Tuesday, May 12, 2026

P.484 - பொது - சித்திரைகள் எத்தனையோ

2019-09-28

P.484 - திங்கள் சூடிய செல்வன் (மாதமாலை)

-----------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(12 பாடல்கள்)

(* சித்திரை முதல் பங்குனி ஈறாக உள்ள 12 மாதங்களின் பெயர்கள் வரும் பாடல்கள்)


முற்குறிப்பு: திங்கள் சூடிய செல்வன் - 1. சந்திரனை அணிந்த திருவாளன்; 2. மாதங்களை (அவற்றின் பெயர்களை உள்ளடக்கிய இந்தப் பாமாலையை) அணிந்த திருவாளன்;


1) -- சித்திரை --

சித்திரைகள் எத்தனையோ சென்றுவிடத் தினந்தோறும்

மைத்திரையில் ஆழ்ந்துமிக வாடிவினை கூடியினி

இத்தரையில் இவ்வுடலம் இராதெனும்நாள் வாராமுன்

அத்திரையார் சடையண்ணல் அடியிணையை அடைநெஞ்சே.


சித்திரைகள் எத்தனையோ சென்றுவிடத் - (இந்த நிலையற்ற வாழ்வில்) பல ஆண்டுகள் கழிந்துபோய்;

தினந்தோறும் மைத்-திரையில் ஆழ்ந்து, மிக வாடி, வினை கூடி - எப்பொழுதும் அறியாமைக்-கடலில் முழ்கி, மிகவும் வருந்தி, தீவினை மிகுந்து; (மை - இருள் - அறியாமை); (திரை - அலை - கடல்);

னி இத்-தரையில் இவ்வுடம் இராது எனும் நாள் வாராமுன் - இனியும் இந்தப் பூமியில் இந்த உடம்பு இராது என்ற நாள் வருவதன் முன்பே (= இறப்பதன் முன்பே); (உடலம் - உடல்; சரீரம்);

அத்-திரை ஆர் சடை அண்ணல் அடியிணையை அடை நெஞ்சே - அந்தக் கங்கையைச் சடையில் உடைய சிவபெருமானது திருவடியிணையைச் சரணடைந்து உய்க நெஞ்சமே. (- பண்டறிசுட்டு); (திரை - அலை - நதி);


2) -- வைகாசி --

இளம்பரவை காசினைநான் எடுத்தளிக்கக் காத்துள்ளாள்

குளந்தனிலே கொடுத்தருளாய் கூத்தவென்ற வன்றொண்டர்

உளங்களிக்கத் தந்தபிரான் உமைபங்கன் அடியிணையை

வளந்திகழும் தமிழ்பாடி வந்திக்க நினைநெஞ்சே.


"இளம்-பரவை காசினை நான் எடுத்து அளிக்கக் காத்து-உள்ளாள் - "நான் பொற்காசுகளை எடுத்துத் தருவேன் என்று இளமையுடைய மனைவி பரவை எதிர்பார்த்துக்கொண்டுள்ளாள்;

குளந்தனிலே கொடுத்தருளாய் கூத்த" என்ற வன்றொண்டர் உளம் களிக்கத் தந்த பிரான் - குளத்தில் அக்காசைத் தந்தருளாய் கூத்தனே" என்று வேண்டிய வன்தொண்டர் (சுந்தரர்) மனமகிழும்படி அவருக்கு அருளிய பெருமான்; (* இறைவன் திருமுதுகுன்றத்தில் கொடுத்த பொற்காசுகளைச் சுந்தரர் அத்தலத்தில் ஆற்றில் இட்டுப் பின்னர்த் திருவாரூரில் கமலாலயக்-குளத்தில் தேடிப் பெற்ற வரலாற்றைச் சுட்டியது); (சுந்தரர் தேவாரம் - 7.25.1 "பொன்செய்த மேனியினீர்" - என்று தொடங்கும் பதிக வரலாற்றைக் காண்க);

உமைபங்கன் அடியிணையை வளம் திகழும் தமிழ் பாடி வந்திக்கக் நினை நெஞ்சே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் திருவடிகளை வளம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபட, நெஞ்சே நீ எண்ணுவாயாக;


3) -- ஆனி --

ஆனிவரும் பெருமையினன் ஆரழல்போல் திகழ்கின்ற

மேனிமிசைப் பூதியினான் வேதமங்கம் ஓதியவன்

கூனிளவெண் திங்களுடன் கோளரவைச் சேர்த்தபிரான்

நானிலம்வான் தொழுதேத்தும் நாதனடி அடைநெஞ்சே.


