2019-08-07
P.480 - வெண்ணெய்நல்லூர்
--------------------
(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)
(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")
(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")
(சுந்தரர் தேவாரம் - 7.77.1 - "பரவும் பரிசொன் றறியேன்நான்")
1)
சினவெள் விடையின் மீதேறி .. திங்கள் திகழும் திருமுடியான்
வனமென் முலையாள் உமைபங்கன் .. மலரான் தலையே கலனாக
மனைகள் தோறும் பலிக்குழல்வான் .. வணங்கி நிற்கும் அடியார்தம்
வினைகள் தீர்க்கும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
சின-வெள்-விடையின் மீது ஏறி - கோபமுடைய வெள்ளை இடபத்தை ஊர்தியாக உடையவன்;
திங்கள் திகழும் திருமுடியான் - சென்னிமேல் சந்திரனைச் சூடியவன்;
வன-மென்-முலையாள் உமை பங்கன் - அழகிய மென்மையான முலைகளை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (வனம் - அழகு);
மலரான்-தலையே கலனாக மனைகள்-தோறும் பலிக்கு உழல்வான் - பிரமனது மண்டையோட்டையே உண்கலனாக ஏந்தி வீடுகள்தோறும் பிச்சைக்குத் திரிபவன்; (பலி - பிச்சை);
வணங்கி-நிற்கும் அடியார்தம் வினைகள் தீர்க்கும் பித்தன் இடம் - தொழும் பக்தர்களது வினையையெல்லாம் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (பித்தன் - பேரருளாளன்);
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
2)
கொடியின் மீது விடைகாட்டும் .. குழகன் கூரார் மழுவேந்தி
முடியின் மீது மதிசூடி .. முதலும் முடிவும் இல்லாதான்
பொடியைப் பூசி பொன்னடியைப் .. போற்றி நிற்கும் அடியார்தம்
மிடியைத் தீர்க்கும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
கொடியின் மீது விடை காட்டும் குழகன் - இடபக்கொடி உடைய அழகன்; (குழகன் - இளையோன்; அழகன்);
கூர் ஆர் மழு ஏந்தி - கூர்மையான மழுவை ஏந்தியவன்;
முடியின் மீது மதிசூடி - தலைமேல் பிறையைச் சூடியவன்;
முதலும் முடிவும் இல்லாதான் - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்; ஆதியும் அந்தமும் இல்லாதவன்;
பொடியைப் பூசி - திருநீற்றைப் பூசியவன்;
பொன்னடியைப் போற்றி-நிற்கும் அடியார்தம் மிடியைத் தீர்க்கும் பித்தன் இடம் - பொற்பாதத்தை வழிபடும் அடியார்களது துன்பத்தையும் வறுமையையும் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (மிடி - துன்பம்; வறுமை);
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
3)
நெய்யும் பாலும் மகிழ்ந்தாடும் .. நீல கண்டன் நீள்சடையன்
கையில் எரியை ஏந்தியவன் .. கானில் நட்டம் ஆடுமிறை
செய்ய பாதம் இரண்டினையும் .. சிந்தை செய்யும் அடியார்தம்
வெய்ய வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
நெய்யும் பாலும் மகிழ்ந்தாடும் நீலகண்டன் - நெய் பால் இவற்றால் அபிஷேகம் விரும்பிய நீலகண்டன்;
நீள்சடையன் - நீண்ட சடையினன்;
கையில் எரியை ஏந்தியவன் - கையில் நெருப்பை ஏந்தியவன்;
கானில் நட்டம் ஆடும் இறை - சுடுகாட்டில் கூத்து ஆடும் கடவுள்; (கான் - சுடுகாடு); (நட்டம் - கூத்து);
செய்ய பாதம் இரண்டினையும் சிந்தை செய்யும் அடியார்தம் வெய்ய வினை தீர் பித்தன் இடம் - சிவந்த இரு-திருவடிகளைத் தியானிக்கும் பக்தர்களது கொடிய வினையைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (செய்ய - சிவந்த); (வெய்ய - கொடிய);
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
4)
கருப்புச் சிலையால் கணையெய்த .. காமன் அனங்கன் எனவாக
நெருப்பைக் காட்டும் கண்ணுதலான் .. நீரார் சடையன் கயிலாயப்
பொருப்பன் அடியை நாள்தோறும் .. போற்றி செய்யும் அடியார்தம்
விருப்பம் அருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
கருப்புச் சிலையால் கணை எய்த காமன் அனங்கன் என ஆக நெருப்பைக் காட்டும் கண்ணுதலான் - கரும்பை வில்லாக ஏந்தி அம்பை எய்த மன்மதனை உருவமற்றவன் என்று ஆக நெருப்பை உமிழ்ந்த நெற்றிக்கண்ணன்; (கருப்புச்-சிலை - கரும்பால் ஆன வில்); (அனங்கன் - உடலற்றவன்); (கண்ணுதல் - நெற்றிக்கண்);
நீர் ஆர் சடையன் - சடையில் கங்கையை உடையவன்;
கயிலாயப் பொருப்பன் - கயிலைமலையான்; (பொருப்பு - மலை);
அடியை நாள்தோறும் போற்றிசெய்யும் அடியார்தம் விருப்பம் அருளும் பித்தன் இடம் - திருவடியைத் தினமும் வணங்கும் பக்தர்கள் விரும்பிய வரங்களை அருளும் பேரருளாளன் உறையும் தலம்;
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
5)
ஓலை காட்டி வழக்காடி .. ஒருநா வலர்கோன் தனையாண்டான்
வேலை நஞ்சை அமுதாக .. விரும்பி உண்ட மணிகண்டன்
காலை மாலை கழல்போற்றிக் .. கைகள் கூப்பும் அடியார்தம்
மேலை வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
ஓலை காட்டி வழக்காடி ஒரு நாவலர்கோன்தனை ஆண்டான் - அடிமைஓலையைக் காட்டி வழக்கிட்டு ஒப்பற்ற சுந்தரரை ஆட்கொண்டவன்; (ஒரு - ஒப்பற்ற);
வேலை-நஞ்சை அமுதாக விரும்பி உண்ட மணிகண்டன் - கடல்-விடத்தை அமுதம் போல் விரும்பி உண்ட நீலகண்டன்; (வேலை - கடல்);
காலை மாலை கழல் போற்றிக் கைகள் கூப்பும் அடியார்தம் மேலைவினை தீர் பித்தன் இடம் - காலையும் மாலையும் திருவடியைப் போற்றிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது பழவினையைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்;
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
6)
இருட்டு மேனிக் கூற்றுவனை .. இணையில் லாமார்க் கண்டேயர்
பொருட்டு முன்பு கடவூரில் .. பொன்னார் கழலை வீசியுதைத்(து)
உருட்டும் பெருமான் திருப்புகழை .. ஓதி வணங்கும் அடியாரை
வெருட்டும் வினைதீர் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
இருட்டு-மேனிக் கூற்றுவனை இணை இல்லா மார்க்கண்டேயர் பொருட்டு முன்பு கடவூரில் பொன் ஆர் கழலை வீசி உதைத்து உருட்டும் பெருமான் - ஒப்பற்ற பக்தரான மார்கண்டேயரைக் காப்பதற்காக முன்பு கரிய மேனிக் காலனைத் திருக்கடவூரில் பொன் போன்ற திருவடியை வீசி உதைத்துக் கீழே உருட்டிய பெருமான்;
திருப்புகழை ஓதி வணங்கும் அடியாரை வெருட்டும் வினை தீர் பித்தன் இடம் - அப்பெருமானது திருப்புகழைப் பாடி வணங்கும் பக்தர்களை அச்சுறுத்தும் வினைகளைத் தீர்க்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (வெருட்டுதல் - பயமுறுத்துதல்);
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
7)
உடலில் பாதி உமையாகும் .. ஒருவன் பூத கணஞ்சூழச்
சுடலை தன்னில் நடமாடி .. தொழுத திங்கள் திகழ்முடியன்
கடலில் அமுதம் வருமென்று .. கடைந்த தேவர் தமக்கிரங்கி
விடமுண் டருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
உடலில் பாதி உமை ஆகும் ஒருவன் - அர்த்தநாரீஸ்வரன்;
பூதகணம் சூழச் சுடலை-தன்னில் நடம் ஆடி - பூதகணங்கள் சூழச் சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;
தொழுத திங்கள் திகழ்-முடியன் - இறைஞ்சிய சந்திரன் விளங்குகின்ற திருமுடியினன்;
கடலில் அமுதம் வரும் என்று கடைந்த தேவர்-தமக்கு இரங்கி விடம் உண்டருளும் பித்தன் இடம் - பாற்கடலில் அமுதம் வரும் என்று எண்ணிக் கடைந்த தேவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டருளிய பேரருளாளன் உறையும் தலம்;
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
8)
அற்பம் இதுவென் றருவரையை .. அன்றெ டுத்த அரக்கனழ
நற்ப தத்து விரலொன்றால் .. நசுக்க வல்ல நம்பெருமான்
அற்பு தத்தேர் ஒன்றேறி .. அமர்செய் வதற்கு வில்லாக
வெற்பை ஏந்தும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
அற்பம் இது என்று அருவரையை அன்று எடுத்த அரக்கன் அழ - இழித்துப் பேசி அரிய கயிலைமலையை முன்பு பெயர்த்துத் தூக்கிய இராவணன் அழும்படி;
நற்பதத்து விரல் ஒன்றால் நசுக்க-வல்ல நம் பெருமான் - நல்ல திருவடி-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய நம் பெருமான்;
அற்புதத்-தேர் ஒன்று ஏறி அமர்-செய்வதற்கு வில்லாக வெற்பை ஏந்தும் பித்தன் இடம் - தேவர்கள் செய்த அரிய தேரில் ஏறிப் போர் செய்வதற்கு வில்லாக மேருமலையை ஏந்திய பேரருளாளன் உறையும் தலம்;
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
9)
கள்ளார் கமலத் துறைவானும் .. கரிய மாலும் அறியாத
ஒள்ளார் நெருப்புத் தூணானான் .. உருகும் அடியார் நெஞ்சத்தின்
உள்ளே கோயில் கொள்ளுமரன் .. உரகத் தாரை அணிமார்பன்
வெள்ளே றேறும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
கள் ஆர் கமலத்து உறைவானும் கரிய மாலும் அறியாத ஒள் ஆர் நெருப்புத்-தூண் ஆனான் - வாசம் (& தேன்) மிக்க தாமரையில் உறையும் பிரமனாலும் கரிய நிறம் உடைய திருமாலாலும் அறிய இயலாத ஒளியுடைய தீத்தூணாகி ஓங்கியவன்;
உருகும் அடியார் நெஞ்சத்தின் உள்ளே கோயில் கொள்ளும் அரன் - உருகி வழிபடும் பக்தர்களது உள்ளமே கோயிலாக மகிழ்கின்ற ஹரன்;
உரகத்-தாரை அணி மார்பன் - மார்பில் பாம்பை மாலையாக அணிந்தவன்; (உரகம் - பாம்பு); (தார் - மாலை);
வெள்-ஏறு ஏறும் பித்தன் இடம் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய பேரருளாளன் உறையும் தலம்;
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
10)
கேடர் என்றும் பொய்யுரைக்கும் .. கீழோர் பேச்சை ஒழியுங்கள்
ஆடல் புரிவான் அடிபரவும் .. அன்பர் பாண பத்திரர்க்குப்
பாடல் தந்த பரிசுடையான் .. பார்த்த னுக்குப் படைநல்க
வேட னான பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
கேடர், என்றும் பொய் உரைக்கும் கீழோர் பேச்சை ஒழியுங்கள் - தீயவர்கள், என்றும் பொய்யே சொல்லும் கீழோர்களது பேச்சை நீங்குங்கள்;
ஆடல் புரிவான் அடி பரவும் அன்பர் பாணபத்திரர்க்குப் பாடல் தந்த பரிசு உடையான் - கூத்தனது திருவடியைப் போற்றிய பக்தரான பாணபத்திரர்க்குத் திருமுகப்-பாசுரத்தைத் தந்து அருளிய பண்பு உடையவன்; (இவ்வரலாற்றைத் திருவிளையாடற் புராணத்தில் "திருமுகம் கொடுத்தது" படலத்தில் காண்க); (திருமுகப்-பாசுரம் - 11.1.1 - "மதிமலி புரிசை மாடக் கூடல்");
பார்த்தனுக்குப் படை நல்க வேடன் ஆன பித்தன் இடம் - அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள வேடன் வடிவில் சென்ற பேரருளாளன் உறையும் தலம்; (படை - ஆயுதம்);
வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
11)
காடு தன்னில் முழவார்த்துக் .. கணங்கள் சூழ ஆடுமரன்
தோடு திகழும் காதுடையான் .. துணைத்தாள் போற்றிச் செந்தமிழைப்
பாடும் அன்பர் அவர்கட்குப் .. பாரில் இன்பம் பலநல்கி
வீடும் அருளும் பித்தனிடம் .. வெண்ணெய் நல்லூர் அருட்டுறையே.
காடு-தன்னில் முழவு ஆர்த்துக் கணங்கள் சூழ ஆடும் அரன் - சுடுகாட்டில் முழவுகளை ஒலித்துப் பூதகணங்கள் சூழக் கூத்தாடும் ஹரன்;
தோடு திகழும் காது உடையான் - ஒரு காதில் தோட்டினை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;
துணைத்தாள் போற்றிச் செந்தமிழைப் பாடும் அன்பர் அவர்கட்குப் பாரில் இன்பம் பல நல்கி வீடும் அருளும் பித்தன் இடம் - இரு-திருவடிகளைப் போற்றிச் செந்தமிழான தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் பாடும் பக்தர்களுக்கு இப்பிறப்பில் இன்பங்கள் பல அருளி வீடுபேறும் அருள்கின்ற பேரருளாளன் உறையும் தலம்; (துணை - இரண்டு; உதவி; காப்பு); (பார் - பூமி);
வெண்ணெய்நல்லூர் அருட்டுறையே - திருவெண்ணெய்நல்லூர் அருட்டுறை ஆகும்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment