Showing posts with label கடவூர் மயானம். Show all posts
Showing posts with label கடவூர் மயானம். Show all posts

Saturday, November 7, 2026

P.526 - கடவூர் மயானம் - கரையும் நெஞ்சராகி

2020-10-03

P.526 - கடவூர் மயானம்

-----------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மா - வாய்பாடு; பாடலின் ஈற்றுச்சீர் விளம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "வரிய மறையார்"; சம்பந்தர் பதிகத்தில் பாடல்தோறும் பாடலின் ஈற்றுச்சீர் "அடிகளே" என்று விளச்சீராக வரக் காணலாம்)


1)

கரையும் நெஞ்ச ராகிக் கழலைத் தொழுவார்க் கன்பர்

அரையில் புலியின் அதளைக் கட்டி ஆடும் அழகர்

கரையில் கருணைக் கடலார் கடவூர் மயானம் தன்னில்

பிரமன் போற்ற நின்ற பெரிய பெருமான் அடிகளே.


கரையும் நெஞ்சர் ஆகிக் கழலைத் தொழுவார்க்கு அன்பர் - மனம் கசிந்து திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவர்;

அரையில் புலியின் அதளைக் கட்டி ஆடும் அழகர் - அரையில் புலித்தோலை ஆடையாகக் கட்டிக் கூத்தாடும் அழகர்; (அதள் - தோல்);

கரை-இல் கருணைக் கடலார் - எல்லையில்லாத தயாசாகரம் ஆனவர்; (அப்பர் தேவாரம் - 6.90.10 - "அருளார் கருணைக் கடலானைக் கஞ்சனூர் ஆண்ட கோவை");

கடவூர் மயானம்-தன்னில் பிரமன் போற்ற நின்ற பெரிய பெருமான் அடிகளே - திருக்கடவூர் மயானத்தில் பிரமன் வழிபாடு செய்த பெரிய பெருமான் அடிகள் (மஹாதேவன்); (* பிரமன் வழிபாடு செய்தது தலவரலாறு; இத்தலத்தில் சுவாமி திருநாமம் பிரமபுரீசுவரர்); (சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே");


2)

நீரார் கண்ண ராகி நினைவார் வினைகள் தீர்ப்பார்

சேரார் மதில்கள் மூன்றும் தீயில் மூழ்க எய்தார்

காரார் கழனி சூழ்ந்த கடவூர் மயானம் தன்னைப்

பேரா துறையெம் மானார் பெரிய பெருமான் அடிகளே.


நீர் ஆர் கண்ணர் ஆகி நினைவார் வினைகள் தீர்ப்பார் - கண்களில் கண்ணீர் கசிய உருகி நினைந்து தொழும் பக்தர்களது வினையைத் தீர்ப்பவர்;

சேரார் மதில்கள் மூன்றும் தீயில் மூழ்க எய்தார் - தேவர்களைப் பகைத்த அசுரர்களது முப்புரங்களை எரிக்கக் கணை எய்தவர்; (சேரார் - பகைவர்);

கார் ஆர் கழனி சூழ்ந்த கடவூர் மயானம்-தன்னைப் பேராது உறை எம்மானார் பெரிய பெருமான் அடிகளே - நீர்வளம் மிக்க வயல் சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தை நீங்காமல் உறையும் எம் ஈசனார் பெரிய பெருமான் அடிகள்; (கார் - மழை; நீர்); (பேர்தல் - நீங்குதல்; பிரிதல்);


3)

கோணற் பிறையைச் சூடும் குழகர் கழலை மறவா

மாணி உயிரைக் காத்து மறலி தன்னைச் செற்றார்

காணற் கினிய வயல்சூழ் கடவூர் மயானம் தன்னைப்

பேணி உறையெம் மானார் பெரிய பெருமான் அடிகளே.


கோணல்-பிறையைச் சூடும் குழகர் - வளைந்த பிறையைச் சூடும் அழகர்; (கோணல் - வளைவு); (குழகன் - அழகன்);

கழலை மறவா மாணி உயிரைக் காத்து மறலிதன்னைச் செற்றார் - அவரது திருவடியை என்றும் தியானித்த மார்க்கண்டேயரது உயிரைக் காத்துக் காலனை உதைத்து அழித்தவர்; (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்); (மறலி - இயமன்); (செறுதல் - அழித்தல்);

காணற்கு இனிய வயல் சூழ் கடவூர் மயானம்-தன்னைப் பேணி உறை எம்மானார் பெரிய பெருமான் அடிகளே - கண்ணுக்கு இனிய வயல் சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தை விரும்பி அங்கே உறையும் எம் ஈசனார் பெரிய பெருமான் அடிகள்;


4)

அறையார் கழலை வாழ்த்தும் அன்பர் அல்லல் தீர்ப்பார்

நறையார் அம்பெய்ம் மதனை நாசம் செய்கண் ணுதலார்

கறையார் சோலை சூழ்ந்த கடவூர் மயானம் மேய

பிறையார் சடையெம் மானார் பெரிய பெருமான் அடிகளே.


அறை ஆர் கழலை வாழ்த்தும் அன்பர் அல்லல் தீர்ப்பார் - ஒலி பொருந்திய கழல் அணிந்த திருவடியை வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவர்; (அறை - ஒலி); (சம்பந்தர் தேவாரம் - 2.18.3 - "அறையார் கழலும் அழல்வாய் அரவும் பிறையார் சடையும் உடையாய்");

நறை ஆர் அம்பு எய்ம் மதனை நாசம் செய் கண்ணுதலார் - வாசனை மிக்க மலரம்பை எய்த மன்மதனை அழித்த நெற்றிக்கண்ணர்; (நறை - வாசனை); (எய்தல் - ஏவுதல்); ("எய் + மதனை = எய்ம்மதனை" என்று மெல்லொற்று மிக்குப் புணரும்; உதாரணம்: மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்; செய் + நன்றி - செய்ந்நன்றி);

கறை ஆர் சோலை சூழ்ந்த கடவூர் மயானம் மேய - கருமை மிக்க (= செழித்து அடர்ந்த) சோலை சூழ்ந்த கடவூர் மயானத்தில் விரும்பி உறையும்;

பிறை ஆர் சடை எம்மானார் பெரிய பெருமான் அடிகளே - பிறை பொருந்திய சடையை உடைய எம் இறைவர் பெரிய பெருமான் அடிகள்;


5)

கிள்ளை மொழியாள் கேள்வர் கேடு தோற்றம் இல்லார்

வெள்ளை ஓடொன் றேந்தி வேதம் பாடி வருவார்

கள்ளை உண்டு வண்டார் கடவூர் மயானம் மேய

பிள்ளை மதியம் சூடும் பெரிய பெருமான் அடிகளே.


கிள்ளை-மொழியாள் கேள்வர் - கிளி போன்ற மொழி பேசும் உமைக்குக் கணவர்; (கிள்ளை - கிளி); (கேள்வன் - நாயகன்); (சம்பந்தர் தேவாரம் - 3.126.6 - "கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத் தள்ளித் தலை தக்கனைக் கொண்டவர்");

கேடு தோற்றம் இல்லார் - இறப்பும் பிறப்பும் இல்லாதவர்;

வெள்ளை-ஓடு ஒன்று ஏந்தி வேதம் பாடி வருவார் - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்தி, மறையைப் பாடிக்கொண்டு (பிச்சைக்கு) வருபவர்;

கள்ளை உண்டு வண்டு ஆர் கடவூர் மயானம் மேய - மதுவை உண்டு வண்டுகள் ஒலிக்கும் (சோலை சூழ்ந்த) கடவூர் மயானத்தில் விரும்பி உறையும்; (ஆர்த்தல் - ஒலித்தல்);

பிள்ளை-மதியம் சூடும் பெரிய பெருமான் அடிகளே - இளந்திங்களை அணிந்த பெரிய பெருமான் அடிகள்;


6)

பண்ணும் தமிழும் ஒன்றப் பாடிப் பணியும் அன்பர்

எண்ணும் எவையும் அருள்வார் இருளில் ஆடும் கூத்தர்

கண்ணைக் காட்டும் நுதலர் கடவூர் மயானம் மேய

பெண்ணைக் காட்டும் மேனிப் பெரிய பெருமான் அடிகளே.


பண்ணும் தமிழும் ஒன்றப் பாடிப் பணியும் அன்பர் எண்ணும் எவையும் அருள்வார் - பண் ஒன்றத் தமிழ்ப்-பாமாலைகள் பாடி வழிபடும் பக்தர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அருள்பவர்;

இருளில் ஆடும் கூத்தர் - நள்ளிருளில் கூத்தாடுபவர்;

கண்ணைக் காட்டும் நுதலர் - நெற்றிக்கண் உடையவர்; (நுதல் - நெற்றி);

கடவூர் மயானம் மேய - கடவூர் மயானத்தில் விரும்பி உறையும்;

பெண்ணைக் காட்டும் மேனிப் பெரிய பெருமான் அடிகளே - உமையைத் திருமேனியில் ஒரு கூறாக உடைய பெரிய பெருமான் அடிகள்;


7)

உன்னும் அன்பர் தங்கள் உள்ளம் கோயில் கொண்டார்

முன்னம் வேதப் பொருளை மொழியும் ஆல நிழலர்

கன்னி பாகம் ஆனார் கடவூர் மயானம் மேய

பின்னு சடைமேற் பிறையர் பெரிய பெருமான் அடிகளே.


உன்னும் அன்பர்-தங்கள் உள்ளம் கோயில் கொண்டார் - தியானிக்கும் பக்தர்களது உள்ளத்தைக் கோயிலாகக் கொண்டவர்; (உன்னுதல் - நினைத்தல்); (அப்பர் தேவாரம் - 5.2.1 - "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்");

முன்னம் வேதப்பொருளை மொழியும் ஆலநிழலர் - முன்பு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லாலமரத்தின்கீழ் இருந்தவர்;

கன்னி பாகம் ஆனார் - உமைபங்கர்; (4.48.6 - "கன்னி ஓர் பாகம் ஆகிக் கருதுவார் கருத்தும் ஆகி");

கடவூர் மயானம் மேய - கடவூர் மயானத்தில் விரும்பி உறையும்;

பின்னு சடைமேல் பிறையர் பெரிய பெருமான் அடிகளே - பின்னுகின்ற (முறுக்கிய) சடையின்மேல் பிறையைச் சூடிய பெரிய பெருமான் அடிகள்; (அப்பர் தேவாரம் - 6.49.8 - "பின்னு சடைமேற் பிறை சூடினான்காண்");


8)

ஏதம் மிக்க நெஞ்சன் எடுத்த மலையின் மீது

பாத விரலொன் றூன்றிப் பாடல் கேட்ட பரமர்

காத லாளர் போற்றக் கடவூர் மயானம் மேய

பேதை பங்கில் உடையார் பெரிய பெருமான் அடிகளே.


ஏதம் மிக்க நெஞ்சன் எடுத்த மலையின் மீது - குற்றம் மிக்க நெஞ்சினை உடைய இராவணன் பெயர்த்த கயிலைமலையின் மீது; (ஏதம் - குற்றம்);

பாதவிரல்-ஒன்று ஊன்றிப் பாடல் கேட்ட பரமர் - திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கி அவன் பாடிய பாடல்களை கேட்டருளிய பரமர்;

காதலாளர் போற்றக் கடவூர் மயானம் மேய - பக்தர்கள் போற்றக் கடவூர் மயானத்தில் விரும்பி உறையும்;

பேதை பங்கில் உடையார் பெரிய பெருமான் அடிகளே - உமைபங்கர் பெரிய பெருமான் அடிகள்; (பேதை - பெண்);


9)

அரியும் அயனும் நேடி அடியும் முடியும் அறியா

எரியின் உருவர் கொடியில் ஏறு காட்டும் ஒருவர்

கரியின் உரிவை போர்த்தார் கடவூர் மயானம் தன்னைப்

பிரிய கில்லார் எங்கள் பெரிய பெருமான் அடிகளே.


அரியும் அயனும் நேடி அடியும் முடியும் அறியா எரியின் உருவர் - திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிக் காணாதவாறு நீண்ட ஜோதி-வடிவினர்; (நேடுதல் - தேடுதல்);

கொடியில் ஏறு காட்டும் ஒருவர் - இடபக்கொடியை உடைய ஒப்பற்றவர்; (ஒரு - ஒப்பின்மை)

கரியின் உரிவை போர்த்தார் - யானைத்தோலைப் போர்த்தவர்; (கரி - யானை); (உரிவை - தோல்);

கடவூர் மயானம் தன்னைப் பிரியகில்லார் எங்கள் பெரிய பெருமான் அடிகளே - திருக்கடவூர் மயானத்தை நீங்காமல் உறைபவர் எம் பெரிய பெருமான் அடிகள்; (சுந்தரர் தேவாரம் - 7.68.4 - "நினைப்பவர் மனம் நீங்ககில்லானை");


10)

நெற்றி நீறு பூசா நீசர் சொல்லை விடுமின்

கற்றைச் சடையர் கடலின் கரிய விடமுண் மிடறர்

கற்ற வர்க்கு நல்லர் கடவூர் மயானம் மேய

பெற்றம் ஊர்தி பேணும் பெரிய பெருமான் அடிகளே.


நெற்றி நீறு பூசா நீசர் சொல்லை விடுமின் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத கீழோர் சொற்களை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

கற்றைச் சடையர் - கற்றையாகத் திகழும் சடையை உடையவர்;

கடலின் கரிய விடம் உண் மிடறர் - கடலில் தோன்றிய கரிய ஆலகாலத்தை உண்ட கண்டர்; (மிடறு - கண்டம்);

கற்றவர்க்கு நல்லர் - தம்மை வணங்கக் கற்றவர்களுக்கு நன்மை செய்பவர்;

கடவூர் மயானம் மேய - திருக்கடவூர் மயானத்தில் உறையும்;

பெற்றம் ஊர்தி பேணும் பெரிய பெருமான் அடிகளே - இடபத்தை வாகனமாக விரும்பிய பெரிய பெருமான் அடிகள்; (பெற்றம் - எருது);


11)

அடியார் வேண்டும் எல்லாம் அன்றே அருளும் ஐயர்

வடியார் சூலம் மழுவாள் மறிமான் ஏந்தி வருவார்

கடியார் சோலை சூழ்ந்த கடவூர் மயானம் மேய

பிடியார் நடையாள் கணவர் பெரிய பெருமான் அடிகளே.


அடியார் வேண்டும் எல்லாம் அன்றே அருளும் ஐயர் - அடியவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் உடனே அருள்கின்ற தலைவர்; (அப்பர் தேவாரம் - 5.38.2 - "தொழுதெழுவார்க்கெலாம் பின்னை என்னார் பெருமானடிகளே");

வடி ஆர் சூலம் மழுவாள் மறிமான் ஏந்தி வருவார் - கூர்மை மிக்க சூலாயுதம், மழுவாயுதம், மான்கன்று இவற்றையெல்லாம் கையில் ஏந்தியவர்; (வடி - கூர்மை); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

கடி ஆர் சோலை சூழ்ந்த கடவூர் மயானம் மேய - வாசனை நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தில் உறையும்; (கடி - வாசனை);

பிடி ஆர் நடையாள் கணவர் பெரிய பெருமான் அடிகளே - பெண்யானை போன்ற நடையுடைய உமைக்குக் கணவரான பெரிய பெருமான் அடிகள்; (பிடி - பெண்யானை); (ஆர்தல் - ஒத்தல்);


வி. சுப்பிரமணியன்

-----------


Saturday, May 26, 2018

04.34 - கடவூர் மயானம் - நிலைபெற்றிட நீ

04.34 - கடவூர் மயானம் - நிலைபெற்றிட நீ

2013-12-23

கடவூர் மயானம்

----------------------------------

(நேரிசை வெண்பா)

(எல்லாப் பாடல்களும் ஒரே ஈற்றடி)


1)

நிலைபெற் றிடநீ நினைதியேல் நெஞ்சே

தலைமேற் பிறையன் சடையன் மலைபோற்

கருமான் உரியன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


நிலைபெறுதல் - நற்கதி அடைதல்;

நீ நினைதியேல் - நீ நினைந்தால்;

கருமான் - யானை; (அப்பர் தேவாரம் - 6.1.3 - "கருமானின் உரியதளே உடையா வீக்கிக்");

பேணுதல் - போற்றுதல்; வழிபடுதல்; விரும்புதல்;

கடவூர் மயானப் பெருமான் அடிகளை - திருக்கடவூர் மயானத்தில் உறையும் கடவுளை; ("கடவூர் மயானத்தில் உறையும் பெருமானது திருவடிகளை" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (* பெருமான் அடிகள் - இத்தலத்து இறைவன் திருநாமம்);


2)

இன்னற் கடலில் இளையா வழிதனை

உன்னு மனமே உயர்கயிலை மன்னன்

கருவார் வினைதீர் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


இளையா வழி - வருந்தாத வழி; (இளைத்தல் - மெலிதல்; சோர்தல்);

உன்னு - நினை;

கரு ஆர் வினை தீர் - கருவில் பிணிக்கும் வினையைத் தீர்க்கும்; (கரு - பிறப்பு; உடம்பு); (ஆர்த்தல் - பிணித்தல்);


3)

நெஞ்சேநீர் பூவால் நிதமேத்து மாணிக்குத்

துஞ்சா நிலைதந்தான் சுட்டெரித்த நஞ்சார்

கருமா மிடற்றன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


நெஞ்சே - மனமே;

நீர் பூவால் நிதம் ஏத்து மாணிக்குத் துஞ்சா நிலைதந்தான் - நீரும் பூவும் கொண்டு தினமும் வழிபாடு செய்த மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவித்தன்மையை அளித்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்); (துஞ்சுதல் - இறத்தல்);

சுட்டெரித்த நஞ்சு ஆர் கருமா மிடற்றன் - சுட்டெரித்த ஆலகாலத்தை உண்டு அணிந்த நீலகண்டன்; (ஆர்தல் - உண்ணுதல்; அணிதல்);

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் உறைகின்ற பெருமான் அடிகளான அவனைப் போற்றி வணங்கு;


4)

அணையாச் சுடரனையான் ஆரார் புரங்கள்

கணையால் எரித்தான் கடலில் புணையாய்

வருவான் கடவூர் மயானம் மகிழும்

பெருமான் அடிகளைப் பேணு.


அணையாச் சுடர் அனையான் - அணையாத விளக்கு ஒத்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.21.1 - "நொந்தா ஒண்சுடரே");

ஆரார் - பகைவர்;

எரித்தான் - எரித்தவன்;

கடல் - வினைக்கடல், பிறவிக்கடல், துன்பக்கடல்;

புணை - தெப்பம்;

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


5)

வினைகள் விலகிட வேண்டுதியேல் நெஞ்சே

நினைவெள்ளம் பாய்சடை நித்தன் சினவெள்

எருதேறும் ஈசன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


வினைகள் விலகிட வேண்டுதியேல் நெஞ்சே நினை - வினைகள் தீர வேண்டுமென்றால் மனமே நீ நினை; (வேண்டுதியேல் - நீ விரும்பினால்);

வெள்ளம் பாய்சடை நித்தன் - கங்கை பாயும் சடையை உடைய நித்தியன்;

சினவெள் எருதேறும் ஈசன் - கோபம் மிக்க வெள்ளை எருதை வாகனமாக உடைய ஈசன்;

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் உறையும் பெருமான் அடிகளைப் போற்று;


6)

மேதினியில் இன்புற வேண்டுதியேல் நன்னெஞ்சே

காதினில் தோடணியும் காரிகை பாதி

உருவான் கடவூர் மயானத் துறையும்

பெருமான் அடிகளைப் பேணு.


மேதினி - உலகம்;

காதினில் தோடு அணியும் காரிகை பாதி உருவான் - காதில் தோட்டை அணியும் உமையை உருவில் பாதியாக உடையவன்; ("... காரிகை பாதி உருவான் கடவூர் ..." - இதனை "... காரிகை பாதி உரு, வான் கடவூர் ..." என்று கொண்டும் பொருள்கொள்ளலாம். வான் - அழகிய);


7)

தெளியாய் மனமே திருமலிய வேண்டில்

எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான்

கருதார்க் களியான் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


தெளியாய் - தெளிவாயாக; திரு - செல்வம்; நன்மை; மலிதல் - மிகுதல்; எளியன் - எளியவன் - எளிதில் பெறப்படுபவன்; இரத்தல் - யாசித்தல்; வேண்டுதல்; ஒளியான் - ஒளித்தல் இல்லாதவன்; (ஒளித்தல் - மறைத்தல்); எளியான் இரப்பவர்க் கென்றும் ஒளியான் - வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் எளியவன்; வேண்டிப் பணியும் அன்பர்களுக்கு என்றும் ஒளித்தல் இன்றி வாரி வழங்குபவன்; கருதார்க்கு அளியான் - கருதாதவர்களுக்கு கொடாதவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன் நாடொறும் நல்குவானலன்");


8)

இருவரை பேர்த்த இலங்கையர்கோன் வாடத்

திருவிரல் ஒன்றைச் சிறிதிட் டொருவாள்

தருவான் கடவூர் மயானத்தில் தங்கும்

பெருமான் அடிகளைப் பேணு.


இரு-வரை - பெரிய மலை - கயிலைமலை; இலங்கையர்-கோன் - இராவணன்; ஒரு வாள் - சந்திரஹாஸம் என்ற வாள்;

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


9)

புரமூன் றெரியப் பொருப்புவில் ஏந்து

பரமன் மலர்மேல் பயிலும் பிரமன்

கருமாற் கரியான் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


பொருப்பு-வில் - மேருமலை என்ற வில்; பயில்தல் - தங்குதல்; பிரமன் கரு-மாற்கு அரியான் - பிரமனுக்கும் கரிய திருமாலுக்கும் அரியவன்; (திருவாசகம் - புணர்ச்சிப் பத்து - 8.27.1 - "கருமால் பிரமன் தடைபட் டின்னுஞ் சார மாட்டா");

குறிப்பு: மனமே என்ற விளி தொக்கு நின்றது;


10)

வெய்யவினை விட்டின்பம் மேவ மடநெஞ்சே

பொய்யினையே நற்றவமாப் பூண்டொழுகும் கையர்க்

கருளான் கடவூர் மயானம் அமரும்

பெருமான் அடிகளைப் பேணு.


வெய்ய வினை விட்டு - கொடிய வினைகள் நீங்கி; மேவுதல் - அடைதல்; பொருந்துதல்; நற்றவமா - நல்ல தவமாக; கையர்க்கு அருளான் - வஞ்சகர்களுக்கு அருள் இல்லாதவன்; அமரும் - விரும்பும்; விரும்பி உறையும்;


11)

பிணிவினைதீர்ந் தின்பம் பெருக மனமே

துணிமதி பொற்சடைச் சூடி மணிபோல்

கருளார் மிடற்றன் கடவூர் மயானப்

பெருமான் அடிகளைப் பேணு.


பிணி வினை தீர்ந்து இன்பம் பெருக மனமே - நெஞ்சே, பிணிகளும் வினைகளும் தீர்ந்து இன்பம் பெருக வேண்டும் எனில்; (பிணிவினை - 1. பிணிக்கின்ற வினை; 2. பிணிகளும் வினைகளும் என்ற உம்மைத்தொகை);

துணிமதி பொற்சடைச் சூடி - பிறைச்சந்திரனைப் பொன் போன்ற சடையின்மேல் சூடியவன்; (துணி - துண்டம்); (துணிமதி - நிலாத்துண்டம் - பிறை);

மணிபோல் கருள் ஆர் மிடற்றன் - நீலமணி போலக் கரிய நிறம் திகழும் கண்டம் உடையவன்; (கருள் - கறுப்பு; இருள்);

கடவூர் மயானப் பெருமான் அடிகளைப் பேணு - திருக்கடவூர் மயானத்தில் எழுந்தருளியுள்ள பெருமான் அடிகளைப் போற்றுவாயாக.


வி. சுப்பிரமணியன்

----------- --------------