2019-07-05
P.478 - ஆமாத்தூர் (திருவாமாத்தூர்)
-----------------
(எண்சீர் விருத்தம் - விளம் விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)
(காரைக்கால் அம்மையார் - மூத்த திருப்பதிகம் - 11.2.9 - "துத்தம்கைக் கிள்ளை விளரி தாரம்" )
(சம்பந்தர் தேவாரம் - 1.8.1 - "புண்ணியர் பூதியர் பூத நாதர்")
1)
கரதலம் இரண்டையும் கூப்பி நின்று .. கழலிணைக் குருகிய நெஞ்சி னோடு
பரவிய மாணியைக் கொல்ல வந்த .. படுநமன் தனையுதை செய்த பாதன்
குரவொடு கூவிளம் கொன்றை சூடி .. கூளிகள் சூழ்தர நட்டம் ஆடி
அரவினை ஆர்த்தவன் அமரும் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
கரதலம் இரண்டையும் கூப்பி நின்று கழலிணைக்கு உருகிய நெஞ்சினோடு - இரு-கைகளைக் கூப்பி இரு-திருவடிகளுக்கு அன்பால் உருகும் நெஞ்சினர் ஆகி; (கரதலம் - கை);
பரவிய மாணியைக் கொல்ல வந்த படுநமன்தனை உதைசெய்த பாதன் - போற்றிய மார்க்கண்டேயரைக் கொல்ல வந்த கொடிய கூற்றுவனை உதைத்த திருப்பாதன்;
குரவொடு கூவிளம் கொன்றை சூடி - குராமலரோடு, வில்வம், கொன்றைமலர் இவற்றைச் சூடியவன்;
கூளிகள் சூழ்தர நட்டம் ஆடி - பேய்கள் சூழக் கூத்து ஆடுபவன்; (கூளி - பேய்; பூதம்);
அரவினை ஆர்த்தவன் அமரும் ஊர் ஆம் - பாம்பை அரைநாணாகக் கட்டியவன் விரும்பி உறையும் தலம்; (ஆர்த்தல் - கட்டுதல்);
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
2)
கடலிடை மத்தென மலையை நாட்டிக் .. கடைந்தவர் அலறிடு மாறெ ழுந்த
விடமொரு மணியெனப் பூண்ட கண்டன் .. மென்முலை மங்கையை வாம பாகம்
உடையவன் மூவிலை வேலும் மானும் .. உடுக்கையும் கையினில் ஏந்தும் ஈசன்
அடல்விடை ஏறிய அண்ணல் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
கடலிடை மத்து என மலையை நாட்டிக் கடைந்தவர் அலறிடுமாறு எழுந்த - பாற்கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்தவர்கள் அஞ்சி ஓலமிடும்படி தோன்றிய; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "மால்வரை மத்தென நாட்டி");
விடம் ஒரு மணி எனப் பூண்ட கண்டன் - ஆலகாலத்தை ஒப்பற்ற மணி போலக் கண்டத்தில் அணிந்தவன்; (ஒரு - ஒப்பற்ற);
மென்முலை மங்கையை வாம-பாகம் உடையவன் - மென்மையான முலையையுடைய உமையை இடப்பக்கம் ஒரு கூறாக உடையவன்;
மூவிலை-வேலும் மானும் உடுக்கையும் கையினில் ஏந்தும் ஈசன் - திரிசூலம், மான்கன்று, உடுக்கை இவற்றையெல்லாம் கையில் ஏந்திய ஈசன்;
அடல்விடை ஏறிய அண்ணல் ஊர் ஆம் - வலிய வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடைய பெருமான் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
3)
பூவினை இட்டடி போற்றும் அன்பர் .. பொருவினை தீர்த்தருள் பரமன் வேத
நாவினன் ஆலமர் ஞான மூர்த்தி .. நாரியர் இடுபலி ஏற்ற வள்ளல்
சேவினைக் கொடியினில் வைத்த தேவன் .. செஞ்சடை மேல்மிளிர் கொன்றை சூடி
ஆவினில் அஞ்சுகந் தாடி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
பூவினை இட்டு அடி போற்றும் அன்பர் பொரு-வினை தீர்த்தருள் பரமன் - பூக்களைத் தூவித் திருவடியை வழிபடும் பக்தர்களது தாக்கும் வினைகளைத் தீர்த்து அருளும் பரமன்; (பொருதல் - போர்செய்தல்); (அப்பர் தேவாரம் - 4.88.4 - "சென்றடைந்தேனுடைய பொருவினை யெல்லாம் துரந்தனை");
வேத-நாவினன் - நான்மறையைப் பாடியருளியவன்;
ஆல் அமர் ஞானமூர்த்தி - கல்லாலின்கீழ் வீற்றிருக்கும் ஞானகுரு;
நாரியர் இடுபலி ஏற்ற வள்ளல் - பெண்கள் இடும் பிச்சையை ஏற்கும் வள்ளல்;
சேவினைக் கொடியினில் வைத்த தேவன் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்; (சே - எருது);
செஞ்சடைமேல் மிளிர்-கொன்றை சூடி - சிவந்த சடைமேல் அழகிய கொன்றையை அணிந்தவன்;
ஆவினில் அஞ்சு உகந்து ஆடி ஊர் ஆம் - பசுவிடமிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியத்தால் அபிஷேகம் செய்யப்பெறுபவன் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
4)
பொங்கிய செருக்குடைத் தக்கன் முன்பு .. புரியவ வேள்வியைச் செற்ற வீரன்
அங்கியைத் திங்களைத் தேவர் கோனை .. அன்றொறுத் தருளிய முக்கண் மூர்த்தி
வெங்கரி உரிதனைப் போர்த்த மார்பன் .. வெந்தவெண் பொடியணி மேனி எம்மான்
அங்கமும் வேதமும் ஓதி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
பொங்கிய செருக்குடைத் தக்கன் முன்பு புரி அவ-வேள்வியைச் செற்ற வீரன் - சிவனை மதியாமல் மிகுந்த ஆணவத்தோடு தக்கன் செய்த இழிந்த யாகத்தை அழித்த வீரன்;
அங்கியைத் திங்களைத் தேவர்கோனை அன்று ஒறுத்தருளிய முக்கண் மூர்த்தி - அவ்வேள்வியில் பங்கேற்ற அக்கினி, சோமன், இந்திரன் முதலான தேவர்களையெல்லாம் தண்டித்த முக்கட்கடவுள்; (தக்ஷவேள்வியை அழித்த வரலாற்றைக் கந்தபுராணத்தில் காண்க); (திருவாசகம் - திருத்தோணோக்கம் - 8.15.11 - "காமன் உடலுயிர் காலன்பல் காய்கதிரோன் நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச் சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையும் தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ"); (அப்பர் தேவாரம் - 6.52.9 - "சந்திரனைத் திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்தெச்சன் தலைகொண்டான் காண் இந்திரனைத் தோள்முரிவித் தருள்செய்தான் காண்");
வெங்கரி உரிதனைப் போர்த்த மார்பன் - கொடிய யானையின் தோலை மார்பில் போர்த்தவன்;
வெந்த வெண்பொடி அணி மேனி எம்மான் - சுட்ட வெண்திருநீற்றை மேனியில் பூசிய எம் இறைவன்;
அங்கமும் வேதமும் ஓதி ஊர் ஆம் - நால்வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியவன் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
5)
பெருகிய விடமது கண்ட தேவர் .. பிணைமலர் கொண்டடி போற்ற உண்டு
கருகிய மிடறினன் சூல பாணி .. கழல்தொழும் முனிவர்கள் நால்வர் வேண்டத்
தருநிழல் மறைவிரி செய்த ஐயன் .. தரியலர் முப்புரம் தீயில் மூழ்க
அருவரை வில்லினை ஏந்தி ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
பெருகிய விடம்அது கண்ட தேவர் பிணைமலர்கொண்டு அடி போற்ற உண்டு கருகிய மிடறினன் - பெருகிய ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித் தேவர்கள் தொடுத்த மலர்களால் திருவடியை வழிபட அவர்களுக்கு இரங்கி அவ்விடத்தை உண்டு கறுத்த கண்டத்தை உடையவன்;
சூலபாணி - திரிசூலத்தை ஏந்தியவன்;
கழல் தொழும் முனிவர்கள் நால்வர் வேண்டத் தருநிழல் மறை விரிசெய்த ஐயன் - திருவடியைத் தொழுத சனகாதியர்களுக்குக் கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த குரு; (தரு - மரம்; இங்கே, கல்லாலமரம்);
தரியலர் முப்புரம் தீயில் மூழ்க அருவரை வில்லினை ஏந்தி ஊர் ஆம் - பகைவர்களது முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி அரிய மலையை வில்லாக ஏந்தியவன் உறையும் தலம்; (தரியலர் - பகைவர்);
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
6)
தாயினும் நல்லவன் தந்தை என்று .. தமிழ்மறை துதிசெயும் தலைவன் கண்ணில்
தீயினன் சீறிள நாக நாணன் .. சேலன கண்ணியர் மனைகள் தோறும்
