Showing posts with label சேத்திரக்கோவை. Show all posts
Showing posts with label சேத்திரக்கோவை. Show all posts

Wednesday, December 14, 2022

05.29 – சேத்திரக்கோவை

05.29 – சேத்திரக்கோவை

2015-04-12

05.29 - சேத்திரக்கோவை

------------------

(2014 டிசம்பரில் தரிசித்த தலங்களிற் சில தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன.)

(அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேற தேறி")


1)

வளமல்கு முதுகுன்றம் வயல்சூழ்ந்த திருவைகல் மாடக் கோயில்

குளிர்மல்கு பொழில்சூழ்ந்த கோழம்பம் நாள்தோறும் கும்பிட் டேத்தி

உளமுள்கும் அடியார்தம் ஊனம்தீர் பாம்புரம் உண்ணஞ் சத்தால்

களமல்கு கண்டத்தன் கருதிடங்கள் கைதொழுதால் கழியும் துன்பே.


* முதுமுகுன்றம் (விருத்தாசலம்), வைகல் மாடக்கோயில், திருக்கோழம்பம், திருப்பாம்புரம்.


உளம் உள்கும் - உள்ளத்தில் எண்ணும்;

ஊனம் - குறை, குற்றம்;

உண் நஞ்சத்தால் களம் மல்கு கண்டத்தன் - உண்ட விடத்தால் கருமை விளங்கும் கண்டம் உடையவன்; (களம் - கருமை);

கருது இடங்கள் - விரும்பி உறையும் தலங்கள்;

கழிதல் - முடிவடைதல்; அழிதல்; ஒழிதல்;

துன்பு - துன்பம்;


2)

சென்றடைந்தார் வினைதீர்க்கும் சிறுகுடி செல்வமருள் திருமீ யச்சூர்

தென்றலிலே மணங்கமழும் திருவம்பர்ப் பெருங்கோயில் தேவர் கட்கா

அன்றுவிடம் ஆர்ந்தவன்றன் அம்பர்மா காளம் அரையில் நாகம்

ஒன்றசைத்த உத்தமன்றன் உறைவிடங்கள் கைதொழுதால் உய்ய லாமே.


* திருச்சிறுகுடி, திருமீயச்சூர், அம்பர், அம்பர் மாகாளம்.


ஆர்தல் - உண்ணுதல்;

அசைத்தல் - கட்டுதல்;


3)

விண்ணிழி விமானம் விளங்குகின்ற திருவீழி மிழலை வண்டின்

பண்ணிசை வேதவொலி பயில்திலதைப் பதிவாளை பாயும் நீரார்

தண்வயல் சூழ்ந்திலங்கு சாட்டியக் குடிசெஞ் சடையின் மீது

வெண்மதி வைத்தபரன் விரும்பிடங்கள் கைதொழுதால் வினைகள் வீடே.


* திருவீழிமிழலை, திலதைப்பதி, திருச்சாட்டியக்குடி.


பயில்தல் - நிகழ்தல்; தங்குதல்;

வாளை பாயும் நீர் ஆர் தண்வயல் - வாளை மீன்கள் பாயும் நீர் நிறைந்த குளிர்ந்த வயல்கள்;


4)

அன்றாப்பே அரனுருவா அகமகிழ்ந்து வழிபட்ட அடிய வட்காக்

கன்றாப்பில் நின்றருள் கன்றாப்பூர் புள்ளினத்தின் கானத் தோசை

குன்றாத வலிவலம் குளிர்பொழில்சூழ் கைச்சினம் குரவம் சூடி

மன்றாடு மணிகண்டன் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* திருக்கன்றாப்பூர், திருவலிவலம், திருக்கைச்சினம்.


அன்று ஆப்பே அரன் உருவா அகம் மகிழ்ந்து வழிபட்ட அடியவட்காக் கன்று-ஆப்பில் நின்றருள் கன்றாப்பூர் - ஒரு பக்தைக்காகக் கன்றைக் கட்டும் ஆப்பில் எழுந்தருளிய திருக்கன்றாப்பூர்; (ஆப்பு - முளை);

புள்ளினத்தின் கானத்து ஓசை - பறவைகளின் பாட்டு ஓசை;

குரவம் சூடி மன்று ஆடு மணிகண்டன் - குராமலறைச் சூடி அம்பலத்தில் ஆடுகின்ற நீலகண்டன்;

மகிழ்தல் - 1) விரும்புதல்; 2) இன்புறுதல்;


இலக்கணக் குறிப்பு : அடியவட்காக என்பது அடியவட்கா என்று வருவது போன்ற இடங்களில் வல்லொற்று மிகும். உதாரணம்:

பெரியபுராணம் - 12.21.145 - "புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்கு புரிந்தொழுகும்"

பெரியபுராணம் - - 12.28.740 - "காலனை மார்க்கண் டர்க்காக் காய்ந்தனை"


5)

கறையாரும் பொழில்சூழ்ந்த காறாயில் ஆரூரர் கசிந்து பாடி

இறைவாநெல் அட்டித்தா என்றிறைஞ்சு கோளிலி இன்த மிழ்ச்சொல்

மறவாத வாகீசர் மனமுருகிப் பாடியருள் வாய்மூர் வன்னி

பிறைசூடு பித்தனவன் பேணிடங்கள் கைதொழுதால் பெருகும் இன்பே.


* திருக்காறாயில் (திருக்காரவாசல்), திருக்கோளிலி (திருக்குவளை), திருவாய்மூர்.


கறை ஆரும் பொழில் - அடர்ந்த சோலை;

ஆரூரர் - சுந்தரமூர்த்தி நாயனார்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே");

இன்-தமிழ்ச்சொல் மறவாத வாகீசர் - இனிய தமிழ்ப்பாமாலைகளைப் பாட மறவாத திருநாவுக்கரசர்; (அப்பர் தேவாரம் - 4.1.6 - "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்");


6)

மாக்கதவம் தாழ்திறவாய் மாதேவா என்றென்று வாக்கின் மன்னர்

பாக்களிசைத் தடிபரவிப் பணிந்தேத்து மறைக்காடு பத்தர் வந்து

நாக்கொடுநற் றமிழ்மாலை நவிற்றகத்தி யான்பள்ளி ஞாலம் எல்லாம்

ஆக்கியழித் தருள்பெருமான் அமரிடங்கள் கைதொழுதால் அடையும் இன்பே.


* திருமறைக்காடு (வேதாரண்யம்), அகத்தியான்பள்ளி (அகஸ்தியாம்பள்ளி)


மாக்கதவம் - பெரிய கதவு;

என்றென்று - என்று பலமுறை;

வாக்கின் மன்னர் - திருநாவுக்கரசர்;

நவிற்றுதல் - சொல்லுதல்;

அமர் இடங்கள் - விரும்பி உறையும் தலங்கள்; (அமர்தல் - விரும்புதல்; உறைதல்);


7)

குரைகடலின் திரைமோதும் கோடிக் குழகர்வெண் கொக்கி னங்கள்

இரைதேரும் வயல்சூழ்ந்த எழில்விளமர் பேரெயில் இம்பர் வாழக்

கரவாது தருவயல்சூழ் நாட்டியத் தான்குடி கங்கை சூடி

வரைமாது பங்குடையான் மகிழிடங்கள் கைதொழுதால் மகிழ லாமே.


* கோடிக்குழகர் (குழகர்கோயில்), திருவிளமர் (திருவிளமல்), திருப்பேரெயில், நாட்டியத்தான்குடி.


இம்பர் வாழக் கரவாது தரு வயல் சூழ் - இவ்வுலகு வாழ வஞ்சமின்றி நெல்லைத் தரும் வயல் சூழ்ந்த; (இம்பர் - இவ்வுலகம்);

வரைமாது - மலைமகள்;


8)

நீடுவயல் சூழ்ந்தழகார் நெல்லிக்கா பூம்பொழில் நிறைந்த தெங்கூர்

வாடுநிலை அறப்பத்தர் வந்தடைகொள் ளிக்காடு மரக்க லங்கள்

ஆடுகடல் சூழ்நாகைக் காரோணம் அருவரைக்கீழ் அரக்க னாரைப்

பாடுவித் தருளிறைவன் பயிலிடங்கள் கைதொழுதால் பாசம் வீடே.


* திருநெல்லிக்கா (திருநெல்லிக்காவல்), திருத்தெங்கூர், திருக்கொள்ளிக்காடு, திருநாகைக் காரோணம் (நாகப்பட்டினம்).


நீடுவயல் - நீண்ட வயல்; நெல் நீள்கின்ற வயல்; (நீடுதல் - நீளுதல்; பரத்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.131.3 - "சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே"); (அப்பர் தேவாரம் - 5.72.7 - "நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்");

மரக்கலங்கள் ஆடு கடல் சூழ் நாகைக் காரோணம் - படகுகளும் கப்பல்களும் இயங்குகின்ற கடலால் சூழப்பெற்ற திருநாகை காரோணம்; (ஆடுதல் - அசைதல்; சஞ்சரித்தல்);

அருவரைக்கீழ் அரக்கனாரைப் பாடுவித்து அருள் இறைவன் - கயிலைமலையின் கீழே இராவணனை நசுக்கி அவனைப் பாடவைத்து அருள்செய்த இறைவன்; (இராவணனார் - ஆர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு ); (சம்பந்தர் தேவாரம் - 3.89.8 - "அடலெயிற் றரக்கனார் நெருக்கிமா மலையெடுத் தார்த்த வாய்கள்");

பாசம் வீடு - பாசநீக்கம் - மும்மலங்களிலிருந்து விடுபடுகை; (சம்பந்தர் தேவாரம் - 3.91.6 - "நீலமா மணிமிடற் றடிகளை நினைய வல்வினைகள் வீடே" - வீடு - விடுதலையாம். வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.);


9)

திங்கள் தவழ்மாடச் சிக்கல் திருத்தேவூர் திருக்கீழ் வேளூர்

கொங்கு கமழ்சோலை நன்னிலம்கொண் டீச்சரம் கொண்டல் வண்ணச்

சங்கக் கரத்தரியும் தாமரையா னுங்காணாத் தழல தான

அங்கண் அடிகள் அமர்பதிகள் கைதொழுதால் அடையும் இன்பே.


* சிக்கல், திருத்தேவூர், கீழ்வேளூர் (கீவளூர்), நன்னிலம், திருக்கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)


திங்கள் தவழ் மாட - சந்திரன் தீண்டுமாறு உயர்ந்த மாடக்கோயிலான;

சிக்கல் திருத்தேவூர் திருக்கீழ்வேளூர் - இந்த மூன்று தலங்களும் மாடக்கோயில்கள்;

கொங்கு கமழ் சோலை நன்னிலம் கொண்டீச்சரம் - வாசம் கமழும் பொழில் சூழ்ந்த நன்னிலம் திருக்கொண்டீச்சரம்;

கொண்டல் வண்ணச் சங்கக் கரத்து அரி - முகில்வண்ணமும் சங்கு தரித்த கையும் உடைய திருமால்;

தாமரையான் - பிரமன்;

அமர் பதிகள் - விரும்பி உறையும் தலங்கள்;


10)

பொன்னளித்து விண்ணளிக்கும் புகலூர் திருமருகல் பொலிவு மிக்குத்

தென்னையொடு வயல்சூழ்ந்த கருவிலிக் கொட்டிட்டை சிவனை எண்ணாப்

புன்னெறியர் சொல்கின்ற பொய்மதியாப் புந்தியினார் போற்று கின்ற

சென்னிமிசைப் பிறைப்பெம்மான் திகழ்பதிகள் கைதொழுதால் சேரும் இன்பே.


* திருப்புகலூர், திருமருகல், கருவிலிக் கொட்டிட்டை.


பொன்னளித்து விண்ணளிக்கும் புகலூர் - சுந்தர் பொன் பெற்ற தலம்; அப்பர் முக்தியடைந்த தலம்;

புந்தியினார் - அறிவு உடையவர்;


11)

பேணு பெருந்துறையும் நாலூரும் மயானமும் பெண்ணு மாகி

ஆணும் ஆயவன்றன் கொள்ளம்பூ தூரும் அளவில் லாத

தாணு உறைகின்ற தேதியூ ரும்கண்டு தலைவ ணங்கிப்

பேணும் அடியார்க்குப் பெருவினைநோய் நலிவில்லை பெருகும் இன்பே.


* திருப்பேணுபெருந்துறை, நாலூர், நாலூர் மயானம், திருக்கொள்ளம்பூதூர், தேதியூர்.


அளவு - எல்லை;

தாணு - தூண்; சிவன்;


பிற்குறிப்பு:

1. யாப்புக் குறிப்பு - அறுசீர் விருத்தம் - காய் காய் காய் காய் மா தேமா - என்ற வாய்பாடு;

காய்ச்சீர் வரும் இடத்தில் விளச்சீரோ மாச்சீரோ வரலாம்; அவ்விடத்தில் மா வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்;


வி. சுப்பிரமணியன்

-------------- --------------


Monday, April 16, 2018

04.25 - அழுந்தூர் (தேரழுந்தூர்) - சேத்திரக்கோவை - குற்றாலம் சங்கரநயினார்

04.25 - அழுந்தூர் (தேரழுந்தூர்) - சேத்திரக்கோவை - குற்றாலம் சங்கரநயினார்

2013-11-23

அழுந்தூர் (தேரழுந்தூர்)

சேத்திரக்கோவை

----------------------

(2012 டிசம்பரில் தரிசித்த தலங்களிற் பல தலங்கள் இப்பாடல்களில் இடம்பெறுகின்றன)

(அறுசீர் விருத்தம் - "மா மா காய்" என்ற அரையடி வாய்பாடு.)

(சுந்தரர் தேவாரம் - 7.52.1 - "முத்தா முத்தி தரவல்ல")

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")


1)

குற்றா லம்சங் கரநயினார் .. கோயில் கோலத் தென்காசி

கற்றோர் போற்று கருவைநகர் .. கடனா நதிபாய் சிவசைலம்

பற்றா நின்றார் பவம்தீர்க்கும் .. பாவ நாசம் புடைமருதூர்

அற்றார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


கருவை - கரிவலம்வந்த நல்லூர்;

பற்றா நின்றார் - பற்றி நின்றவர்கள்; பற்றுக்கோடாகக் கொண்டவர்கள்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "பற்றா நின்றாரைப் பற்றா பாவமே");

பவம் - பிறப்பு;

அற்றார் - அற்றவர் - அன்புடையவர்கள்; (அப்பர் தேவாரம் - 6.32.1 - "அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி");

அழுந்தை - திருவழுந்தூர்;

அமர்தல் - விரும்புதல்; வீற்றிருத்தல்;


குற்றாலம், சங்கரநயினார் கோயில், தென்காசி, கரிவலம்வந்த நல்லூர், சிவசைலம், பாபநாசம், திருப்புடைமருதூர் என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.


2)

செடிதீர் சேரன் மாதேவி .. செய்சூழ் இராச வல்லிபுரம்

கடிமா மதில்சூழ் களக்காடு .. கங்கை கொண்டான் கலிவீதி

நெடுமா டஞ்சூழ் நெல்வேலி .. நீரார் ஆத்தூர் வைகுண்டம்

அடியார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


செடி - பாவம்; துன்பம்;

செய் - வயல்;

கடி - காவல்;

கலி - ஒலி; ஆரவாரம்;


சேரன்மாதேவி, ராஜவல்லிபுரம் (செப்பறை), களக்காடு, கங்கைகொண்டான், திருநெல்வேலி, ஆத்தூர், ஸ்ரீவைகுண்டம் என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.


3)

பிரியர் சேர்தென் திருப்பேரை .. பிரம்ம தேசம் குன்னத்தூர்

கரிய வண்டார் களக்காடு .. கவினா ருங்கோ டகநல்லூர்

திரிபு ராந்த கம்மானூர் .. சேறார் வயல்சூழ் முறப்பநாடு

அரிய மறைசொல் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


பிரியர் - அன்பர்;

வண்டு ஆர் - வண்டுகள் ஆர்க்கின்ற = வண்டுகள் ஒலிக்கின்ற;


தென்திருப்பேரை, பிரம்மதேசம், குன்னத்தூர், களக்காடு, கோடகநல்லூர், திரிபுராந்தகம் (பாளையங்கோட்டை), மானூர், முறப்பநாடு என்ற தலங்கள் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ளன.


யாப்புக் குறிப்பு : அடி-3 சீர்-6: புணர்ச்சியோடு நோக்கினால் "முறப்பநாடு + அரிய" = 'முறப்பநா டரிய' என்று ஆகி அச்சீர் கருவிளச்சீர் ஆகும். விருத்தங்களில் காய் வரும் இடத்தில் விளமும் ஒரோவழி (=அங்கங்கே) வரலாம்.

தலப்பெயர்கள் இடம்பெறும்போது சிலசமயம் இது நிகழ்வதும் உண்டு. உதாரணமாக அப்பர் அருளிய சேத்திரக்கோவைத் திருத்தாண்டம் - 6.70.9 - "திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி" - திருத்தாண்டகப் பாடலில் அரையடிதோறும் முதல் இருசீர்கள் பொதுவாகக் காய்ச்சீராக அமையும் எனினும், இப்பாடலில் சில அடிகளில் கனிச்சீர் போலவும் விளச்சீர் போலவும் வந்துள்ளதைக் காணலாம்.


4)

புடைமா வயல்சூழ் புனவாயில் .. புன்மை தீர்க்கும் மெய்ஞ்ஞானப்

படையே நல்கும் பெருந்துறைநம் .. பயங்கள் தீர்க்கும் திருப்புத்தூர்

உடல்மூத் திடினும் அன்புகுன்றா .. உளத்தார் போற்றும் தீயத்தூர்

அடைவார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


புடை - பக்கம்;

படை - ஆயுதம்; (திருவாசகம் - திருப்படையெழுச்சி - 8.46.1 - "ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின்");

உடல் மூத்திடினும் அன்பு குன்றா உளத்தார் போற்றும் தீயத்தூர் - * (நான் இத்தலத்தை 2012-இல் தரிசித்த சமயத்தில் திருப்புனவாயிலில் வாழ்ந்த முதிய சிவாசாரியார் இத்தலத்திலும் பூசை செய்துவந்தார்). (That aged gurukkal rode with us from thiruppunavAsal to thIyaththUr. He said that the buses were infrequent in that route. If he misses the 7.45 pm bus to return to thiruppunavAsal, the next bus would be after a few hours! In his younger days he would walk back. However, due to his old age, he now would have to wait for the bus. Still he was continuing his service. Such was his dedication)


திருப்புனவாயில், திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்), திருப்புத்தூர், தீயத்தூர் என்ற தலங்கள் பாண்டிய நாட்டில் உள்ளன.


5)

அன்பில் ஆலந் துறைவயல்கள் .. அணிசெய் திருமங் கலம்முடிவில்

இன்பம் தன்னை நல்குநகர் .. எழில்மாந் துறைஅம் பூவாளூர்

துன்பம் அகற்றும் தொல்பிடவூர் .. சோலை சூழ்காட் டுப்பள்ளி

அன்பர்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


அன்பில் ஆலந்துறை, திருமங்கலம், நகர், மாந்துறை, பூவாளூர், திருப்பிடவூர் (திருப்பட்டூர்), திருக்காட்டுப்பள்ளி என்ற தலங்கள் சோழநாட்டில் லால்குடி அருகே உள்ளன (3-20 கிமீ).


6)

தெளிநீர்ப் பொன்னித் தென்கரையில் .. திருவார் கின்ற பராய்த்துறைஆர்

அளிசேர் கடம்பந் துறைதிங்கள் .. அணவு கின்ற செங்கோடு

குளிரார் பாண்டிக் கொடுமுடிவிண் .. கொடுக்கும் வெஞ்ச மாக்கூடல்

அளிவார்க் கருளும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


தெளிநீர் - தெளிந்த நீர்; (அப்பர் தேவாரம் - 4.8.2 - "தெளிநீருமல்லர்");

திங்கள் அணவுகின்ற - நிலவை அணுகும்;

ஆர் அளி - ஒலிக்கின்ற வண்டுகள்;

குளிர் ஆர் - குளிர்ச்சி பொருந்திய;

விண் கொடுக்கும் - வானுலக வாழ்வு நல்கும்; ((சம்பந்தர் தேவாரம் - 2.43.8 - "அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்");

அளிதல் - மனம் குழைதல்;


திருப்பராய்த்துறை, கடம்பந்துறை (குளித்தலை), - சோழநாட்டுத் தலங்கள்;

திருச்செங்கோடு, கொடுமுடி, வெஞ்சமாக்கூடல் - கொங்குநாட்டுத் தலங்கள்;


7)

ஒருதாய் ஆனான் சிராப்பள்ளி .. ஓங்கு பொழில்சூழ் ஆனைக்கா

வருவார் மகிழ்மூக் கீச்சரம்வான் .. வந்து வணங்கு திருவெறும்பூர்

கருவார் வினைதீர் நெடுங்களம்நம் .. கட்டம் களைகற் குடிவிலங்கல்

அருமா மறைசொல் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


வான் வந்து வணங்கு திருவெறும்பூர் - தேவர்கள் எறும்பு வடிவில் ஈசனைப் பூசித்த தலம்;

கரு ஆர் வினை தீர் - கருவிற் பிணிக்கும் வினையைத் தீர்க்கும்; (ஆர்த்தல் - பிணித்தல்);

கட்டம் களை கற்குடி விலங்கல் - கஷ்டங்களைப் போக்கும் கற்குடி மலை; (விலங்கல் - மலை;)


திருச்சிராப்பள்ளி (தாயுமானவர் கோயில்), திருவானைக்கா, மூக்கீச்சரம் (உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்), திருவெறும்பூர், திருநெடுங்களம், திருக்கற்குடி (உய்யக்கொண்டான்மலை) - திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள தலங்கள்;


8)

அணிபாற் றுறைதென் பூந்துருத்தி .. ஆலம் பொழில்வண் தாமரையான்

பணிவான் கண்டி யூர்பரவும் .. பத்தர் பிணிதீர் புள்ளமங்கை

மணியார் முடிபத் துடையானை .. மலைக்கீழ் நெரித்து வரமீந்தான்

அணியா மதிசூ டழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


அணி பாற்றுறை - அழகிய திருப்பாற்றுறை;

தென் பூந்துருத்தி ஆலம்பொழில் - அழகிய திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில்;

வண் தாமரையான் பணி வான் கண்டியூர் - வளமையான தாமரைமேல் இருக்கும் பிரமன் பணிந்தேத்தும் அழகிய திருக்கண்டியூர்; (வான் - அழகு); (* கண்டியூர் - அட்டவீரட்டத்தலங்களுள் ஒன்று. பிரமனின் சிரத்தைக் கொய்த தலம்);

பரவும் பத்தர் பிணிதீர் புள்ளமங்கை - துதிக்கின்ற பக்தர்களது பிணிகளைத் தீர்க்கும் திருப்புள்ளமங்கை;

மணி ஆர் முடி பத்து உடையானை மலைக்கீழ் நெரித்து வரம் ஈந்தான் - நவரத்தினக் கிரீடங்கள் திகழும் பத்துத் தலைகளை உடைய இராவணனைக் கயிலைமலையின்கீழே நசுக்கிப் பின் வரம் அளித்தவன்;

அணியா மதிசூடு அழுந்தை அரன் அமரும் பதிகள் அடைவோமே - ஆபரணமாகப் பிறைச்சந்திரனைப் புனைந்தவன், திருவழுந்தூர்ச் சிவபெருமான் விரும்பி உறையும் பதிகள்; அவற்றைச் சென்றடைவோமாக. (அணியா - அணியாக; கடைக்குறை விகாரம்);


