Tuesday, May 26, 2026

P.494 - நாரையூர் - சம்புவே தாணுவே

2020-01-01

P.494 - நாரையூர்

-----------------

(அறுசீர் விருத்தம் - தானனா தானனா தானனா தானனா தான தானா - சந்தம்)

(விளம் விளம் விளம் விளம் மா தேமா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;


1)

சம்புவே தாணுவே சங்கரா முக்கணா சாம வேதா

எம்பிரான் என்பவர் தம்வினை தீர்ப்பவன், உம்பர் நாதன்,

வம்புலாம் வார்குழல் மாதொரு கூறமர் மைந்தன் ஊராம்

நம்பியாண் டார்நம்பி போற்றிசெய் தேத்திய நாரை யூரே.


"சம்புவே தாணுவே சங்கரா முக்கணா சாமவேதா எம்பிரான்" என்பவர்-தம் வினை தீர்ப்பவன் - "சம்புவே, தாணுவே, சங்கரனே, சாமவேதனே, எம்பெருமானே" என்றெல்லாம் திருநாமங்களைச் சொல்லி வணங்கும் பக்தர்களது வினைகளைத் தீர்ப்பவன்; (சம்பு - சுகத்தைத் தருபவன்); (தாணு - ஸ்தாணு - நிலைபெற்றவன்); (சங்கரன் - நன்மையைச் செய்பவன்);

உம்பர் நாதன் - தேவர்கள் தலைவன்;

வம்பு உலாம் வார்-குழல் மாது ஒரு கூறு அமர் மைந்தன் ஊர் ஆம் - வாசனை கமழும் நீண்ட கூந்தலையுடைய உமையை ஒரு கூறாக விரும்பிய அழகன் உறையும் தலம் ஆவது; (மைந்தன் - இளைஞன்; வீரன்); (சுந்தரர் தேவாரம் - 7.48.8 - "வம்புலாங் குழலாளைப் பாகம் அமர்ந்து");

நம்பியாண்டார் நம்பி போற்றிசெய்து ஏத்திய நாரையூரே - நம்பியாண்டார் நம்பிகள் வணங்கித் துதித்த திருநாரையூர்; (* நம்பியாண்டார் நம்பி அவதரித்த தலம் திருநாரையூர்);


2)

ஈறிலா ஆதியே என்னையும் ஏன்றுகொள் என்று நாளும்

கூறிடும் அன்பரைக் கோலவான் ஏற்றிடும் கொள்கை அண்ணல்,

ஏறிடும் ஆனையா ஏற்றினைப் பேணிய ஈசன் ஊராம்

நாறிடும் சோலையில் வண்டினம் பாட்டிசை நாரை யூரே.


"ஈறு இலா ஆதியே, என்னையும் ஏன்றுகொள்" என்று நாளும் கூறிடும் அன்பரைக் கோல வான் ஏற்றிடும் கொள்கை அண்ணல் - "அந்தம் இல்லாத ஆதியே! அடியேனையும் தாங்கிக் காத்தருளாய்" என்று தினமும் இறைஞ்சும் பக்தர்களை அழகிய சிவலோகத்திற்கு ஏற்றியருளும் கொள்கையையுடைய பெருமான்; (சம்பந்தர் தேவாரம் - 2.31.1 - "குற்றமில் குணங்களொடு கூடுமடியார்கள் மற்றவரை வானவர்தம் வானுலகம் ஏற்றக் கற்றவன் இருப்பது கருப்பறியலூரே");

ஏறிடும் ஆனையா ஏற்றினைப் பேணிய ஈசன் ஊர் ஆம் - ஊர்தியாக யானைமேல் ஏறாமல் இடபத்தை விரும்பிய ஈசன் உறையும் தலம் ஆவது; (அரசர்கள் யானைமேற் செல்வர். ஆனால் தேவாதிதேவனான சிவபெருமான் இடபத்தையே ஊர்தியாக விரும்பியவன்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.25.1 - "அயிராவணம் ஏறாது ஆனேறு ஏறி அமரர்நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட");

நாறிடும் சோலையில் வண்டினம் பாட்டு இசை நாரையூரே - மணக்கின்ற சோலையில் வண்டுகள் இசை பாடுகின்ற திருநாரையூர்; (நாறுதல் - மணத்தல்);


3)

சொல்லிசை ஆர்தமிழ் கொண்டடி போற்றிசெய் தொண்டர் தங்கள்

அல்லலும் பாவமும் அற்றிட நல்கிடும் அண்டர் அண்டன்

வில்லென மேருவை ஏந்திமுப் புரமெரி வீரன் ஊராம்

நல்லிசை செய்தளி நாடிடும் சோலைசூழ் நாரை யூரே.


சொல் இசை ஆர் தமிழ் கொண்டு அடி போற்றிசெய் தொண்டர்-தங்கள் - சொல்லும் இசையும் பொருந்திய தமிழ்ப்-பாமாலைகளால் திருவடியை வழிபடும் அடியவர்களுடைய;

அல்லலும் பாவமும் அற்றிட நல்கிடும் அண்டர்-அண்டன் - துன்பமும் பாவமும் தீரும்படி அருள்கின்ற தேவதேவன்;

வில் என மேருவை ஏந்தி முப்புரம் எரி வீரன் ஊர் ஆம் - மேருமலையை வில்லாக ஏந்தி முப்புரங்களை எரித்த வீரனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

நல்லிசை செய்து அளி நாடிடும் சோலை சூழ் நாரையூரே - இனிய இசை பாடி வண்டுகள் சேர்கின்ற பொழில் சூழ்ந்த திருநாரையூர்.


4)

ஏலுமா றேத்தினார் இன்புறு மாறருள் ஈயும் எந்தை

நூலுமோர் ஆமையின் ஓடுமார் மார்பினன் நோய்கள் இல்லான்

பாலுகந் தாடினான் பாய்புலித் தோலணி பரமன் ஊராம்

நாலுகைப் பிள்ளையார் நற்றமிழ் காட்டிய நாரை யூரே.


ஏலுமாறு ஏத்தினார் இன்புறுமாறு அருள் ஈயும் எந்தை - தம்மால் இயன்ற அளவில் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் இன்புறும்படி அருள்கின்ற எம் தந்தை; (ஏல்தல் - இயல்தல்);

நூலும் ஓர் ஆமையின் ஓடும் ஆர் மார்பினன் - மார்பில் பூணூலையும் ஆமையோட்டையும் அணிந்தவன்;

நோய்கள் இல்லான் - நிராமயன்; (சம்பந்தர் தேவாரம் - 3.67.6 - "நிராமய பராபர புராதன");

பால் உகந்து ஆடினான் - பாலால் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

பாய்-புலித்தோல் அணி பரமன் ஊர் ஆம் - பாயும் தன்மையையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்த பரமன் உறையும் தலம் ஆவது;

நாலுகைப் பிள்ளையார் நற்றமிழ் காட்டிய நாரையூர் - தொங்குகின்ற துதிக்கையையுடைய விநாயகர் நற்றமிழான தேவார-ஏடுகள் இருக்கும் இடத்தைக் காட்டியருளிய திருநாரையூர். (நால்தல் / நாலுதல் - தொங்குதல்); (கை - துதிக்கை); (* நம்பியாண்டார் நம்பிக்கு விநாயகர் தேவார-ஏடுகள் இருந்த இடத்தை அறிவித்த வரலாற்றைத் திருமுறைகண்ட புராணத்தில் காண்க);


5)

நீற்றினைப் பூசியுள் நெக்கடி போற்றிய நேயர் வாழக்

கூற்றினைச் செற்றவன் கூவிள மாலையன் கொடியின் மேலோர்

ஏற்றினை வைத்தவன் ஏந்திழை பங்கமர் ஈசன் ஊராம்

நாற்றுகள் ஆர்வயல் நாற்புறம் சூழ்தரு நாரை யூரே.


நீற்றினைப் பூசி, உள் நெக்கு, அடி போற்றிய நேயர் வாழக் கூற்றினைச் செற்றவன் - திருநீற்றைப் பூசி, மனம் உருகித், திருவடியை வழிபட்ட அன்பரான மார்க்கண்டேயர் உயிர்வாழும்படி காலனை உதைத்து அழித்தவன்;

கூவிள-மாலையன் - வில்வமாலையை அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);

கொடியின்மேல் ஓர் ஏற்றினை வைத்தவன் - இடபக்கொடியை உடையவன்;

ஏந்திழை பங்கு அமர் ஈசன் ஊர் ஆம் - உமையை ஒரு பங்காக விரும்பிய ஈசன் உறையும் தலம் ஆவது; (ஏந்திழை - பெண்);

நாற்றுகள் ஆர் வயல் நாற்புறம் சூழ்தரு நாரையூரே - நாற்றுகள் நிறைந்த வயல்களால் சூழப்பெற்ற திருநாரையூர்; (தருதல் - ஒரு துணைவினை);


6)

நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நின்றிடு(ம்) நீல கண்டா,

கூற்றுமாய் பாதனே, கோலமார் திங்களைக் குஞ்சி யின்மேல்

ஏற்றினாய், காத்தருள் என்பவர்க் கன்புடை ஈசன் ஊராம்

நாற்றமார் பூமலி சோலையில் வண்டறை நாரை யூரே.


"நேற்றுமாய் இன்றுமாய் நாளையாய் நின்றிடு(ம்) நீலகண்டா - "நேற்றும் இன்றும் நாளையும் ஆகிக் காலத்தைக் கடந்து நிற்கும் நீலகண்டனே;

கூற்று மாய் பாதனே - நமனை உதைத்து அழித்த திருப்பாதத்தை உடையவனே;

கோலம் ஆர் திங்களைக் குஞ்சியின்மேல் ஏற்றினாய் - அழகிய சந்திரனைத் திருமுடியின்மேல் வைத்தவனே; (குஞ்சி - தலை);

காத்து அருள்" என்பவர்க்கு அன்புடை ஈசன் ஊர் ஆம் - காத்து அருள்வாயாக" என்று துதிக்கும் அன்பர்களுக்கு அன்பனான ஈசன் உறையும் தலம் ஆவது;

நாற்றம் ஆர் பூ மலி சோலையில் வண்டு அறை நாரையூரே - மணம் மிக்க பூக்கள் நிறைந்த சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர்;


7)

முந்தியோர் அம்பினால் முப்புரம் சுட்டவன், முக்கண் மூர்த்தி,

கந்தமார் பூவினால் தாளிணை போற்றிசெய் காத லாளர்

சிந்தையே கோயிலாக் கொண்டருள் செய்திடும் தேவன் ஊராம்

நந்தியா வட்டமும் தெங்குமார் சோலைசூழ் நாரை யூரே.


முந்தி ஓர் அம்பினால் முப்புரம் சுட்டவன் - முன்னர் ஒரு கணையால் முப்புரங்களை எரித்தவன்; (முந்தி - முற்காலம்);

முக்கண் மூர்த்தி - முக்கட்பெருமான்;

கந்தம் ஆர் பூவினால் தாளிணை போற்றிசெய் காதலாளர் சிந்தையே கோயிலாக் கொண்டருள் செய்திடும் தேவன் ஊர் ஆம் - வாசனை மிக்க பூக்களால் இரு-திருவடிகளை வழிபடும் அன்பர்களது நெஞ்சமே கோயிலாகக் கொண்டு அருளும் தேவனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

நந்தியாவட்டமும் தெங்கும் ஆர் சோலை சூழ் நாரையூரே - நந்தியாவட்டையும் தென்னைமரங்களும் திகழும் பொழில் சூழ்ந்த திருநாரையூர்; (தெங்கு - தென்னை);


8)

காரியல் மேனியன் கயிலையைப் பேர்த்தவன் கத்து மாறே

ஏரியல் மலைமிசை இறைவிரல் ஊன்றினார் ஏழை பங்கர்,

நீரியல் வேணியர், நெற்றியிற் கண்ணினர் நின்ற ஊராம்

நாரியல் நெஞ்சினர் நாடிவந் தேத்திடும் நாரை யூரே.


கார் இயல் மேனியன் கயிலையைப் பேர்த்தவன் கத்துமாறே - கரிய மேனியை உடையவனும் கயிலைமலையைப் பெயர்த்தவனுமான இராவணன் கத்தும்படி; (கார் - கருமை); (இயல்தல் - பொருந்துதல்; தங்குதல்);

ஏர் இயல் மலைமிசை இறை விரல் ஊன்றினார் - அழகிய மலைமேல் சிறிது திருப்பாதவிரலை ஊன்றியவர்; (ஏர் - அழகு); (இறை - சிறிது);

ஏழை-பங்கர் - உமைபங்கர்; (ஏழை - பெண்);

நீர் இயல் வேணியர் - சடையில் கங்கையை உடையவர்; (வேணி - சடை);

நெற்றியில் கண்ணினர் நின்ற ஊர் ஆம் - நெற்றிக்கண்ணரான சிவபெருமானார் உறையும் தலம் ஆவது; (நிற்றல் - தங்குதல்);

நார் இயல் நெஞ்சினர் நாடிவந்து ஏத்திடும் நாரையூரே - அன்புடைய மனத்தினர் தேடிவந்து விரும்பி வழிபடும் திருநாரையூர்; (நார் - அன்பு); (சம்பந்தர் தேவாரம் - 1.41.11 - "நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்"); (நாடுதல் - விரும்புதல்; தேடுதல்);


9)

ஏடியல் பூமிசை ஏந்தலு(ம்) மாயனும் ஏறி ஆழ்ந்து

நேடிய சோதியான், நீறணி மார்பினன், நிலவு நாகம்

கூடிய சென்னிமேல் கொன்றையும் சூடிய குழகன் ஊராம்

நாடிய வண்டுகள் இன்புறு சோலைசூழ் நாரை யூரே.


ஏடு இயல் பூ மிசை ஏந்தலும் மாயனும் ஏறி ஆழ்ந்து நேடிய சோதியான் - இதழ்கள் மலிந்த தாமரைப்பூவின்மேல் இருக்கும் பிரமனும் திருமாலும் வானில் உயர்ந்தும் நிலத்தை அகழ்ந்தும் தேடிய ஜோதிவடிவினன்; (ஏடு - பூவிதழ்); (ஏந்தல் - பெருமையுடையவன்); (ஆழ்தல் - அகழ்தல்); (நேடுதல் தேடுதல்);

நீறு அணி மார்பினன் - திருநீற்றை மார்பில் பூசியவன்;

நிலவு நாகம் கூடிய சென்னிமேல் கொன்றையும் சூடிய குழகன் ஊர் ஆம் - திங்களும் பாம்பும் பொருந்திய திருமுடிமேல் கொன்றைமலரையும் அணிந்த அழகன் உறையும் தலம் ஆவது; (நிலவு - நிலா - சந்திரன்); (குழகன் - இளைஞன்; அழகன்); (* சௌந்தரேஸ்வரர் - திருநாரையூரில் ஈசன் திருநாமம்);

நாடிய வண்டுகள் இன்புறு சோலை சூழ் நாரையூரே - அடைந்த வண்டுகள் மகிழ்கின்ற சோலை சூழ்ந்த திருநாரையூர்; (நாடுதல் - கிட்டுதல்; அடைதல்);


10)

புன்மொழி பேசிடும் பொய்யர்கள் சொல்நெறிப் போக வேண்டா;

இன்மொழிக் காரிகை பங்கமர் எம்மிறை, என்றும் அன்பர்

தென்மொழி வடமொழி திசைமொழி கொடுதொழு தேவன் ஊராம்

நன்மலர் நாடிய வண்டறை சோலைசூழ் நாரை யூரே.


புன்மொழி பேசிடும் பொய்யர்கள் சொல்நெறிப் போக வேண்டா - இழிந்த சொற்களைப் பேசுகின்ற பொய்யர்கள் சொல்கின்ற மார்க்கங்களில் நீங்கள் செல்லாதீர்கள்; (சொன்னெறி - சொல்+நெறி);

இன்மொழிக் காரிகை பங்கு அமர் எம் இறை - இனிய மொழி பேசும் உமையை ஒரு பங்காக விரும்பிய எங்கள் பெருமான்;

என்றும் அன்பர் தென்மொழி வடமொழி திசைமொழி-கொடு தொழு தேவன் ஊர் ஆம் - எந்நாளும் பக்தர்கள் தமிழ், சம்ஸ்கிருதம், மற்ற மொழிகள் இவற்றால் துதித்து வழிபடும் தேவனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (சம்பந்தர் தேவாரம் - 2.92.7 - "தென்சொல் விஞ்சமர் வடசொல் திசைமொழி எழில்நரம் பெடுத்துத் துஞ்சு நெஞ்சிருள் நீங்கத் தொழுதெழு தொல்புகலூரில்");

நன்மலர் நாடிய வண்டு அறை சோலை சூழ் நாரையூரே - நல்ல பூக்களை நாடிய வண்டுகள் ஒலிக்கின்ற பொழில் சூழ்ந்த திருநாரையூர்;


11)

நச்சரா நாணென ஆர்த்தவன் கானிடை நட்டம் ஆடி

பிச்சையை ஏற்றுழல் பெற்றியன் வெற்றியார் பெற்றம் ஏறி

உச்சியில் கூவிளம் ஒண்பிறை சூடிய ஒருவன் ஊராம்

நச்சிய இன்னறை உண்டளி ஆர்பொழில் நாரை யூரே.


நச்சு-அரா நாண் என ஆர்த்தவன் - விஷப்பாம்பை அரைநாண் என்று கட்டியவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);

கானிடை நட்டம் ஆடி - சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்; (நட்டம் - கூத்து);

பிச்சையை ஏற்று உழல் பெற்றியன் - (கையில் ஒரு மண்டையோட்டை ஏந்திப்) பிச்சைக்குத் திரிகின்ற பெருமையை உடையவன்; (பெற்றி - பெருமை);

வெற்றி ஆர் பெற்றம் ஏறி - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்; (பெற்றம் - எருது);

உச்சியில் கூவிளம் ஒண்-பிறை சூடிய ஒருவன் ஊர் ஆம் - திருமுடிமேல் வில்வத்தையும் ஒளி திகழும் சந்திரனையும் சூடியவனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

நச்சிய இன்-நறை உண்டு அளி ஆர் பொழில் நாரையூரே - விரும்பிய இனிய தேனை உண்டு வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருநாரையூர்; (நச்சுதல் - விரும்புதல்); (நறை - தேன்); (ஆர்த்தல் - ஒலித்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment