2019-07-03
T.218 - ஆமாத்தூர் - நான் ஏத்தேன் எனும்
-----------------
(வண்ணவிருத்தம்;
தானாத் தானன .. தனதான)
நானேத் தேனெனு(ம்) .. நிலைமாறி
.. நாவாற் பேர்சொல .. அருளாயே
தேனார்த் தார்மது .. மலர்சூடீ
.. தீராச் சீருடை .. ஒருதேவா
வானோர்க் காரமு .. தருள்நேயா
.. வாயாற் றூமறை .. அவையோதீ
ஆனேற் றூர்தியை .. உடையானே
.. ஆமாத் தூருறை .. பெருமானே.
பதம் பிரித்து:
நான் ஏத்தேன் எனு(ம்) .. நிலை மாறி,
.. நாவாற் பேர் சொல .. அருளாயே;
தேன் ஆர்த்து ஆர் மதுமலர் சூடீ;
.. தீராச் சீருடை .. ஒரு தேவா;
வானோர்க்கு ஆரமுது .. அருள் நேயா;
.. வாயால் தூ-மறை .. அவை ஓதீ;
ஆனேற்று ஊர்தியை .. உடையானே;
.. ஆமாத்தூர் உறை .. பெருமானே.
* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;
நான் ஏத்தேன் எனும் நிலை மாறி - நான் உன்னைத் துதிசெய்யாதவன் என்ற நிலை நீங்கி;
நாவால் பேர் சொல அருளாயே - நான் என் நாக்கால் உன் திருநாமத்தைச் சொல்ல அருள்வாயாக;
தேன் ஆர்த்து ஆர் மதுமலர் சூடீ - தேனீக்கள் ஒலித்து உண்ணும் மது நிறைந்த மலர்களைச் சூடியவனே; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்);
தீராச் சீருடை ஒரு தேவா - அழியாத புகழ் உடைய ஒப்பற்ற தேவனே; (தீர்தல் - அழிதல்; இறத்தல்);
வானோர்க்கு ஆரமுது அருள் நேயா - தேவர்களுக்கு அரிய அமுதத்தை அருளிய அன்பனே; (நேயம் - அன்பு);
வாயால் தூ-மறை அவை ஓதீ - திருவாயால் தூய நால்வேதங்களை ஓதியவனே;
ஆனேற்று ஊர்தியை உடையானே - இடபவாகனம் உடையவனே; (ஆனேறு - இடபம்);
ஆமாத்தூர் உறை பெருமானே - திருவாமாத்தூரில் உறைகின்ற பெருமானே.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment