Showing posts with label திருஞான சம்பந்தர் துதி. Show all posts
Showing posts with label திருஞான சம்பந்தர் துதி. Show all posts

Saturday, August 1, 2026

N.059 - திருஞான சம்பந்தர் துதி - நலிவல் வினைதீர்ந்து

2020-06-06

N.059 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2020

----------------


1) --- (சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனனா) ---


நலிவல் வினைதீர்ந் துலகோர் உயவே

புலியின் னுரியன் புகழைத் தினமும்

பொலியின் தமிழால் புகல்கா ழியர்கோன்

ஒலிசெய் கழலுன் னிடுமென் உளமே.


நலி வல்வினை தீர்ந்து உலகோர் உயவே - வருத்துகின்ற வலிய வினையெல்லாம் தீர்ந்து உலகமக்கள் உய்யும்படி; (நலிதல் / நலித்தல் - வருத்துதல்); (உயவே - உய்யவே - இடைக்குறை விகாரம்);

புலியின் உரியன் புகழைத் தினமும் - புலித்தோலை அணிந்த சிவபெருமானது புகழை நாள்தோறும்; (புலியின்னுரியன் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

பொலி இன்-தமிழால் புகல் காழியர்கோன் - அழகிய இனிய தமிழால் பாடியவரும் சீகாழியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்தரது; (புகல்தல் - சொல்தல்);

ஒலிசெய் கழல் உன்னிடும் என் உளமே - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை என் உள்ளம் நினைக்கும்; (உன்னுதல் - எண்ணுதல்);


2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

கண்ணப்பிக் காளத்திக் கண்ணுதலான் திருவாக்கால்

கண்ணப்பன் எனப்பெற்ற கானத்து வேட்டுவர்சீர்

பண்ணொத்துத் திகழ்பதிகம் பாடியருள் சம்பந்தர்

அண்ணிக்கும் தமிழ்பாடி அவர்கழலைப் பணிவோமே.


கண் அப்பிக் காளத்திக் கண்ணுதலான் திருவாக்கால் கண்ணப்பன் எனப் பெற்ற கானத்து வேட்டுவர் சீர் - நெற்றிக்கண்ணுடைய காளத்திப் பெருமானுக்குத் தம் கண்ணை இடந்து அப்பி, அப்பெருமானால் "கண்ணப்பன்" என்று அழைக்கப்பெற்றவரும் காட்டில் வேடர்குலத்தில் வந்தவருமான கண்ணப்பரது புகழை;

பண் ஒத்துத் திகழ் பதிகம் பாடியருள் சம்பந்தர் - பண்ணும் தாளமும் திகழும் பதிகத்தில் பாடியருளிய சம்பந்தரது; (ஒத்து - தாளவொற்று - தாளம்); (சம்பந்தர் தேவாரம் - 3.69.4 - "வாய் கலசமாக வழிபாடு செய்யும் வேடன் மலராகு நயனம் காய்கணையினால் இடந்தீசனடி கூடு காளத்திமலையே");

அண்ணிக்கும் தமிழ் பாடி அவர் கழலைப் பணிவோமே - தித்திக்கின்ற தேவாரத்தைப் பாடி அவரது திருவடியைப் பணிவோம்; ( அண்ணித்தல் - தித்தித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, March 24, 2026

N.055 - திருஞான சம்பந்தர் துதி - கழுமல நகரிறை

2019-05-09

N.055 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2019

----------------


1) --- ("கந்த பத்யம்" - அமைப்பில்) ---

கழுமல நகரிறை உமைவர

அழுதவ ரிசையார் தமிழினை அருளிய நாவர்

வழுதியை நீறணி வித்தார்

பழுதில் புகழார் அடியிணை பணிமட நெஞ்சே.


கழுமலநகர் இறை உமை வர அழுதவர் - சீகாழிச் சிவபெருமானும் உமாதேவியும் வரும்படி அழுதவர்;

இசை ஆர் தமிழினை அருளிய நாவர் - இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி அருளியவர்;

வழுதியை நீறு அணிவித்தார் - பாண்டிய மன்னனைத் திருநீறு பூசிச் சைவன் ஆக்கியவர்;

பழுது-இல் புகழார் - குற்றமற்ற புகழை உடையவர்;

அடியிணை பணி மடநெஞ்சே - அந்தத் திருஞான சம்பந்தரது இருதிருவடிகளை வழிபடு நெஞ்சமே.


* "கந்த பத்யம்" - இந்தப் பாடலின் யாப்புக்குறிப்பை "மதிசூடி துதிபாடி - தொகுதி 1" நூலின் பிற்சேர்க்கைப் பகுதியில் காண்க.


2) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---

காலனார் வீடவே காலையோச் செம்பிரான்

ஏலவார் கூந்தலாய் இங்கிவற் கூட்டெனப்

பாலையுண் பாலனார் பைந்தமிழ்ப் பாட்டறாச்

சீலனார் பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே.


காலனார் வீடவே காலை ஓச்சு எம்பிரான் - காலனே மாளும்படி காலை உயர்த்திய எம்பெருமான்; (வீடுதல் - சாதல்); (ஓச்சுதல் - உயர்த்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.103.9 - "வார்கழல் ஓச்சிக் காலனைக் கடந்த பெம்மான்");

"ஏல-வார்-கூந்தலாய்! இங்கு இவற்கு ஊட்டு" எனப் - "மணம் கமழும் நீண்ட கூந்தலை உடையவளே, இங்கு இவனுக்கு ஊட்டுவாயாக" என்று சொல்ல;

பாலை உண் பாலனார் - (அப்படி உமாதேவி ஊட்டிய) திருமுலைப்பாலை உண்ட காழிப்பிள்ளையார் சம்பந்தர்;

பைந்தமிழ்ப் பாட்டு அறாச் சீலனார் - அழகிய தமிழ்ப்பாமாலைகளை எப்பொழுதும் பாடியருளியவர்;

பொற்கழல் சிந்தைசெய் நெஞ்சமே - அந்தத் திருஞான சம்பந்தரது பொன்னடியை, நெஞ்சே நீ எண்ணுவாயாக;


3) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானன தானன தானன தானா" - "dOdhakam" தோதகம்) ---

பாரின ருய்ந்திட நற்றொடை பாடி

நீரினி லேட்டினை நீந்திட வைத்தார்

நாரிசு ரந்தரு ளின்னமு துண்டார்

ஏரிய லுங்கழ லேத்திடு வோமே.

பதம் பிரித்து:

பாரினர் உய்ந்திட நற்றொடை பாடி

நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார்;

நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார்

ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே.


பாரினர் உய்ந்திட நல்-தொடை பாடி நீரினில் ஏட்டினை நீந்திட வைத்தார் - உலகோர் உய்யுமாறு நல்ல தமிழ்ப்-பாமாலை பாடி வைகையாற்றில் தேவாரப்-பதிக ஏட்டினை மேல்நோக்கி நீந்தச்செய்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.54.11 - "தெற்றென்று தெய்வம் தெளியார் கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில்");

நாரி சுரந்தருள் இன்னமுது உண்டார் - உமை சுரந்தளித்த திருமுலைப்பாலை உண்டவர்;

ஏர் இயலும் கழல் ஏத்திடுவோமே - அந்தத் திருஞான சம்பந்தரது அழகு பொருந்திய திருவடியைப் போற்றுவோம்; (ஏர் - அழகு); (இயல்தல் - பொருந்துதல்);


4) --- (சந்தக் கலிவிருத்தம் - "தானனா தானனா தானனா தானனா" - "sragviNI" ஸ்ரக்விணீ) ---

மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப்

போனகம் செய்தவர் பூதியாற் பாண்டியர்

கோனுடல் வெப்பமண் கூட்டறத் தீர்த்தவர்

ஞானசம் பந்தனார் நற்கழல் வாழ்கவே.


மானையும் தாங்கினான் பங்கினாள் பாலினைப் போனகம் செய்தவர் - (மழு, சூலம், உடுக்கை முதலியவற்றோடு) மானையும் கையில் ஏந்திய சிவபெருமான் திருமேனியில் ஒரு பங்கு ஆன உமை தந்த திருமுலைப்பாலை உண்டவர்; (போனகம் - உணவு);

பூதியால் பாண்டியர்-கோன் உடல் வெப்பு, அமண் கூட்டு அறத் தீர்த்தவர் - திருநீற்றினால் பாண்டிய மன்னது உடலில் இருந்த ஜுரமும், சமணர் கூட்டமும் நீங்குமாறு செய்தவர்; (கூட்டு - உறவு; திரள்); (சம்பந்தர் தேவாரம் - 2.66.11 - "தென்னன் உடலுற்ற தீப்பிணி ஆயின தீரச் சாற்றிய பாடல்கள் பத்தும்");

ஞானசம்பந்தனார் நற்கழல் வாழ்கவே - அந்தத் திருஞான சம்பந்தரது நன்மை பொருந்திய திருவடிகள் வாழ்க;


5) --- (கலிவிருத்தம் - "மாங்கனி மாங்கனி மாங்கனி மா" - வாய்பாடு) ---

அன்றாண்பனை குலையீன்றிட அரனாரடி ஏத்திக்

குன்றாத்தமிழ் உரைசெய்தவர் குடநீறது மங்கை

என்றாகிட அருள்செய்தவர் இருளார்நெறி எல்லாம்

வென்றாரவர் தமிழாகரர் விரையார்கழல் போற்றி.


