Tuesday, May 26, 2026

P.491 - கடவூர் - படரும் சடைமேல் பிறை

2019-11-09

P.491 - கடவூர்

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தனனா தனனா தனனா தனதானா)

(தனதானன தானன தானன தானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.32.1 - "ஓடேகல னுண்பது மூரிடு பிச்சை")

(சம்பந்தர் தேவாரம் - 2.37.1 - "சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்")


1)

படருஞ்சடை மேற்பிறை பாம்பணி அத்தன்

இடவெண்டலை ஒன்றினை ஏந்திய பித்தன்

விடையொன்றினை ஊர்திந யந்தவன் ஊராம்

கடனின்றெழு காரடை யும்கட வூரே.


படரும் சடைமேல் பிறை பாம்பு அணி அத்தன் - படர்ந்த சடையின்மேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்த தந்தை; (அத்தன் - தந்தை);

இட வெண்தலை ஒன்றினை ஏந்திய பித்தன் - மகளிர் பிச்சை இடுவதற்காக மண்டையோட்டினை ஏந்திய பேரருளாளன்;

விடை ஒன்றினை ஊர்தி நயந்தவன் ஊர் ஆம் - இடபவாகனத்தை விரும்பியவன் உறையும் தலம் ஆவது;

கடல்நின்று எழு கார் அடையும் கடவூரே - கடலிலிருந்து எழுந்த மேகம் வந்தடையும் திருக்கடவூர்; (நின்று - ஐந்தாம் வேற்றுமை உருபு); (கார் - மேகம்; மழை);


2)

இலைமாமலர் இட்டவர் இன்னலை நீக்கி

நிலையாகிய வாழ்வருள் நீள்சடை அண்ணல்

தலைமேற்பிறை தாங்கிய தத்துவன் ஊராம்

அலைபோலடி யாரடை யும்கட வூரே.


இலை மாமலர் இட்டவர் இன்னலை நீக்கி - இலைகளையோ அழகிய மலர்களையோ இட்டு வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்த்து;

நிலை ஆகிய வாழ்வு அருள் நீள்சடை அண்ணல் - அவர்களுக்கு நிலையான வீட்டின்பத்தை அருளும், நீண்ட சடையுடைய தலைவன்;

தலைமேல் பிறை தாங்கிய தத்துவன் ஊர் ஆம் - சந்திரனைச் சூடிய மெய்ப்பொருளான பெருமான் உறையும் தலம் ஆவது;

அலைபோல் அடியார் அடையும் கடவூரே - கடல்போல அடியவர்கள் திரண்டு அடைகின்ற திருக்கடவூர்;


3)

மழையார்மிட றேத்திய மாணியை மாய்க்க

அழலார்விழி யோடடை கூற்றைய ழித்தான்

சுழலார்நதி தூமதி சூடிதன் ஊராம்

கழல்வாழ்த்திடு நேயர்கள் சேர்கட வூரே.


மழை ர் மிடறு ஏத்திய மாணியை மாய்க்க அழல் ஆர் விழியோடு அடை கூற்றை ழித்தான் - மேகம் போன்ற நீலகண்டத்தைத் துதித்த மார்க்கண்டேயரைக் கொல்லத் தீக் கக்கும் கண்களோடு நெருங்கிய காலனை உதைத்து அழித்தவன்; (மழை - மேகம்); (ஆர்தல் - ஒத்தல்; பொருந்துதல்);

சுல் ஆர் நதி தூ-மதி சூடிதன் ஊர் ஆம் - சுழல்கள் நிறைந்த கங்கையையும் வெண்திங்களையும் சூடியவன் உறையும் தலம் ஆவது; (சூடி - சூடியவன்);

கழல் வாழ்த்திடு நேயர்கள் சேர் கடவூரே - திருவடியை வாழ்த்தும் அன்பர்கள் திரள்கின்ற திருக்கடவூர்;


4)

கூரார்மழு மான்மறி ஏந்திய கோமான்

ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல்

நீரார்சடை நின்மலன் நின்றருள் ஊராம்

காரார்தரு கோபுர மார்கட வூரே.


கூர் ஆர் மழு மான்மறி ஏந்திய கோமான் - கூரிய மழுவையும் மான்கன்றையும் ஏந்திய அரசன்;

ஈராறுகை மைந்தனை நல்கிய ஏந்தல் - பன்னிருகை முருகனைத் தந்த பெருமையுடையவன்;

நீர் ஆர் சடை நின்மலன் நின்று அருள் ஊர் ஆம் - கங்கையைச் சடையில் உடைய தூயன் நீங்காமல் உறைகின்ற தலம் ஆவது;

கார் ஆர்தரு கோபுரம் ஆர் கடவூரே - மேகம் பொருந்துகின்ற கோபுரம் பொருந்திய திருக்கடவூர்; (ஆர்தல் - பொருந்துதல்); (தருதல் - ஒரு துணைவினை);


5)

மானார்கரன் வாளர வார்மணி மார்பன்

வானார்பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான்

ஊனார்தலை யிற்பலி ஏற்பவன் ஊராம்

கானார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


மான் ஆர் கரன் - கையில் மானை ஏந்தியவன்;

வாளரவு ஆர் மணி-மார்பன் - கொடிய பாம்பைப் பவளம் போன்ற அழகிய மார்பில் அணிந்தவன்; (வாள் - கொடிய); (ஆர்தல் - அணிதல்; பொருந்துதல்); (மணி - பவளம்; அழகு);

வான் ஆர் பிறை வாழ்ந்திட வார்சடை வைத்தான் - அழகிய பிறை வாழும்படி நீண்ட சடையில் அதனை வைத்தவன்; (வான் - ஆகாயம்; அழகு);

ஊன் ஆர் தலையில் பலி ஏற்பவன் ஊர் ஆம் - மாமிசம் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் பெருமான் உறையும் தலம் ஆவது;

கான் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்; (கான் - வாசனை);


6)

அவியாவொரு சோதியன் அங்கணன் அன்பால்

புவியோர்மலர் கொண்டடி போற்றிட என்றும்

தவியாநிலை தந்தருள் சங்கரன் ஊராம்

கவினார்பொழில் சூழ்நல மார்கட வூரே;


அவியா ஒரு சோதியன் - என்றும் அழியாத ஒப்பற்ற ஜோதிவடிவினன்;

அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்;

அன்பால் புவியோர் மலர் கொண்டு அடிபோற்றிட என்றும் தவியா நிலை தந்தருள் சங்கரன் ஊர் ஆம் - அன்போடு நிலவுலகத்தினர் பூவால் திருவடியை வழிபட, அவர்களுக்கு எந்நாளும் துன்பமற்ற நிலையைத் தந்து காக்கின்ற சங்கரன் உறையும் தலம் ஆவது;

கவின் ஆர் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - அழகிய சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;


7)

கல்லாலதன் நீழலு கந்தக ருத்தன்

பல்லார்தலை யிற்பலி ஏற்றவன் வெற்பு

வில்லால்மதில் வெந்தற எய்தவன் ஊராம்

கல்லார்மதில் சூழணி யார்கட வூரே.


கல்லால்-அதன் நீழல் உகந்த கருத்தன் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் கர்த்தன்; (கருத்தன் - கர்த்தா - கடவுள்); (சம்பந்தர் தேவாரம் - 1.134.1 - "கருத்தன் கடவுள் கனலேந்தியாடும் நிருத்தன்")

பல் ஆர் தலையில் பலி ஏற்றவன் - பற்கள் பொருந்திய மண்டையோட்டில் பிச்சையை ஏற்பவன்; (அப்பர் தேவாரம் - 6.47.9 - "பல்லார்ந்த வெண்டலை கையில் ஏந்தி");

வெற்பு-வில்லால் மதில் வெந்து அற எய்தவன் ஊர் ஆம் - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களும் வெந்து அழியும்படி ஒரு கணையை எய்த பெருமான் உறையும் தலம் ஆவது;

கல் ஆர் மதில் சூழ் அணி ஆர் கடவூரே - கருங்கல்லால் ஆன மதிலால் சூழப்பெற்ற திருக்கடவூர்; (சம்பந்தர் தேவாரம் - 1.31.1 - "கல்லார் மதிற்காழியுள் ஞான சம்பந்தன்");


8)

செருவொன்றில னாய்மலை பேர்த்தசெ ருக்கன்

வெருவும்படி ஓர்விர லால்நெரி செய்தான்

பொருவெங்கரி ஈருரி போர்த்தவன் ஊராம்

கருவண்டிசை ஆர்பொழில் சூழ்கட வூரே.


