Tuesday, August 2, 2022

T.155 - நெய்த்தானம் - தேவினைத் தேறி

2011-09-01

T.155 - நெய்த்தானம் - தேவினைத் தேறி

(தில்லைஸ்தானம்; திருவையாறு அருகே உள்ள தலம்)

--------------

(வண்ணவிருத்தம்;

தானனத் தானத் .. தனதான)


தேவினைத் தேறித் .. தெளியாத

.. தீயரைப் பாடிப் .. பொருள்நாடி

ஆவியைப் பாழுக் .. கிறையாமல்

.. ஆரணத் தாயைப் .. பணிவேனே

தீவினைப் போரைக் .. களைவோனே

.. தேய்மதிக் காரப் .. பரிவோனே

தேவியைப் பாகத் .. தமர்வோனே

.. சீர்கொள்நெய்த் தானப் .. பெருமானே.


பதம் பிரித்து:

தேவினைத் தேறித் தெளியாத

.. தீயரைப் பாடிப் பொருள் நாடி,

ஆவியைப் பாழுக்கு இறையாமல்,

.. ஆரணத்தாயைப் பணிவேனே;

தீவினைப் போரைக் களைவோனே;

.. தேய்மதிக்கு ஆரப் பரிவோனே;

தேவியைப் பாகத்து அமர்வோனே;

.. சீர்கொள் நெய்த்தானப் .. பெருமானே.


தேவினைத் தேறித் தெளியாத தீயரைப் பாடிப் பொருள் நாடி, ஆவியைப் பாழுக்கு இறையாமல் - தெய்வத்தை ஆராய்ந்து தெளியாத தீயவர்களைப் புகழ்ந்து பணத்திற்காக ஆவியை வீணாக்காமல்; (தே / தேவு - கடவுள்); (தேறித் தெளிதல் - ஆராய்ந்து தெளிதல்); (பொருள்+நாடி = பொருணாடி); (திருப்புகழ் - பேரவா அறா - பொதுப்பாடல் - "ஆவி சாவி யாகாமல் நீ சற்றருள்வாயே");

ஆரணத்தாயைப் பணிவேனே - வேதநாயகனான உன்னைத் தொழுவேன்; (ஆரணம் - வேதம்); (6.65.1 - "நால்வேதத்தான்காண்"); (திருவிசைப்பா - 9.1.5 - "நற்றவத்தாயைத் தொண்டனேன் நணுகுமா நணுகே");

தீவினைப்-போரைக் களைவோனே - பக்தர்களின் பாவக்-குவியலை அழிப்பவனே; தீவினையின் தாக்குதலைத் தீர்ப்பவனே; (போர் - 1. குவியல்; 2. யுத்தம்); (களைதல் - அழித்தல்);

தேய்மதிக்கு ஆரப் பரிவோனே - தேய்ந்துவந்த சந்திரனுக்கு மிகவும் இரங்கி அருள்செய்தவனே; (ஆர - மிகவும்); (பரிதல் - இரங்குதல்);

தேவியைப் பாகத்து அமர்வோனே - உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனே; (அமர்தல் - விரும்புதல்);

சீர்கொள் நெய்த்தானப் பெருமானே - அழகிய திருநெய்த்தானத்தில் உறையும் பெருமானே. (சீர் கொள் - அழகிய; சிறப்புமிக்க); (சீர்கொள் + நெய்த்தான = சீர்கொணெய்த்தான); (ஏர் - அழகு); (சீர்கொள் + நெய்த்தானம் = சீர்கொணெய்த்தானம்" என்று ஆவதால் இப்பாடலின் சந்தம் கெடாது); (சம்பந்தர் தேவாரம் - 2.104.4 - "நீர்கொ ணீள்சடை முடியனை = "நீர்கொள் நீள்சடை முடியனை"); (சம்பந்தர் தேவாரம் - 3.72.11 - "கடைகொணெடு மாடமிக வோங்கு" = கடைகொள் நெடுமாடம் மிக ஓங்கு);


வி. சுப்பிரமணியன்

----------- -----------

No comments:

Post a Comment