2020-08-16
T.246 - திலதைப்பதி - பரிவற்றடை நமன்
-----------
(வண்ணவிருத்தம்;
தனனத் தனதன .. தனதான)
(அயிலொத் தெழுமிரு விழியாலே - திருப்புகழ் - மயிலாப்பூர்)
பரிவற் றடைநமன் .. அணுகாத
.. படிநற் பெயர்தின(ம்) .. நினைவேனோ
புரிபொற் சடையிடை .. அலையாரும்
.. புனல்வைத் தருளிய .. புகழாளா
அரிவைக் கொருபுறம் .. அளிநேயா
.. அடியைத் தொழுசுரர் .. இடர்தீரத்
திரிமுப் புரமெரி .. சிலையானே
.. திலதைப் பதியுறை .. பெருமானே.
பதம் பிரித்து:
பரிவு-அற்று அடை நமன் அணுகாத-
.. படி நற்பெயர் தின(ம்) நினைவேனோ;
புரி-பொற்சடையிடை அலை ஆரும்
.. புனல் வைத்தருளிய புகழாளா;
அரிவைக்கு ஒரு-புறம் அளி-நேயா;
.. அடியைத் தொழு-சுரர் இடர் தீரத்
திரி-முப்புரம் எரி- சிலையானே;
.. திலதைப்பதி உறை பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
பரிவு-அற்று அடை நமன் அணுகாதபடி நற்பெயர் தின(ம்) நினைவேனோ - சிறிதும் இரக்கம் இன்றிக் கொல்ல அடையும் காலன் என்னை நெருங்காதபடி நான் உன் நல்ல நாமத்தைத் தினமும் நினையுமாறு அருள்வாயாக; (பரிவு - இரக்கம்; அன்பு); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே");
புரி-பொற்சடையிடை அலை ஆரும் புனல் வைத்தருளிய புகழாளா - சுருண்ட, பொன் போன்ற சடையில் அலை மிகும் கங்கையை அடைத்து அருளிய புகழாளனே; (புரிதல் - முறுக்குக்கொள்தல்); (ஆர்தல் - மிகுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.37.3 - "எல்லையில் புகழாளனும்");
அரிவைக்கு ஒரு-புறம் அளி நேயா - திருமேனியில் ஒரு பக்கத்தை உமைக்கு அளித்த அன்பனே; (அரிவை - பெண்);
அடியைத் தொழு சுரர் இடர் தீரத் திரி முப்புரம் எரி சிலையானே - திருவடியைத் தொழுத தேவர்களது துன்பம் தீரும்படி, எங்கும் திரிந்த முப்புரங்களை எரித்த வில்லை ஏந்தியவனே; (திரி முப்புரம் - வினைத்தொகை - திரிந்த முப்புரங்கள்); (சிலை - வில்); (சம்பந்தர் தேவாரம் - 2.40.7 - "சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்த");
திலதைப்பதி உறை பெருமானே - திலதைப்பதியில் உறைகின்ற பெருமானே;
வி. சுப்பிரமணியன்
-----------
No comments:
Post a Comment