அன்று ஆண்பனை குலை ஈன்றிட அரனார் அடி ஏத்திக் குன்றாத் தமிழ் உரைசெய்தவர் - முன்பு (திருவோத்தூரில்) ஆண்பனைமரங்கள் எல்லாம் (பெண்ணாகி) உடனே குலை ஈனும்படி சிவபெருமானது திருவடியைப் போற்றி என்றும் திருவருள் குன்றாத தமிழ்ப்பாமாலை பாடியவர்;

(சம்பந்தர் தேவாரம் - 1.54.11 - "குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.18.11 - "புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்ல")

குடநீறுஅது மங்கை என்று ஆகிட அருள்செய்தவர் - (மயிலாப்பூரில்) குடத்தில் இருந்த சாம்பல் பூம்பாவை ஆகும்படி அருளியவர்;

இருள் ஆர் நெறி-எல்லாம் வென்றார் அவர் - இருள் நிறைந்த புறச்சமயங்களையெல்லாம் வென்றவர்;

தமிழ் ஆகரர் - தமிமிழின் உறைவிடமாகத் திகழ்ந்தவர்; (சம்பந்தர் தேவாரம் - 3.117.11 - மாலைமாற்றுத் திருப்பதிகம் - ".... தமிழாகரனே");

விரை ஆர் கழல் போற்றி - அந்தத் திருஞான சம்பந்தரது வாசமலர்ப் பாதங்களை வணங்குகின்றேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, February 17, 2026

N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

2019-03-10

N.053 - சம்பந்தர் & திருநாவுக்கரசர் துதி - காழியில் வந்த

** அப்படிக் காசில் செப்படி வித்தை **

----------------

(ஆசிரியப்பா / அகவல்)


காழியில் வந்த கவுணியர் திலகமும்

ஆழியில் கல்லே அரும்புணை ஆகிக்

கரைசேர் நாவினுக் கரையரும் கங்கைத்

திரையணி முடியன் குரைகழல் போற்றி

அழகிய வீழி மிழலை அதனில் 5

பழவடி யார்கள் பலர்புடை சூழத்

தனித்தனி மடங்களில் இனிதுறைந் திருந்தார்;

சிலநாள் சென்றபின் சலமது பொன்னியில்

இலையென் றாகி உலகினில் மாரியின்

நிலையும் அதுவாய் நிலம்புல மெல்லாம் 10

பயிர்கள் குன்றி உயிர்கள் வாடி

அஞ்சிடு மாறு பஞ்சமும் உற்றதே;

ஒருதினம் அன்பர் இருவர் கனவிலும்

இருள்மலி கண்டன் அருளினன், "உங்கள்

அடியவர்க் காகப் படிக்கா சளிப்போம்; 15

படிமிசைப் பஞ்சம் முடிவடை யும்வரை";

அந்நாள் தொடங்கிப் பொன்னா ணயத்தைக்

கிழக்கிலும் மேற்கிலும் பீடத்தில் வழங்கினான்;

பறையறி வித்துப் பிறையணி பரமன்

தொண்டருக் கெல்லாம் உண்டி இட்டனர்; 20

சண்பையர் மன்னர் தமது மடத்தில்

நண்பகல் தாண்டி உண்பது கண்டு

காரணம் வினவ, "நாரணன் அறியாத்

தீவணன் காசை ஆவண வீதியில்

வாசி படுமெனப் பேசி னார்கள்; 25

அப்பர் காசை அப்படி எவரும்

செப்பிலர்" என்றார் அப்பரி சனங்கள்;

கைத்தொண்டின் பெருமை எத்துணை என்றே

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார்;

மற்றைநாள் கோயிலிற் கற்றைச் சடையனை 30

நற்றமிழ் கொண்டு குற்றமில் காசை

நல்கிட வேண்ட, வெல்விடை ஊர்தி

மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான்;

படிக்கா சதனால் அடியார் பசிதீர்

தாண்டக வேந்தர் தாள்மலர் வாழி 35

காழியர் கோன்கழல் வாழி வாழியே.


சில சொற்பொருள்:

அப்படிக் காசில் செப்படி வித்தை - அப்-படிக்காசில் செப்படிவித்தை; (படி - தினசரிச்செலவுக்காகக் கொடுக்கும் பொருள்; படிக்காசு - படியாகப் பெறும் காசு);

காழியில் வந்த கவுணியர் திலகமும் - சீகாழியில் கௌண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த திருஞான சம்பந்தரும்;

ஆழியில் கல்லே அரும்-புணை ஆகிக் கரைசேர் நாவினுக்கு அரையரும் - கடலில் கல்லே அரிய தெப்பம் ஆகிக் கரையை அடைந்த திருநாவுக்கரசரும்; (ஆழி - கடல்); (புணை - தெப்பம்); (அரையர் - அரசர்);

கங்கைத்-திரை அணி முடியன் குரைகழல் போற்றி - கங்கையின் அலையை முடியில் அணிந்த பெருமானது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை வழிபட்டு; (திரை - அலை);

சலம் அது பொன்னியில் இலை என்று ஆகி - காவிரியில் நீர் வறண்டு; (சலம் - ஜலம்); (இலை - இல்லை);

உலகினில் மாரியின் நிலையும் அதுவாய் - உலகில் மழையும் இல்லை ஆகி; (மாரி - மழை);

இருள்மலி கண்டன் - நீலகண்டன்;

படிமிசைப் பஞ்சம் முடிவடையும்வரை - உலகில் பஞ்சகாலம் முடியும்வரை; (படி - பூமி);

சண்பையர் மன்னர் - சண்பை என்ற பெயரையும் உடைய சீகாழியின் தலைவர் - திருஞான சம்பந்தர்;

நாரணன் அறியாத் தீவணன் காசை ஆவண-வீதியில் வாசி படும் எனப் பேசினார்கள் - திருமாலாலும் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினனான சிவபெருமான் உங்களுக்கு அளித்த காசைக் கடைவீதியில் உள்ளவர்கள் தரம் நிர்ணயித்து வட்டம் (discount) கழிக்கவேண்டும் என்று சொன்னார்கள்;

பரிசனங்கள் - ஏவல்செய்வோர்;

முத்தமிழ் விரகர் சித்தம் நினைந்தார் - முத்தமிழ் வல்லவரான திருஞான சம்பந்தர் மனத்தில் எண்ணினார்;

மற்றைநாள் - அடுத்தநாள்;

நற்றமிழ்-கொண்டு குற்றம் இல் காசை நல்கிட வேண்ட - நல்ல தமிழ்ப்பாமாலையால் குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள; (தாம் பாடிய நல்ல தமிழ்ப்பாமாலைகளை ஏற்றுக்கொண்டு குற்றமற்ற காசை அளிக்கும்படி வேண்டிக்கொள்ள); (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே");

வெல்விடை-ஊர்தி மன்னவன் அவ்வணம் இன்னருள் செய்தான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் அப்படியே இனிது அருள்புரிந்தான்;

தாண்டக-வேந்தர் தாள்மலர் வாழி - தாண்டகம் பாடுவதில் வல்லவரான திருநாவுக்கரசரது பாதமலர் வாழ்க; (தாண்டகம் - திருத்தாண்டகம் - அடிகள்தோறும் எட்டுச் சீர்கள் இருக்கும் ஒரு செய்யுள் அமைப்பு); (தாண்டகவேந்தர் - திருநாவுக்கரசரைச் சுட்டும் ஒரு பெயர்); (வாழி - வாழ்க);

காழியர் கோன் கழல் வாழி வாழியே - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரது திருவடி வாழ்க வாழ்க;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Wednesday, August 6, 2025

N.049 - திருஞான சம்பந்தர் துதி - திருமறைக்காட்டில்

2018-05-29

N.049 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2018

----------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)


திருமறைக் காட்டில் அப்பர் .. செந்தமிழ் காப்பு நீக்கும்

அருமணிக் கதவு மீண்டும் .. அடைத்திடப் பதிகம் பாடி

அருளிய காழி மன்னர் .. ஆலவாய் அரன்வெண் ணீற்றால்

அருகரை வாதில் வென்றார் .. அணிமலர்ப் பாதம் போற்றி.


திருமறைக்காட்டில் அப்பர் செந்தமிழ் காப்பு நீக்கும் அருமணிக் கதவு மீண்டும் அடைத்திடப் பதிகம் பாடி அருளிய காழி மன்னர் - வேதாரண்யத்தில் திருநாவுக்கரசரது தேவாரம் தாழ் நீக்கிய அரிய அழகிய திருக்கதவு மீண்டும் சாத்தும்படி பதிகம் பாடியருளிய சீகாழித் தலைவர்; (காப்பு - கதவின் தாழ்); (காழி மன்னர் - சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தர்); (* திருநாவுக்கரசர் தேவாரம் - 5.10.1 - "பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ"); (* சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்");

ஆலவாய் அரன் வெண்ணீற்றால் அருகரை வாதில் வென்றார் - ஆலவாய் ஈசனது வெண்-திருநீற்றால் சமணரை வாதில் வென்றவர்; (அருகர் - சமணர்); (* சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - மந்திர மாவது நீறு");

அணி-மலர்ப்பாதம் போற்றி - அத்-திருஞானசம்பந்தரது அழகிய தாமரைமலர் போன்ற திருவடியை வணங்குகின்றேன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, April 21, 2025

N.044 - திருஞான சம்பந்தர் துதி - கைதவர் வாதினில்

2017-06-03

N.044 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம்

விளம் விளம் விளம் விளம் விளம் விளங்காய்)


கைதவர் வாதினிற் கழுவினில் ஏறிட

வைதிக நெறியது மண்மிசை மன்னிடச்

செய்திகழ் புகலியில் திருக்குளக் கரைதனில் திருமுலைப் பாலையுண்டார்

மைதிகழ் கண்டனை மலைமகள் பங்கனை

நெய்திகழ் சூலனை நீற்றனைச் சொன்மலர்

பெய்தமிழ் பாடிய பெருமக னார்கழல் பேணிவ ணங்கிடுவோம்.


கைதவர் வாதினில் கழுவினில் ஏறிட - வஞ்சனை செய்த சமணர்கள் வாதில் தோற்றுக் கழுவில் ஏறவும்;

வைதிக-நெறியது மண்மிசை மன்னிடச் - வேதநெறி உலகில் நிலைபெறவும்;

செய் திகழ் புகலியில் திருக்குளக்கரைதனில் திருமுலைப்பாலை உண்டார் - வயல் திகழும் சீகாழியில் கோயில்-குளக்கரையில் உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்; (செய் - வயல்); (புகலி - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று);

மை திகழ் கண்டனை - நீலகண்டனை;

மலைமகள் பங்கனை - உமைபங்கனை;

நெய் திகழ் சூலனை - நெய் அணிந்த சூலப்படையை உடையவனை;

நீற்றனைச் சொல்மலர் பெய் தமிழ் பாடிய பெருமகனார் கழல் பேணி வணங்கிடுவோம் - திருநீற்றைப் பூசிய சிவபெருமானைத் தமிழ்ச்சொற்கள் என்ற மலர்களைத் தொடுத்த பாமாலைகள் பாடித் துதித்த திருஞான சம்பந்தரது திருவடிகளைப் போற்றி வணங்குவோம்; (பெய்தல் - பொழிதல்; கட்டுதல்; தூவுதல்); (பெருமகனார் - பெரியவர்; தலைவர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, May 9, 2024

N.038 - திருஞான சம்பந்தர் துதி - மடைதிறந்தாற் போல்

2016-05-13

N.038 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2016

"சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு"

-----------

(11 பாடல்கள்)

(வெண்பா) (எல்லாப் பாட்டுகளும் ஒரே ஈற்றடி)


1) --- திருமுலைப்பால் உண்தல் ---

மடைதிறந்தாற் போல்கண்ணீர் மல்கியழக் கண்டு

சடையானும் மாதும் தனிவெள் விடையேறி

வந்துபால் ஊட்ட மகிழ்ந்துண்ட சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


மடை - மதகுப் பலகை;

மல்கி - பெருகி;

சடையானும் மாதும் - சிவனும் பார்வதியும்;

தனி - ஒப்பில்லாத;

செப்பு - சொல்;

(சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன்");

("நாவே நீ செப்பு" என்பதனை ஒத்த பிரயோக உதாரணம் - திருநாவுக்கரசர் தேவாரம் - 4.9.1 - "தலையே நீ வணங்காய்");


2) --- திருக்கோலக்காவில் பொற்றாளம் பெறுதல் ---

கையதனால் ஒத்தறுத்துப் பாடுதலைக் கண்டிரங்கி

ஐயன்கோ லக்கா அமரிறை செய்யவன்

தந்தபொற் றாளம் தனையேந்து சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


ஒத்தறுத்து - தாளம் போட்டு; (ஒத்தறுத்தல் - தாளவரையறை செய்தல்);

ஐயன் - தலைவன்;

கோலக்கா அமர் இறை - திருக்கோலக்காவில் விரும்பி உறையும் இறைவன்;

செய்யவன் - செம்மேனியான்;

பொற்றாளம் - பொன் + தாளம்;

(சம்பந்தர் தேவாரம் - 1.23.1 - "மடையில் வாளை பாய");


3) --- முத்துச்சிவிகை பெறுதல் ---

பாத வருத்தத்தைப் பாரா மகனார்க்குச்

சீதமுடி ஈசன் சிவிகைதரக் காதலொடு

சந்தவிசை பாடியரன் தாள்பணிந்த சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


பாத வருத்தத்தைப் பாரா மகனார்க்குச் - தமது பாதம் நோவதையும் பொருட்படுத்தாது பல தலங்களுக்கு நடந்துசென்று தரிசித்துவந்த சம்பந்தருக்கு;

சீதமுடி ஈசன் - கங்காதரன்; (சீதம் - குளிர்ச்சி; நீர்);

சிவிகை - பல்லக்கு;

காதலொடு சந்த-இசை பாடி அரன் தாள் பணிந்த - அன்போடு சந்தம் நிறைந்த இசையோடு கூடிய திருப்பதிகத்தைப் பாடியருளி ஹரன் திருவடியை வணங்கிய;

(சம்பந்தர் தேவாரம் - 2.90.1 - "எந்தை ஈசனெம் பெருமான்");


4) --- மாலைமாற்றுப் பாடுதல் ---

புகலியில் அம்மையப்பன் பொன்னடியைப் போற்றி

அக(ம்)மகிழ்ந்து வாழ்நாளில் யாப்பில் மிகவரிய

அந்தொடை மாலைமாற் றாக்கியருள் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


புகலியில் அம்மையப்பன் பொன்னடியைப் போற்றி அக(ம்) மகிழ்ந்து வாழ் நாளில் - சீகாழியில் அம்மையும் அப்பனும் ஆன பெருமானின் பொன் போன்ற திருவடியை வழிபட்டு உள்ளம் மகிழ்ந்து வாழ்ந்திருந்த சமயத்தில்; (புகலி - சீகாழி);

யாப்பில் மிக அரிய அந்தொடை மாலைமாற்று ஆக்கி அருள் - செய்யுளில் மிகவும் கடினமான அழகிய மாலைமாற்றினைப் பாடி அருளிய; (அந்தொடை - அம் தொடை - அழகிய பாட்டு); (மாலைமாற்று - palindromic poem - A kind of verse that remains identical when its letters are read in the reverse direction);

(சம்பந்தர் தேவாரம் - 3.117.1 - "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா");


5) --- ஏகபாதம் பாடுதல் ---

ஓதவிடம் உண்ட ஒருவன் உமைபங்கன்

தாதைபுகழ் பாடித் தனியேக பாதமெனும்

கந்தமலி ஆரம் கழலிட்ட சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


ஓத-விடம் - கடல்நஞ்சு - ஆலகாலம்;

ஒருவன் - ஒப்பற்றவன்;

தாதை - தந்தை;

தனி - ஒப்பற்ற;

ஏகபாதம் - நான்கு அடிகளும் ஒன்றாகவே அமைந்து வெவ்வேறு பொருள்தரும் பாட்டு - Stanza of four lines all apparently alike but really made up of different sets of words and so conveying different meanings;

கந்தம் மலி ஆரம் - வாசனை மிகுந்த மாலை;

(சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்");


6) --- திருநாவுக்கரசரை அப்பரே என்றழைத்தல் ---

நாரிபங்கன் சீர்பாடு நாவுக் கரசருக்

கூரினர்முன் அப்பரெனும் ஒப்பில்லாப் பேரினைத்

தந்தவர் தண்பூந் தராய்மன்னம் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


பதம் பிரித்து:

நாரிபங்கன் சீர் பாடு நாவுக்கரசருக்கு

ஊரினர்முன் அப்பர் எனும் ஒப்பு-இல்லாப் பேரினைத்

தந்தவர், தண்-பூந்தராய் மன், நம் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


நாரிபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

தண் - குளிர்ந்த;

பூந்தராய் - சீகாழியின் 12 பெயர்களுள் ஒன்று;

மன் - தலைவன்;

(பெரியபுராணம் - சம்பந்தர் புராணம் - 12.28.182 - "விடையின்மேல் வருவார் தம்மை அழுதழைத்துக் கொண்டவர்தாம் அப்பரே எனஅவரும் அடியேன் என்றார்");


7) --- முயலகன் நோய் தீர்த்தல் ---

கொல்லி மழவன் குமரி முயலகன்நோய்

ஒல்லையற இன்பதிகம் ஒன்றினைச் சொல்லியருள்

கந்த மலர்ப்பொழில்சூழ் காழியர்கோன் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கொல்லி-மழவன் குமரி முயலகன்நோய் ஒல்லை அற - கொல்லி-மழவன் மகளைப் பீடித்திருந்த முயலகன் என்ற நோய் விரைவில் நீங்கும்படி; (ஒல்லை - சீக்கிரம்);

