing posts with label தனதன தனதன தந்தத் தந்தத் தனதான. Show all posts

Tuesday, May 12, 2026

T.238 - சண்பைநகர் (சீகாழி) - கரையில தெனவுள

2019-08-29

T. 238 - சண்பைநகர் (சீகாழி) - கரையில தெனவுள

-----------------

(வண்ணவிருத்தம்;

தனதன தனதன தந்தத் தந்தத் .. தனதான)

(பரிமள களபசு கந்தச் சந்தத் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


கரையில தெனவுள பண்டைத் தொந்தத் .. துயர்மாயக்

.. கழலடி இணைதனை வந்திக் கும்பொற் .. புறுவேனோ

பரவிடும் அடியவர் செஞ்சொற் சந்தத் .. தமிழ்பாடப்

.. படிமிசை வருதொடர் துண்டித் தின்பைத் .. தருவோனே

முரணிய புரமெரி வென்றிக் குன்றச் .. சிலையானே

.. முனமிமை யவர்தொழ நஞ்சைக் கண்டத் .. தணிவோனே

நரைவிடை அமர்பவ திங்கட் டுண்டச் .. சடையானே

.. நறுமணம் விரவிய தென்றற் சண்பைப் .. பெருமானே.


பதம் பிரித்து:

கரை-இலது என உள பண்டைத் தொந்தத் துயர் மாயக்,

.. கழலடி-இணைதனை வந்திக்கும் பொற்பு உறுவேனோ?

பரவிடும் அடியவர் செஞ்சொற் சந்தத் தமிழ் பாடப்,

.. படிமிசை வரு-தொடர் துண்டித்து இன்பைத் தருவோனே;

முரணிய புரம் எரி வென்றிக் குன்றச் சிலையானே;

.. முனம் இமையவர் தொழ நஞ்சைக் கண்டத்து அணிவோனே;

நரைவிடை அமர்-பவ; திங்கட்-டுண்டச் சடையானே;

.. நறுமணம் விரவிய தென்றற் சண்பைப் பெருமானே.


கரை-து எள பண்டைத் தொந்தத் துயர் மாயக், கழலடி-இணைதனை வந்திக்கும் பொற்புறுவேனோ - கரையற்றது என்று இருக்கும் பழைய இருவினைத் துன்பம் அழிய (= கரையில்லாத துன்பக்கடல் அழிய), கழல் அணிந்த இரு-திருவடிகளை வழிபடும் பக்தியை அடைய அருள்வாயாக; (பண்டை - பழைய); (தொந்தம் - துவந்துவம் - இரட்டை; தம்முள் மாறுபட்ட இருவகைநிலை); (துயர் - துன்பம்); (பொற்பு - அழகு; குணம்);

பரவிடும் அடியவர் செஞ்சொற்-சந்தத்-தமிழ் பாடப் - துதிக்கும் பக்தர்கள் செஞ்சொற்கள் நிறைந்த சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட;

படிமிசை வரு-தொடர் துண்டித்து இன்பைத் தருவோனே - உலகில் மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவித்தொடரை வெட்டி அவர்களுக்கு இன்பத்தை அளிப்பவனே; (படி - பூமி);

முரணிய புரம் எரி வென்றிக்-குன்றச்-சிலையானே - பகைத்த முப்புரங்களை எரித்த வெற்றியுடைய மேருமலை-வில்லை ஏந்தியவனே; (முரணுதல் - பகைத்தல்); (வென்றி - வெற்றி); (சிலை - வில்);

முனம் இமையவர் தொழ நஞ்சைக் கண்டத்து அணிவோனே - முன்பு தேவர்கள் இறைஞ்ச இரங்கி ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவனே;

நரைவிடை அமர்-பவ - வெள்ளை-ஏற்றை ஊர்தியாக விரும்பிய பவனே; (நரை - வெண்மை); (அமர்தல் - விரும்புதல்); (பவன் - என்றும் இருப்பவன் - சிவன் திருநாமம்);

திங்கள்-துண்டச் சடையானே - நிலாத்துண்டத்தைச் சடைமேல் உடையவனே; (திங்கட்டுண்டம் = திங்கள்+துண்டம் = திங்களின் துண்டம்);

நறுமணம் விரவிய தென்றற்-சண்பைப் பெருமானே - வாசனை கமழும் தென்றல் வீசுகின்ற சண்பைநகர் என்ற பெயரை உடைய சீகாழியில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------