Thursday, March 17, 2022

S.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

2010-01-30

S.114 - சிவன் - பௌர்ணமி - சிலேடை

------------------

பிறையணி பூரணமாய்ப் பேரொளி யோடு

பிறங்கியல்லில் ஆடுகின்ற பெற்றி - நிறையும்

பெருங்காதல் கொண்டோர்கள் பேசவரும் சீரார்

கருங்கண்டன் பௌர்ணமி காண்.


சொற்பொருள்:

அணி - அழகு;

அணிதல் - சூடுதல்;

அணி பூரணமாய் - 1. அழகிய முழுமை ஆகி; / 2. அணிகின்ற பூரணன் ஆகி;

பிறங்குதல் - விளங்குதல்;

அல் - இரவு; இருள்;

ஆடுதல் - 1. சஞ்சரித்தல்; / 2. நாட்டியம் ஆடுதல்;

பெற்றி - தன்மை; பெருமை;

காதல் - 1. அன்பு; / 2. பக்தி;

பேசவரும் - 1. பேச வரும்; / 2. பேச அரும்;

பேசுதல் - 1. சொல்லாடுதல்; / 2. துதித்தல்;

காண் - முன்னிலை அசை;


பௌர்ணமி:

பிறைணி பூரணமாய்ப் - பிறையாகத் தோன்றி அழகிய முழுமையடைந்து;

பேரொளியோடு பிறங்கி - மிகுந்த ஒளியோடு திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - இரவில் இயங்குகின்ற தன்மை நிறைந்தது;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச வரும் சீர் ஆர் - மிகவும் காதலுடைய ஆணும் பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கலந்து பேசுமாறு வருகின்ற பெருமை பொருந்திய;

பௌர்ணமி - முழுநிலவு;


சிவன்:

பிறை அணி பூரணமாய்ப் - பிறையைச் சூடும் பூரணப்பொருள் ஆகி;

பேரொளியோடு பிறங்கி - தேஜோமயனாகத் திகழ்ந்து;

அல்லில் ஆடுகின்ற பெற்றி நிறையும் - நள்ளிருளில் திருக்கூத்து ஆடுகின்ற பெருமை உடைய;

பெருங்காதல் கொண்டோர்கள் பேச அரும்-சீர் ஆர் - பேரன்புடைய பக்தர்கள் துதிக்க அரிய புகழ் மிக்க;

கருங்கண்டன் - நீலகண்டன்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

S.113 - சிவன் - மரம் - சிலேடை

2010-01-30

S.113 - சிவன் - மரம் - சிலேடை

------------------

இலைமலர் மேல்திகழு மெய்ப்பை அகற்றி

நலம்தரும் தாள்நிழல் நாளு - மலைபவர்க்

கென்றுமில்லா மாண்பிருக்கும் ஏகபா தங்காட்டும்

மன்றினடம் ஆடி மரம்.


சொற்பொருள்:

மெய்ப்பை - உடலாகிய கூடு;

எய்ப்பு - 1. இளைப்பு (Weariness); / 2. வறுமைக் காலம் (Time of adversity);

திகழுமெய்ப்பை - 1. திகழும்; எய்ப்பை / 2. திகழும்; மெய்ப்பை

நிழல் - 1. சாயை (Shade, shadow); / 2. ஒளி; புகலிடம்; தானம்;

அலைபவர் - திரிபவர்;

மலைபவர் - மயங்குபவர்; மாறுபடுபவர்;

இல்லாமாண்பு - 1. இல் ஆம் மாண்பு / 2. இல்லா மாண்பு;

பாதம் - 1. மரத்தின் அடியிடம்; அடித்தண்டு; / 2. திருவடி;

ஏகபாதர் - ஒற்றைத் தாளர் ஆகிய சிவமூர்த்தம்; (A manifestation of Šiva with one foot);

(அப்பர் தேவாரம் - 6.35.2 - "ஏழுலகுமாய் நின்ற ஏகபாதர்");


மரம்:

இலை மலர் மேல் திகழும் - இலைகளும் பூக்களும் மேலே இருக்கும்;

எய்ப்பை அகற்றி நலம் தரும் தாள் நிழல் - (வெயிலில்) அதன்கீழ் இருக்கும் நிழல் (மக்கள்) களைப்பைப் போக்கி நலம் அளிக்கும்;

