Showing posts with label தானனத் தனந்த தனதான. Show all posts
Showing posts with label தானனத் தனந்த தனதான. Show all posts

Friday, August 16, 2019

03.05.043 – பொது - தீதினைப் புரிந்து - (வண்ணம்)

03.05.043 – பொது - தீதினைப் புரிந்து - (வண்ணம்)

2007-05-03

3.5.43 - தீதினைப் புரிந்து - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தனந்த .. தனதான )

(காமியத் தழுந்தி யிளையாதே - திருப்புகழ் - சுவாமிமலை)


தீதினைப் புரிந்து .. திரியாமல்

.. தேவுனைப் பணிந்து .. மகிழ்வேனோ

போதினைச் சொரிந்து .. தொழுவார்தம்

.. பூசனைக் கிரங்கி .. அருள்வோனே

சோதியுட் பிறங்கும் .. ஒளியானாய்

.. சோமனைப் புனைந்த சடையானே

மாதிடத் தமர்ந்த .. மணவாளா

.. மாரனைக் கடிந்த .. பெருமானே.


தீதினைப் புரிந்து திரியாமல் - தீய செயல்களை விரும்பிச் செய்து உழலாமல்; (புரிதல் - விரும்புதல்; செய்தல்);

தேனைப் பணிந்து மகிழ்வேனோ - இறைவனான உன்னை வழிபட்டு மகிழ்வேனோ? (தே - தெய்வம்);

போதினைச் சொரிந்து தொழுவார்தம் பூசனைக்கு இரங்கி அருள்வோனே - பூக்களைத் தூவி வணங்கும் அன்பர்களது பூசனையை ஏற்று அவர்களுக்கு இரங்கி அருள்பவனே; (போது - பூ);

சோதியுள் பிறங்கும் ஒளினாய் - சூரியன் முதலாகிய சோதிகளுள் ஒளியாக இருப்பவன்; (பிறங்குதல் - விளங்குதல்; ஒளிவீசுதல்); (அப்பர் தேவாரம் - 4.30.3 - "சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார்");

சோமனைப் புனைந்த சடையானே - சந்திரனைச் சடைமேல் அணிந்தவனே;

மாது இடத்து அமர்ந்த மணவாளா - உமையை இடப்பாகமாக விரும்பிய மணவாளனே; (அமர்தல் - விரும்புதல்);

மாரனைக் கடிந்த பெருமானே - மன்மதனை நெற்றிக்கண்ணால் நோக்கி எரித்து அழித்த பெருமானே; (மாரன் - காமன்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

Sunday, August 11, 2019

03.05.041 – பொது - பாரிடைக் கலங்கி - (வண்ணம்)

03.05.041 – பொது - பாரிடைக் கலங்கி - (வண்ணம்)

2007-05-02

3.5.41 - பாரிடைக் கலங்கி - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தனந்த .. தனதான )

(காமியத் தழுந்தி யிளையாதே - திருப்புகழ் - சுவாமிமலை)


பாரிடைக் கலங்கி .. மடியாமல்

.. பாவினைப் புனைந்து .. பணிவேனே

பாரிடக் கணங்கள் .. அவைகீதம்

.. பாடிடச் சுழன்று .. நடமாடீ

தேரினச் சொடிந்து .. விழவேறித்

.. தீயினிற் புரங்க .. ளவைவீழப்

போரினைப் புரிந்த .. புகழாளா

.. பூதியைப் புனைந்த .. பெருமானே


பாரிடைக் கலங்கி மடியாமல் - இந்த உலகில் மயங்கி வருந்தி அழியாமல்;

பாவினைப் புனைந்து பணிவேனே - பாமாலைகளை இயற்றி உன்னை வணங்குவேன்;

பாரிடக் கணங்கள் அவை கீதம் பாடிடச் சுழன்று நடம் ஆடீ - பூதகணங்கள் இசை பாடச் சுழன்று கூத்தாடுபவனே; (பாரிடம் - பூதம்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.3 - "பூதம் பாடப் புறங்காட் டிடையாடி");

தேரின் அச்சு ஒடிந்து விழறித் - (தேவர்கள் செய்த பெரிய) தேரின் அச்சு முரியும்படி அத்தேரில் ஏறி;

தீயினில் புரங்கள் அவை வீழப் - முப்புரங்களும் தீயில் புகுந்து அழியும்படி;

போரினைப் புரிந்த புகழாளா - போர் செய்த புகழ் உடையவனே;

பூதியைப் புனைந்த பெருமானே - திருமேனியில் திருநீற்றினை அணிந்த பெருமானே; (பூதி - சாம்பல்; திருநீறு);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------