Showing posts with label விளம் மா விளம் மா. Show all posts
Showing posts with label விளம் மா விளம் மா. Show all posts

Monday, April 21, 2025

N.045 - திருநாவுக்கரசர் துதி - கடலிடை ஆழ்த்த

2017-06-03

N.045 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2017

----------------

(ஷட்பதி அமைப்பு -

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா

விளம் மா விளம் மா விளம் மாங்காய்)


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும்

படகென ஆகப் பரிவொடு பதிகத்

தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவுள்ளார்

உடலது தேய்ந்தும் உடையவன் வெற்பை

அடையமு யன்ற திடமனத் தொண்டர்

மடலவிழ் மலரின் மணமிகு வாக்கின் மன்னவர் கழல்போற்றி.


கடலிடை ஆழ்த்தக் கட்டிய கல்லும் படகு என ஆகப் - கடலில் ஆழ்த்துவதற்காகப் பிணித்த அந்தக் கல்லே படகு போல ஆகும்படி;

பரிவொடு பதிகத்தொடைதனில் வெள்ளை விடையினன் நாமம் சொல்லிடு துணிவு உள்ளார் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமானது திருநாமத்தைப் பக்தியோடு பதிகப் பாமாலையில் சொன்ன துணிவு உடையவர்; (பரிவு - அன்பு; பக்தி); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்"); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.11.1 - "கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே");

உடல்அது தேய்ந்தும் உடையவன் வெற்பை அடைய முயன்ற திட-மனத் தொண்டர் - தமது உடல் தேய்ந்தாலும் ஈசன் உறையும் கயிலைமலையைச் சென்றடைய முயன்ற மன-உறுதி மிக்க தொண்டர் அவர்; (பெரியபுராணம் - "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன் என மறுத்தார்");

மடல் அவிழ் மலரின் மணம் மிகு வாக்கின்-மன்னவர் கழல் போற்றி - இதழ்கள் விரியும் பூவினும் மணம் மிக்கவான, திருநாவுக்கரசரது திருவடிகளுக்கு வணக்கம். (மடல் - பூவின் இதழ்); (வாக்கின் மன்னவர் - திருநாவுக்கரசர்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, August 17, 2015

01.49 – பொது - (கதிபெற வேண்டில்)


01.49 –
பொது - (கதிபெற வேண்டில்)



2009-07-11
கதிபெற வேண்டில் பதியினைப் போற்று
-------------------------------------------------------
(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்தது. அரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)



1) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் தேமா கருவிளம் புளிமா" ) ---



துதிசெய எண்ணும் மதியில தாலே
.. துயர்மிக ஆகி அயர்வுறும் மனமே;
எதிரிலன், என்றும் புதியவன், எந்தை,
.. எருதினில் ஏறி வருகிற பெருமான்,
மதிபுனை அண்ணல், குதிநதி தன்னை
.. வளர்சடை வைத்த அளப்பருங் கருணைப்
பதியினைப் போற்று, விதியினை வென்று
.. பயமில தான உயர்கதி பெறவே.



எதிர் இலன் - ஒப்பில்லாதவன்;
அளப்பு அரும் கருணைப் பதி - அளவற்ற கருணை உடைய தலைவன்;



2) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



கதவினைத் தட்டி உதவுக என்று
.. கரங்களைக் கூப்பி இரந்துநின் றாலும்
கதைபல சொல்லி உதவுதல் இன்றிக்
.. கரந்திருப் போர்கள் புரந்திட மாட்டார்;
பதமலர் தன்னை நிதம்தொழும் அன்பன்
.. பயம்கொள வந்த இயமனைக் காலால்
உதைசெயும் எந்தை முதல்வனின் தாளை
.. ஒருசிறி தேனும் கருதிடு நெஞ்சே.



இரத்தல் - யாசித்தல்;
கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்; கொடாது இருத்தல்;
புரத்தல் - காத்தல்; கொடுத்தல்;
அன்பன் - பக்தன்; இங்கே மார்க்கண்டேயர்;
ஒரு சிறிதேனும் - சற்றேனும்; சிறிது அளவாவது;



3)
நரைமயி ரோடு திரைமிகு தோலும்
.. நடுக்கமும் வந்து கொடுநம னாரின்
வரவினை எண்ணி அரள்வதன் முன்னம்
.. வருவினை தீர ஒருவழி கேள்நீ;
அரவொடு திங்கள் சிரமிசைச் சூடி,
.. அழகுமை கூறன், மழவிடை ஏறி,
புரமெரி அண்ணல், வரம்அருள் வள்ளல்
.. புகழ்மிகும் நாமம் புகல்மட நெஞ்சே.



திரை - சுருக்கம்;
கொடு நமன் - கொடிய எமன்;
அரளுதல் - அஞ்சுதல்;
வருவினை - ஆகாமிய வினை;
மழ விடை - இளம் காளை;
சூடி - சூடுபவன்; ஏறி - ஏறுபவன்;


வினை: பழவினை (சஞ்சிதம்), வரு வினை (மேல் எதிர்காலத்து வருவினை - ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை (பிராரத்தவினை).



4)
பணத்தினை நாடி இணக்கமி லாத
.. பலசெயல் செய்து நிலைகுலை யாமல்,
மணமிக வாழும் வணமொரு நல்ல
.. வழிதனைச் சொல்வேன் விழிப்பொடு கேள்நீ;
கணம்பல சூழப் பிணம்இடு காட்டில்
.. கனலிடை ஆடி; முனம்எரி நஞ்சை
உணவென உண்டான்; அணங்கொரு கூறன்;
.. உயர்கயி லாயன் பெயர்உரை நெஞ்சே.



இணக்கம் - பொருத்தம்;
மணம் - மதிப்பு; நன்னிலை;
வணம் - வண்ணம் - வகை (Way, manner, method);
ஆடி - ஆடுபவன்;



5) --- ("கூவிளம் புளிமா கூவிளம் புளிமா" என்ற அரையடி வாய்பாடு) ---



குன்றினை அனைய முன்வினை அதனால்
.. குற்றமே புரியும் பற்றுடை மனமே;
ஒன்றுனக் குரைப்பேன்; வென்றிகொள் விடையான்,
.. உம்பரின் தலைவன், அம்பிகை துணைவன்,
அன்றொரு வனத்தில் பன்றியைத் துரத்தி
.. அத்திரம் அதனைப் பத்தனுக் களிக்கச்
சென்றவன், முடிமேல் கொன்றையை அணியும்
.. தேவனைத் தொழஎப் பாவமும் அறுமே.



* 3-ம் அடி அருச்சுனனுக்குப் பாசுபதம் அளித்த வரலாற்றைச் சுட்டியது.
குன்றினை அனைய - மலை போன்ற;
வென்றி - வெற்றி;
உம்பர் - தேவர்கள்;
அத்திரம் - அஸ்திரம் - பாசுபதாஸ்திரம்;



6)
கட்டமும் துயரும் மட்டிலா தடையக்
.. கப்பிடும் இருளில் எய்ப்புறும் மனமே
ஒட்டிய வினைகள் விட்டறும் வழியை
.. உன்னிடம் உரைப்பேன்; உன்னுதல் புரிவாய்,
மட்டவிழ் மலர்க்கண் இட்டரி தொழஓர்
.. வட்டஆ ழிதனை இட்டமாய் அளித்தான்,
எட்டுரு உடையான், சுட்டவெண் பொடியான்,
.. ஏந்திழை ஒருபால் சேர்ந்தவன் பெயரே.



* 3-ம் அடி திருவீழிமிழலையில் ஆயிரமாவது பூவாகத் தன் மலர்க்கண்ணைத் திருமால் இட்டு அர்ச்சித்துச் சக்கராயுதம் பெற்ற வரலாற்றைச் சுட்டியது.
கப்புதல் - மூடிக்கொள்ளுதல்;
உன்னுதல் - எண்ணுதல்;
மட்டு அவிழ் - தேன் சொட்டும்;
கண் இட்டு அரி - கண்ணைப் பூவாக இட்டு ஹரி;
வட்ட ஆழி - வட்டமான சக்கராயுதம்;
எட்டுரு உடையான் - அட்டமூர்த்தி - நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், ஞாயிறு, திங்கள், இயமானன் (உயிர்); (அப்பர் தேவாரம் - 6.94.1 - 'இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி.....');
ஏந்திழை - பார்வதி;



7) --- ("கூவிளம் தேமா கூவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



தந்திரம் செய்து முந்திட எண்ணித்
.. தாழ்கிற நெஞ்சே வாழ்வழி சொல்வேன்;
அந்தமி லாது வந்தடை கின்ற
.. அல்லலும் நோயும் தொல்வினை யாலே;
கந்தனை ஈன்ற எந்தையை, நாகக்
.. கச்சணி கின்ற பிச்சனை நாளும்
செந்தமிழ் பாடி வந்தனை செய்வாய்;
.. செய்வினை தீரும்; உய்ந்திட லாமே.



அந்தம் இலாது - முடிவின்றி;
நாகக் கச்சு அணிகின்ற பிச்சன் - பாம்பை அரையில் கச்சாகக் கட்டியிருக்கும் பித்தன்;
செந்தமிழ் - தேவாரம், திருவாசகம் முதலியன;
செய்வினை - வினைத்தொகை - செய்த வினை;



8) --- ("கருவிளம் தேமா கருவிளம் தேமா" என்ற அரையடி வாய்பாடு) ---



கனைகடல் போலச் சினஅலை வீசக்
.. கனவினை மெய்யாய் நினைவத னாலே
வினைபல செய்து தினம்இழி கின்ற
.. விதியினை மாற்றிக் கதிபெற நெஞ்சே,
அனையொடு தந்தை எனவரு கின்ற
.. அரும்பொருள் தன்னை, இருபது கையான்
தனைவிர லாலே முனம்நெரி செய்த
.. தலைவனை நாளும் மலரொடு போற்றே.



கனை கடல் - ஒலிக்கின்ற கடல்;
சின அலை - கோப அலைகள்;
அனை - அன்னை என்பதன் இடைக்குறை விகாரம்;
இருபது கையான் தனை - இராவணனை;
முனம் நெரி செய்த – முன்னர் நசுக்கிய;



9)
சரிவினை நல்கும் புரிவினை தீர்ந்து
.. தகவொடு வாழும் வகையிது கேளாய்;
திரிபுரம் மூன்றும் எரிகொளு மாறு
.. சிறுநகை செய்த அறுமுகன் தாதை,
கரியுரி போர்த்த விரிசடை அண்ணல்,
.. கழலிணை தேடி உழல்அரி காணா
எரியென நீண்ட அரியவன் தன்னை
.. எழில்மலர் கொண்டு வழிபடு நெஞ்சே.



சரிவு - வீழ்ச்சி;
புரிவினை - வினைத்தொகை - புரிந்த வினைகள்;
தகவு - பெருமை; தகுதி;
வகை - உபாயம்;
திரி புரம் - வினைத்தொகை - திரிந்த புரங்கள்;
கரி உரி - யானைத்தோல்;



10) --- ("கூவிளம் புளிமா கூவிளம் புளிமா" என்ற அரையடி வாய்பாடு) ---



தெய்வமும் தெளியார், வைவதும் தவிரார்,
.. செய்தவம் எனவே பொய்யுரை புரிவார்,
உய்வழி உணராக் கைதவர் அவரை
.. உற்றவர் எனவே கற்றவர் கருதார்;
மெய்வழி அறிவோர் கைதொழும் பெருமான்,
.. வெண்மதி அணியும் பெண்ணிணை வடிவன்,
செய்யவன், சடையன் பெய்கழல் புகழைச்
.. செப்பிடு மனமே; தப்புதல் எளிதே.



தெளிதல் - அறிதல்;
வைவது - திட்டுவது; இகழ்ந்து பேசுவது;
செய்தவம் - செய்யும் தவம்;
புரிதல் - செய்தல்; விரும்புதல்;
உய்வழி - உய்யும் உபாயம்;
கைதவர் - வஞ்சகர்;
பெண் இணை வடிவன் - பார்வதியோடு சேர்ந்து இருக்கும் அர்த்தநாரீஸ்வரன்;
செய்யவன் - சிவந்த திருமேனி உடையவன்;
பெய்கழல் - கட்டப்பட்ட கழலை அணிந்த திருவடி; (பெய்தல் - கட்டுதல்);
தப்புதல் - உய்தல்;



11)
இன்னலும் இடரும் மன்னியிவ் வுலகில்
.. எய்ப்பினைத் தினமும் துய்க்கிற மனமே;
உன்னிலை இதுபோய் நன்னிலை பெறவே
.. உள்ளது வழியொன் றுள்ளுதல் புரிவாய்;
கன்னலும் அமுதும் அன்னவன், அரிய
.. கற்பகக் கனிபோல் அற்புதன், உலகின்
முன்னவன், முடிவின் பின்னவன், உமைகோன்,
.. முக்கணன் பெயராம் அக்கரம் அஞ்சே.



மன்னுதல் - மிகுதல்;
எய்ப்பு - இளைப்பு (Weariness);
துய்த்தல் - அனுபவித்தல்;
உன்னிலை - உன் நிலை;
நன்னிலை - நல் நிலை;
உள்ளுதல் - எண்ணுதல்;
கன்னல் - கரும்பு;
அன்னவன் - போன்றவன்;
அக்கரம் அஞ்சு - பஞ்சாட்சரம்;
முடிவின் பின்னவன் - எல்லாம் முடிந்தபின்னும் அழிவின்றி உள்ளவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு:
இப்பதிகம் தாஅவண்ணம் அமைந்துள்ள பதிகம்.



சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியில் (Tamil Lexicon – by Madras University) காணும் விளக்கம்:
தாஅவண்ணம்: (Pros.) Rhythm effected by making the third or the fourth foot rhyme with the first; இடையிட்டுவரும் எதுகையுடைய சந்தம் (தொல். பொ. 527.)



இலக்கணக் குறிப்பு:
தொல்காப்பியம் - பொருளதிகாரம் - இளம்பூரணர் உரை:
"தாஅ வண்ணம் இடையிட்டு வந்த எதுகைத் தாகும்"

(என்-னின்) தாவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு.
அடியிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவதல்லது வண்ண வேற்றுமையாகாதென்பது . ஒரு செய்யுளுட் பலஅடி வந்தால் அவையெல்லாம் இடையிட்டுத் தொடுத்தல் வேண்டுமோ எனின் வேண்டா. அவை வந்தவழித் தாஅ வண்ணம் எனப்படும் என்பது. (தொல்,பொருள்.527.பேரா.)



Thursday, August 13, 2015

01.43 – அண்ணாமலை - (திருவண்ணாமலை)


01.
43
அண்ணாமலை - (திருவண்ணாமலை)



2008-12-08
திருவண்ணாமலை
"நெஞ்சே மறவாதே”
-------------------------------
(கலிவிருத்தம் - “விளம் மா விளம் மா" என்ற வாய்பாடு)



1)
மருள்மிக வாகி மாலயன் தேட
நெருப்பென நின்றான் நினைப்பவர்க் கெளிதில்
அருள்புரி அண்ணா மலையனை வாழ்த்த
இருள்கெடும் நெஞ்சே இறைமற வாதே.



மருள் - மயக்கம் (bewilderment of mind, confusion); delusion; வியப்பு (wonder);
மால் அயன் - விஷ்ணுவும் பிரமனும்;
இருள் - அஞ்ஞானம்; மயக்கம்; துன்பம்;
இறை - இறைவன்; / சிறிது; - சிறிதும்; (உம்மைத்தொகை);
இறை மறவாதே - இறைவனை மறவாதே; / சிறிதும் மறவாதே;



2)
கருமுகில் வண்ணன் கடிமலர் மேலான்
திருவடி யோடு திருமுடி தேடும்
அரும்சுடர் அண்ணா மலையனை வாழ்த்த
வரும்திரு நெஞ்சே இறைமற வாதே.



கருமுகில் வண்ணன் - மேகவர்ணன் - விஷ்ணு;
கடி மலர் மேலான் - வாச மலரான தாமரை மேல் இருக்கும் பிரமன்;
திரு - செல்வம்;



3)
பன்றியாய் அன்னப் பறவையாய்ச் சென்றும்
வென்றிகா ணாது வியர்த்தவர் வாட
அன்றுயர் அண்ணா மலையனை வாழ்த்த
நன்றுதான் என்றும் இறைமற வாதே.



வென்றி - வெற்றி;
வேர்த்தல் - அஞ்சுதல் (to be afraid);
வியர்த்து அவர் வாட - அஞ்சி விஷ்ணுவும் பிரமனும் வாட;
வாடுதல் - பொலிவு அழிதல்; மனம் அழிதல்; மெலிதல்;


4)
அலைக்கிடந் தோனும் அலர்மிசை யோனும்
அலைந்துதி ரிந்தும் அடிமுடி காணா
அலகிலா அண்ணா மலையனை வாழ்த்த
இலைதுயர் நெஞ்சே இறைமற வாதே.



அலைக் கிடந்தோன் - கடலில் துயிலும் திருமால்;
அலர் மிசையோன் - தாமரைப் பூவின்மீது இருக்கும் பிரமன்;
அலகு இலா - அளவு இல்லாத;
இலை துயர் - துயர் இல்லை;
(அப்பர் தேவாரம் - 5.95.11 - "செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடித் திரிந்தவர் காண்கிலார்..")



5)
உலகுகள் தாண்டி உயர்கிற சோதி
நிலமகழ் மால்நான் முகன்இவர் நேடி
அலந்திடும் அண்ணா மலையனை வாழ்த்த
இலைஇடர் நெஞ்சே இறைமற வாதே.



நிலம் அகழ் - நிலத்தை அகழ்ந்த;
நான்முகன் - பிரமன்;
நேடுதல் - தேடுதல்;
அலத்தல் - துன்பமுறுதல்;



6)
திருமகள் கேள்வன் திசைமுகன் தேடி
வருந்திடு மாறு வளர்எரி ஆன
அருமணி அண்ணா மலையனை வாழ்த்த
வரும்புகழ் நெஞ்சே இறைமற வாதே.



கேள்வன் - நாயகன்; கணவன்;
திசைமுகன் - பிரமன்;
வளர் எரி - வளர்கிற தீ;
(சம்பந்தர் தேவாரம் - 3.75.9 - "நீலவரை ... மாலுமல ரானுமறி யாமைவளர் தீயுருவ மானவரதன் ...");
அருமணி - அரிய மணி போன்ற;
(சம்பந்தர் தேவாரம் - 3.105.6 -
துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கடல் ஓதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர்
மறைவள ரும்பொருள் ஆயினானை மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புகழ் எய்தும்வாதை நினையா வினைபோமே
----- சிவபெருமானை மனத்தால் நினைந்து போற்ற எக்காலத்தும் அழியாத புகழ் வந்து சேரும். துன்பம் வந்து சேர நினையாது. அத்துன்பத்திற்குக் காரணமான வினைகளும் நீங்கும்.);



7)
அரவணை யானும் அலரவன் தானும்
அரண்டடி போற்ற அழலுரு ஆன
அரன்தனை அண்ணா மலையனை வாழ்த்த
வரம்மிக ஈவான் இறைமற வாதே.



அரவு அணையான் - பாம்புப் படுக்கை மேல் பள்ளிகொள்ளும் விஷ்ணு;
அலரவன் - தாமரை மலர் மேல் இருக்கும் பிரமன்;
அரள்தல் - துணுக்குறுதல் (to be startled, struck with fear, shocked);
அழல் உரு - சோதி வடிவம்;


(சம்பந்தர் தேவாரம் - 1.47.9 -
"மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே ....");



8)
அரக்கனை அன்று நெரித்தருள் வோனைப்
பரமெவர் என்று முரணியோர் காணா
வரையிலா அண்ணா மலையனை வாழ்த்த
இரங்குவான் நெஞ்சே இறைமற வாதே.



அரக்கன் - இராவணன்;
முரணுதல் - மாறுபடுதல் (to be opposed; to disagree, differ; to be discordant; to be in contrast);
பரம் எவர் என்று முரணியோர் = தங்கள் இருவருள் எவர் பரம்பொருள் என்று வாதிட்ட திருமால், பிரமன்;
வரை இலா - அளவு இல்லாத; எல்லை அற்ற;
இரங்குதல் - கருணைசெய்தல்; அருள்புரிதல்;
"அண்ணா மலையனை வாழ்த்த இரங்குவான்" - "அவன் இரங்குவான்" என்பதில் "அவன்" என்பது தொக்கு நிற்கிறது.



9)
மறையவ னோடு மணிவணன் தேடிப்
பறந்தகழ்ந் தோடிப் பணிசுட ரோனை
அறவனை அண்ணா மலையனை வாழ்த்தி
இறைஞ்சிடு நெஞ்சே இறைமற வாதே.



மறையவன் - பிரமன்;
மணிவணன் - மணிவண்ணன் - விஷ்ணு (Vishnu, as sapphire-colored);
பணி சுடரோன் - பணிந்த சோதியை;
அறவன் - அற வடிவினன்; (தர்மரூபி);
வாழ்த்துதல் - துதித்தல்;
இறைஞ்சுதல் - வணங்குதல்;



10)
புறவழி யோர்சொல் புறனுரை எல்லாம்
அறவுரை அல்ல அரும்பெரும் சோதி
மறைமொழி அண்ணா மலையனை வாழ்த்தி
நிறைமகிழ் வெய்தி நிலைபெற லாமே.



புறனுரை - பழிச்சொல் (slander); வெற்றுரை (meaningless utterance);
அறவுரை - தருமோபதேசம்;
மறை - வேதம்;
நிறை மகிழ்வு - நிறைந்த மகிழ்ச்சி;
நிலைபெறுதல் - துன்பமற்றநிலையை அடைதல்;
(திருவாசகம் - திருவெம்பாவை - 1 - "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை")



11)
தருக்கிய மாலும் தாமரை யானும்
செருக்கறு மாறு செந்தழ லாய்நீள்
உருக்கொளும் அண்ணா மலையனை ஓதக்
கருக்கெடும் நெஞ்சே கணம்மற வாதே.



தருக்குதல் - அகங்காரம் கொள்ளுதல்;
செருக்கு - ஆணவம்;
செந்தழல் ஆய் நீள் உரு - ஒளிப்பிழம்பு ஆகி அளவின்றி நீண்ட வடிவம்;;
உருக்கொள்ளுதல் - வடிவெடுத்தல் (to take shape);
ஓதுதல் - பாடுதல்;
கருக் கெடும் - பிறவித்தொடர் அழியும்; (கரு - பிறப்பு)
கணம் - கணமும் - உம்மைத்தொகை - நொடிப்பொழுதும்;



அன்புடன்,

வி. சுப்பிரமணியன்