செரு ன்று இலனாய் மலை பேர்த்த செருக்கன் வெருவும்படி ஓர் விரலால் நெரி செய்தான் - எதிர்த்துப் போர்செய்வார் எவரும் இல்லாதவனாகிக், கயிலைமலையைப் பெயர்த்த கர்வம் மிகுந்த இராவணன் அஞ்சும்படி அவனை ஒரு விரலை ஊன்றி நசுக்கியவன்; (செரு - போர்); (ஒன்று - ஒன்றும்; உம் தொக்கது); (செருக்கு - கர்வம்; அகந்தை); (வெருவுதல் - அஞ்சுதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.118.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

பொரு-வெங்கரி ஈர்உரி போர்த்தவன் ஊர் ஆம் - போர்செய்த கொடிய யானையின் உரித்த ஈரத்தோலைப் போர்த்த பெருமான் உறையும் தலம் ஆவது; (பொருதல் - போர்செய்தல்);

கருவண்டு இசை ஆர் பொழில் சூழ் கடவூரே - கரிய வண்டுகள் இசை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


9)

நெடியானயன் நேடிவ ணங்கிட நின்றான்

கொடிபோலுமை கூறும கிழ்ந்திடு கூத்தன்

பொடிபூசிய புண்ணியன் மேவிய ஊராம்

கடியார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


நெடியான் அயன் நேடி வணங்கிட நின்றான் - திருமாலும் பிரமனும் தேடிக் காணாமல் வணங்குமாறு எல்லையற்ற ஜோதியாகி நின்றவன்; (நேடுதல் - தேடுதல்);

கொடிபோல் உமை கூறு மகிழ்ந்திடு கூத்தன் - பூங்கொடி போன்ற உமையை ஒரு பாகமாக விரும்பிய கூத்தன்;

பொடி பூசிய புண்ணியன் மேவிய ஊர் ஆம் - திருநீற்றைப் பூசிய புண்ணியமூர்த்தியான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

கடி ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


10)

நள்ளாதவர் நாளு(ம்) நவிற்றுரை நஞ்சே

உள்ளோடிய தென்றுணர் வீருமை பங்கன்

வெள்ளேறமர் முக்கணன் மேவிய ஊராம்

கள்ளார்மலர் ஆர்பொழில் சூழ்கட வூரே.


நள்ளாதவர் நாளு(ம்) நவிற்று உரை நஞ்சே உள் ஓடியது என்று உணர்வீர் - அன்பு இல்லாதவர்கள் எந்நாளும் ஓயாமல் பேசும் பேச்செல்லாம் உள்ளே விஷத்தை உடையது என்று உணருங்கள்; (நவிற்றுதல் - சொல்லுதல்); (ஓடுதல் - பொருந்துதல்); (உணர்வீர் - உணருங்கள் என்ற பொருளில்);

உமைபங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

வெள்-ஏறு அமர் முக்கணன் மேவிய ஊர் ஆம் - வெள்ளை இடபத்தை வாகனமாக விரும்பிய நெற்றிக்கண்ணன் உறையும் தலம் ஆவது;

கள் ஆர் மலர் ஆர் பொழில் சூழ் கடவூரே - தேன் நிறைந்த மலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கடவூர்;


11)

தமிழின்தொடை பாடிடு வார்வினை தன்னில்

அமிழுந்துயர் தீர்ப்பவன் அன்றலை ஆழி

உமிழ்நஞ்சினை உண்டருள் உத்தமன் ஊராம்

கமழும்பொழில் சூழ்நல மார்கட வூரே;


தமிழ் இன்-தொடை பாடிடுவார் வினைதன்னில் அமிழும் துயர் தீர்ப்பவன் - தமிழில் இனிய பாமாலைகளைப் பாடும் பக்தர்கள் வினைக்கடலில் ஆழ்ந்து துன்பப்படாதவாறு அவர்களைக் காத்து அருள்பவன்;

அன்று அலைஆழி உமிழ் நஞ்சினை உண்டு அருள் உத்தமன் ஊர் ஆம் - முன்பு அலைகடலில் எழுந்த விஷத்தை உண்டு அருளிய உத்தமனான சிவபெருமான் உறையும் தலம் ஆவது;

கமழும் பொழில் சூழ் நலம் ஆர் கடவூரே - மணம் கமழும் சோலை சூழ்ந்த நன்மை மிக்க திருக்கடவூர்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment