Wednesday, May 6, 2026

T.230 - ஏடகம் (திருவேடகம்) - ஆசையே நாடொறும்

2019-08-13

T.230 - ஏடகம் (திருவேடகம்) - ஆசையே நாடொறும்

-----------------

(வண்ணவிருத்தம்;

தானனா தானன .. தந்ததான)

(வாரிமீ தேயெழு திங்களாலே - திருப்புகழ் - பொது)


ஆசையே நாடொறும் .. உந்தஆடி

.. ஆழிசூழ் பூமிசை .. என்றும்வாடிப்

பாசமார் தூதரை .. அஞ்சினேனைப்

.. பாலியாய் மாவிடம் .. உண்டதேவா

வாசமார் ஓதிம .. டந்தைபாகா

.. வானனே வேளைமு .. னிந்தயோகீ

ஈசனே நீள்மதி .. கொன்றைசூடீ

.. ஏடுசேர் ஏடக .. எம்பிரானே.


பதம் பிரித்து:

ஆசையே நாள்தொறும் உந்த ஆடி,

.. ஆழி சூழ் பூமிசை என்றும் வாடிப்,

பாசம் ஆர் தூதரை அஞ்சினேனைப்

.. பாலியாய், மா-விடம் உண்ட தேவா;

வாசம் ஆர் ஓதி மடந்தை-பாகா;

.. வானனே; வேளை முனிந்த யோகீ;

ஈசனே; நீள்மதி கொன்றை சூடீ;

.. ஏடு சேர் ஏடக எம்பிரானே.


ஆசையே நாள்தொறும் உந்த ஆடி - தினமும் ஆசைகளால் உந்தப்பட்டு இயங்கி;

ஆழி சூழ் பூமிசை என்றும் வாடிப் - கடல் சூழ்ந்த பூமியின்மேல் எந்நாளும் வருந்தி; (ஆழி - கடல்); (பூ - பூமி);

பாசம் ஆர் தூதரை அஞ்சினேனைப் - கையில் பாசத்தைப் பிடித்து வரும் (/ பாசத்தால் கட்டுகின்ற) எமதூதர்களை அஞ்சிடும் என்னை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பாலியாய், மா-விடம் உண்ட தேவா - காத்தருள்வாயாக, ஆலகாலத்தை உண்ட தேவனே; (பாலித்தல் - காத்தருள்தல்);

வாம் ஆர் ஓதி மடந்தை-பாகா - வாசக்குழல்-மங்கை உமையை ஒரு பாகமாக உடையவனே; (ஓதி - கூந்தல்); (மடந்தை - பெண்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின");

வானனே - சிவலோகனே; ( அப்பர் தேவாரம் - 5.4.2 - "வானனைம் மதி சூடிய மைந்தனை");

வேளை முனிந்த யோகீ - மன்மதனைக் கோபித்து எரித்த யோகியே; (வேள் - காமன்); (முனிதல் - கோபித்தல்);

ஈசனே - இறைவனே;

நீள்மதி கொன்றை சூடீ - பிறையையும் கொன்றைமலரையும் அணிந்தவனே;

டு சேர் ஏடக எம்பிரானே - (புனல்வாதில் சம்பந்தர் வைகையில் இட்ட) தேவார-ஏடு சென்று சேர்ந்த திருவேடகத்தில் உறையும் எம்பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment