Showing posts with label நல்லம் (கோனேரிராஜபுரம்). Show all posts
Showing posts with label நல்லம் (கோனேரிராஜபுரம்). Show all posts

Sunday, September 13, 2026

P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - அறைகடல் நஞ்சினை

2020-08-04

P.513 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")

* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள்

கறைமலி கண்டனைக் கங்கை கூவிளம்

நறைமலர் சூடியை நல்ல(ம்) மேவிய

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே.


அறைகடல் நஞ்சினை அமுது செய்தருள் கறை மலி கண்டனைக் - ஒலிக்கின்ற கடலில் தோன்றிய ஆலகாலத்தை உண்டருளிய நீலகண்டனை; (அறைதல் - ஒலித்தல்);

கங்கை கூவிளம் நறைமலர் சூடியை - திருமுடிமேல் கங்கை, வில்வம், வாசமலர்கள் இவற்றையெல்லாம் அணிந்தவனை; (கூவிளம் - வில்வம்); (நறை - வாசனை; தேன்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

இறைவனை ஏத்திட என்றும் இன்பமே - இறைவனைத் துதித்து வணங்கினால் எந்நாளும் இன்பமே;


2)

அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத்

திரையணி சடையனைத் தேவ தேவனை

நரைவிடை ஏறியை நல்ல(ம்) மேவிய

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே.


அரையினில் அரவினை ஆர்த்த அண்ணலைத் - அரையில் கச்சாகப் பாம்பைக் கட்டிய தலைவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

திரை அணி சடையனைத் - கங்காதரனை; (திரை - அலை; நதி);

தேவதேவனை - தேவாதிதேவனை;

நரைவிடை ஏறியை - வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவனை; (நரை - வெண்மை);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

அரையனை அடிதொழ அல்லல் இல்லையே - அரசனான சிவபெருமானை வழிபட்டால் துன்பம் தீரும்; (அரையன் - அரசன்);


3)

அங்கையில் அழலனை அஞ்சி வந்தடை

திங்களை வேணியில் திகழச் சூடியை

நங்கையொர் பங்கனை நல்ல(ம்) மேவிய

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே.


அங்கையில் அழலனை - கையில் தீயைத் தாங்கியவனை;

அஞ்சி வந்து-டை திங்களை வேணியில் திகழச் சூடியை - சாபத்தால் தேய்ந்து அழியும் நிலையைக் கண்டு அஞ்சி வந்து சரணடைந்த சந்திரனைச் சடையில் விளங்கும்படி அணிந்தவனை; (வேணி - சடை);

நங்கை ஒர் பங்கனை - உமையை ஒரு பங்காக உடையவனை; (ஒர் - ஓர்; குறுக்கல் விகாரம்);

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

துங்கனைத் தொழுதெழத் துன்பம் இல்லையே - உயர்ந்தவனை வழிபட்டால் துன்பம் தீரும்; (துங்கன் - உயர்ந்தோன்);


4)

ஊன்மலி வெண்டலை ஒன்றை ஏந்தியை

வான்மதில் மூன்றெரி வாளி ஏவியை

நான்மறை நாவனை நல்ல(ம்) மேவிய

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே.


ஊன் மலி வெண்தலை ஒன்றை ஏந்தியை - ஊன் திகழும் வெண்மையான மண்டையோட்டை உண்கலனாகக் கையில் ஏந்தியவனை;

வான்-மதில் மூன்று எரி வாளி ஏவியை - வானில் திரிந்த பெரிய கோட்டைகள் மூன்றையும் எரித்த அம்பை ஏவியவனை; (வான் - ஆகாயம்; பெரிய); (வாளி - அம்பு); (ஏவி - ஏவியவன்);

நான்மறை நாவனை - நால்வேதங்களையும் பாடியருளியவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மான்மறிக் கையனை வாழ்த்தி வாழுமே - மான்கன்றைக் கையில் ஏந்திய பெருமானை வாழ்த்தி உய்யுங்கள்; (மறி - மான்கன்று);


5)

குஞ்சியின் மேற்கரம் கூப்பி வானவர்

அஞ்சலி செய்திட அபய(ம்) நல்கிய

நஞ்சணி கண்டனை நல்ல(ம்) மேவிய

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே.


குஞ்சியின்மேல் கரம் கூப்பி வானவர் அஞ்சலி செய்திட அபயம் நல்கிய - தலைமேல் கைகுவித்துத் தேவர்கள் தொழுது இறைஞ்ச, அவர்களுக்கு அபயம் அளித்த; (குஞ்சி - தலை);

நஞ்சு அணி கண்டனை - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

மஞ்சனை வாழ்த்திட மல்கும் இன்பமே - வீரனான சிவபெருமானை வாழ்த்தினால் இன்பம் பெருகும்; (மஞ்சன் - மைந்தன் - வீரன்); (மல்குதல் - மிகுதல்); (அப்பர் தேவாரம் - 4.57.1 - "மஞ்சனே மணியும் ஆனாய்");


6)

செக்கரஞ் சடையனைச் சீலர் சிந்தையில்

புக்குறை புனிதனைப் பூத நாதனை

நக்கனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே.


செக்கர் அஞ்சடையனைச் - சிவந்த அழகிய சடையை உடையவனை; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

சீலர் சிந்தையில் புக்கு உறை புனிதனைப் - சீலர்களது நெஞ்சில் தங்கும் புனிதனை; (புக்கு - புகுந்து);

பூதநாதனை - பூதகணநாதனை;

நக்கனை - திகம்பரனை;

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சொக்கனைத் தொழுதெழத் துக்கம் இல்லையே - அழகனை வழிபட்டால் துக்கம் தீரும்; (சொக்கன் - அழகன்);


7)

கொம்பனை யாளொரு கூறு தாங்கிய

அன்பனை இன்பனை ஆனஞ் சாடியை

நம்பனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே.


கொம்பு-அனையாள் ஒரு கூறு தாங்கிய அன்பனை - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடைய அன்பனை; (சுந்தரர் தேவாரம் - 7.33.1 - "மலைப்பாவை ஓர் கூறு தாங்கிய குழகரோ");

இன்பனை - இன்பவடிவினனை;

ஆனஞ்சு ஆடியை - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்துபொருள்களால் அபிஷேகம் ஏற்பவனை; (ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்);

நம்பனை - எல்லாராலும் விரும்பத்தக்கவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

உம்பனை உன்னிட உய்தி திண்ணமே - தேவனைத் தியானித்தால் உய்வு நிச்சயம்; (உம்பன் - தேவன்); (உன்னுதல் - எண்ணுதல்);


8)

சட்டெனத் தடவரை தன்னைத் தூக்கிய

துட்டன திருபது தோள்நெ ரித்தருள்

நட்டனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே.


சட்டெனத் தடவரை-தன்னைத் தூக்கிய - திடீரென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த; (தடம் - பெரிய); (வரை - மலை);

துட்டனது இருபது-தோள் நெரித்தருள் நட்டனை - துஷ்டனான இராவணனுடைய இருபது புஜங்களையும் நசுக்கியருளிய கூத்தனை; (நட்டன் - நடனம் ஆடுபவன்); (அப்பர் தேவாரம் - 5.81.1 - "பாண்டிக் கொடுமுடி நட்டனைத் தொழ நம்வினை நாசமே");

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

சிட்டனை அடிதொழச் செல்வம் மல்குமே - உயர்ந்தவனை வணங்கினால் செல்வம் மிகும்; (சிட்டன் - சிஷ்டாசாரமுடையவன் - பெரியோன்);


9)

புள்ளதன் மேலினன் போதி னானிவர்

வெள்கிட ஓங்கிய வியன்நெ ருப்பினை

நள்ளிருள் ஆடியை நல்ல(ம்) மேவிய

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே.


புள்-அதன் மேலினன் போதினான் இவர் - கருடவாகனனான திருமால், தாமரைப்பூமேல் இருக்கும் பிரமன் இவர்கள் இருவரும்; (புள் - பறவை); (போது - பூ);

வெள்கிட ஓங்கிய வியன் நெருப்பினை - வெட்கும்படி (நாணுமாறு) எல்லையின்றி ஓங்கிய பெரிய ஜோதியை; (வெள்குதல் - வெட்குதல்); (வியன் - பெரிய); (திருவாசகம் - அருட்பத்து - 8.29.4 - "விமலனே எமக்கு வெளிப்படாய் என்ன வியன்தழல் வெளிப்பட்ட எந்தாய்");

நள்-இருள் ஆடியை - நடு-இரவில் கூத்தாடுபவனை;

நல்லம் மேவிய - திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

வள்ளலை உள்கிட மல்கும் இன்பமே - வள்ளலான சிவபெருமானை எண்ணினால் இன்பம் பெருகும்; (உள்குதல் - உள்ளுதல் - நினைதல்);


10)

வாயினில் உண்மையை வைத்தி டாதவர்

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின்

நாயனை நளிர்வயல் நல்ல(ம்) மேவிய

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க் கின்பமே.


வாயினில் உண்மையை வைத்திடாதவர் - என்றும் உண்மையைப் பேசாதவர்கள்;

பேயினை ஒத்தவர் பேச்சை நீங்குமின் - பேயை ஒத்தவர்களான அவர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி); (சம்பந்தர் தேவாரம் - 2.44.2 - "ஆமாத்தூர் அம்மானெம் பெம்மான் என்று ஏத்தாதார் பேயரிற் பேயரே"); (திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா - 9.4.2 - "தில்லை வேந்தனைச் சேர்ந்திலாத துட்டரைத் தூர்த்த வார்த்தைத் தொழும்பரைப் பிழம்பு பேசும் பிட்டரைக் காணா கண் வாய் பேசாது அப்-பேய்களோடே");

நாயனை - தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);

நளிர்-வயல் நல்லம் மேவிய - குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற; (நளிர்தல் - குளிர்தல்);

தூயனைத் தொழுதெழும் தொண்டர்க்கு இன்பமே - பரிசுத்தனான சிவபெருமானை வழிபடும் தொண்டர்களுக்கு என்றும் இன்பமே.


11)

கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை

வெல்விடைக் கொடியனை வெந்த நீற்றனை

நல்வயல் சூழ்திரு நல்ல(ம்) மேவிய

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே.


கொல்வினைக் கூற்றினைக் குமைத்த பாதனை - கொல்லும் தொழிலையுடைய காலனை உதைத்து அழித்தவனை; (வினை - தொழில்); (குமைத்தல் - அழித்தல்);

வெல்விடைக் கொடியனை - வெற்றியுடைய இடபக்கொடியை உடையவனை;

வெந்த நீற்றனை - சுட்ட திருநீற்றைப் பூசியவனை;

நல்-வயல் சூழ் திரு-நல்லம் மேவிய - நல்ல வயல் சூழ்ந்த திருநல்லத்தில் விரும்பி உறைகின்ற;

செல்வனை அடிதொழச் சேரும் நன்மையே - செல்வனான சிவபெருமானை வழிபட்டால் நம்மை நன்மையே வந்தடையும்;


வி. சுப்பிரமணியன்

--------- ---------


P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - உம்பர் உய்ய

2020-07-30

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா தான தான தானனா - சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

* திருநல்லத்தில் (கோனேரிராஜபுரத்தில்) நடராஜமூர்த்தம் விசேஷம்;


1)

உம்பர் உய்ய நஞ்சினை .. உண்டி ருள்மி டற்றினான்

கொம்ப னாளொர் பங்கினன் .. குஞ்சி மீது கூவிளம்

வம்பு நாறு கொன்றையன் .. மார்பில் நூலன் நற்கழல்

நம்பி னார்தம் நற்றுணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


உம்பர் உய்ய நஞ்சினை உண்டு இருள்-மிடற்றினான் - தேவர் உய்யுமாறு ஆலகாலத்தை உண்டு கறுத்த கண்டன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

கொம்பனாள் ஒர் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்;

குஞ்சி மீது கூவிளம், வம்பு நாறு கொன்றையன் - தலைமேல் வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (கூவிளம் - வில்வம்); (வம்பு - வாசனை);

மார்பில் நூலன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;

நற்கழல் நம்பினார்தம் நற்றுணை - நல்ல திருவடியை விரும்பியவர்களுக்கு நல்ல துணைவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


2)

நச்ச ராவை மார்பினில் .. நல்ல ஆரம் ஆக்கினான்

கச்ச தாக மாசுணம் .. கட்டி வந்து வெண்டலைப்

பிச்சை ஏற்று ழல்பவன் .. பேதை பங்கன் நாள்தொறும்

நச்சி வாழ்த்தி னார்துணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நச்சராவை மார்பினில் நல்ல ஆரம் ஆக்கினான் - விஷப்பாம்பை மார்பில் சிறந்த மாலை போல அணிந்தவன்; (ஆரம் - மாலை);

கச்சதாக மாசுணம் கட்டி வந்து வெண்லைப் பிச்சை ஏற்று உழல்பவன் - கச்சாகப் பாம்பை அரையில் கட்டி வந்து வெள்ளை மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவன்; (மாசுணம் - பாம்பு);

பேதை-பங்கன் - உமைபங்கன்;

நாள்தொறும் நச்சி வாழ்த்தினார் துணை - தினமும் விரும்பித் துதிப்பவர்களுக்குத் துணைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


3)

நூல்வி ளங்கு மார்பினன் .. நோயு(ம்) மூப்பும் அற்றவன்

சேல்வி ளங்கு கண்ணுமை .. சேர்ந்த செய்ய மேனியன்

பால்வி ரும்பி ஆடினான் .. பண்டை வேதம் ஆல்நிழல்

நால்வ ருக்கு ரைத்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நூல் விளங்கு மார்பினன் - பூணூல் திகழும் திருமார்பன்;

நோயு(ம்) மூப்பும் அற்றவன் - பிணியும் முதுமையும் இல்லாதவன்;

சேல் விளங்கு கண்-உமை சேர்ந்த செய்ய மேனியன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமை ஒரு பாகமாகச் சேர்ந்த செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

பால் விரும்பி ஆடினான் - பால்அபிஷேகம் விரும்பியவன்;

பண்டை வேதம் ஆல்நிழல் நால்வருக்கு உரைத்தவன் - தொன்மையான வேதங்களைக் கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்; (பண்டை - பழமை);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


4)

பொன்செய் கொன்றை மாமலர் .. புற்ற ராவி ளம்பிறை

புன்ச டைப்பு னைந்தவன் .. பூத நாதன் மென்கொடி

மின்செய் நுண்ம ருங்குலாள் .. மேனி பாகம் ஆயினான்

நன்செய் நாற்பு றந்திகழ் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


பொன்-செய் கொன்றை மாமலர், புற்றரா, இளம்பிறை புன்சடைப் புனைந்தவன் - பொன் போன்ற கொன்றைமலரையும், புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும், இளந்திங்களையும் செஞ்சடையில் அணிந்தவன்; (செய்தல் - ஒத்தல்); (புன்சடை - செஞ்சடை; புன்மை - புகர்நிறம்)

பூதநாதன் - பூதகணநாதன்;

மென்கொடி மின்-செய் நுண்-மருங்குலாள் மேனி பாகம் ஆயினான் - மென்மையான கொடி போன்றவளும் மின்னல் போன்ற சிற்றிடை உடையவளுமான உமாதேவி தன் திருமேனியில் ஒரு பாகம் ஆனவன்; (மின் - மின்னல்); (மருங்குல் -இடை); (செய் + நுண் = செய்ந்நுண்; இங்கே, ஓசைகருதி ந் மிகாது வந்தது);

நன்செய் நாற்புறம் திகழ் - வளம் மிக்க வயல் புடைசூழ்ந்த;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


5)

மென்மை மிக்க தாளிணை .. மெச்சு மாணி வாழவே

வன்மை மிக்க கூற்றினை .. மாளு மாறு தைத்தவன்

புன்மை அற்ற நெஞ்சராய்ப் .. போற்றி செய்யில் நாள்தொறும்

நன்மை செய்யு(ம்) நம்பிரான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


மென்மை மிக்க தாளிணை மெச்சு மாணி வாழவே வன்மை மிக்க கூற்றினை மாளுமாறு உதைத்தவன் - மென்மையான இருதிருவடிகளைப் போற்றிய மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக என்றும் உயிர்வாழ வலிய காலனை இறக்கும்படி உதைத்தவன்; (மெச்சுதல் - புகழ்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

புன்மை அற்ற நெஞ்சராய்ப் போற்றிசெய்யில் நாள்தொறும் நன்மை செய்யு(ம்) நம்பிரான் - தூயநெஞ்சினராகி வழிபாடு செய்தால் எந்நாளும் நன்மையே செய்யும் நம்பெருமான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


6)

வேகம் ஆர்ந்த கங்கையை .. வேணி யிற்க ரந்தவன்

பாகம் ஆர ணங்கமர் .. பற்றி லாத பண்பினன்

மேகம் ஆர்மி டற்றினன் .. வேதம் ஓது நாவினன்

நாகம் ஆரு(ம்) மார்பினன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வேகம் ஆர்ந்த கங்கையை வேணியில் கரந்தவன் - வேகம் மிகுந்த கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை); (கரத்தல் - ஒளித்தல்);

பாகம் ஆரணங்கு அமர், பற்று-இலாத பண்பினன் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பிய, எப்பற்றும் இல்லாதவன்; (அணங்கு - தெய்வம்; தெய்வப்பெண்); (அப்பர் தேவாரம் - 5.18.9 - "ஆரணங்கு ஒருபாலுடை மைந்தனே"); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

மேகம் ஆர் மிடற்றினன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

வேதம் ஓது நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

நாகம் ஆரு(ம்) மார்பினன் - பாம்பை அணிந்த திருமார்பன்; (ஆர்தல் - அணிதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


7)

தக்கன் வேள்வி செற்றவன் .. தந்தை தாயி லாதவன்

அக்கி னைப்பு னைந்தவன் .. அங்கம் ஆறும் ஓதினான்

செக்கர் அஞ்ச டைப்பரன் .. தேரில் ஏறி அச்சிற

நக்க ரண்கள் அட்டவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


தக்கன் வேள்வி செற்றவன் - தக்கன் செய்த அவவேள்வியை அழித்தன்; (செறுதல் - அழித்தல்);;

தந்தை தாய் இலாதவன் - தனக்கு ஒரு தாய்தந்தை இல்லாதவன்;

அக்கினைப் புனைந்தவன் - எலும்பை அணிந்தவன்; (அக்கு - எலும்பு);

அங்கம் ஆறும் ஓதினான் - ஆறங்கங்களைப் பாடியருளியவன்;

செக்கர் அஞ்சடைப்-பரன் - சிவந்த அழகிய சடையுடைய பரமன்; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

தேரில் ஏறி அச்சு இற, நக்கு அரண்கள் அட்டவன் - (தேவர்கள் செய்த) தேரில் ஏறியதும் அதன் அச்சு முரிந்ததும், சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (இறுதல் - முரிதல்); (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


8)

வரையி டந்த மூடனார் .. வாய்கள் பத்த ரற்றவே

விரலை வைத்த டர்த்தவன் .. வெற்றி வாளும் ஈந்தவன்

பரவி னார்கள் தீவினை .. பாற்றி இன்ப(ம்) நல்குவான்

நரைவெ ளேறு கந்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வரை இடந்த மூடனார் வாய்கள் பத்து அரற்றவே விரலை வைத்து அடர்த்தவன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்து வாய்களும் அழுது புலம்பும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (மூடனார் - அறிவில்லாதவன் - இங்கே, இராவணன்; ஆர் விகுதி இழிவுசிறப்பு); (அரற்றுதல் - புலம்புதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வெற்றி வாளும் ஈந்தவன் - (பிறகு, இராவணன் பாடிய துதிகளைக் கேட்டு இரங்கி) அவனுக்கு (வாழ்நாள், பெயர் இவற்றோடு) சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்; (வாளும் - உம் - எச்சவும்மை);

பரவினார்கள் தீவினை பாற்றி இன்ப(ம்) நல்குவான் - போற்றித் துதிக்கும் பக்தர்களது தீவினையை அழித்து அவர்களுக்கு இன்பம் தருபவன்; (பரவுதல் - துதித்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

நரை-வெளேறு உகந்தவன் - மிகவும் வெண்மையான எருதை வாகனமாக மகிழ்ந்தவன்; (நரை - வெண்மை); (வெளேறு - வெள்ளேறு; ஓசைகருதி ள் மிகாது வந்தது); (நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


9)

வெண்ணெய் உண்ட மாலொடு .. வேதன் நேட நீண்டவன்

கண்ணி லங்கு நெற்றியன் .. காம னைச்சி னந்தவன்

பெண்ணி லங்கு மேனியன் .. பெற்றம் ஏறு பெற்றியன்

நண்ணி னார்க்க ருள்பவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வெண்ணெய் உண்ட மாலொடு வேதன் நேட நீண்டவன் - (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெய் உண்டவனான திருமாலும் பிரமனும் அடிமுடி தேட எல்லையின்றி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

கண் இலங்கு நெற்றியன் - நெற்றியில் கண் உடையவன்;

காமனைச் சினந்தவன் - மன்மதனைக் கோபித்து எரித்தவன்;

பெண் இலங்கு மேனியன் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடபவாகனம் ஏறும் பெருமையினன்; (பெற்றம் - எருது); (பெற்றி - தன்மை; பெருமை);

நண்ணினார்க்கு அருள்பவன் - தன்னை அடைந்தவர்களுக்கு அருள்பவன்; (நண்ணுதல் - கிட்டுதல்; பொருந்துதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


10)

நீறு பூச அஞ்சிடும் .. நீசர் சொல்லை நீங்குமின்

ஆறு சூடி நாமமாம் .. அஞ்செ ழுத்தை நாள்தொறும்

கூறும் அன்பர் நெஞ்சிடம் .. கொள்ளும் எந்தை சங்கரன்

நாறு கொன்றை மாலையான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நீறு பூச அஞ்சிடும் நீசர் சொல்லை நீங்குமின் - திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற கீழோர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஆறுசூடி நாமம் ஆம் அஞ்செழுத்தை நாள்தொறும் கூறும் அன்பர் நெஞ்சு இடம் கொள்ளும் எந்தை - கங்காதரனது திருநாமம் ஆகும் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் தந்தை;

சங்கரன் - சங்கரன் (நன்மை செய்பவன்);

நாறு கொன்றை மாலையான் - மணம் கமழும் கொன்றைமாலை அணிந்தவன்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


11)

கோளு(ம்) நாளும் என்செயும் .. குன்ற வில்லி தன்னையே

மூளும் அன்பி னால்தினம் .. முன்ப ணிந்து போற்றினால்

நீளும் வேணி தன்னிடை .. நீர்க ரந்த நின்மலன்

நாளும் இன்ப(ம்) நல்குவான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


கோளு(ம்) நாளும் என் செயும் - நவகிரகங்களும், (நட்சத்திரம், திதி, கிழமை முதலிய) நாள்களும் என்ன செய்யும்? (தீமை செய்யமாட்டா); (செயும் - செய்யும்);

குன்றவில்லி-தன்னையே மூளும் அன்பினால் தினம் முன்-பணிந்து போற்றினால் - மேருவில் ஏந்தியவனையே பொங்கும் அன்பால் தினமும் வணங்கித் துதித்தால்; (குன்றம் - மலை);

நீளும் வேணி-தன்னிடை நீர் கரந்த நின்மலன் - நீளும் சடையில் கங்கையை ஒளித்த பரிசுத்தன்; (வேணி - சடை); (நின்மலன் - நிர்மலன்);

நாளும் இன்ப(ம்) நல்குவான் - எந்நாளும் இன்பம் தருவான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


பிற்குறிப்புகள் :

யாப்புக்குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4-ஆம் சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5-ஆம் சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6-ஆம் சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

--------- ---------