Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts
Showing posts with label மொழிபெயர்ப்பு. Show all posts

Saturday, May 10, 2025

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

2017-08-06

V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

---------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)


* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.

இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.


1)

பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்

முராரிக்கு மையன் அறாவின்ப னாகி

இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்

.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.


பதம் பிரித்து:

பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;

முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,

இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பிரான் - தலைவன்;

எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;

அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);

முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);

அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);

இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");

பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;

தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


2)

சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்

இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்

பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;

இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;

பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");

அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);

இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");

விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);

பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


3)

மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்

நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்

தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;

நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;

தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);

மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");

நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);

பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");

தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;

வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


4)

புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்

அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்

பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;

அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;

பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;

அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;

வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;

பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;

கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


5)

மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்

அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்

கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;

கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);

அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);

கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


6)

கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி

வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்

சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;

வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;

சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);

வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;

சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);

பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


7)

சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்

சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்

மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;

சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;

மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);

கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);

சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");

நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");

குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);

மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;

திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


8)

அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி

பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்

கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


பதம் பிரித்து:

அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;

பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;

கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;

.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.


அரன் - ஹரன்;

பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;

மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);

பரன் - மேலானவன்;

வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;

பவன் - என்றும் இருப்பவன்;

மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;

கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");

மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");

சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, November 6, 2023

08.05.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

08.05.034 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )


08.05 – பலவகை

2015-12-25

8.5.34 - லிங்காஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )

--------------------------------------------

(மூவடிமேல் ஓரடி வைப்பு)

(தானன தானன தானன தானா - சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.)

( Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)


* சந்தம் கெடாத இடங்களில், படிப்போர் வசதி கருதிப், புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது;


1)

நான்முகன் நாரணன் வான்தொழு லிங்கம்

ஊனமி லாஒளி யாய்த்திகழ் லிங்கம்

வான்பிணி தீர்த்தருள் நல்கிடு லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


நான்முகன் - பிரமன்;

நாரணன் - விஷ்ணு;

வான் - தேவர்;

லிங்கம் - சிவபெருமானின் அருவுருவம்;

ஊனம் - குறைவு; குற்றம்;

வான்பிணி - பெரும்பிணி - பிறவிப்பிணி;

நாநித மேத்தும தேசிவ லிங்கம் - 1. (என்) நா நிதம் ஏத்தும் அதே சிவ லிங்கம்; 2. நாம் நிதம் ஏத்தும் அதே சிவலிங்கம்;

நாநிதம் - 1. நா + நிதம்; 2. நாம் + நிதம்; (இவ்விடத்தில் புணர்ச்சியில் முதற்சொல்லின் ஈற்றிலுள்ள ம் கெடும்);

நா - நாக்கு;

நிதம் - நித்தம் - தினமும்; எப்போதும்; அனவரதமும்; (சதா - எப்பொழுதும்);


குறிப்பு: "லிங்கம்" என்பது தமிழ் இலக்கணப்படி "இலிங்கம்" என்று வரும், ஆயின், மூலப்பாடலின் சந்த அமைப்பை ஒட்டி இம்மொழிபெயர்ப்பிலும் "லிங்கம்" என்றே கையாளப்பட்டுள்ளது.


2)

பன்முனி வான்அடி வாழ்த்திடு லிங்கம்

மன்மத னைப்பொடி ஆக்கிய லிங்கம்

முன்னம ரக்கனை ஊன்றிய லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பன்முனி வான் - பல் முனி வான் - பல முனிவர்களும் தேவர்களும்;

பொடி - சாம்பல்;

முன்னம் அரக்கனை ஊன்றிய - முன்பு (தனது ஆணவத்தால் கயிலையைப் பெயர்த்த) இராவணனை நசுக்கி அவனது கர்வத்தை அழித்த; (ஊன்றுதல் - அமுக்குதல்; நசுக்குதல்); (அப்பர் தேவாரம் - 4.74.10 - "திரண்ட திண்டோள் அரக்கனை ஊன்றி");


