Tuesday, May 12, 2026

P.483 - சிராப்பள்ளி - சேவலார் வெல்கொடி

2019-09-13

P.483 - சிராப்பள்ளி (திருச்சிராப்பள்ளி)

-----------------

(சந்தக் கலிவிருத்தம் - தானனா தானனா தானனா தானனா)

(சம்பந்தர் தேவாரம் - 3.36.1 - "சந்தமார் அகிலொடு")

(சுந்தரர் தேவாரம் - 7.37.2 - "பறக்குமெங் கிள்ளைகாள்")


1)

சேவலார் வெல்கொடிச் சேந்தனைப் பெற்றவன்

தூவலார் முடிமிசைத் தூயவெண் திங்களான்

காவலார் முப்புரம் காய்கணை தொட்டருள்

தேவனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


சேவல் ஆர் வெல்கொடிச் சேந்தனைப் பெற்றவன் - வெற்றியுடைய சேவற்கொடியை உடைய முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்);

தூவல் ஆர் முடிமிசைத் தூய வெண்-திங்களான் - கொக்கின் இறகு அணிந்த திருமுடிமேல் தூய வெண்பிறையைச் சூடியவன்; (தூவல் - இறகு); (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவாய குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

காவல் ஆர் முப்புரம் காய்-கணை தொட்டருள் தேவன் ஊர் - காவல் மிக்க முப்புரங்களை எரித்த கணையை ஏவிய தேவனான சிவபெருமான் உறையும் தலம்;

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்; (சேண் - ஆகாயம்); (தென் - அழகிய); (அப்பர் தேவாரம் - 6.22.7 - "தென்சிராப்பள்ளிச் சிவலோகனை");


2)

கொல்லையே றேறினான் கூர்மழுப் படையினான்

வில்லினால் முப்புரம் வேவுமா றெய்தவன்

வல்லவா றேத்தினால் வல்வினை மாய்த்தருள்

செல்வனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


கொல்லை-ஏறு ஏறினான் - இடபவாகனன்;

கூர்-மழுப் படையினான் - கூர்மையான மழுவாயுதத்தை ஏந்தியவன்;

வில்லினால் முப்புரம் வேவுமாறு எய்தவன் - மேருவில்லால் முப்புரங்களை எய்து எரித்தவன்;

வல்லவாறு ஏத்தினால் வல்வினை மாய்த்தருள் செல்வன் ஊர் - தன்னை இயன்றபடி போற்றியவர்களது வல்வினைகளை அழித்தருளும் செல்வனான சிவபெருமான் உறையும் தலம்;

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


3)

பொய்யிலா மெய்யனே போர்விடைப் பாகனே

ஐயனே அன்பருக் கன்பனே என்றலர்

கையினால் இட்டுளம் கசிபவர்க் கருளிடும்

செய்யனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


பொய் இலா மெய்யனே - மெய்ப்பொருளே;

போர்விடைப் பாகனே - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவனே;

ஐயனே - தலைவனே;

அன்பருக்கு அன்பனே என்று - அன்பர்களுக்கு அன்பு உடையவனே என்றெல்லாம் துதித்து;

அலர் கையினால் இட்டு உளம் கசிபவர்க்கு அருளிடும் செய்யன் ஊர் - கைகளால் பூக்களைத் தூவி உள்ளம் உருகும் அடியவர்களுக்கு அருள்புரியும் செம்மேனிச் சிவபெருமான் உறையும் தலம்; (செய்யன் - செம்மேனியன்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


4)

நீரணி சடையனே நெய்யணி சூலனே

காரணி கண்டனே கருதிட ஆயிரம்

பேரனே பிஞ்ஞகா என்னுமா றெண்ணிலாச்

சீரனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


நீர் அணி சடையனே - சடையில் கங்கையை அணிந்தவனே;

நெய் அணி சூலனே - நெய் தடவப் பெற்ற சூலத்தை ஏந்தியவனே; (நெய் - எண்ணெய், நெய் முதலியன) (ஆயுதங்கள் துருப்பிடியாமல் இருக்க எண்ணெய் தடவிவைப்பது மரபு);

கார் அணி கண்டனே - நீலகண்டனே; (கார் - கருமை);

கருதிட ஆயிரம் பேரனே - தியானிக்க ஆயிரம் திருநாமங்களை உடையவனே;

பிஞ்ஞகா என்னுமாறு எண் இலாச் சீரன் ஊர் - தலைக்கோலம் உடையவனே என்றெல்லாம் போற்றும்படி அளவற்ற பெருமையை உடைய சிவபெருமான் உறையும் தலம்; (பிஞ்ஞகன் - தலைக்கோலம் உடையவன்); (எண் - அளவு; எல்லை);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


5)

கோலமார் போதுநீர் கொண்டடி போற்றிய

பாலனார் உயிர்கொலப் பாசம்வீ சத்தொடர்

காலனார் மார்பினிற் கழலடி யாலுதை

சீலனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


கோலம் ஆர் போது நீர் கொண்டு அடி போற்றிய - அழகிய பூக்களாலும் நீராலும் திருவடியைப் பூசித்த; (போது - பூ; போது நீர் - பூவும் புனலும்; உம்மைத்தொகை);

பாலனார் உயிர்-கொலப் பாசம் வீசத் தொடர் - சிறுவரான மார்க்கண்டேயரது உயிரைக் கொல்லப் பாசம் வீசத் தொடர்ந்து வந்து அவரை நெருங்கிய; (அப்பர் தேவாரம் - 4.107.6 - "சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்த காலனைக் காய்ந்த பிரான்");

காலனார் மார்பினில் கழலடியால் உதை சீலன் ஊர் - கூற்றுவனது மார்பில் கழல் அணிந்த திருவடியால் உதைத்தருளிய சிவபெருமான் உறையும் தலம்;

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


6)

வாசமார் தமிழினால் வாழ்த்தினார் வல்வினை

நாசமாக் கும்பரன் நேசமார் நின்றவூர்ப்

பூசலார் நெஞ்சமே கோயிலாப் புக்கருள்

தேசனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


வாசம் ஆர் தமிழினால் வாழ்த்தினார் வல்வினை நாசம் ஆக்கும் பரன் - மணம் மிகுந்த தமிழ்ப்பாமாலைகளால் வாழ்த்தும் பக்தர்களது வலிய வினையை அழிக்கும் பரமன்;

நேசம் ஆர் நின்றவூர்ப் பூசலார் நெஞ்சமே கோயிலாப் புக்கருள் தேசன் ஊர் - திருநின்றவூரில் வாழ்ந்த அன்பு மிகுந்த பூசலார்-நாயனாரின் நெஞ்சமே தன் கோயிலாகப் புகுந்து அருளிய ஒளிவடிவினனான சிவபெருமான் உறையும் தலம்; (பூசலார்-நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க); (தேசன் - ஒளிவடிவினன்; தேசு - தேஜஸ்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


7)

ஆயனார் வேய்ங்குழல் அஞ்செழுத் தூதிய

நாயனார்க் கின்னருள் நல்கினான் மன்மதன்

காய(ம்)நீ றாகிடக் கண்டருள் கண்ணினில்

தீயனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


ஆயனார் வேய்ங்குழல் அஞ்செழுத்து ஊதிய நாயனார்க்கு இன்னருள் நல்கினான் - பசு மேய்க்கும் ஆயர் (இடையர்) குலத்தில் வந்த ஆனாய-நாயனார் புல்லாங்குழலில் திருவைந்தெழுத்தை வாசிக்க அது கேட்டு மகிழ்ந்து அவருக்கு இனிய அருள்புரிந்தவன்; (வேய் - மூங்கில்); (ஊதுதல் - குழல் முதலிய வாத்தியக்கருவிகளை ஊதி வாசித்தல்); (ஆனாய-நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

மன்மதன் காயம் நீறு ஆகிடக் கண்டருள் கண்ணினில் தீயன் ஊர் - மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணில் நெருப்பை உடைய சிவபெருமான் உறையும் தலம்; (காயம் - உடல்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


8)

தூர்த்தனோர் மாமலை தூக்கினான் பத்துவாய்

ஆர்த்தழச் செய்தகோன் அரவையும் மதியையும்

சேர்த்தவன் அன்பர்தம் தீவினை தீர்த்தருள்

தீர்த்தனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


தூர்த்தன் ஓர் மா-மலை தூக்கினான் பத்துவாய் ஆர்த்து அழச் செய்த கோன் - கொடியவனும் ஒப்பற்ற கயிலைமலையைப் பெயர்த்துத் தூக்கியவனுமான இராவணனது பத்துவாய்களும் கத்தி அழும்படிச் செய்த (= அவனை நசுக்கி அழவைத்த) நாதன்; (தூர்த்தன் - கொடியவன்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

ரவையும் மதியையும் சேர்த்தவன் - (திருமுடிமேல்) பாம்பையும் சந்திரனையும் ஒன்றாக வாழவைத்தவன்; (அரவையும்மதியையும் - சந்தம் கருதி ம் ஒற்று விரித்தல் விகாரம்);

அன்பர்தம் தீவினை தீர்த்தருள் தீர்த்தன் ஊர் - பக்தர்களது பாவங்களைத் தீர்த்தருளும் புனிதனான சிவபெருமான் உறையும் தலம்; (தீர்த்தன் - பரிசுத்தன்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


9)

மலைகுடை ஆக்குமால் மலரவன் இவர்தொழும்

அலகிலாச் சோதியான் ஆயிழை பங்கினன்

தலைமிசை நதியினன் தரியலர் புரமெரி

சிலையனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


மலை குடை ஆக்கு- மால் மலரவன் இவர் தொழும் அலகு இலாச் சோதியான் - மலையைக் குடையாகப் பிடித்த திருமாலும் தாமரையில் உறையும் பிரமனும் தொழுத எல்லையற்ற ஜோதி வடிவினன்; (இந்திரன் சினந்து விடுத்த பெருமழையைத் தடுத்துக் கோக்களையும் கோவலரையும் காப்பதற்காகக் கோவர்த்தன-மலையைக் குடையாகப் பிடித்தது கிருஷ்ணாவதார நிகழ்ச்சி);

ஆயிழை பங்கினன் - உமைபங்கன்;

தலைமிசை நதியினன் - கங்காதரன்;

தரியலர் புரம் எரி- சிலையன் ஊர் - பகைவர்களது முப்புரங்களை எரித்த வில்லை ஏந்திய சிவபெருமான் உறையும் தலம்; (தரியலர் - பகைவர்); (சிலை - வில்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


10)

திட்டியும் பொய்ம்மொழி செப்பியும் திரிதரும்

மட்டிகள் உய்விலார் வார்த்தைகள் நீங்குமின்

நட்டமா டும்பரன் நம்மிடர் தீர்த்தருள்

சிட்டனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


திட்டியும் பொய்ம்மொழி செப்பியும் திரிதரும் மட்டிகள் உய்விலார் வார்த்தைகள் நீங்குமின் - பழித்துப் பேசியும் பொய்கள் சொல்லியும் திரிகின்ற மூடர்களும் உய்தி இல்லாதவர்கள்; அவர்கள் பேச்சில் மயங்காமல் நீங்குங்கள்; (மட்டி - மூடன்); (நீங்குமின் - நீங்குங்கள்; மின் - ஏவற்பன்மை விகுதி);

நட்டம் ஆடும் பரன் - கூத்தாடும் பரமன்; (நட்டம் - கூத்து);

நம் இடர் தீர்த்தருள் சிட்டன் ஊர் - நம் துன்பங்களைத் தீர்த்தருளும் சிவபெருமான் உறையும் தலம்; (சிட்டன் - பெரியவன்; உயர்ந்தவன்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


11)

மாடமார் தில்லையில் மாநடம் ஆடினான்

ஆடரா ஆர்த்தவன் அருமறை பாடினான்

வேடனாய்க் கானிடை விசயனுக் கருளிய

சேடனூர் சேணுயர் தென்சிராப் பள்ளியே.


மாடம் ஆர் தில்லையில் மா-நடம் ஆடினான் - மாடங்கள் (மாடிவீடுகள்) நிறைந்த தில்லையில் அழகிய திருக்கூத்து ஆடுபவன்;

ஆடு-அரா ஆர்த்தவன் - அசையும் பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (அரா - பாம்பு); (ஆர்த்தல் - கட்டுதல்);

அருமறை பாடினான் - அரிய வேதங்களைப் பாடியவன்;

வேடனாய்க் கானிடை விசயனுக்கு அருளிய சேடன் ஊர் - காட்டில் ஒரு வேடன் வடிவில் சென்று அர்ஜுனனுக்கு அருள்புரிந்த பெரியோனான சிவபெருமான் உறையும் தலம்; (சேடன் - பெரியவன்);

சேண் உயர் தென்-சிராப்பள்ளியே - வானளாவும் அழகிய திருச்சிராப்பள்ளி ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment