Tuesday, May 12, 2026

P.486 - நெல்வேலி - தூயவன் தொழுதவர்

2019-10-18

P.486 - நெல்வேலி (திருநெல்வேலி)

---------------------------------

(கலிவிருத்தம் - விளம் விளம் மா கூவிளம் - வாய்பாடு; மூன்றாம் சீர் குறிலில் முடியும்)

(அப்பர் தேவாரம் - 4.11.1 - "சொற்றுணை வேதியன்")

(சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலி லாத")


1)

தூயவன்; தொழுதவர் துன்பம் தீர்த்திடும்

தாயவன்; தேவர்கள் தலைவன்; நீறணி

தீயன மேனியன்; திருநெல் வேலியில்

மேயவன் அடிதொழ வினைகள் வீடுமே.


தூயவன் - பரிசுத்தன்;

தொழுதவர் துன்பம் தீர்த்திடும் தாய்அவன் - வழிபடுபவர்களது துன்பத்தைத் தீர்க்கும் தாய்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);

தேவர்கள் தலைவன் - வானோர் பிரான்;

நீறு அணி தீ அன மேனியன் - தீப் போன்ற செம்மேனியில் திருநீற்றைப் பூசியவன்; (நீறு பூத்த நெருப்புப் போன்ற மேனியை உடையவன்);

திருநெல்வேலியில் மேயவன் அடி தொழ வினைகள் வீடுமே - திருநெல்வேலியில் உறைகின்ற சிவபெருமானது திருவடியைத் தொழுதால் நம் வினைகள் அழியும்; (வீடுதல் - நீங்குதல்; அழிதல்);


2)

போர்விடை ஊர்தியன்; பொடிகொள் மேனியன்;

பார்புகழ் தாமிர பரணி பாய்தரச்,

சீர்திகழ் கோபுரத் திருநெல் வேலியில்,

வார்சடை யான்கழல் வாழ்த்தி வாழ்மினே.


போர்விடை ஊர்தியன் - போர் செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்;

பொடிகொள் மேனியன் - திருநீற்றைப் பூசிய மேனியினான்;

பார் புகழ் தாமிரபரணி பாய்தரச் சீர் திகழ் கோபுரத் திருநெல்வேலியில் - உலகம் புகழும் தாமிரபரணிநதி பாய்கின்ற, அழகிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (தருதல் - ஒரு துணைவினை);

வார்சடையான் கழல் வாழ்த்தி வாழ்மினே - நீள்சடை உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியை வாழ்த்தி நற்கதி அடையுங்கள்; (வார்தல் - நீள்தல்);


3)

கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான்;

வாணுதல் மாதினை வாமம் வைத்தவன்;

சேணுயர் கோபுரத் திருநெல் வேலியில்,

தாணுவின் தாள்தொழச் சாரும் இன்பமே.


கோணுடைப் பிறைதனைக் குஞ்சி ஏற்றினான் - வளைந்த பிறையைச் சென்னிமேல் வைத்தவன்; (கோண் - வளைவு); (குஞ்சி - ஆண்களின் தலைமயிர்; தலை); (திருவாசகம் - திருப்பொன்னூசல் - 8.16.5 - "கோணார் பிறைச்சென்னிக் கூத்தன்");

வாள்-நுதல் மாதினை வாமம் வைத்தவன் - ஒளி பொருந்திய நெற்றியையுடைய உமையை இடப்பக்கம் கூறாக உடையவன்; (வாள் - ஒளி); (நுதல் - நெற்றி); (வாமம் - இடப்பக்கம்);

சேண் உயர் கோபுரத் திருநெல்வேலியில் - வானளாவிய கோபுரம் திகழும் திருநெல்வேலியில் உறைகின்ற; (சேண் - ஆகாயம்);

தாணுவின் தாள் தொழச் சாரும் இன்பமே - தாணு என்ற திருநாமம் உடைய சிவபெருமானது கழல் அணிந்த திருவடியைத் தொழுதால் இன்பம் வந்தடையும்; (தாணு - sthāṇuḥ स्थाणुः - சிவன் திருநாமம்);


4)

அண்மையன்; சேய்மையன்; ஆன்ற ஞானியர்

எண்மலர் கொண்டடி ஏத்து முக்கணன்;

திண்மதில் புடையணி திருநெல் வேலியில்,

தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே.


அண்மையன் சேய்மையன் - (அன்பர்களுக்கு) அருகே இருப்பவன், (அன்பில்லாதவர்களுக்குத்) தொலைவில் இருப்பவன்; (அண்மை - சமீபம்); (சேய்மை - தூரம்);

ஆன்ற ஞானியர் எண்மலர் கொண்டு அடி ஏத்து முக்கணன் - சிறந்த ஞானியர்கள் எட்டுமலர்களால் வழிபாடு செய்கின்ற முக்கண்ணன்; (எண்மலர் - அஷ்டபுஷ்பம் - இவை அகமலர்கள் எட்டு, புறமலர்கள் எட்டு); (அப்பர் தேவாரம் - 5.54.1 - "எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி மட்டலர் இடுவார் வினை மாயுமால்" - எட்டு நாண்மலர் - அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண்வகைப் புதிய மலர்கள். அவையாவன - புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை; அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு);

திண்மதில் புடை அணி திருநெல்வேலியில் - உறுதியான மதிலால் சூழப்பெற்ற திருநெல்வேலியில் உறைகின்ற;

தண்மதி சூடியைச் சார்ந்து வாழ்மினே - குளிர்ந்த பிறையைச் சூடிய சிவபெருமானைச் சரணடைந்து உய்யுங்கள்;


5)

பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன்;

காந்திம திக்கிறை; கையில் வேலுடைச்

சேந்தனைப் பெற்றவன்; திருநெல் வேலியில்

சாந்தவெண் ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே.


பாந்தளைப் பால்மதிப் பாங்கர் வைத்தவன் - பாம்பைப் பால் போன்ற வெண்திங்கள் பக்கத்தில் வைத்தவன்; (பாந்தள் - பாம்பு); (பாங்கர் - பக்கம்);

காந்திமதிக்கு இறை - காந்திமதி என்ற திருநாமத்தை உடைய உமாதேவிக்குக் கணவன்; (* காந்திமதி - இத்தலத்தில் இறைவி திருநாமம்); (காந்தி - kānti - ஒளி; அழகு; காந்திமதி - அழகுள்ளவள்; ஒளியுள்ளவள்);

கையில் வேலுடைச் சேந்தனைப் பெற்றவன் - கையில் வேலை ஏந்திய முருகனுக்குத் தந்தை; (சேந்தன் - முருகன்);

திருநெல்வேலியில் சாந்த-வெண்ணீற்றனைச் சார்ந்து வாழ்மினே - திருநெல்வேலியில் உறைகின்றவனும் சந்தனம் போல வெண்மையான திருநீற்றைப் பூசியவனுமான சிவபெருமானது திருவடியைச் சரணடைந்து உய்யுங்கள்; (சாந்தம் - சந்தனம்);


6)

அருநமன் தனையுதை அடிகள்; நான்மறைப்

பொருளென உள்ளவன்; பூத நாயகன்;

தெருவினில் ஒலிமலி திருநெல் வேலியில்,

கருமிட றுடையவன் கழலை வாழ்த்துமே.


அருநமன்தனை உதை அடிகள் - கொடிய கூற்றுவனை உதைத்த சுவாமி;

நான்மறைப்பொருள் என உள்ளவன் - நால்வேதப்பொருள் ஆனவன்;

பூதநாயகன் - உயிர்கட்கெல்லாம் தலைவன்; பூதகணங்களுக்குத் தலைவன்; (பூதம் - 1. பூதகணம்; 2. உயிர்வர்க்கம்);

தெருவினில் ஒலி மலி திருநெல்வேலியில் - வீதியில் ஒலி மிகுந்த திருநெல்வேலியில் உறைகின்ற;

கருமிடறு உடையவன் கழலை வாழ்த்துமே - நீலகண்டன் திருவடியை வாழ்த்துங்கள்; (மிடறு - கண்டம்);


7)

மழுவினை ஏந்திய மன்னன்; வேணியில்

விழுபுனல் தேக்கிய விமல வித்தகன்;

செழுமதில் புடையணி திருநெல் வேலியில்,

உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே.


மழுவினை ஏந்திய மன்னன் - கையில் மழுவாயுதத்தை ஏந்திய அரசன்;

வேணியில் விழு-புனல் தேக்கிய விமல வித்தகன் - சடையில் விழுந்த கங்கையைத் தேக்கிய தூயவன், வல்லவன்; (வேணி - சடை);

செழுமதில் புடை அணி திருநெல்வேலியில் - சிறந்த மதில் புடை சூழ்ந்த திருநெல்வேலியில் உறைகின்ற;

உழுவையின் அதளனை ஓம்பி உய்ம்மினே - புலித்தோல் ஆடையனைப் போற்றி உய்யுங்கள்; (உழுவை - புலி); (அதள் - தோல்); (ஓம்புதல் - பேணுதல்);


8)

மலைபெயர் அரக்கனை வாட ஊன்றினான்;

மலைபவர் மும்மதில் மாய அன்றொரு

சிலைவளை வித்தவன்; திருநெல் வேலியில்

தலைவனைத் தாள்தொழச் சாரும் இன்பமே.


மலை பெயர் அரக்கனை வாட ஊன்றினான் - கயிலைமலையைப் பெயர்த்த இராவணன் வாடும்படி அவனைத் திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கியவன்;

மலைபவர் மும்மதில் மாய அன்று ஒரு சிலை வளைவித்தவன் - பகைத்தவர்களது முப்புரங்கள் அழியும்படி முன்பு ஒரு மலையை வில்லாக வளைத்தவன்; (மலைதல் - பகைத்து மாறுபடுதல்); (மாய்தல் - அழிதல்); (சிலை - வில்; மலை); (சம்பந்தர் தேவாரம் - 2.15.5 - " மலைபவர் மும்மதில் மாய்வித்த சிலையானே");

திருநெல்வேலியில் தலைவனைத் தாள் தொழச் சாரும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற தலைவனான சிவபெருமானை அடிபணிந்தால் இன்பம் வந்தடையும்;


9)

பன்றியின் உருவிலும் பறவை ஆகியும்

சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார்;

தென்றமிழ் விருப்பினன்; திருநெல் வேலியில்

நின்றவன் தாள்தொழ நீங்கும் துன்பமே.


பன்றியின் உருவிலும் பறவை ஆகியும் சென்றவர் அடிமுடி தேடிக் காண்கிலார் - திருமால் பிரமன் இருவரும் பன்றி அன்னப்பறவை வடிவங்களில் சென்று தேடியும் அவர்களால் அடிமுடி அறியப்படாதவன்;

தென்-தமிழ் விருப்பினன் - இனிய தமிழ்ப்-பாமாலைகளை விரும்புபவன்; (தென் - இனிமை);

திருநெல்வேலியில் நின்றவன் தாள் தொழ நீங்கும் துன்பமே - திருநெல்வேலியில் நீங்காமல் உறைகின்ற சிவபெருமானை அடிபணிந்தால் துன்பம் தீரும்;


10)

வெந்தவெண் ணீற்றினை மேனிப் பூசிடா

அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர்;

செந்தழல் மேனியன்; திருநெல் வேலியில்

எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே.


வெந்த வெண்ணீற்றினை மேனிப் பூசிடா அந்தகர் பொய்ம்மொழி அகன்று வம்மினீர் - சுட்ட திருநீற்றை உடம்பின்மேல் பூசாத குருடர்கள் சொல்லும் பொய்களை நீங்கி வாருங்கள்; (அகல்தல் - நீங்குதல்); (வம்மினீர் - வம்மின் நீர்; மின் - ஏவற்பன்மை விகுதி);

செந்தழல் மேனியன் - செந்தீப் போன்ற செம்மேனியன்;

திருநெல்வேலியில் எந்தையை ஏத்திட எய்தும் இன்பமே - திருநெல்வேலியில் உறைகின்ற எம் தந்தையான சிவபெருமானைத் துதித்தால் இன்பம் வந்தடையும்;


11)

மஞ்சடை மலைக்கிறை மருகன்; வாளிகள்

அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான்;

செஞ்சடைப் புண்ணியன்; திருநெல் வேலியில்

நஞ்சடை கண்டனை நண்ணி உய்ம்மினே.


மஞ்சு அடை மலைக்கு இறை மருகன் - மேகம் அடைகின்ற மலைக்கு அரசனான இமவானுக்கு மருகன்; (இறை - அரசன்);

வாளிகள் அஞ்சுடைக் காமனை அனங்கன் ஆக்கினான் - ஐந்து அம்புகளை உடைய மன்மதனது உடலைச் சுட்டெரித்தவன்; (வாளி - அம்பு); (அனங்கன் - உடலற்றவன்);

செஞ்சடைப் புண்ணியன் - சிவந்த சடையை உடைய புண்ணியமூர்த்தி;

திருநெல்வேலியில் நஞ்சு அடை கண்டனை நண்ணி உய்ம்மினே - திருநெல்வேலியில் உறைகின்ற, ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்த பெருமானை (நீலகண்டனை) அடைந்து உய்யுங்கள்; (அடைத்தல் - ஒளித்துவைத்தல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


No comments:

Post a Comment