இன்-பதிகம் ஒன்றினைச் சொல்லி அருள் - இனிய பதிகம் ஒன்றைப் பாடி அருளிய;

கந்தமலர்ப்-பொழில்சூழ் காழியர்கோன் - வாசமலர்கள் விளங்கும் சோலை சூழ்ந்த சீகாழிக்குத் தலைவர் ஆன;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 1.44.1 - "துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்");


8) --- கொடிமாடச் செங்குன்றூரில் குளிர்சுரம் போக்கியது ---

கொடிமாடச் செங்குன்றூர் தன்னிற் சுரம்தீர்ந்

தடியார் மகிழஅரக் கன்றன் முடிகணெரி

எந்தைதிரு நீலகண்டம் என்றோது சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கொடிமாடச் செங்குன்றூர்-தன்னில் - திருச்செங்கோட்டில்;

சுரம் தீர்ந்து அடியார் மகிழ - குளிர்ஜுரத்தால் வருந்திய அடியவர்களுடைய ஜுரம் தீர்ந்து அவர்கள் மகிழும்படி;

அரக்கன்தன் முடிகள் நெரி எந்தை திருநீலகண்டம் என்று ஓது - இராவணனுடைய பத்துத் தலைகளையும் கயிலைக்கீழ் நசுக்கி அருளிய எம் தந்தையான சிவபெருமானின் திருநீலகண்டம் என்று ஆணையிட்டுப் பாடிய; (அரக்கன்றன் முடிகணெரி = அரக்கன்தன் முடிகள் நெரி);

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 1.116.1 - "அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்");


9) --- மருகலில் விடம் தீர்த்தது ---

மருகலில் மாண்ட வணிகன் உயிரை

இருவர்க் கரியானை ஏத்தித் தரவல்லார்

அந்தமிலா ஈசன் அடிமறவாச் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


மருகலில் மாண்ட வணிகன் உயிரை - திருமருகலில் பாம்பு தீண்டி இறந்த வணிகனுடைய உயிரை;

இருவர்க்கு அரியானை ஏத்தித் தர வல்லார் - திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய ஜோதியான சிவபெருமானைத் துதித்து மீட்டுத் தந்தவர்;

அந்தம்-இலா ஈசன் அடி மறவாச் - அந்தம் இல்லாத ஈசனுடைய திருவடியை என்றும் மறவாத;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் சரண்நீ எனுமால்");


10) --- சமணரை அனல்வாதத்தில் வென்றது ---

நமனையுதை நம்பனை நாளும் வணங்கு

தமர்மடத்தில் தீவை தகவில் அமணரை

வெந்தழல் வாதினில் வெற்றிகொள் சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


நமனை உதை நம்பனை நாளும் வணங்கு - காலனை உதைத்த சிவபெருமானைத் தினமும் வழிபடும்;

தமர் மடத்தில் தீ வை தகவு-இல் அமணரை - சிவனடியார்கள் தங்கியிருந்த திருமடத்தை எரிக்கத் தீ வைத்த, நற்குணமற்ற சமணர்களை; (தகவு - தகுதி; குணம்; நடுநிலை);

வெந்தழல் வாதினில் வெற்றிகொள் - அனல்வாதத்தில் வென்ற; (தழல் - அனல் - நெருப்பு);

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - திருஞான சம்பந்தர் தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக;

(சம்பந்தர் தேவாரம் - 1.49.1 - "போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்")

(சம்பந்தர் தேவாரம் - 3.87.1 - "தளிரிள வளரொளி தனதெழில் தருதிகழ் மலைமகள்");


11) --- திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முக்தி ---

கருமா மிடற்றுக் கடவுள் அவன்தன்

ஒருநாமச் சீரை உரைத்துத் திருமணத்தில்

வந்தவர்க் கெல்லாம்வான் வாழ்வளித்த சம்பந்தர்

செந்தமிழை நாவேநீ செப்பு.


கரு-மா-மிடற்றுக் கடவுள் அவன்தன் ஒருநாமச் சீரை உரைத்துத் - அழகிய நீலகண்டம் உடைய கடவுளின் ஒப்பற்ற நாமமாகிய "நமச்சிவாய" மந்திரத்தின் பெருமையைப் பாடி;

திருமணத்தில் வந்தவர்க்கெல்லாம் வான்-வாழ்வு அளித்த - தம் திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லார்க்கும் சிவலோக வாழ்வினைத் தந்த;

சம்பந்தர் செந்தமிழை நாவே நீ செப்பு - சம்பந்தர் பாடியருளிய தேவாரத்தை, நாவே, நீ சொல்வாயாக.

