2020-11-11
T.249 - பறியலூர் (பரசலூர்) - கரவிலா மனம்
-----------
(வண்ணவிருத்தம்;
தனன தானன தனன தானன
தனன தானன .. தனதான)
(இருளும் ஓர்கதிர் - திருப்புகழ் - சிதம்பரம்)
கரவி லாமனம் உடைய னாய்நறை
.. .. கமழு(ம்) மாமலர் .. அடிநாளும்
.. கருதி யேபழ வினைகள் ஆயின
.. .. கழலு மாறருள் .. புரியாயே
இரவன் வானவர் அதிபன் நாமகள்
.. .. இகழு(ம்) மாமடி .. ஒறுவீரா
.. இகலு(ம்) மாலயன் அறிவொ ணாவணம்
.. .. எரிய தாய்முனம் .. உயர்வோனே
உரக மாலையும் இதழி மாலையும்
.. .. ஒளிரு(ம்) மார்பினில் .. இழையானே
.. உயிர்கொல் வான்வரு மறலி யேவிழ
.. .. உதைசெய் ஆர்கழல் .. உடையானே
பரவு தேவர்கள் மகிழ மூவெயில்
.. .. படவொர் மாகணை .. தொடுவோனே
.. பசிய சோலையில் அளியு லாவிடு
.. .. பறிய லூருறை .. பெருமானே.
பதம் பிரித்து:
கரவு-இலா மனம் உடையனாய் நறை
.. .. கமழு(ம்) மா-மலர் .. அடி நாளும்
.. கருதியே பழ-வினைகள் ஆயின
.. .. கழலுமாறு அருள் .. புரியாயே;
இரவன், வானவர் அதிபன், நாமகள்,
.. .. இகழு(ம்) மாமடி, .. ஒறு-வீரா;
.. இகலு(ம்) மால்-அயன் அறிவொணாவணம்
.. .. எரியதாய் முனம் .. உயர்வோனே;
உரக-மாலையும் இதழி-மாலையும்
.. .. ஒளிரு(ம்) மார்பினில் .. இழையானே;
.. உயிர் கொல்வான் வரு மறலியே விழ
.. .. உதைசெய் ஆர்-கழல் .. உடையானே;
பரவு தேவர்கள் மகிழ மூ-எயில்
.. .. பட ஒர் மா-கணை .. தொடுவோனே;
.. பசிய சோலையில் அளி உலாவிடு
.. .. பறியலூர் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
கரவு-இலா மனம் உடையனாய் - நான் வஞ்சம் இல்லாத மனத்தை உடையவன் ஆகி; (கரவு - வஞ்சனை);
நறை கமழும் மா-மலர் அடி நாளும் கருதியே - வாசனை கமழும் தாமரைமலர் போன்ற திருவடியைத் தினமும் விரும்பி எண்ணி; (நறை - வாசனை);
பழவினைகள் ஆயின கழலுமாறு அருள் புரியாயே - என் பழைய வினைகளெல்லாம் நீங்குமாறு அருள்க; (கழல்தல் - நீங்குதல்);
இரவன், வானவர் அதிபன், நாமகள், இகழு(ம்) மாமடி, ஒறு-வீரா - (தக்கன் செய்த அவவேள்வியை அழித்து, அங்கே) சந்திரன், இந்திரன், சரஸ்வதி, உன்னை இகழ்ந்த மாமனான தக்கன் இவர்களையெல்லாம் தண்டித்த வீரனே; (இரவன் - சந்திரன்); (அதிபன் - தலைவன்); (நாமகள் - சரஸ்வதி); (மாமடி - மாமன்); (ஒறுத்தல் - தண்டித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.82.4 - "இரவன் பகலோனு மெச்சத் திமையோரை நிரவிட் டருள்செய்த நிமலன்"); (சம்பந்தர் தேவாரம் - 2.34.3 - "மந்தணமிருந்து புரி மாமடிதன் வேள்வி சிந்த விளையாடு சிவலோகன்");
இகலு(ம்) மால்-அயன் அறிவொணாவணம் எரியதாய் முனம் உயர்வோனே - பகைத்து வாதுசெய்து போட்டியிட்ட திருமால் பிரமன் என்ற இருவரும் அடிமுடி அறியாதபடி (எல்லையற்ற ஜோதியாகி) முன்பு நீண்டவனே; (இகல்தல் - மாறுபடுதல்; போட்டிபோடுதல்);
உரக-மாலையும் இதழி-மாலையும் ஒளிரும் மார்பினில் இழையானே - மாலையாகப் பாம்பும் கொன்றையும் திகழும் மார்பில் பூணூலை அணிந்தவனே; (உரகம் - பாம்பு); (இதழி - கொன்றை); (இழை - நூல்); (சம்பந்தர் தேவாரம் - 1.115.3 - "கோலமார்பில் இழையவன் இராமனதீச்சரமே");
உயிர் கொல்வான் வரு மறலியே விழ உதைசெய் ஆர் கழல் உடையானே - (மார்க்கண்டேயரது) உயிரைக் கொல்ல வரும் கூற்றுவனே நிலத்தில் விழுந்து இறக்கும்படி உதைத்த ஒலிக்கின்ற கழல் அணிந்த திருப்பாதனே; (கொல்வான் - கொல்ல; வான் - ஒரு வினையெச்ச விகுதி); (மறலி - இயமன்); (ஆர்த்தல் - ஒலித்தல்);
பரவு தேவர்கள் மகிழ மூ-எயில் பட ஒர் மா-கணை தொடுவோனே - துதித்த தேவர்கள் மகிழுமாறு முப்புரங்கள் அழிய ஒரு பெரிய கணையை எய்தவனே; (பரவுதல் - புகழ்தல்); (எயில் - மதில்; கோட்டை); (படுதல் - அழிதல்);
பசிய சோலையில் அளி உலாவிடு பறியலூர் உறை பெருமானே - பசுமை மிக்க சோலையில் வண்டுகள் உலவுகின்ற திருப்பறியலூரில் உறைகின்ற பெருமானே; (அளி - வண்டு);
வி. சுப்பிரமணியன்
-----------