ஆன் இவரும் பெருமையினன் - இடபவாகனத்தை உடைய பெருமையை உடையவன்; (ஆன் - பசு, இடபம்); (இவர்தல் - ஏறுதல்); (அப்பர் தேவாரம் - 4.57.2 - "ஆனுகந் தேறுவானே");

ஆர் அழல்போல் திகழ்கின்ற மேனிமிசைப் பூதியினான் - செந்தீப் போல் திகழும் திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசியவன்; (பூதி - சாம்பல்);

வேதம் அங்கம் ஓதியவன் - நால்வேதங்களையும் ஆறங்கங்களையும் பாடியருளியவன்;

கூன்-இள-வெண்-திங்களுடன் கோள்-அரவைச் சேர்த்த பிரான் - வளைந்த இள-வெண்-பிறையோடும் கொடிய பாம்பை ஒன்றாக வைத்த தலைவன்; (கூன் - வளைவு); (கோள் - கொடுமை);

நானிலம் வான் தொழுதேத்தும் நாதன் அடி அடை நெஞ்சே - மண்ணும் விண்ணும் வணங்கும் தலைவனான சிவபெருமான் திருவடியை நெஞ்சே நீ எண்ணுவாயாக; (நானிலம் - பூமி);


4) -- ஆடி --

ஆடியபூங் கழல்போற்றும் அமரரெலாம் அமுதுண்ணக்

கேடியலும் கடல்நஞ்சைக் கேழில்லா மணிசெய்தான்

பாடியவர் இருவர்க்குப் படிக்காசு தந்தபரன்

நாடியவர் வினைதீர்க்கும் நம்பனடி அடைநெஞ்சே.


ஆடிய பூங்கழல் போற்றும் அமரர் எலாம் அமுது உண்ணக் - கூத்தாடும் அழகிய திருவடியைப் போற்றிய தேவர்களெல்லாம் அமுதம் உண்ணும்படி;

கேடு இயலும் கடல் நஞ்சைக் கேழ் இல்லா மணி செய்தான் - கொடிய ஆலகாலத்தை உண்டு ஒப்பற்ற நீலமணி ஆக்கியவன்; (கேழ் - ஒப்பு); (திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.8 - "கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை");

பாடியவர் இருவர்க்குப் படிக்காசு தந்த பரன் - திருஞான சம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு கொடுத்து அருளிய பரமன்; (* திருவீழிமிழலையில் பஞ்சகாலத்தில் படிக்காசு அருளிய வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க). (சம்பந்தர் தேவாரம் - 1.92.1 - "வாசி தீரவே காசு நல்குவீர்");

நாடியவர் வினை தீர்க்கும் நம்பன் அடி அடை நெஞ்சே - விரும்பி வழிபட்டவர்களது வினையைத் தீர்க்கும் சிவபெருமானது திருவடியை நெஞ்சே நீ எண்ணுவாயாக;


5) -- ஆவணி --

ஆவணிவெல் கொடியுடையான் அடிபரவு காழியர்கோன்

பாவணியும் ஏடெரியிற் பாறாமை நல்கியவன்

பூவணியும் உமைகூறன் பொற்சடையிற் கங்கையினன்

தூவணிபூக் கொண்டவன்தாள் தொழுதுய்ய நினைநெஞ்சே.


ணி வெல்- கொடிடையான் - இடபச்சின்னம் திகழும் வெற்றிக்கொடி உடையவன்; (- இங்கே, இடபம்); (பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற்புராணம் - 59. நரிபரியாக்கிய படலம் - 19 - "ஆவார் கொடியாய் அடியேற்கு இரங்காயோ"); (அப்பர் தேவாரம் - 4.57.2 - "ஆனுகந் தேறு வானே");

அடி பரவு காழியர்கோன் பாணியும் ஏடு எரியில் பாறாமை நல்கியவன் - திருவடியைப் போற்றிப் பாடிய திருஞான சம்பந்தரது பாடலைத் தாங்கிய ஏடு தீயில் சாம்பலாகி அழியாமல் இருக்க அருளியவன்; (* மதுரையில் நிகழ்ந்த அனல்வாதத்தில் சம்பந்தர் இட்ட ஏடு பசுமையாக இருந்ததைப் பெரியபுராணத்தில் காண்க); (பாறாமை - அழியாமை; பாறுதல் - அழிதல்); (மாறுதல் - மாறாமை, ஆறுதல் - ஆறாமை, இவை போலப், பாறுதல் - பாறாமை);

பூ அணியும் உமை கூறன் - பூக்களை அணிந்த உமையை ஒரு கூறாக உடையவன்;

பொற்சடையில் கங்கையினன் - பொன் போன்ற சடையில் கங்கையை உடையவன்;

தூ-அணி-பூக்கொண்டு அவன் தாள் தொழுது உய்ய நினை நெஞ்சே - தூய அழகிய பூக்களால் அவன் திருவடியைத் தொழுது உய்ய நெஞ்சே நீ எண்ணுவாயாக; (அணி - அழகு); (சம்பந்தர் தேவாரம் - 2.69.2 - "தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழுவாரவர் தங்கள் வினைப்பகை யாயின தீர்க்கும்");


6) -- புரட்டாசி --

புரட்டாசி லாமாணி பொன்றுதினம் என்றவரை

வெருட்டாவந் தடைகூற்றை வெகுண்டன்பர் உயிர்காக்கும்

பொருட்டோர்பூங் கழல்வீசு பொற்புடையான் பொற்சடையான்

அருட்டாளில் அனுதினமும் அலர்தூவ நினைநெஞ்சே.


புரட்டு ஆசு இலா மாணி பொன்று தினம் என்று அவரை வெருட்டா வந்து அடை கூற்றை வெகுண்டு - வஞ்சகம் முதலிய குற்றங்கள் இல்லாத மார்க்கண்டேயர் இறக்கும் நாள் என்று அவரை அச்சுறுத்தி நெருங்கிவந்த காலனைச் சினந்து; (புரட்டு - வஞ்சகம்); (ஆசு - குற்றம்); (மாணி - மறைச்சிறுவன் - மார்க்கண்டேயர்); (பொன்றுதல் - சாதல்); (வெருட்டா - வெருட்டி - அச்சுறுத்தி; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம் செய்து என்று பொருள்படும்);

அன்பர்-உயிர் காக்கும் பொருட்டு ஓர் பூங்கழல் வீசு பொற்பு உடையான் - பக்தரது உயிரைக் காப்பதற்காக ஓர் அழகிய மென்மையான திருவடியைக் காலன்மேல் வீசிய குணமுடையவன்; (பொருட்டு - நிமித்தமாக);

பொற்சடையான் - பொன் போன்ற செஞ்சடையை உடையவன்;

அருள்தாளில் அனுதினமும் அலர் தூவ நினை நெஞ்சே - அருளுடைய திருவடியில் தினந்தோறும் மலர் தூவி வழிபட நெஞ்சே நீ எண்ணுவாயாக; (அருட்டாள் - அருள் + தாள்); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.1 - "ஆரா அமுதின் அருட்டா ளிணைபாடி");


7) -- ஐப்பசி --

ஐப்பசிக்கோர் ஓடேந்தி அட்டுமினென் றுழல்வள்ளல்

மெய்ப்பசியோ வெண்திரையார் வேலைதனில் அன்றெழுந்த

கைப்புடைய நஞ்சுதனைக் கருதியுண்டான் அடியார்க்கு

வைப்புநிதி அன்னவன்தாள் மறவாது நினைநெஞ்சே.


ப், பசிக்கு ஓர் ஓடு ஏந்தி, "அட்டுமின்" என்று உழல் வள்ளல் - தலைவன், தன் பசிக்கு ஒரு மண்டையோட்டை ஏந்திவந்து, "இடுங்கள்" என்று யாசித்து உழலும் வள்ளல்; (- தலைவன்); ("ஐப்பசிக்கு" - "ஐ பசிக்கு" என்பது எதுகைநோக்கிப் பகர-ஒற்று விரித்தல்-விகாரம் பெற்றது); (அட்டுதல் - இடுதல்);

மெய்ப்பசியோ - உண்மையான பசிதானோ?

வெண்திரை ஆர் வேலைதனில் அன்று எழுந்த கைப்பு உடைய நஞ்சுதனைக் கருதி உண்டான் - வெண்ணிற அலைகள் உடைய கடலில் (பாற்கடலில்) முன்பு தோன்றிய கசப்புடைய விடத்தை விரும்பி உண்டவன்;

அடியார்க்கு வைப்புநிதி அன்னவன் தாள் மறவாது நினை நெஞ்சே - அடியவர்களுக்குச் சேமித்துவைத்த பெருஞ்செல்வம் போன்ற அப்பெருமானது திருவடியை மறத்தல் இன்றித் தினமும் நெஞ்சே நீ எண்ணுவாயாக; (வைப்புநிதி - சேமித்துவைத்த செல்வம்); (அப்பர் தேவாரம் - 5.60.2 - "வைச்ச மாநிதி ஆவர் மாற்பேறரே");


8) -- கார்த்திகை --

கார்த்திகைத்தே வியர்வளர்த்த கந்தனத்தன் மன்மதனைப்

பார்த்தெரித்த கண்ணுதலான் பத்துமணி முடியுடைய

தூர்த்தனைத்தாள் விரலூன்றித் தோள்களெலாம் நசுக்கிமிக

ஆர்த்தரற்ற வைத்தபிரான் அடியிணையை அடைநெஞ்சே.


கார்த்திகைத்தேவியர் வளர்த்த கந்தன் அத்தன் - கார்த்திகைப்பெண்கள் வளர்த்த முருகனுக்குத் தந்தை; (அத்தன் - தந்தை);

மன்மதனைப் பார்த்து எரித்த கண்ணுதலான் - மன்மதனை நோக்கி எரித்த நெற்றிக்கண்ணன்;

பத்து மணிமுடி உடைய தூர்த்தனைத் தாள்விரல் ஊன்றித் தோள்களெலாம் நசுக்கி - கிரீடம் அணிந்த பத்துத்தலைகளை உடைய கொடிய இராவணனைத் திருப்பாத-விரலை ஊன்றி அவனது இருபது புஜங்களையும் (அவன் தூக்கிய கயிலைமலைக்கீழ்) நசுக்கி;

மிக ஆர்த்து அரற்ற வைத்த பிரான் அடியிணையை அடை நெஞ்சே - (அவனைப்) பெரிதும் ஒலித்து அழச்செய்த பெருமான் திருவடியை நெஞ்சே நீ எண்ணுவாயாக;


9) -- மார்கழி --

மார்கழியில் மாநிலத்து மக்களெலாம் வந்தித்துச்

சீர்பரவும் ஆதிரையான் திருமால்நான் முகனறியா

ஓர்தழலாய் ஓங்கியவன் உழுவையதள் ஆடையினான்

வார்கழலை நாள்தோறும் மறவாது நினைநெஞ்சே.


மார்கழியில் மாநிலத்து மக்களெலாம் வந்தித்துச் சீர் பரவும் ஆதிரையான் - மார்கழியில் உலகமக்களெல்லாம் வணங்கிப் புகழ் பாடும் திருவாதிரையான்;

திருமால் நான்முகன் அறியா ஓர் தழலாய் ஓங்கியவன் - திருமால் பிரமன் இவர்களால் அடிமுடி காண ஒண்ணாத ஒப்பற்ற ஜோதியாகி உயர்ந்தவன்;

உழுவை-அதள் ஆடையினான் - புலித்தோலை அடையாக அணிந்தவன்; (உழுவை - புலி); (அதள் - தோல்); (சம்பந்தர் தேவாரம் - 3.70.1 - "கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர்");

வார்-கழலை நாள்தோறும் மறவாது நினை நெஞ்சே - அப்பெருமானது நீள்கழலை மறத்தல் இன்றித் தினந்தோறும் நெஞ்சே நீ எண்ணுவாயாக;


10) -- தை --

தையலொரு பங்கமரும் தன்மையினான் கூவிளமும்

பையரவும் பால்மதியும் படர்சடைமேல் சூடியவன்

பொய்பலசொல் கையர்வினை போக்காதான் கண்டத்தில்

மைபரவும் பெருமான்தாள் மறவாது நினைநெஞ்சே.


தையல் ஒரு பங்கு அமரும் தன்மையினான் - உமையை ஒரு பங்காக விரும்பும் குணம் உடையவன்; (தையல் - பெண்); (அமர்தல் - விரும்புதல்);

கூவிளமும் பை-அரவும் பால்-மதியும் படர்-சடைமேல் சூடியவன் - வில்வத்தையும் படம் திகழும் பாம்பையும் பால் போன்ற திங்களையும் படரும் சடையின்மேல் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்); (பை - பாம்பின் படம்);

பொய் பல சொல் கையர்-வினை போக்காதான் - பல பொய்களைச் சொல்லும் கீழோர்களது வினையைப் போக்காதவன்; (கையர் - கீழோர்); (கையர்வினை - ர் ஒற்றுநீக்கி அலகிடுக); (போக்குதல் - அழித்தல்; நீக்குதல்);

கண்டத்தில் மை பரவும் பெருமான் தாள் மறவாது நினை நெஞ்சே - நீலகண்டத்தை உடைய பெருமானது திருவடியை மறத்தல் இன்றித் தினந்தோறும் நெஞ்சே நீ எண்ணுவாயாக;


11) -- மாசி --

மாசில்லாப் புகழ்த்துணைக்கு வற்கடத்தில் பசிதீரக்

காசில்லா நிலைநீக்கக் கனிந்துபடி ஈந்தபிரான்

தேசெல்லாம் குன்றியழி திங்களைச்செஞ் சடைவைத்தான்

ஆசில்லாத் தமிழ்பாடி அடியிணையை அடைநெஞ்சே.


மாசு இல்லாப் புகழ்த்துணைக்கு வற்கடத்தில் பசி தீரக் - (தாம் உணவின்றி வாடியபொழுதும் பெரும்பக்தியோடு வழிபாடு செய்த) குற்றமற்ற புகழ்த்துணை-நாயனாருக்குப் பஞ்சம் நிலவிய காலத்தில் பசி தீரும் பொருட்டு; (வற்கடம் - பஞ்சம்);

காசு இல்லா நிலை நீக்கக் கனிந்து படி ஈந்த பிரான் - அவரது வறுமை தீருமாறு இரங்கி அவருக்குப் படிக்காசு வழங்கிய பெருமான்; (சுந்தரர் தேவாரம் - 7.9.6 - "நித்தற் படியும் வரும் என்றொரு காசினை நின்றநன்றிப் புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்");

தேசு எல்லாம் குன்றி அழி திங்களைச் செஞ்சடை வைத்தான் - ஒளி குன்றி அழிந்துவந்த சந்திரனைக் காத்துச் செஞ்சடைமேல் வாழவைத்தவன்;

ஆசு இல்லாத் தமிழ் பாடி அடியிணையை அடை நெஞ்சே - குற்றமற்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடி அப்பெருமானது திருவடிகளை நெஞ்சே நீ அடைவாயாக (எண்ணுவாயாக);


12) -- பங்குனி --

பங்குனிமுன் தவஞ்செய்த பார்த்தனுக்குப் படையீந்தான்

பொங்கரவம் ஊர்சடைமேல் பொலிதிங்கட் கண்ணியினான்

கங்குலினிற் கணஞ்சூழக் கரிகானில் ஆடுமரன்

எங்குமுள எம்பெருமான் இணையடியை நினைநெஞ்சே.


பங்கு உனி முன் தவம் செய்த பார்த்தனுக்குப் படை ஈந்தான் - ராஜ்யத்தில் தங்கள் பங்கையும், அதன் பொருட்டுச் செய்யவிருந்த போரில் தன் பங்கையும், எண்ணித் தவம் செய்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அருளியவன்; (உனி - உன்னி; இடைக்குறை விகாரம்; உன்னுதல் - எண்ணுதல்);

பொங்கு-அரவம் ஊர்-சடைமேல் பொலி திங்கட்-கண்ணியினான் - சீறும் பாம்பு ஊர்கின்ற சடையின்மீது பொலிகின்ற பிறையைக் கண்ணிமாலை போல அணிந்தவன்; (கண்ணி - தலையில் அணியும் பூமாலை); (அப்பர் தேவாரம் - 4.3.6 - "தண்மதிக்-கண்ணியினானைத்");

கங்குலினில் கணம் சூழக் கரிகானில் ஆடும் அரன் - இருளில் பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்து ஆடும் ஹரன்; (கங்குல் - இரவு); (கரிகான் - கரிகாடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.7.2 - "கரிகானிடை மாநடம் ஆடுவர்");

எங்கும் உள எம்பெருமான் இணையடியை நினை நெஞ்சே - எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமானது திருவடிகளை நெஞ்சே நீ எண்ணுவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment