Monday, August 22, 2022

T.168 - பைஞ்ஞீலி - சேலை நிகர்விழி

2012-05-04

T.168 - பைஞ்ஞீலி - சேலை நிகர்விழி

--------------

(வண்ணவிருத்தம்;

தான தனதன தான தனதன

தான தனதன .. தனதான)

(பாதி மதிநதி - திருப்புகழ் - சுவாமிமலை)


சேலை நிகர்விழி மாது மனையொடு

..... தேடு பொருளெனு(ம்) .. நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழிநினை .. அடியார்கள்

பாலை நிகர்பொடி பூசும் உனதிரு

..... பாத மலர்தொழ .. அருள்வோனே

.. பாவ மலைகெட நானு(ம்) நறைமலி

..... பாடல் அவைகொடு .. பணிவேனே

கோல மணியென வேலை விடமது

..... கூடும் அணிமிட .. றுடையானே

.. கோயில் எனவுளம் ஆக உனபெயர்

..... கூறி வழிபட .. மறவாத

பாலன் உயிரொடு வாழ நமனுயிர்

..... பாற உதைதரு .. கழலானே

.. நீல முகிலடை சோலை மருவிய

..... ஞீலி வனமுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

சேலை நிகர் விழி மாது, மனையொடு,

..... தேடு பொருள் எனு(ம்) நினைவாலே

.. சேரும் அருவினை யாவும் அடியொடு

..... தீர வழி நினை அடியார்கள்

பாலை நிகர் பொடி பூசும் உனது இரு-

..... பாதமலர் தொழ அருள்வோனே;

.. பாவமலை கெட நானு(ம்) நறை மலி

..... பாடல் அவைகொடு பணிவேனே;

கோல மணி என வேலை-விடமது

..... கூடும் அணி மிடறு உடையானே;

.. கோயில் என உளம் ஆக உன பெயர்

..... கூறி வழிபட மறவாத

பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர்

..... பாற உதைதரு கழலானே;

.. நீல-முகில் அடை சோலை மருவிய

..... ஞீலிவனம் உறை பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

சேலை நிகர் விழி மாது மனையொடு தேடு பொருள் எனு(ம்) நினைவாலே சேரும் அருவினை யாவும் அடியொடு தீர வழி வழி நினை அடியார்கள் - சேல்மீன் போன்ற கண்ணுடைய மனைவி, வீடு, குடும்பம், ஈட்டும் செல்வம் என்ற எண்ணங்களால் வந்தடையும் அரிய தீவினைகள் எல்லாம் அடியோடு தீரும் உபாயத்தை எண்ணும் அடியார்கள்; (சேல் - ஒருவகை மீன்); (நிகர்த்தல் - ஒத்தல்); (மனை - வீடு; குடும்பம்); (தேடுதல் - சம்பாதித்தல்); (அடியொடு - அடியோடு - முழுவதும்); (வழி - மார்க்கம்; உபாயம்);

பாலை நிகர் பொடி பூசும் உனது இரு-பாதமலர் தொ அருள்வோனே - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசிய உனது இருதிருவடித்தாமரைகளை வணங்க, அருள்பவனே; (நிகர்த்தல் - ஒத்தல்); (பொடி - திருநீறு);

பாவமலை கெட நானு(ம்) நறை மலி பாடல் அவைகொடு பணிவேனே - எனது மலை போன்ற பாவமெல்லாம் தீருமாறு (அவர்களைப் போல) நானும் மணம் கமழும் பாமாலைகளால் உன் இருதிருவடிகளை வணங்குவேன்;

கோல மணி என வேலை-விடமது கூடும் அணி மிடறு உடையானே - அழகிய கரிய மணியைப் போலக் கடல்விஷம் சேர்கின்ற அழகிய கண்டத்தை உடையவனே; (கோலம் - அழகு); (வேலை - கடல்); (அணி - அழகு); (மிடறு - கண்டம்);

கோயில் எனளம் ஆக உன பெயர் கூறி வழிபட மறவாத பாலன் உயிரொடு வாழ, நமன் உயிர் பாற உதைதரு கழலானே - தன் மனமே உன் கோயில் ஆகுமாறு எப்போதும் உனது திருநாமத்தைச் சொல்லித் தொழுதுவந்த மார்க்கண்டேயர் உயிரோடு நிலைத்து வாழ அருள்செய்து, வீரக்கழல் அணிந்த திருவடியால் காலன் உயிர் அழிய அவனை உதைத்தவனே; (உன - உனது; - ஆறாம்வேற்றுமை உருபு); (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.75.6 - "காலனுயிர் பாறவுதை செய்த பரமன்"); (உதைதரு - உதைத்த; தருதல் - ஒரு துணைவினை);

