2018-09-04
P.448 - மயிலாப்பூர்
-------------------------------
(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி");
(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");
* முற்குறிப்பு: மகிழிடமாமயிலாப்பே = 1. மகிழ் இடம் மா மயிலாப்பே; 2. மகிழ் இடம் ஆம் மயிலாப்பே; (மா - அழகு); (மயிலாப்பு - மயிலாப்பூர்); (அப்பர் தேவாரம் - 6.2.1 - "மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்");
1)
புயல்வணன் வாயு எரியிணை அம்பு .. பொன்மலை வில்லிவை ஏந்தி
எயிலொரு மூன்றை எய்தழி வீரன் .. இளமதிச் சடையினில் நீரன்
அயிலுறு சூலன் உண்பலி தேர .. அங்கையில் ஏந்துக பாலன்
மயிலன சாயல் மாதொரு பங்கன் .. மகிழிட மாமயி லாப்பே.
புயல்வணன் வாயு எரி இணை அம்பு, பொன்மலை-வில் இவை ஏந்தி - மேகம் போன்ற நிறத்தினனான திருமால், வாயு,அக்கினி இணைந்த ஒரு கணையும், மேருமலையால் ஆன வில்லும் ஏந்தி; (புயல் - மேகம்); (சேந்தனார் - திருவிசைப்பா - 9.7.8 - "புரம்பொடி படுத்த பொன்மலை வில்லி");
எயில் ஒரு மூன்றை எய்து அழி வீரன் - முப்புரங்களைக் எய்து அழித்த வீரன்; (எயில் - கோட்டை);
இளமதிச் சடையினில் நீரன் - இளந்திங்களைச் சூடிய சடையில் கங்கையை உடையவன்;
அயில் உறு சூலன் - கூர்மை மிக்க சூலத்தை ஏந்தியவன்; (அயில் - கூர்மை); (உறுதல் - இருத்தல்; மிகுதல்);
உண்பலி தேர அங்கையில் ஏந்து கபாலன் - பிச்சையெடுக்கக் கையில் பிரமனது கபாலத்தை ஏந்தியவன்; (உண்பலி - பிச்சை); (* கபாலன் - இத்தலத்து இறைவன் திருநாமம் - கபாலீஸ்வரன்);
மயில் அன சாயல் மாது ஒரு பங்கன் மகிழ் இடம் மா மயிலாப்பே - மயில் போன்ற சாயலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய சிவபெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (அன – அன்ன – போன்ற); (* உமாதேவி மயில்-உருவில் ஈசனை வழிபட்ட தலம் இது);
2)
புனலலை கின்ற புன்சடை மீது .. பொறிதிகழ் பாம்பையும் வைத்தான்
சினமலை போன்ற வெள்விடை ஏறும் .. சேவகன் போரது செய்த
வனமலை அனைய மதகரி உரிவை .. மார்பினை மூடிடப் போர்த்தான்
வனமுலை மங்கை கற்பகத் தோடும் .. மகிழிடம் மாமயி லாப்பே.
புனல் அலைகின்ற புன்சடை மீது பொறி திகழ் பாம்பையும் வைத்தான் - கங்கை திரியும் செஞ்சடைமேல் புள்ளிகள் திகழும் பாம்பையும் வைத்தவன்; (புன்மை - புகர்நிறம்); (பொறி - புள்ளி);
சினமலை போன்ற வெள்விடை ஏறும் சேவகன் - கோபம் உடைய மலை போன்ற வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய வீரன்; (சினம் - கோபம்); (சேவகன் - வீரன்);
போரது செய்த வனமலை அனைய மதகரி உரிவை மார்பினை மூடிடப் போர்த்தான் - போர்செய்த காட்டில் வாழும் மலை போன்ற மதயானையின் தோலைத் திருமார்பில் போர்வை போலப் போர்த்தவன்; (வனம் - காடு); (அனைய - போன்ற); (கரி - யானை); (உரிவை - தோல்);
வனமுலை மங்கை கற்பகத்தோடும் மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் அழகிய ஸ்தனங்களை உடைய கற்பகாம்பாளோடு விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்; (வனம் - அழகு); (* கற்பகம் - கற்பகாம்பாள் - இத்தலத்து இறைவி திருநாமம்);
3)
ஆனது நல்கும் அஞ்சுகந் தாடும் .. அங்கணன் செஞ்சடை தன்னில்
தேனலர் சூடி கானகந் தன்னில் .. மாநடம் செய்திடும் தேவன்
மானன நோக்கி மாதொரு பங்கன் .. மலரடி இணைதனைத் தொழுத
வானவர் வாழ வல்விடம் உண்டான் .. மகிழிடம் மாமயி லாப்பே.
ஆன்அது நல்கும் அஞ்சு உகந்து ஆடும் அங்கணன் - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியத்தால்) அபிஷேகம் செய்யப்பெறுபவன், அருள்நோக்கம் உடையவன்;
செஞ்சடை-தன்னில் தேன்-அலர் சூடி - சிவந்த சடையில் தேன் நிறைந்த மலர்களைச் சூடியவன்;
கானகம்-தன்னில் மா-நடம் செய்திடும் தேவன் - சுடுகாட்டில் திருக்கூத்து ஆடுகின்ற தேவன்;
மான் அன நோக்கி மாது ஒரு பங்கன் - மான் போன்ற பார்வையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
மலரடி-இணைதனைத் தொழுத வானவர் வாழ வல்விடம் உண்டான் - அப்பெருமானது மலர் போன்ற இரு-திருவடிகளை வணங்கிய தேவர்கள் வாழ்வதற்காகக் கொடிய விஷத்தை உண்டவன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
4)
பொங்கிள நாகம் பொலிதிரு மார்பில் .. பொடிதனைப் பூசிய புனிதா
மங்கிய திங்கள் வந்தடி போற்ற .. வார்சடை வாழ்வருள் செய்தாய்
கங்குலில் ஆடும் சங்கர என்று .. கைகுவித் தேத்திடு வார்க்கு
மங்கல மெல்லாம் மல்கிட அருள்வான் .. மகிழிடம் மாமயி லாப்பே.
"பொங்கு இளநாகம் பொலி திருமார்பில் பொடிதனைப் பூசிய புனிதா - "சீறும் இளம்பாம்பு திகழ்கின்ற மார்பில் திருநீற்றைப் பூசிய புனிதனே;
மங்கிய திங்கள் வந்து அடி போற்ற வார்-சடை வாழ்வு அருள்செய்தாய் - தேய்ந்து அழிந்துகொண்டிருந்த சந்திரன் வந்து திருவடியை வணங்க, இரங்கி அருள்புரிந்து நீள்சடைமேல் நிலைக்கவைத்தவனே; (வார்தல் - நீள்தல்);
கங்குலில் ஆடும் சங்கர" என்று கைகுவித்து ஏத்திடுவார்க்கு - இருளில் ஆடுகின்ற சங்கரனே" என்று கைகூப்பி வழிபடும் பக்தர்களுக்கு;
மங்கலம் எல்லாம் மல்கிட அருள்வான் - எல்லா மங்கலங்களும் பெருகும்படி அருள்பவன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
5)
சொல்வினை மனத்தால் தொழுமறை முனிக்குத் .. துணையென நின்றுயிர் காத்தாய்
கொல்வினை செய்யும் கூற்றுவன் தன்னைக் .. குரைகழ லாலுதை செய்தாய்
பல்வினைப் பயனால் படுதுயர் களையாய் .. பரமனே என்றடி பணிவார்
வல்வினை தீர்த்து வானருள் வள்ளல் .. மகிழிடம் மாமயி லாப்பே.
"சொல் வினை மனத்தால் தொழு மறைமுனிக்குத் துணை என நின்று உயிர் காத்தாய் - "சொல்லால், செயலால், மனத்தால் ( = மனம், வாக்கு காயம் இவை மூன்றாலும்) வழிபட்ட மார்க்கண்டேயருக்குத் துணை ஆகி நின்று அவருடைய உயிரைக் காத்தவனே; (குறிப்பு: மனம் மொழி உடல் என்ற தொடர், யாப்பு நோக்கி வரிசை மாறி வந்தது);
கொல்-வினை செய்யும் கூற்றுவன்-தன்னைக் குரைகழலால் உதைசெய்தாய் - கொலைத்தொழிலைச் செய்யும் காலனை ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் உதைத்தவனே;
பல்வினைப் பயனால் படு-துயர் களையாய் பரமனே" என்று அடி பணிவார் - பல வினைகளின் பயனால் அனுபவிக்கின்ற துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக" என்று திருவடியை வணங்கும் பக்தர்களுக்கு; (படுதல் - உண்டாதல்; துன்பம் அனுபவித்தல்);
வல்வினை தீர்த்து வான் அருள் வள்ளல் - அவர்களது வலிய வினையைத் தீர்த்துச் சிவலோக வாழ்வை அருளும் வள்ளல் சிவபெருமான்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
6)
வெண்டலை ஏந்தி உண்பலி தேர்வான் .. மென்மலர் வாளிமன் மதனைப்
பண்டெரி செய்த கண்திகழ் நுதலன் .. பண்திகழ் செந்தமிழ் பாடும்
தொண்டருக் கென்றும் துணையென நின்று .. தொல்வினை தீர்த்தருள் தூயன்
வண்டமர் ஓதி மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.
வெண்தலை ஏந்தி உண்பலி தேர்வான் - வெள்ளிய மண்டையோட்டைக் கையில் தாங்கிப் பிச்சை ஏற்பவன்;
மென்மலர்-வாளி மன்மதனைப் பண்டு எரி செய்த கண் திகழ் நுதலன் - மென்மையான மலர்களை அம்பாக உடைய மன்மதனை முன்பு எரித்த நெற்றிக்கண்ணன்; (வாளி - அம்பு); (நுதல் - நெற்றி); (பண்டு - முன்பு); (நுதல் - நெற்றி);
பண் திகழ் செந்தமிழ் பாடும் தொண்டருக்கு என்றும் துணை என நின்று தொல்வினை தீர்த்தருள் தூயன் - பண் பொருந்திய தேவாரப் பதிகங்களைப் பாடும் பக்தர்களுக்கு என்றும் துணையாகிக் காத்து அவர்களுடைய பழவினையைத் தீர்க்கும் புனிதன்;
வண்டு அமர் ஓதி மாது ஒரு பங்கன் - வண்டுகள் விரும்பும் கூந்தலையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அமர்தல் - விரும்புதல்); (ஓதி - கூந்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
7)
நுழைவிலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் .. நூல்திகழ் மார்பினில் நீற்றன்
குழையணி காதன் குரைகழற் பாதன் .. குளிர்மதி சூடிய நாதன்
முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் .. முக்கணன் அக்கணி அழகன்
மழவிடை ஏறி வருமொரு மன்னன் .. மகிழிடம் மாமயி லாப்பே.
நுழைவு இலாத் தக்கன் வேள்வியைச் செற்றான் - நுண்ணறிவு இல்லாத தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்; (நுழைவு - நுட்பவறிவு);
நூல் திகழ் மார்பினில் நீற்றன் - மார்பில் பூணூலும் திருநீறும் திகழ்பவன்;
குழை அணி காதன் - காதில் குழையை அணிந்தவன்;
குரைகழற் பாதன் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியினன்;
குளிர்மதி சூடிய நாதன் - குளிர்ச்சி பொருந்திய சந்திரனைச் சூடிய தலைவன்;
முழவுகள் ஆர்க்கச் சுடலையில் ஆடும் முக்கணன் - முழாக்கள் ஒலிக்கச் சுடுகாட்டில் ஆடுகின்ற முக்கண்ணன்;
அக்கு அணி அழகன் - எலும்புகளை அணிகின்ற அழகன்; (அக்கு - எலும்பு);
மழவிடை ஏறி வரும் ஒரு மன்னன் - இளைய எருதினை வாகனமாக உடைய ஒப்பற்ற அரசன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
8)
வல(ம்)மலி தோள்கள் மன(ம்)நினை மடையன் .. மாமலை தனையெறி நாளில்
மலரன பாதம் தனையிறை ஊன்றி .. வாயொரு பத்தழ வைத்தான்
தலைமலி மாலை தலையணி தலைவன் .. தாழ்சடை மேல்மதி சூடி
மலைமக ளோடு மழவிடை ஏறி .. மகிழிடம் மாமயி லாப்பே.
வல(ம்) மலி தோள்கள் மன(ம்) நினை மடையன் மா-மலை-தனை எறி நாளில் - வலிமை மிகுந்த புஜங்களை மனத்தில் எண்ணிய அறிவிலியான இராவணன் கயிலைமலையைப் பெயர்த்து வீச முயன்ற பொழுது;
மலர் அன பாதம்-தனை இறை ஊன்றி வாய் ஒரு-பத்து அழ வைத்தான் - தாமரைமலர் போன்ற திருவடியைச் சிறிதே ஊன்றி அவனை நசுக்கி அவனது பத்துவாய்களையும் அழச்செய்தவன்; (அன - அன்ன); (இறை - கொஞ்சம்);
தலை மலி மாலை தலை அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்தவன்; (சுந்தரர் தேவாரம் - 7.4.1 - "தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே");
தாழ்சடைமேல் மதி சூடி - தாழும் சடைமேல் சந்திரனைச் சூடியவன்;
மலைமகளோடு மழவிடை ஏறி - மலைமகளான உமையோடு இளைய இடபத்தின்மேல் ஏறுபவன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
9)
நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி .. நாள்தொறும் நறுமலர் தூவிப்
பூரணன் என்றும் புண்ணியன் என்றும் .. புலியதள் ஆடையன் என்றும்
ஆரணன் என்றும் அடிதொழும் அன்பர் .. அருவினை தீர்த்தருள் அண்ணல்
வாரணத் துரிவை போர்த்திடு மார்பன் .. மகிழிடம் மாமயி லாப்பே.
நாரணன் பிரமன் நண்ணொணாச் சோதி - திருமால் பிரமன் இவர்களால் அடைய ஒண்ணாத ஜோதி வடிவினன்; (நண்ணொணா - நண்ண ஒண்ணாத; தொகுத்தல், இடைக்குறை விகாரம்);
நாள்தொறும் நறுமலர் தூவிப், பூரணன் என்றும், புண்ணியன் என்றும், புலி-அதள் ஆடையன் என்றும், ஆரணன் என்றும், அடிதொழும் அன்பர் அருவினை தீர்த்தருள் அண்ணல் - தினமும் வாசமலர்களைத் தூவிப், "பூரணன், அறவடிவினன், புலித்தோலை ஆடையாக அணிந்தவன், வேத முதல்வன்" என்றெல்லாம் போற்றித் திருவடியை வணங்கும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற தலைவன்; (பூரணன் - நிறைவானவன்); (அதள் - தோல்); (ஆரணன் - வேதமுதல்வன்);
(அப்பர் தேவாரம் - 6.8.3 - "பூரணன்காண் புண்ணியன்காண்"); (சுந்தரர் தேவாரம் - 7.97.6 - "செஞ்சடைமேல் மதியும் அரவும் உடனே புல்கிய ஆரணன்");
வாரணத்து உரிவை போர்த்திடு மார்பன் - யானைத்தோலை மார்பில் போர்த்தவன்; (வாரணம் - யானை); (உரிவை - தோல்); (சம்பந்தர் தேவரம் - 2.10.3 - "கருங்கை யானையின் ஈருரி போர்த்திடு கள்வனார்");
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
10)
பொய்யணி யாகப் பூண்டுழல் புல்லர் .. புன்னெறி விற்பவர் நீறு
மெய்யணி யாத வீணர்சொல் விடுமின் .. விடைமிசை ஏறிய விகிர்தன்
நெய்யணி சூலன் நீள்கழல் போற்றும் .. நேயர்கள் நினைவரம் தருவான்
மையணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.
பொய் அணியாகப் பூண்டு உழல் புல்லர் புன்னெறி விற்பவர் - பொய்யையே அணிந்து உழல்கின்ற கீழோர்கள் சிறுநெறியை விற்கின்றவர்கள்; ("அணி ஆகப் பொய் பூண்டு உழல் புல்லர்" என்றும் இயைத்துப் பொருள்கொள்ளக் கூடும்; "கூட்டம் சேர்ப்பதற்காகப் பொய்யை அணிந்து உழல்கின்ற கீழோர்கள்"); (அணி - 1. ஆபரணம்; 2. கூட்டம்);
நீறு மெய் அணியாத வீணர் சொல் விடுமின் - திருநீற்றை உடம்பின்மேல் பூசாத பயனிலிகள் பேசும் பேச்சை மதிக்கவேண்டா, அவர் பேச்சை நீங்குங்கள்; (மெய் - உடம்பு);
விடைமிசை ஏறிய விகிர்தன் - இடபவாகனன், மாறுபட்ட செயலினன்; (விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று);
நெய் அணி சூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (ஆயுதங்கள் துருப்பிடித்தலைத் தடுக்க அவற்றின்மேல் நெய் தடவி வைப்பது வழக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.4 - "நெய்யணி சூலமொடு நிறை வெண்மழுவும்");
நீள்-கழல் போற்றும் நேயர்கள் நினை-வரம் தருவான் - தன் திருவடியை வழிபடும் பக்தர்கள் எண்ணிய எவ்வரமும் தருபவன்;
மை அணி கண்டன் - நீலகண்டன்; (மை - கருமை);
மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
11)
மணிமலர் தூவி வழிபடும் அன்பர் .. மகிழ்வுற வரமருள் வள்ளல்
பிணியிலன் என்றும் நரைதிரை இல்லான் .. பேர்களோர் ஆயிரம் உடையான்
பணியணி மார்பன் பாய்புலித் தோலன் .. பாற்கடல் நஞ்சினை உண்டு
மணியணி கண்டன் மாதொரு பங்கன் .. மகிழிடம் மாமயி லாப்பே.
மணி-மலர் தூவி வழிபடும் அன்பர் மகிழ்வுற வரம் அருள் வள்ளல் - அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்கள் மகிழும்படி வரங்கள் அருளும் வள்ளல்; (மணி - அழகு);
பிணி இலன் என்றும் நரை திரை இல்லான் - பந்தங்களும், நோயும், மூப்பும் என்றும் இல்லாதவன்; (பிணி - பந்தம்; நோய்); (நரை திரை - நரைத்த மயிர், சுருங்கிய தோல் - முதுமையைக் குறித்தது); ("என்றும்" என்ற சொல்லை இடைநிலைத்-தீவகமாகக் கொண்டு இருபக்கமும் இயைத்து, "என்றும் பிணியிலன்", "என்றும் நரைதிரை இல்லான்" என்று பொருள்கொள்க); (சம்பந்தர் தேவாரம் - 3.33.11 - "சம்பந்தன் ஒண் தமிழ்வல்லார் நரைதிரை இன்றியே நன்னெறி சேர்வரே");
பேர்கள் ஓர் ஆயிரம் உடையான் - சஹஸ்ரநாமங்கள் உடையவன்;
பணி அணி மார்பன் - பாம்பை மாலைபோல் மார்பில் அணிந்தவன்; (பணி - நாகம்);
பாய்புலித்-தோலன் - பாயும் புலியின் தோலை ஆடையாக அணிந்தவன்;
பாற்கடல் நஞ்சினை உண்டு மணி அணி கண்டன் - பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டதனால் கண்டத்தில் நீலமணியை உடையவன்;
மாது ஒரு பங்கன் - உமையை ஒரு பங்கில் உடையவன்;
மகிழ் இடம் மா மயிலாப்பே - அப்பெருமான் விரும்பி உறையும் தலம் அழகிய மயிலாப்பூர்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------