நாளும் அலைபவர்க்கு என்றும் இல் ஆம் மாண்பு இருக்கும் - எப்போதும் ஊர் ஊராகத் திரிபவர்க்கு மரத்தடியே வீடும் ஆகும்; (பஜகோவிந்தம் - 18 - "சுர மந்திர தரு மூல நிவாஸ:");

ஏகபாதம் காட்டும் - ஒரே ஒரு அடிப்பாகம் காட்டும்;

மரம் - ஒரு மரம்;


சிவன்:

இலை மலர் மேல் திகழும் - திருமுடிமேல் (வில்வம், வன்னி, முதலிய) இலைகளும் (கொன்றை, ஊமத்தை, எருக்கு முதலிய) மலர்களும் இருக்கும்;

மெய்ப்-பை அகற்றி நலம் தரும் தாள்நிழல் - அவன் திருவடி பக்தர்கள் உடலாகிய பையை இனியும் அடையாதபடி வினையைத் தீர்த்து நலம் அளிக்கும். (மெய் - உடல்); (தாள் நிழல் - திருவடி);

நாளும் மலைபவர்க்கு என்றும் இல்லா மாண்பு இருக்கும் - என்றும் மயங்கி முரண்படுபவர்களுக்கு இல்லாதவன். (அவர்களால் அறியப்படாதவன்; அவர்களுக்கு அருளில்லாதவன்);

ஏகபாதம் காட்டும் - ஏகபாதமூர்த்தி;

மன்றில் நடம் ஆடி - தில்லையம்பலத்தில் ஆடுகிற நடராஜன்; (மன்றினடம் ஆடி - மன்றில் நடம் ஆடி - அம்பலக் கூத்தன்);


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Tuesday, March 15, 2022

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

2010-01-28

S.112 - சிவன் - திருமால் - சிலேடை

------------------

வானரர் வாழ்த்தும் அரவணைநீர் மையரவர்

கானலர் சூடுவர்அஞ் சக்கரர் - மானடிப்பார்

காத்தருள்வார் வெற்புவில் கையேந்தி நாகமதி

சேர்த்தவர்நா ராயணர் செப்பு.


சொற்பொருள்:

வானரர் - 1. வான் நரர்; / 2. வானரர்;

வான் - தேவர் (இடவாகுபெயர்);

அணைதல் - 1. பொருந்துதல்; / 2. படுத்தல் (To lie down);

அணை - மெத்தை; படுக்கை;

அரவணை நீர்மையரவர் - 1. அரவு அணை (வினைத்தொகை) நீர் மையர்; அவர் / 2. அரவு அணை (படுக்கை) நீர்மையர்; அவர்;

நீர் - கடல்;

மை - 1. கருநிறம்; 2. விஷம்;

நீர்மை - தன்மை; சிறந்த குணம்;

நீர்மையர் - 1. கடல் விடத்தர்; (நீர் - கடல்; மை - விஷம்); / 2. தன்மையர்; கடல் நடுவில் இருப்பவர்; (மையம் - நடு); (நாராயணன் - நீரை இடமாக உடையவன் - திருமால்);

கான் - வாசனை;

அலர் - பூ;

நலர் - நல்லர் (நல்லவர்கள்) - இடைக்குறை;

கானலர் - 1. கான் அலர் சூடுவர் (கான் + அலர்) / 2. கால், [ல்]லர் சூடுவர் (கால் + நலர்);

அம் - அழகு;

அக்கரம் - எழுத்து;

அஞ்சக்கரர் - 1. அஞ்சு அக்கரர் / 2. அம் சக்கரர்;

மான் - 1. பெருமான்; பெரியோன் (Great person or being); / 2. மான் என்ற விலங்கு;

மால் - திருமால்; கருமை; பெருமை;

நடித்தல் - 1. கூத்தாடுதல்; / 2. பாசாங்கு செய்தல்;

மானடிப்பார் - 1. மான் நடிப்பார் (பெருமான்; நாட்டியம் ஆடுவார்); /2. மான் அடிப்பார் (இராமனாய் மான்-வேடத்தில் வந்த மாரீசனைத் தாக்குவார்); 3. மால் நடிப்பார் (கிருஷ்ணனாய் மிகப் பாசாங்கு செய்வார்);

வெற்பு - மலை;

வெற்புவில் - 1. மேருமலை ஆகிய வில்; 2. வெற்பும் வில்லும் - உம்மைத்தொகை.


திருமால்:

வானரர் வாழ்த்தும், அரவணை நீர்மையர் - (இராமனாக வந்தபோது) வானரர்கள் போற்றுகின்ற, (கடல் நடுவே) நாகப்-படுக்கை உடையவர்;

அவர் கால் நலர் சூடுவர் - அவர் திருவடியை நல்லவர்கள் (தங்கள் உச்சியில்) சூடுவார்கள்;

அம் சக்கரர் - அழகிய சக்கராயுதம் உடையவர்;

மான் அடிப்பார் (--அல்லது-- மால் நடிப்பார்) - இராமாவதாரத்தில் மானாக வந்த மாரீசனை அம்பால் எய்தவர்; (--அல்லது-- கிருஷ்ணாவதாரத்தில் மிகப் பாசாங்கு செய்தவர்);

காத்தருள்வார் வெற்பு, வில் கை ஏந்தி - கிருஷ்ணனாய் மலையைக் குடையாக உயர்த்திப் பிடித்தும், இராமனாய் வில்லைக் கையில் ஏந்தியும் காத்தவர்;

நாராயணர் செப்பு - திருமால் என்று சொல்;


சிவன்:

வான் நரர் வாழ்த்தும், அரவு அணை, நீர்மையர் (& நீர்-மையர்) - வானவர்களும் மனிதர்களும் வணங்குகின்ற, பாம்புகள் பொருந்தும் திருமேனியர்; கடல்விஷத்தை உண்டு அணிந்தவர்; (நீர்மையர் - இச்சொல் இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளுமாறு வந்தது);

அவர் கான்-அலர் சூடுவர் - அவர் வாசமலர்களை அணிவார்;

அஞ்சு-அக்கரர் - திருவைந்தெழுத்தானவர்; நமச்சிவாய என்ற திருநாமம் உடையவர்;

மான், நடிப்பார் - பெருமான், திருநடம் செய்வார்;

காத்தருள்வார் வெற்புவில் கை ஏந்தி - (முப்புரம் எரித்தபொழுது) மேருமலையாகிய வில்லைக் கையில் ஏந்திக் காத்தருளியவர்;

நாகம் மதி சேர்த்தவர் செப்பு - பாம்பையும் சந்திரனையும் (திருமுடிமேல்) ஒன்றாகச் சேர்த்தவரான சிவபெருமான் என்று சொல்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.049 - தினமும் - பிழைகளை - மடக்கு

2010-01-26

M.049 - தினமும் - பிழைகளை - மடக்கு

--------------

தினமும் பணிவீர் சிவனையவன் முன்னோர்

தினமும் மதில்செற்றான் தீச்சேர் - தினமும்

பிழைகளை எண்ணுநமன் பேணிப்போ மாறு

பிழைகளை காப்பெம் பிரான்.


பதம் பிரித்து:

தினமும் பணிவீர் சிவனை; அவன் முன் ஓர்

தினம் மும்மதில் செற்றான்; தீச் சேர் தினம், உம்

பிழைகளை எண்ணும் நமன் பேணிப் போமாறு,

பிழை களை காப்பு எம் பிரான்.


சொற்பொருள்:

தினமும் - 1. தினந்தோறும்; 2. தினம் மும்; 3. தினம் உம்;

பிழைகளை - 1. குற்றங்களை; 2. பிழையைத் தீர்க்கும்;

செறுதல் - அழித்தல்;

களைதல் - நீக்குதல்;

காப்பு - பாதுகாவல்; இரட்சை;


தினமும் பணிவீர் சிவனை - தினந்தோறும் சிவபெருமானை வணங்குங்கள்;

அவன் முன் ஓர் தினம் மும்மதில் செற்றான் - அவன் முன்னொரு நாள் முப்புரங்களை அழித்தவன்;

தீச் சேர் தினம் உம் பிழைகளை எண்ணும் மன் பேணிப் போமாறு - (உயிர்போய் உடல்) தீயில் சேர்கின்ற நாளில் உங்கள் பாவங்களை எண்ணுகின்ற இயமன் உங்களை வணங்கிச் செல்லும்படி;

* (அப்பர் தேவாரம் - 5.92 - காலபாசத் திருக்குறுந்தொகைப் பதிகப் பாடல்களைக் காண்க); (சுந்தரர் தேவாரம் - 7.55.1 - "எனை நமன்தமர் நலியில் இவன்மற்று என் அடியான் என விலக்கும் சிந்தையால் வந்துன் திருவடி அடைந்தேன்");

பிழை களை காப்பு எம் பிரான் - (உங்கள்) குற்றங்களையெல்லாம் நீக்கிவிடும் காப்பாக எம்பெருமான் இருப்பான்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.048 - மருளார் - தருவாய் - மடக்கு

2010-01-23

M.048 - மருளார் - தருவாய் - மடக்கு

--------------

மருளார் மனத்தர் வழியறியார் பின்னேன்

மருளார் அடியார்க்கும் உண்டோ - மருளார்

தருவாய் அருளெனினும் சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


பதம் பிரித்து:

மருள் ஆர் மனத்தர் வழி அறியார்; பின் ஏன்

மருளார்? அடியார்க்கும் உண்டோ - மருள்? ஆர்

"தருவாய் அருள்" எனினும், சங்கரன் ஓர்வான்

தருவாய் அளிப்பான் தமர்க்கு.


சொற்பொருள்:

மருள் - 1. மயக்கம்; 2. அச்சம்;

மருளுதல் - 1. மயங்குதல்; 2. அஞ்சுதல்;

ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்

ஆர் - யார்;

தரு - கற்பகமரம்;

மருளார் - 1. மயக்கம் மிகுந்த; 2. அஞ்சமாட்டார்; 3. அச்சம்; யார்;

ஓர் - ஒப்பற்ற;

ஓர்தல் - எண்ணுதல்;

ஓர்வான் - 1. திருவுளம் செய்வான்; 2. ஒப்பற்ற வானுலக;

தரு - மரம்;

வான்தரு - கற்பகமரம்;

தருவாய் - 1. கொடுப்பாய் / கொடுப்பவனே; 2. கற்பகமரமாகி;

தமர் - தொண்டர்;


மருள் ஆர் மனத்தர் வழி அறியார் - அறியாமை மிகுந்த மனம் உடையவர்கள் தக்க நெறியை அறியமாட்டார்கள்;

பின் ஏன் மருளார்? - பிறகு அவர்கள் ஏன் அஞ்சமாட்டார்கள்? (= அதனால்தான் அவர்கள் அஞ்சுகின்றார்கள்);

அடியார்க்கும் உண்டோ மருள்? - பக்தர்களுக்கும் அச்சம் உண்டோ? (இல்லை என்பது குறிப்பு);

ஆர் "தருவாய் அருள்" எனினும் சங்கரன் ஓர்வான் தருவாய் அளிப்பான் தமர்க்கு - "அருள்புரிவாயாக / அருள்செய்பவனே" என்று யார் தொழுதாலும் சங்கரன் திருவுளம் செய்வான்; (அப்படித் திருவுளம் செய்து) ஒப்பற்ற கற்பகமரத்தைப் போலத் தொண்டர்களுக்கு வரம் தருவான்; ("ஓர்வான்" என்ற சொற்றொடரை இடைநிலைத்-தீவகமாக இருமுறை இயைத்துப் பொருள்கொள்ளலாம். "சங்கரன் ஓர்வான்" & " ஓர் வான்தருவாய் அளிப்பான்");


வி. சுப்பிரமணியன்

------------- -------------

Monday, March 14, 2022

M.047 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

2010-01-10

M.047 - வானஞ்சு - கண்டம் - மடக்கு

--------------

வானஞ்சு வாயரவால் வாரிகடை நாளிலெழு

வானஞ்சு வாதைசெய வாடியுய் - வானஞ்சு

கண்டந் தவிர்த்தருளாய் கண்ணுதலே என்னவது

கண்டந் தரித்தான்நம் காப்பு.


பதம் பிரித்து:

வான், அஞ்சு வாய் அரவால் வாரி கடை நாளில் எழு

வான்-நஞ்சு வாதை-செய, வாடி உய்வான், "அஞ்சு

கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன, அது

கண்டம் தரித்தான் நம் காப்பு.


சொற்பொருள்:

வான் - 1. தேவர்கள்; 2. பெரிய; 3. ஒரு வினையெச்ச விகுதி;

அஞ்சு - 1. ஐந்து; 2. அஞ்சுகின்ற;

நஞ்சு - 1. விடம்; 2. நைந்து என்பதன் போலி; (நைந்து - மனம் குழைந்து);

வானஞ்சு - 1. வான் அஞ்சு (தேவர்கள் ஐந்து); 2. வான் நஞ்சு (பெரிய விடம்); "வல்+நஞ்சு" (கொடிய விடம்) என்பது "வால்+நஞ்சு" என்று நீட்டல் விகாரம் பெற்றதாகவும் கொள்ளலாம்; 3. உய்வான் அஞ்சு / உய்வான் நஞ்சு (நைந்து); (உய்வான் = உய்வதற்காக);

கண்டம் - 1. ஆபத்து; 2. மிடறு; கழுத்து;

வாரி - கடல்;


வான், அஞ்சு-வாய் அரவால் வாரி கடை நாளில் எழு - தேவர்கள், ஐந்தலை-நாகமான வாசுகியைக் கயிறாகக்கொண்டு கடலைக் கடைந்த சமயத்தில் எழுந்த;

வான் நஞ்சு வாதை-செய, வாடி உய்வான் - பெரிய கொடிய ஆலகாலம் என்ற விஷம் மிகவும் துன்பம் செய்ய, அதனால் வருந்தி, உய்வதற்காக;

"அஞ்சு கண்டம் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன - "யாம் அஞ்சுகின்ற இந்தப் பேராபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே" என்று வேண்ட;

(உய்வான் நஞ்சு, "கண்டந் தவிர்த்து அருளாய் கண்ணுதலே" என்ன --- என்றும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்; அப்படிக் கொண்டால், "மனம் நைந்து, உய்யும்பொருட்டு, இந்த ஆபத்தைப் போக்கி அருள்வாய் முக்கண்ணனே என்று வேண்ட");

து கண்டம் தரித்தான் நம் காப்பு - அவ்விஷத்தை உண்டு கண்டத்தில் வைத்த சிவபெருமானே நம் காவல்/துணை;


பிற்குறிப்பு - இலக்கணக் குறிப்பு:

வினையெச்சம், "செய்து, செய்பு, செய்யா, செய்யூ, செய்தென, செய, செயின், செய்யிய, செய்யியர்" என்னும் ஒன்பது வாய்பாடுகளில் அமையும். "வான், பான், பாக்கு" ஆகிய விகுதிகளைப் பெற்றும் வரும்.

வான் : மழை பெய்வான் மரம் வளர்ப்போம் = மழை பெய்ய மரம் வளர்ப்போம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------

M.046 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

2010-01-10

M.046 - ஆனஞ்சு - கொண்டாடு - மடக்கு

--------------

ஆனஞ்சு வேங்கை அதள்அணிவான்; தேவர்க்கா

ஆனஞ்சு கண்டத் தடைத்தருள்வான்; - ஆனஞ்சு

கொண்டாடு முக்கணனைக் கோனென்று நெஞ்சேநீ

கொண்டாடு; தீரும் குறை.


பதம் பிரித்து:

ஆன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான்; தேவர்க்கா

ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான்; ஆன்-அஞ்சு

கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ

கொண்டாடு; தீரும் குறை.


சொற்பொருள்:

ஆனஞ்சு - 1. ஆன் அஞ்சு (பசுக்கள் அஞ்சுகின்ற); 2. ஆல் நஞ்சு (ஆலகாலமாகிய விஷம்); 3. ஆன் அஞ்சு (பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்கள் - பஞ்சகவ்வியம் - பால், தயிர், நெய், கோசலம், கோமயம்);

கொண்டாடு - 1. கொண்டு ஆடுகின்ற (கொண்டு அபிஷேகம் செய்யப்பெறும்); 2. புகழ்தல்; பாராட்டுதல்;


ன் அஞ்சு வேங்கை-அதள் அணிவான் - பசுக்கள் அஞ்சுகின்ற புலியின் தோலை ஆடையாகக் கட்டியவன்; (வேங்கை - புலி); (அதள் - தோல்);

தேவர்க்கா ஆல்-நஞ்சு கண்டத்து அடைத்து-அருள்வான் - தேவர்களுக்காக (= தேவர்கள் உய்யும் பொருட்டு); ஆலகாலமாகிய விஷத்தை கண்டத்தில் அடைத்து அருளியவன்; (தேவர்க்கா - தேவர்க்காக; கடைக்குறை விகாரம்);

ஆன்-அஞ்சு கொண்டு ஆடு முக்கணனைக் கோன் என்று நெஞ்சே நீ கொண்டாடு - பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் மகிழ்ந்த முக்கண்ணனைத் தலைவன் என்று மனமே நீ போற்று; (கோன் - தலைவன்); (சுந்தரர் தேவாரம் - 7.17.4 - "அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினில்")

தீரும் குறை - (அப்படிச் செய்தால்) உன் குறைகள் தீரும்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------