போயிரந் துண்பலி தேரும் செல்வன் .. பொன்னடி போற்றிடும் அன்பர் சொல்ல
ஆயிரம் பெயருடை அடிகள் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
"தாயினும் நல்லவன், தந்தை" என்று தமிழ்மறை துதிசெயும் தலைவன் - "தாயைவிட நல்லவன், தந்தை" என்று தேவாரப் பாடல்கள் துதிக்கின்ற தலைவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.123.5 - "தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப்பார்கள்");
கண்ணில் தீயினன் - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன்;
சீறு-இளநாக நாணன் - சீறுகின்ற இளம்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;
சேல் அன கண்ணியர் மனைகள்தோறும் போய் இரந்து உண்பலி தேரும் செல்வன் - சேல்மீன் போன்ற கண்களை உடைய பெண்களது வீடுகளை நாடிச் சென்று யாசித்துப் பிச்சையை ஏற்கும் செல்வன்;
பொன்னடி போற்றிடும் அன்பர் சொல்ல ஆயிரம் பெயருடை அடிகள் ஊர் ஆம் - அழகிய திருவடியை வழிபடும் பக்தர்கள் சொல்ல ஆயிரம் திருநாமங்கள் உடைய இறைவன் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
7)
அம்மலர்க் கணைதொடு மதனை நோக்கி .. அவனழ குடல்தனை நீறு செய்தாய்
எம்மிறை நீயென ஏத்தி நாளும் .. இணையடி தொழுதெழும் அன்பர் தங்கள்
மும்மலம் அறுத்தருள் செய்யும் முத்தன் .. முதலிலி முடிவிலி உலகை ஈன்ற
அம்மையும் அப்பனும் ஆனான் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
"அம்-மலர்க்கணைதொடு மதனை நோக்கி அவன் அழகு உடல்தனை நீறு செய்தாய் - "அழகிய மலரம்பை ஏவிய மன்மதனை நெற்றிக்கண்ணால் பார்த்து அவனது அழகிய உடலைச் சாம்பலாக்கியவனே;
எம் இறை நீ" என ஏத்தி நாளும் இணையடி தொழுதெழும் அன்பர் தங்கள் - எம் இறைவன் நீ" என்று துதித்துத் தினமும் இரு-திருவடிகளை வணங்கும் பக்தர்களுடைய;
மும்மலம் அறுத்தருள் செய்யும் முத்தன் - மும்மலங்களையும் நீக்கி முக்தி அருள்பவன்;
முதலிலி முடிவிலி - முதலும் முடிவும் இல்லாதவன்;
உலகை ஈன்ற அம்மையும் அப்பனும் ஆனான் ஊர் ஆம் - எல்லா உலகங்களையும் ஈன்றெடுத்த தாயும் தந்தையும் ஆன பெருமான் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
8)
தலையொரு பத்தினன் தேர்செ லுத்தத் .. தருக்கொடு கயிலையைப் பேர்த்த போது
மலைமிசைத் தாள்விரல் ஒன்றை ஊன்றி .. வலியழித் தின்னிசை கேட்ட நாதன்
இலைமலர் எதனையும் அன்பொ டிட்ட .. அடியவர் இருவினை தீர்க்கும் ஏந்தல்
அலைகடல் நஞ்சணி கண்டன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
தலை ஒரு பத்தினன் தேர் செலுத்தத் தருக்கொடு கயிலையைப் பேர்த்த போது - பத்துத்தலைகளையுடைய இராவணன் தரையில் இறங்கிய தன் தேரைச் செலுத்தவேண்டி ஆணவத்தோடு கயிலைமலையைப் பெயர்த்தபொழுது;
மலைமிசைத் தாள்விரல் ஒன்றை ஊன்றி வலி அழித்து இன்னிசை கேட்ட நாதன் - கயிலைமலைமேல் திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி அவனது வலிமையை அழித்துப் பின் அவன் பாடிய இனிய கீதத்தைக் கேட்ட தலைவன்;
இலை மலர் எதனையும் அன்பொடு இட்ட அடியவர் இருவினை தீர்க்கும் ஏந்தல் - அடியவர்கள் அன்போடு இட்ட எந்த இலையையும் மலரையும் ஏற்று அவர்களுக்கு இரங்கி அவர்களது வலிய வினையைத் தீர்க்கும் தலைவன்; (சுந்தரர் தேவாரம் - 7.94.9 - "இலையால் அன்பால் ஏத்தும் அவர்க்கு நிலையா வாழ்வை நீத்தார் இடமாம்");
அலைகடல் நஞ்சு அணி கண்டன் ஊர் ஆம் - கடலில் தோன்றிய ஆலகாலத்தைக் கண்டத்தில் அணிந்தவன் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
9)
முந்தொரு மூவடி இரந்த மாலும் .. முளரியின் மேலுறை அயனும் ஏத்தும்
செந்தழல் வடிவினன் தேவ தேவன் .. தேனினும் இன்மொழி மங்கை பங்கன்
அந்தகன் அழிவுறு மாறு சூலம் .. அவனது மார்பினில் பாய்ச்ச வல்லான்
அந்தரர் போற்றிடும் அடிகள் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
முந்து ஒரு மூவடி இரந்த மாலும் முளரியின்மேல் உறை அயனும் ஏத்தும் செந்தழல் வடிவினன் - முன்பு (வாமனனாகி) ஒரு மூன்றடி மண்ணை யாசித்த திருமாலும் தாமரையின்மேல் உறைகின்ற பிரமனும் ஏத்துகின்ற ஜோதி வடிவினன்;
தேவதேவன் - தேவாதிதேவன்;
தேனினும் இன்மொழி மங்கை பங்கன் - தேனைவிட இனிய மொழி பேசுகின்ற உமையை ஒரு பங்காக உடையவன்;
அந்தகன் அழிவுறுமாறு சூலம் அவனது மார்பினில் பாய்ச்ச வல்லான் - அந்தகாசுரன் அழியும்படி அவன் மார்பில் சூலத்தைக் குத்தியவன்; (பாய்ச்சுதல் - குத்துதல்);
அந்தரர் போற்றிடும் அடிகள் ஊர் ஆம் - தேவர்கள் போற்றும் இறைவன் உறையும் தலம்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
10)
சத்தியம் தனையுரை செய்ய மாட்டார் .. தவமென அவம்புரி சழக்கர் நாளும்
கத்திடும் கத்தலை நீங்கி வாரும் .. கைதொழும் அன்பரைக் காக்கும் இன்பன்
முத்தன நகையுமை கூற மர்ந்த .. முக்கணன் உக்கிரப் போர்பு ரிந்த
அத்தியின் உரிபுனை அத்தன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
சத்தியம்தனை உரைசெய்ய மாட்டார் - உண்மையைப் பேசமாட்டார்கள்;
தவம் என அவம் புரி சழக்கர் நாளும் - தவம் என்று தினமும் இழிசெயல்களே செய்யும் தீயோர்கள்; ("நாளும்" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);
நாளும் கத்திடும் கத்தலை நீங்கி வாரும் - அவர்கள் தினமும் கத்தும் கத்தலை நீங்கி வாருங்கள்;
கைதொழும் அன்பரைக் காக்கும் இன்பன் - கைகூப்பி வழிபடும் பக்தர்களைக் காப்பவன், இன்பவடிவினன்;
முத்து அன நகை உமை கூறு அமர்ந்த முக்கணன் - முத்துப் போன்ற பல்லை உடைய உமையை ஒரு பாகமாக விரும்பிய முக்கட்பெருமான்;
உக்கிரப்-போர் புரிந்த அத்தியின் உரி புனை அத்தன் ஊர் ஆம் - மிகுந்த சினத்தோடு போரிட்ட யானையின் தோலை அணிந்த எம் தந்தை உறையும் தலம்; (அத்தி - யானை); (உரி - தோல்);
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
11)
முடிமிசை வெண்பிறை சூடும் மன்னன் .. மூவிலை வேலினன் வேட னாகிப்
படிமிசைக் கானிடைப் பன்றி எய்து .. பார்த்தனுக் கொருபடை தந்த பண்பன்
துடிபறை முழவொலி செய்ய அல்லில் .. சுடலையில் பெருநடம் ஆடு கூத்தன்
அடிதொழும் அன்பருக் கன்பன் ஊராம் .. அழகிய வயலணி ஆமாத் தூரே.
முடிமிசை வெண்பிறை சூடும் மன்னன் - தலைமேல் வெண்திங்களைச் சூடிய மன்னன்;
மூவிலை-வேலினன் - திரிசூலத்தை ஏந்தியவன்;
வேடன் ஆகிப் படிமிசைக் கானிடைப் பன்றி எய்து பார்த்தனுக்கு ஒரு படை தந்த பண்பன் - வேடன் வடிவில் இப்பூமியில் ஒரு காட்டில் சென்று ஒரு பன்றியை எய்து அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளிய பண்பன்; (படி - பூமி); (படை - ஆயுதம்);
துடி, பறை, முழவு, ஒலி செய்ய அல்லில் சுடலையில் பெருநடம் ஆடு கூத்தன் - உடுக்கை, பறை, முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க இருளில் சுடுகாட்டில் பெருங்கூத்து ஆடுபவன்;
அடி தொழும் அன்பருக்கு அன்பன் ஊர் ஆம் - திருவடியை வழிபடும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;
அழகிய வயல் அணி ஆமாத்தூரே - அழகிய வயல் சூழ்ந்த திருவாமாத்தூர் ஆகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------