3)

கந்தம லிந்திடு பூச்சணி லிங்கம்

சிந்தைம யக்கைஅ றுத்தருள் லிங்கம்

அந்தரர் சித்தரெ லாம்பணி லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


கந்தம் மலிந்திடு பூச்சு அணி - வாசனை மிகுந்த கலவைச்சாந்து முதலியவற்றை அணிந்தருளும்; (பூச்சு - smearing, anointing; தடவுதல்; பூசுதல்);

சிந்தை மயக்கை அறுத்து அருள் - மனமயக்கத்தைத் தீர்த்துத் தெளிவை அளித்து அருளும்;

அந்தரர் சித்தரெலாம் பணி - தேவர்கள், சித்தர்கள் முதலிய எல்லாரும் பணிகின்ற; (அந்தரர் - தேவர்கள்);


4)

பொன்மணி ஆகமி லங்கிடு லிங்கம்

பன்னக நாணைஅ ரைக்கணி லிங்கம்

முன்னொரு வேள்வித கர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பொன் மணி ஆகம் இலங்கிடு - 1) பொன்னும் மணியும் மேனியில் விளங்குகின்ற; 2) பொன் போல் அழகிய மேனி விளங்குகின்ற (மணி - இரத்தினம்; அழகு); (ஆகம் - மேனி; மார்பு); (சுந்தரர் தேவாரம் - 7.24.1 - "பொன்னார் மேனியனே");

பன்னக நாணை அரைக்கு அணி - பாம்பை அரைநாணாக அணிகின்ற; (பன்னகம் - பாம்பு);

முன் ஒரு வேள்வி தகர்த்து அருள் - முன்னர் (தக்கன் செய்த) ஒரு யாகத்தை அழித்த;


5)

குங்கும சந்தனம் ஏற்றருள் லிங்கம்

பங்கய மாலை உகந்தருள் லிங்கம்

தங்கிய முன்வினை சாய்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பங்கய மாலை உகந்து அருள் - தாமரைமாலையை விரும்பி ஏற்கின்ற;

தங்கிய முன்வினை - சஞ்சிதம்; (தங்குதல் - to remain; to exist); (சஞ்சிதம் - அனாதியாய் ஈட்டப்பட்டுள்ள கருமத்தில் அனுபவித்துத் தீர்ந்ததுபோக எஞ்சியது);

சாய்த்து அருள் - அழித்து அருள்கின்ற; (சாய்த்தல் - கெடுத்தல் - To destroy);


6)

பல்லிமை யோர்கணம் முன்பணி லிங்கம்

நல்லுளம் அன்பொடு நாடிடு லிங்கம்

எல்லியொர் கோடிநி கர்த்தொளிர் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


பல் இமையோர் கணம் முன் பணி - பல தேவகூட்டங்கள் வணங்குகின்ற; (உம்மைத்தொகையாகக் கொண்டு, "பல தேவர்களும் பூதகணங்களும் வணங்குகின்ற" என்றும் பொருள்கொள்ளலாம்);

நல் உளம் அன்பொடு நாடிடு - நல்ல உள்ளம் உடையோர் பக்தியோடு போற்றுகின்ற;

எல்லி ஒர் கோடி நிகர்த்து ஒளிர் - ஒரு கோடி சூரியர்கள் போல் ஒளிவீசுகின்ற; (எல்லி - சூரியன்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்);


7)

எண்மல ரால்தொழு தேத்திடு லிங்கம்

எண்ணிலி அண்டமெ லாம்படை லிங்கம்

மண்ணினர் எண்கலி தீர்த்தருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


எண்மலரால் தொழுது ஏத்திடும் - அஷ்டபுஷ்பங்களால் வழிபாடு செய்யப்பெறுகின்ற;

(அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு. அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி");

எண்ணிலி அண்டம் எலாம் படை - எண்ணற்ற அண்டசராசரங்களைப் படைக்கின்ற; (எண்ணிலி - எண்ணற்ற);

மண்ணினர் எண்கலி தீர்த்து அருள் - மனிதர்களுடைய எட்டு வகையான தரித்திரங்களைத் தீர்த்து அருள்கின்ற; (கலி - தரித்திரம்);

(தமிழில் "பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்" என்று 16 பேறுகளைக் குறிப்பிடுவதுபோல், வடமொழியில் "அஷ்டைசுவரியம்" - எண்வகைச் செல்வம்; அந்த எட்டுச் செல்வங்களின் இன்மை - அஷ்டதரித்திரம்); (அஷ்டலக்ஷ்மி - இந்த எட்டுச் செல்வங்களை அளிக்கும் லக்ஷ்மிகள் என்று கருதலாம்போல்);


8)

வானவ ருங்குரு வுந்தொழு லிங்கம்

வானல ரால்அடி வாழ்த்திடு லிங்கம்

மானமி லங்கிய வான்பொருள் லிங்கம்

.. நாநித மேத்தும தேசிவ லிங்கம்


வானவரும் குருவும் தொழு - தேவர்களும் தேவகுருவும் தொழுகின்ற;

வான் அலரால் அடி வாழ்த்திடு - தேவலோகத்துப் புஷ்பங்களால் திருவடியைப் போற்றுகின்ற; (அலர் - பூ);

மானம் இலங்கிய வான் பொருள் - மேன்மை விளங்கிய பரம்பொருள்; (மானம் - உயர்வு; பெருமை); (வான் பொருள் - எட்டாத பொருள்) (திருவாசகம் - திருச்சாழல் - 10 - "தானந்தம் இல்லான் ... வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ");


"நூற்பயன் (பலசுருதி)" -- திருவாசகம் - சிவபுராணம் - ஈற்றடிகள் :

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து.


துதித்தற்கு அருமையானவனைத் துதித்து, அவனது திருவடியின் மீது பாடிய பாட்டின் பொருளையறிந்து துதிப்பவர், எல்லோரும் வணங்கித் துதிக்கச், சிவநகரத்திலுள்ளவராய்ச் சிவபெருமானது திருவடிக்கீழ்ச் சென்று நிலைபெறுவர்.


வி. சுப்பிரமணியன்


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்புகள் :

தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

முதற்சீர் தனதன என்றும் வரலாம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.


தமிழில் சந்தப்பாடல்களில் சில இடங்களில் இடையின / மெல்லின ஒற்றுகள் அலகிடப்படா.

ஐகாரக் குறுக்கம் நிகழும் இடங்களில் அது குறில் போல அலகிடப்படும்.


வடமொழிப் பாடல்களில் பொதுவாக எதுகை இராது. இந்தத் தமிழ்மொழிபெயர்ப்பில், தமிழில் எதுகையும் அமையப் பாடப்பெற்றுள்ளது.


2) Lingashtakam - ब्रह्ममुरारिसुरार्चितलिङ्गम् - ப்ரஹ்மமுராரிசுரார்சிதலிங்கம்)

Some English translations of Lingashtakam can be seen here:

a) https://sanskritdocuments.org/doc_shiva/lingashhMean.html

b) http://svbf.org/newsletters/wp-content/uploads/paramartha-tattvam-articles/vol3no1.pdf

c) word by word translation: https://greenmesg.org/stotras/shiva/lingashtakam.php


3) அஷ்டலக்ஷ்மி

Form of Lakshmi Form of Wealth

धन लक्ष्मी Dhana Lakshmi - Money, Gold, precious stones…

धाय्न्य लक्ष्मी DhAnya Lakshmi - Health, Grains, food, well-being…

आदि लक्ष्मी Adi Lakshmi - Agricultural lands, properties…

गज लक्ष्मी Gaja Lakshmi - Cattle, horses, vehicles…

विजय लक्ष्मी Vijaya Lakshmi - Victory, power, employees, subordinates, followers…

विद्या लक्ष्मी Vidya Lakshmi - Knowledge, intelligence, comprehension, power of speech…

संतान लक्ष्मी Santana Lakshmi - Family, kids, relatives, friends, relationships…

धैर्य लक्ष्मी Dhairya Lakshmi - Bravery, courage, entrepreneurial spirit…

-------------------------------- -------------------------------