நீலமுகில் அடை சோலை மருவிய ஞீலிவனம் உறை பெருமானே - கார்மேகம் அடைகின்(வானோங்கு) சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி பெருமானே; (நீலமுகில் - நீலமேகம் - கார்மேகம்); (ஞீலிவனம் - திருப்பைஞ்ஞீலி);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.167 - பைஞ்ஞீலி - எந்நாளும் மயலுறு

2012-05-04

T.167 - பைஞ்ஞீலி - எந்நாளும் மயலுறு

--------------

(வண்ணவிருத்தம்;

தன்னான தனதன .. தனதான)


எந்நாளு(ம்) மயலுறு .. மதியாலே

.. இஞ்ஞால மிசையுழல் .. அடியேனும்

அந்நாலு மறைமொழி .. அயன்மாலும்

.. அண்ணாத அடிதொழ .. அருளாயே

அந்நாரி தனையிடம் .. உடையானே

.. அஞ்ஞான இருளறு .. சுடரானே

பைந்நாக(ம்) முடிமிசை .. அணிவோனே

.. பைஞ்ஞீலி தனிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

எந்நாளு(ம்) மயலுறு .. மதியாலே

.. இஞ்-ஞாலமிசை உழல் .. அடியேனும்

அந்-நாலுமறை மொழி .. அயன் மாலும்

.. அண்ணாத அடி தொழ .. அருளாயே;

அந்-நாரிதனை இடம் .. உடையானே;

.. அஞ்ஞான இருள்-அறு .. சுடரானே;

பைந்நாக(ம்) முடிமிசை .. அணிவோனே;

.. பைஞ்ஞீலிதனில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

எந்நாளு(ம்) மயல் உறு மதியாலே இஞ்-ஞாலமிசை உழல் அடியேனும் - எப்பொழுதும் மயங்குகின்ற சிந்தையாலே இந்தப் பூமியில் வருந்தும் அடியேனும்; (மயல் - மயக்கம்); (ஞாலம் - பூமி); (உழல்தல் - சுழல்தல்; அலைதல்);

அந்-நாலுமறை மொழி அயன், மாலும் அண்ணாத அடி தொழ அருளாயே - அந்த நால்வேதங்களை ஓதும் பிரமனாலும் திருமாலாலும் நெருங்க இயலாத நின் திருவடியைத் தொழுமாறு அருள்வாயாக; (- பண்டறிசுட்டு); (அண்ணுதல் - நெருங்குதல்; அடைதல்);

அந்-நாரிதனை இடம் உடையானே - அழகிய உமையை இடப்பாகம் உடையவனே; (அந்நாரி = அம் + நாரி; அம் - அழகிய; நாரி - பெண்);

அஞ்ஞான இருள் அறு சுடரானே - அஞ்ஞான இருளைப் போக்கும் ஜோதியே; (அறுத்தல் - தீர்த்தல்):

பைந்நாகம் முடிமிசை அணிவோனே - படம் உடைய பாம்பைத் தலைமேல் அணிபவனே; (பை - பாம்பின் படம்);

பைஞ்ஞீலிதனில் உறை பெருமானே - திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளிய பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.166 - நெய்த்தானம் - கலரைக் கூடி

2012-04-22

T.166 - நெய்த்தானம் - கலரைக் கூடி

(தில்லைஸ்தானம்; திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தனனத் தான தனனத் தான

தனனத் தான .. தனதான)


கலரைக் கூடி மதிகெட் டாறு

.. .. கசடுற் றீன(ம்) .. மிகவாகிக்

.. கலியுற் றாயுள் முடிவுற் றாவி

.. .. கழலத் தீயுள் .. விழுவேனோ

மலமற் றாயுன் இருபொற் றாளில்

.. .. மலரிட் டோதி .. அடியேனும்

.. வரையற் றேறு வினையைத் தூள்செய்

.. .. வழியைச் சேர.. அருளாயே

நிலவைப் பாயு(ம்) நதியைப் பூவின்

.. .. நிரையைச் சூடு(ம்) .. முடியானே

.. நினைநச் சானை இசையைப் பாட

.. .. நெரிவித் தாயுள் .. தருவோனே

அலைதெற் றாறு பணியச் சேரும்

.. .. அணிநெய்த் தானம் .. உறைவோனே

.. அலறிப் பாலன் அடையக் காலன்

.. .. அவனைக் காது .. பெருமானே.