(சம்பந்தர் தேவாரம் - 3.49.1 - "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி");


வி. சுப்பிரமணியன்

-----------

Thursday, December 22, 2022

N.032 - திருஞான சம்பந்தர் துதி - நலமில்லாப் பரசமய

2015-05-15

N.032 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2015

--------------

(3 பாடல்கள்)


1) ------ நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா -----

நலமில்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய

அலகில்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே

மலைமங்கை தருமுலைப்பால் மகிழ்ந்துண்டு தமிழ்பாட

உலகுய்யத் தாமழுதார் உபயமலர்த் தாள்போற்றி.


நலம் இல்லாப் பரசமய நாணிலிகள் அகன்றொழிய - நன்மையில்லாத வேற்றுச்சமய நாணம் அற்றவர்கள் நீங்கும்படி;

அலகு இல்லா ஆடலுடை அப்பனவன் அருளாலே - அளவு கடந்த திருநடம் உடைய அப்பனான சிவன் அருளால்; (அலகு - அளவு);

மலைமங்கை தரு முலைப்பால் மகிழ்ந்து உண்டு தமிழ் பாட உலகு உய்யத் தாம் அழுதார் உபய-மலர்த்தாள் போற்றி - உமை தந்த திருமுலைப்பாலை இன்புற்று உண்டு தமிழ்ப்-பாமாலைகளைப் பாடவும், உலகம் உய்யவும், அழுதவரான திருஞானசம்பந்தரது இருமலர்ப்பாதங்களுக்கு வணக்கம்; (உபயம் - இரண்டு);


2) ------ அறுசீர் விருத்தம் (மா மா காய் - அரையடி வாய்பாடு) -----

மலரும் மதியும் வார்சடைமேல் .. வைத்தான் கோயில் தனைநோக்கிப்

புலரும் பொழுதில் மருகலிலே .. புலம்பி நின்றாள் தனக்கிரங்கித்

தலைவ தகுமோ இவ்வடியாள் .. தன்னுள் வருத்தம் எனப்பாடிக்

கலியைத் தீர்த்து வாழ்வித்த .. காழி மைந்தர் கழல்போற்றி.


* திருமருகலில் பாம்பு தீண்டியதால் இறந்த வணிகனை உயிர்ப்பித்த வரலாறு;

மலரும் மதியும் வார்சடைமேல் வைத்தான் கோயில்தனை நோக்கிப் - நீள்சடைமேல் மலர்களையும் சந்திரனையும் அணிந்த பெருமானது கோயிலை நோக்கி; (வார்தல் - நீள்தல்);

புலரும் பொழுதில் மருகலிலே புலம்பி நின்றாள்-தனக்கு இரங்கித் - விடியற்காலையில் திருமருகலில் புலம்பிக்கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு இரங்கி;

"தலைவ தகுமோ இவ்வடியாள்தன் உள்-வருத்தம்" எனப் பாடிக் - "தலைவனே, இந்த அடியவளுடைய மனவருத்தம் உனக்குத் தகுமோ" என்று பதிகம் பாடி; (உள் - மனம்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.1 - "சடையாய் எனுமால் .. மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே");

கலியைத் தீர்த்து வாழ்வித்த - அவளது துன்பத்தைத் தீர்த்து அவளுக்கு வாழ்வு அளித்த; (வாழ்வித்தல் - வாழச்செய்தல்);

காழி மைந்தர் கழல் போற்றி - சீகாழியில் அவதரித்த திருமகனாரான திருஞான சம்பந்தரது திருவடிகளுக்கு வணக்கம்;


3) --- (வஞ்சித்துறை - மா மாங்காய் - வாய்பாடு) (திருவிருக்குக்குறள் அமைப்பு) ---

ஊனம் தீர்த்தின்ப

வானம் தான்நல்கும்

ஞான சம்பந்தன்

மானத் தாள்போற்றி.


நம் குற்றங்குறைகளைத் தீர்த்துச் சிவலோக வாழ்வை அருளும் திருஞான சம்பந்தரது மேன்மைமிக்க திருவடிகளுக்கு வணக்கம்.

(ஊனம் - குறைவு; குற்றம்); (மானம் - பெருமை - eminence); (கம்பராமாயணம் - "பொய்யிலான்தன் மானக்கழல் தாழும் வேலையில்"); (ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி - 11.34.42 - "பெறுவது நிச்சயம் .. பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துதலால் .. .. எம்பெருமானவர் பொன்னுலகே");


வி. சுப்பிரமணியன்

----------- -----------