திருப்பாற்றுறை, திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில், திருக்கண்டியூர், புள்ளமங்கை (பசுபதிகோவில்) - சோழநாட்டுத் தலங்கள்;


9)

கோலக் கொட்டை யூர்நன்னீர்க் .. கொள்ளி டஞ்சூழ் வைகாவூர்

ஏலப் பொழிலார் விசயமங்கை .. ஏரார் புறம்ப யமின்னம்பர்

நீல வண்ணன் மலர்மேலான் .. நேட நின்ற பரஞ்சோதி

ஆலம் உண்ட அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


கோலம் - அழகு;

ஏலம் - வாசனை; (நம்பியாண்டார் நம்பி - ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் - 11.38.3 - "ஏலப் பொழிலணி சண்பையர் கோனை");

ஏர் - அழகு; நன்மை;

நீலவண்ணன் மலர்மேலான் நேட நின்ற பரஞ்சோதி - கரிய நிறமுடைய திருமாலும் தாமரைமேல் உறையும் பிரமனும் தேடுமாறு ஓங்கிய மேலான ஜோதிவடிவினன்;


கொட்டையூர், திருவைகாவூர், விசயமங்கை (விஜயமங்கை), திருப்புறம்பயம் (திருப்புறம்பியம்), இன்னம்பர் (இன்னம்பூர்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.


10)

அஞ்செ ழுத்தே நினைசண்டிக் .. கருள்பு ரிந்த ஆப்பாடி

மஞ்சு வளம்சேர் சேய்ஞலூர் .. வயல்சூழ் தேவன் குடிவியலூர்

வெஞ்சொல் பேசித் திரிகின்ற .. மிண்டர்க் கருளான் அடியாரை

அஞ்சல் என்னும் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


சண்டி - சண்டேசுர நாயனார்; (பெரியபுராணத்தில் இவர் வரலாற்றைக் காண்க);

மஞ்சு - மேகம்;

மிண்டர் - கல்நெஞ்சர்;

அடியாரை "அஞ்சல்" என்னும் அழுந்தை அரன் - "அஞ்சேல்" என்று அபயம் அளித்துப் பக்தர்களைக் காக்கும் திருவழுந்தூர் அரன்;


திருவாப்பாடி (திருவாய்ப்பாடி), சேய்ஞலூர் (சேங்கனூர்), திருந்துதேவன்குடி (கற்கடேஸ்வரர் கோயில்), திருவியலூர் (திருவிசநல்லூர்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.


11)

எயிறு திகழ்வெள் ளேனமடி .. ஏத்த நின்ற சிவபுரம்சீர்

பயிலு கின்ற கலயநல்லூர் .. பழனஞ் சூழ்ந்த கருக்குடிபூங்

குயிலார் சோலைக் குளிர்நறையூர்க் .. கோயில் சித்தீச் சரமெல்லாம்

அயிலார் சூலன் அழுந்தையரன் .. அமரும் பதிகள் அடைவோமே.


எயிறு - பன்றிக்கொம்பு;

வெள் ஏனம் - வெண்பன்றி;

பயில்தல் - பொருந்துதல்; தங்குதல்;

பழனம் - வயல்;

பூங்குயில் ஆர் சோலைக் குளிர் நறையூர்க் கோயில் சித்தீச்சரம் - அழகிய குயில்கள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய நறையூரில் உள்ள சித்தீச்சரம் என்ற கோயில்;

அயில் ஆர் சூலன் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்தியவன்;


* திருமால் பன்றி உருவில் ஈசனை வழிபட்ட தலம் சிவபுரம். (தலபுராணத்திற் காண்க).

(சம்பந்தர் தேவாரம் - 1.112.2 - "வென்றிகொள் எயிற்றுவெண் பன்றிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே");


சிவபுரம், திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை), கருக்குடி (மருதாநல்லூர்), நறையூர்ச் சித்தீச்சரம் (நறையூர்ச் சித்தநாதேஸ்வரர் கோயில்) - கும்பகோணத்தைச் சுற்றியுள்ள தலங்கள்.


வி. சுப்பிரமணியன்

-------------- --------------