பதம் பிரித்து:

கலரைக் கூடி, மதி கெட்டு, ஆறு

.. .. கசடு உற்று, ஈன(ம்) மிக ஆகிக்,

.. கலி உற்று, ஆயுள் முடிவுற்று, ஆவி

.. .. கழலத், தீயுள் விழுவேனோ;

மலமற்றாய், உன் இரு பொற்றாளில்

.. .. மலர் இட்டு, ஓதி அடியேனும்,

.. வரை அற்று ஏறு வினையைத் தூள் செய்

.. .. வழியைச் சேர அருளாயே;

நிலவைப், பாயு(ம்) நதியைப், பூவின்

.. .. நிரையைச், சூடு(ம்) முடியானே;

.. நினை நச்சானை இசையைப் பாட

.. .. நெரிவித்து ஆயுள் .. தருவோனே;

அலை தெற்று ஆறு பணியச் சேரும்

.. .. அணி நெய்த்தானம் உறைவோனே;

.. அலறிப் பாலன் அடையக், காலன்-

.. .. அவனைக் காது பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

கலரைக் கூடி மதி கெட்டு ஆறு கசடு உற்று ஈன(ம்) மிக ஆகிக், கலி உற்று, ஆயுள் முடிவு உற்று, ஆவி கழலத் தீயுள் விழுவேன்; - தீயவரைச் சேர்ந்து, அறிவிழந்து, காமம் குரோதம் உலோபம் மோகம் மதம் மாற்சரியம் என்ற ஆறு குற்றங்களும் மனத்தில் சேர்ந்துகொள்ள, அதனால் இழிவடைந்து, துன்புற்று, வாழ்நாள் ஆகி, உயிர் பிரிந்து தீயில் விழுந்துவிடுவேன். ஓலம்! (கலர் - கீழோர்; தீயவர்); (ஆறு கசடு - ஆறு குற்றங்கள் - அறுபகை - காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்); (ஈனம் - இழிவு); (கலி - துன்பம்); (கழலுதல் - நீங்குதல்); (- ஓலம் - அபயக் குறிப்பு);

மலமற்றாய்; உன் இரு-பொற்றாளில் மலர் இட்டு ஓதி அடியேனும், வரை அற்று ஏறு வினையைத் தூள்செய் வழியைச் சேர அருளாயே - நின்மலனே! உன் இருபொன்னடிகளில் பூக்கள் தூவிப் பாடி வழிபட்டு அடியேனும், அளவின்றி மிகுந்த வினைகளைத் தூளாக்கும் வழியைச் சேர்வதற்கு அருள்புரிவாயாக! (மலம் அற்றாய் - நின்மலனே); (பொற்றாள் - பொன்னடி); (ஓதுதல் - பாடுதல்); (வரை - அளவு); (ஏறுதல் - மிகுதல்);

நிலவைப், பாயு(ம்) நதியைப், பூவின் நிரையைச் சூடு(ம்) முடியானே - சந்திரனையும், பாயும் கங்கையையும், பூங்கொத்துகளையும் திருமுடியில் சூடுபவனே! (நிரை - வரிசை; அடுக்கு);

நினை நச்சானை இசையைப் பாட நெரிவித்து ஆயுள் தருவோனே - உன்னை விரும்பிப் போற்றாத இராவணனை அவன் உன்னைப் போற்றி இசையைப் பாடும்படி (அவன் பெயர்த்த கயிலைமலைக்கீழ்) நசுக்கி, அவனுக்கு நீண்ட ஆயுளை அளித்தவனே; (நினை - நின்னை - உன்னை); (நச்சுதல் - விரும்புதல்); (நெரிதல் - நசுங்குதல்; நெரிவித்தல் - நசுக்குதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.2.8 - "தென்னிலங்கை அரையன் வரை பற்றி எடுத்தான் முடி திண்தோள் தன் இலங்கு விரலால் நெரிவித்து இசை கேட்டு அன்றருள்செய்த");

அலை தெற்று ஆறு பணியச் சேரும் அணி நெய்த்தானம் உறைவோனே - அலைமோதும் காவிரி திருவடியை வணங்க அடைகின்ற அழகிய திருநெய்த்தானத்தில் எழுந்தருளியவனே; (தெற்றுதல் - மோதுதல்); (அணி - அழகு);

அலறிப் பாலன் அடையக் காலன்வனைக் காது பெருமானே - மார்க்கண்டேயர் அலறிச் சரணடைந்தபொழுது, காலனை உதைத்துக் கொன்ற பெருமானே; (பாலன் - இங்கே, மார்க்கண்டேயன்); (காலனவன் - காலன்ல்; அவன் - பகுதிப்பொருள்விகுதி); (காதுதல் - கொல்லுதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

N.019 - திருநாவுக்கரசர் துதி - திருநீற்றைப் புனையடியார்

2012-04-15

N.019 - திருநாவுக்கரசர் துதி - திருநாவுக்கரசர் குருபூஜை - சித்திரைச் சதயம் - 2012

--------------

1) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

திருநீற்றைப் புனையடியார் தூரத்தே தென்படினும்

ஒருதீட்டென் றலப்பமணர் உளம்கலங்க அவரடைத்த

பெருநீற் றறையினுள்ளும் பிறைசூடி கழல்பாடி

உருமாற்றம் இன்றியுய்ந்தார் உரைதமிழ்கள் உறுதுணையே.


திருநீற்றைப் புனைடியார் தூரத்தே தென்படினும் ஒரு தீட்டு என்று அலப்பு-மணர் உளம் கலங்க - திருநீறு பூசிய அடியார்களைத் தூரத்தே கண்டாலும் தீட்டு என்று பிதற்றிய சமணர்கள் மனம் கலங்கும்படி; (புனைதல் - அணிதல்); (அலப்புதல் - பிதற்றுதல்); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 692 - வெண்பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரையெல்லாம் கண்டுமுட்டு அடிகள்மார்கள் கேட்டுமுட்டு யானும்" -- முட்டு = தீட்டு);

அவர் அடைத்த பெரு-நீற்றறையினுள்ளும் பிறைசூடி கழல் பாடி - அந்தச் சமணர்கள் அடைத்த பெரிய சுண்ணாம்புக் காளவாயிலும் தியானிக்கும் சந்திரனைச் சூடிய சிவனது திருவடியைப் பாடி; (நீற்றறை - சுண்ணாம்புக் காளவாய்); (நீற்றறையினுள்ளும் - 1. நீற்றறையிலும்; 2. நீற்றறையில் தியானிக்கும்); (உள் - உள்ளே; ஏழாம்வேற்றுமை உருபு); (உள்ளுதல் - நினைதல்);

உரு மாற்றம் இன்றிய்ந்தார் உரை-தமிழ்கள் உறு-துணையே - (ஏழுநாள்கள் முன்பு நீற்றறையில் இட்டபொழுது இருந்தபடியே) உடலில் எவ்வித மாறுபாடும் (ஊனமும்) இன்றி உய்ந்தவரான திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரமே நமக்குச் சிறந்த துணை;


2) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பதிதோறும் தொழுதங்குப் பைஞ்ஞீலி செல்லுங்கால்

மதியாறு புனைகின்ற மணிகண்டன் வழிநின்று

பொதிசோறு தந்தருளப் பெற்றவர்சொல் புகழ்மாலை

நிதிநாடித் தினம்பாடில் வினையோடி நிறைவாமே.


தலங்கள் தோறும் ஈசனைப் போற்றி, (வெயிலில் பசியோடு) திருநாவுக்கரசர் அங்குத் திருப்பைஞ்ஞீலிக்குத் போகும்பொழுது, சந்திரனையும் கங்கையையும் சூடும் நீலகண்டன் அவ்வழியில் (சோலையும் குளமும் அமைத்துக்கொண்டு) காத்திருந்து அவர்க்குப் பொதிசோறு தந்து பசித்தீர்த்தருளினான். அந்நாயனார் அருளிய தேவாரம் என்ற நிதியை விரும்பித் தினமும் பாடினால், நம் வினைகளெல்லாம் நீங்கி, நாம் நிறைவை அடையலாம். ((பெரியபுராணம் - திருநாவுக்கரசர் புராணம் - 305 - "பொதிசோறுங் கொண்டு நாவின் தனிமன்னவர்க்கு எதிரே நண்ணி இருந்தார்");


3) --- (அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு) ---

தங்கள் சமயம் தனைநீங்கிச் .. சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப்

பொங்கு வஞ்ச நெஞ்சமணர் .. புகட்டு நச்சுச் சோறதனைப்

பங்கம் இல்லா அமுதாக்கிப் .. பாலித் தானைப் பதியெங்கும்

துங்கத் தமிழால் துதியப்பர் .. துணைம லர்த்தாள் துணைநமக்கே.


தங்கள் சமயம்தனை நீங்கிச், சைவம் தழைக்கச் சார்ந்தவர்க்குப் - தங்களது சமயத்தை நீங்கிச் சைவம் வளரச் சார்ந்த திருநாவுக்கரசருக்கு;

பொங்கு வஞ்ச நெஞ்சு-அமணர் புகட்டு நச்சுச்சோறதனைப் பங்கம் இல்லா அமுது ஆக்கிப் பாலித்தானைப் - வஞ்சம் பொங்கும் மனமுடைய சமணர்கள் உண்பித்த விஷம் கலந்த உணவைக் குற்றமற்ற அமுதம் ஆக்கி அருளிய பெருமானை; (பங்கம் - குற்றம்); (பாலித்தல் - காத்தல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.70.5 - "வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே");

பதியெங்கும் துங்கத்-தமிழால் துதி-அப்பர் துணைமலர்த்தாள் துணை நமக்கே - பல தலங்களிலும் சிறந்த தமிழால் போற்றிப் பாடிய அப்பரது இருமலர்ப்பாதங்கள் நமக்குத் துணை; (பதி - தலம்); (துங்கம் - உயர்ச்சி; பெருமை; வெற்றி; மேன்மை); (துணை - இரண்டு; காப்பு);


4) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பாவியராய் உழல்வஞ்சப் பரசமய மிண்டரவர்

ஏவியவெங் கரியதனுக் கெள்ளளவும் அஞ்சாமல்

சேவினையே றெம்பெருமான் சேவடியே சிந்தித்த

நாவினுக்கு மன்னவர்சொல் நற்றமிழ்கள் நம்துணையே.


பாவியராய் உழல்-வஞ்சப் பரசமய மிண்டரவர் ஏவிய வெங்கரியதனுக்கு எள்ளளவும் அஞ்சாமல் - குற்றமுடையவர்களாகி உழலும் வஞ்சச்-சமணர்கள் ஏவிய கொடிய யானையைக் கண்டு கொஞ்சமும் பயப்படாமல்; (மிண்டர் - கல்நெஞ்சர்); (வெங்கரி - கொடிய வலிய யானை); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும் அகலம் வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம் .. அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை");

சேவினை ஏறு எம்பெருமான் சேவடியே சிந்தித்த - இடபவாகனம் உடைய எம்பெருமானது சிவந்த திருவடியையே தியானித்த; (சே - எருது);

நாவினுக்கு மன்னவர்-சொல் நற்றமிழ்கள் நம் துணையே - திருநாவுக்கரசர் பாடியருளிய தேவாரம் நம் துணை; (நற்றமிழ்கள் - தேவாரப் பதிகங்கள்);


5) --- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ---

பொல்லாத அமணர்கள் போதனையால் அன்றுபெருங்

கல்லோடு கட்டிநடுக் கடலாழ்த்தும் போதுந்தம்

சொல்லாலெம் பெருமான்பேர் துணையென்று கரையேற

வல்லார்நம் வாகீசர் வாழியவர் மலர்த்தாளே.


பொல்லாத அமணர்கள் போதனையால் அன்று பெருங்கல்லோடு கட்டி நடுக்கடல் ஆழ்த்தும்போதும் - தீய சமணர்களது போதனையால் அரசன் இட்ட ஆணையால் முன்பு ஒரு பெரிய கல்லோடு தம்மைக் கட்டி நடுக்கடலில் ஆழ்த்தியபொழுதும்;

தம் சொல்லால் எம்பெருமான்-பேர் துணை என்று கரையேற வல்லார் நம் வாகீசர் - தம் வாக்கால் எம்பெருமான் திருநாமமே துணை என்று கரையேறியவர் நம் வாகீசர்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.72.7 - "கல்லினோடு எனைப் பூட்டி அமண்-கையர் ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேனன்றே");

வாழி அவர் மலர்த்தாளே - அவர் மலர்ப்பாதம் வாழ்க; (வாழி - வாழ்க);


6) --- (கலிவிருத்தம் - கூவிளம் தேமா கூவிளம் தேமா - என்ற வாய்பாடு) ---

தாண்டவம் ஆடும் ஆண்டவன் தீயாய்

மூண்டள வின்றி நீண்டவன் தன்னைத்

தாண்டகம் பாடி வேண்டிய அன்பர்

மாண்துணைத் தாளைப் பூண்டதென் நெஞ்சே.


தாண்டவம் ஆடும் ஆண்டவன் - நடராஜன்;

தீயாய் மூண்டு அளவு இன்றி நீண்டவன்-தன்னை - திருமாலும் பிரமனும் தேடுமாறு அளவில்லாச் சோதியாக உயர்ந்த பிரானை;

தாண்டகம் பாடி வேண்டிய அன்பர் - தாண்டகங்கள் பாடி இறைஞ்சிய தொண்டரான திருநாவுக்கரசர்; (தாண்டகம் - தேவாரத்தில் பயிலும் யாப்புவகைகளில் ஒன்று; தாண்டகச்சதுரர் - திருநாவுக்கரசு நாயனார்);

மாண்-துணைத்தாளைப் பூண்டது என் நெஞ்சே - மாட்சிமை உடைய இருதிருவடிகளை என் மனம் அணிந்தது; (மாண்டுணை = மாண் + துணை); (மாண்தல் - மாட்சிமைப்படுதல்); (பூண்தல் - தரித்தல்; அணிதல்);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

T.165 - வேதிகுடி - அறியாமை மிகவாகி

2012-04-12

T.165 - வேதிகுடி - அறியாமை மிகவாகி

(திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தனதான தனதான தனதான தனதான

தனதான தனதான .. தனதான)


அறியாமை மிகவாகி இருதாளை நினையாமல்

.. .. அலைபோல வருமாசை .. அதனாலே

.. அழியாத மலைபோல வளர்தீய வினைகூடி

.. .. அடுகாலன் எறிபாசம் .. விழுவேனோ

வெறியாரு(ம்) மலரோடு புனலோடு புகையோடு

.. .. விரைநாறு தமிழ்மாலை .. அவையோடு

.. விலகாத வினைதீர எளிதான வழியான

.. .. விடையேறும் உனையோத .. அருளாயே

மறிமானும் இலையாரு(ம்) நுனைவேலும் ஒளியோடு

.. .. வடியாரு(ம்) மழுவாளும் .. உடையானே

.. வளையாரும் இறையாளை ஒருபாகம் அமரீச

.. .. வளராத பிறைசூடு .. சடையானே

செறிசோலை தனில்நாளு(ம்) மலர்பூவி னிடையூறு

.. .. தெளிதேறல் அளிநாடி .. இசைபாடச்

.. சினைமீது துணையோடு கரிதான குயில்கூவு

.. .. திருவேதி குடிமேவு .. பெருமானே.


பதம் பிரித்து:

அறியாமை மிக ஆகி, இருதாளை நினையாமல்,

.. .. அலை போல வரும் ஆசை .. அதனாலே

.. அழியாத மலை போல வளர்-தீயவினை கூடி,

.. .. அடு-காலன் எறி-பாசம் .. விழுவேனோ?

வெறி ஆரு(ம்) மலரோடு புனலோடு புகையோடு

.. .. விரை நாறு தமிழ்மாலை .. அவையோடு,

.. விலகாத வினை தீர எளிதான வழியான

.. .. விடை ஏறும் உனை ஓத .. அருளாயே;

மறிமானும், இலை ஆரு(ம்) நுனை வேலும், ஒளியோடு

.. .. வடி ஆரு(ம்) மழுவாளும் .. உடையானே;

.. வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர்-ஈச;

.. .. வளராத பிறை சூடு .. சடையானே;

செறி-சோலைதனில் நாளு(ம்) மலர்-பூவினிடை ஊறு

.. .. தெளி-தேறல் அளி நாடி .. இசைபாடச்,

.. சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு

.. .. திருவேதிகுடி மேவு .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

அறியாமை மிக ஆகி, இருதாளை நினையாமல், அலை போல வரும் ஆசை அதனாலே அழியாத மலை போல வளர் தீயவினை கூடி, அடு காலன் எறி பாசம் விழுவேனோ - அறியாமையே மிகுந்து, உன் இருதிருவடிகளை எண்ணாமல், அலைபோல வந்துகொண்டேயிருக்கும் ஆசைகளால், அழியாத மலையைப்போல் வளர்கிற தீவினைகள் பெருகிக், கொல்லும் எமன் வீசும் பாசத்தில் விழுவேனோ? (அடுதல் - கொல்லுதல்); (எறிதல் - வீசியெறிதல்);

வெறி ஆரு(ம்) மலரோடு, புனலோடு, புகையோடு, விரை நாறு தமிழ்மாலை அவையோடு, விலகாத வினை தீர எளிதான வழியான, விடை ஏறும் உனை ஓத அருளாயே - விட்டு நீங்காத பாவங்கள் எல்லாம் தீர்வதற்கு எளிய வழியாக உள்ளவனும் இடபவாகனத்தை உடையவனும் ஆன உன்னை, வாசம் மிகுந்த பூக்களாலும், நீராலும், தூபத்தாலும், மணம் கமழும் தமிழ்ப்பாமாலைகளாலும் அடியேன் போற்ற (விரைவில்) அருள்புரிவாயாக; (வெறி - வாசனை); (விரை - வாசனை); (நாறுதல் - மணத்தல்); (புனல் - ஜலம்); (புகை - தூபம்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.1.6 - "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்");

மறிமானும், இலை ஆரு(ம்) நுனை வேலும், ஒளியோடு வடி ஆரு(ம்) மழுவாளும் உடையானே - மான்கன்றும், இலைபோன்ற நுனியை உடைய சூலமும், பிரகாசமான கூர்மையான மழுவும் ஏந்தியவனே; (மறிமான் - மான்கன்று); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்; ஒத்தல்); (நுனை - முனை); (வடி - கூர்மை);

வளை ஆரும் இறையாளை ஒரு பாகம் அமர் ஈச - வளையல் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒரு பங்காக விரும்பும் ஈசனே; (இறை - முன்கை); (அமர்தல் - விரும்புதல்);

வளராத பிறை சூடு சடையானே - இளம்பிறையைச் சூடும் சடையை உடையவனே; (வளராத - என்றும் இளைய என்னும் பொருளில்); (சுந்தரர் தேவாரம் - 7.38.3 - "வளராத பிறையும் வரியரவும் உடன்துயில வைத்தருளும் எந்தை");

செறி-சோலைதனில் நாளு(ம்) மலர்-பூவினிடை ஊறு-தெளி-தேறல் அளி நாடி இசை பாடச், சினைமீது துணையோடு கரிதான குயில் கூவு திருவேதிகுடி மேவு பெருமானே - அடர்ந்த சோலைகளில் தினமும் மலர்கின்ற பூக்களில் ஊறுகின்ற தெளிந்த தேனை நாடி வண்டுகள் ரீங்காரம் செய்ய, மரக்கிளைகளில் தன் துணையோடு கருங்குயில் கூவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளிய பெருமானே; (தேறல் - தேன்); (அளி - வண்டு); (சினை - மரக்கிளை);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

Friday, August 19, 2022

T.164 - வேதிகுடி - மேதினியில் வாழ்விதனில்

2012-04-06

T.164 - வேதிகுடி - மேதினியில் வாழ்விதனில்

(திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தானதன தானதன தானதன தானதன

தானதன தானதன .. தனதான)

(சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென - திருப்புகழ் - பொது)


மேதினியில் வாழ்விதனில் நாளு(ம்)மிக ஆசைகொடு

.. .. வேதனைக ளேஅடையும் .. அடியேனும்

.. மேலைவினை தீரவுன தார்கழலை ஓதுதலை

.. .. மேவுமன மேயடைய .. அருளாயே

போதியலும் ஆரமொடு பாவிரவு மாலையொடு

.. .. பூவனைய தாள்தொழுத .. முனிகாதப்

.. போனநமன் மாளவுதை பாதகரி ஈருரிவை

.. .. போர்வையென மார்பிலணி .. ஒருவீரா

பாதியுடல் நாரிதிகழ் நாதவலை மோதுநதி

.. .. பாய்சடையில் நாக(ம்)மதி .. புனைவோனே

.. பாரிடமு லாவுசுடு கானினடம் ஆடிமகிழ்

.. .. பாசுபத நீலமணி .. மிடறானே

வேதியனு(ம்) நாரணனும் ஏனமன மாயடியு(ம்)

.. .. மேலுமறி யாதவளர் .. எரியானே

.. மேதிவிளை யாடிமகிழ் நீர்நிலையில் மீனுகளும்

.. .. வேதிகுடி மேயசிவ .. பெருமானே.


பதம் பிரித்து:

மேதினியில் வாழ்வு-இதனில் நாளு(ம்) மிக ஆசைகொடு

.. .. வேதனைகளே அடையும் அடியேனும்

.. மேலைவினை தீர, உனது ஆர்-கழலை ஓதுதலை

.. .. மேவு மனமே அடைய அருளாயே;

போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு,

.. .. பூ அனைய தாள் தொழுத முனி காதப்

.. போன நமன் மாள உதை பாத; கரி ஈர்-உரிவை

.. .. போர்வை என மார்பில் அணி ஒரு வீரா;

பாதி உடல் நாரி திகழ் நாத; அலைமோது நதி

.. .. பாய் சடையில் நாக(ம்) மதி புனைவோனே;

.. பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ்

.. .. பாசுபத; நீலமணி மிடறானே;

வேதியனு(ம்) நாரணனும் ஏனம் அனமாய் அடியு(ம்)

.. .. மேலும் அறியாத வளர் எரியானே;

.. மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும்

.. .. வேதிகுடி மேய சிவபெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

மேதினியில் வாழ்வு-தனில் நாளு(ம்) மிக ஆசைகொடு வேதனைகளே அடையும் அடியேனும் - உலகவாழ்வில் என்றும் மிகுந்த ஆசைகொண்டு துன்பமே அடைகின்ற நானும்; (மேதினி - பூமி); (கொடு - கொண்டு);

மேலைவினை தீர, து ஆர்-கழலை ஓதுதலை மேவு மனமேடைய அருளாயே - என் பழவினை தீருமாறு, உன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியை ஓதுவதை விரும்பும் மனமே பெற அருள்வாயாக; (மேலைவினை - பழவினை); (ஆர்த்தல் - ஒலித்தல்); (மேவுதல் - விரும்புதல்);

போது இயலும் ஆரமொடு, பா விரவு மாலையொடு, பூனைய தாள் தொழுத முனி காதப் போன நமன் மாளதை பாத - பூக்கள் பொருந்திய மாலையோடு பாமாலையும் கொண்டு உன் மலரடியைத் தொழுத முனிவரான மார்க்கண்டேயரைக் கொல்லச் சென்ற காலனே மாளுமாறு உதைத்த பாதனே; (போது - பூ); (ஆரம் - மாலை); (விரவுதல் - பொருந்துதல்); (அனைய - ஒத்த); (காதுதல் - கொல்தல்);

கரி ஈர்-ரிவை போர்வைன மார்பில் அணி ஒரு வீரா - யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்வை போல மார்பில் அணிந்த ஒப்பற்ற வீரனே; (கரி - யானை); (ஈர் - ஈரம்; ஈர்த்தல் - உரித்தல்); (உரிவை - தோல்);

பாதிடல் நாரி திகழ் நாத - பாதி மேனியில் உமை விளங்கும் நாதனே;

லைமோது நதி பாய் சடையில் நாக(ம்) மதி புனைவோனே - அலைமோதும் கங்கை பாயும் சடையில் பாம்பையும் சந்திரனையும் அணிந்தவனே;

பாரிடம் உலாவு சுடுகானில் நடம் ஆடி மகிழ் பாசுபத - பூதகணங்கள் இருக்கும் சுடுகாட்டில் கூத்து ஆடி மகிழும் பாசுபதனே; (பாரிடம் - பூதம்); (பாசுபதன் - சிவன்; பாசுபத வேடம் - மயானத்துச் சாம்பல் என்பு, தலையோடு, மயிர்க்கயிறு முதலியன பூணுதல்);

நீலமணி மிடறானே - நீலமணி கண்டனே; (மிடறு - கண்டம்);

வேதியனு(ம்) நாரணனும் ஏனம் அனமாய் அடியு(ம்) மேலும் அறியாத வளர் எரியானே - பிரமனும் திருமாலும் அன்னமும் பன்றியும் ஆகி அடிமுடி தேடி அறிய ஒண்ணாத எல்லையற்ற ஜோதிவடிவினனே; (வேதியன் - பிரமன்); (ஏனம் - பன்றி); (அனமாய் - அன்னமாய்); (எரி - நெருப்பு); ("வேதியனும் நாரணனும் ஏனம் அனமாய்" - எதிர்நிரல்நிறையாகி வந்தன);

மேதி விளையாடி மகிழ் நீர்நிலையில் மீன் உகளும் வேதிகுடி மே சிவபெருமானே - எருமை விளையாடி மகிழும் குளத்தில் மீன்கள் தாவுகின்ற திருவேதிகுடியில் எழுந்தருளிய சிவபெருமானே; (மேதி - எருமை); (உகள்தல் - தாவுதல்); (சுந்தரர் தேவாரம் - 7.16.2 - "கருமேதி புனல்மண்டக் கயல்மண்டக் கமலம் களிவண்டின் கணம்இரியும் கலயநல்லூர்");


வி. சுப்பிரமணியன்

----------- -----------