2020-02-25
P.499 - ஓமாம்புலியூர்
--------------
(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா காய் - வாய்பாடு; அடியீற்றுச்சீர் எல்லாம் புளிமாங்காய்ச் சீர்)
(சம்பந்தர் தேவாரம் - 1.67.1 - "வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு");
(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")
1)
கயிறு வீசும் நமனைச் செற்றுக் கருதித் தொழுமாணி
உயிரைக் காத்த ஒப்பில் ஒருவன் உமையாள் ஒருகூறன்
தயிரும் பாலும் ஆடும் எம்மான் தங்கும் இடமென்பர்
உயரும் பொழில்கள் சூழும் அணியார் ஓமாம் புலியூரே.
கயிறு வீசும் நமனைச் செற்றுக் - பாசத்தை வீசிய காலனை உதைத்து அழித்து; (செறுதல் - அழித்தல்);
கருதித் தொழு மாணி உயிரைக் காத்த ஒப்பு-இல் ஒருவன் - விரும்பி வழிபட்ட மார்க்கண்டேயரது உயிரைக் காத்தருளிய ஒப்பற்றவன்; (மாணி - மார்க்கண்டேயர்); (ஒரு - ஒப்பற்ற);
உமையாள் ஒரு கூறன் - உமாதேவியை ஒரு கூறாக உடையவன்;
தயிரும் பாலும் ஆடும் எம்மான் தங்கும் இடம் என்பர் - தயிராலும் பாலாலும் அபிஷேகம் செய்யப்பெறும் எம்பெருமான் உறையும் தலம் ஆவது;
உயரும் பொழில்கள் சூழும் அணி ஆர் ஓமாம்புலியூரே - உயர்ந்த சோலை சூழ்ந்த அழகிய ஓமாம்புலியூர்;
2)
புலியின் தோலாய் புனிதா என்று போற்றும் அடியார்தம்
வலிய வினையை வீட்டி அவரை வானில் திகழ்விப்பான்
பலியை நாடிப் பல்லில் செல்லும் பரமன் இடமென்பர்
ஒலிசெய் தளிகள் உலவும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
"புலியின் தோலாய்; புனிதா" என்று போற்றும் அடியார்தம் - "புலித்தோலை ஆடையாகக் கட்டியவனே; தூயனே" என்று போற்றி வணங்கும் பக்தர்களது;
வலிய வினையை வீட்டி அவரை வானில் திகழ்விப்பான் - வலிய வினையை அழித்து அவர்களை வானுலகில் விளங்கவைப்பவன்; (வீட்டுதல் - அழித்தல்);
பலியை நாடிப் பல்-இல் செல்லும் பரமன் இடம் என்பர் - பிச்சைக்காகப் பல வீடுகளுக்குச் செல்லும் பரமன் உறையும் தலம் ஆவது; (பலி - பிச்சை); (இல் - இல்லம்);
ஒலிசெய்து அளிகள் உலவும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வண்டுகள் ஒலியெழுப்பி உலாவுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (அளி - வண்டு);
3)
தீங்கு செய்தார் புரங்கள் தீயில் சேர மலைவில்லைத்
தாங்கி நின்ற தன்னேர் இல்லாத் தலைவன் சடைமீது
கோங்கு கொன்றை குரவம் சூடும் குழகன் இடமென்பர்
ஓங்கு தெங்கார் சோலை சூழ்ந்த ஓமாம் புலியூரே.
தீங்கு செய்தார் புரங்கள் தீயில் சேர மலைவில்லைத் தாங்கி நின்ற தன்-நேர் இல்லாத் தலைவன் - தேவர்களுக்குத் தீமை செய்த அசுரர்களது முப்புரங்களும் தீயில் மூழ்கும்படி மேருமலையை வில்லாக ஏந்தி நின்ற ஒப்பற்ற தலைவன்; (நேர் - ஒப்பு);
சடைமீது கோங்கு கொன்றை குரவம் சூடும் குழகன் இடம் என்பர் - சடையின்மேல் கோங்கமலர், கொன்றைமலர், குராமலர் இவற்றைச் சூடிய அழகன் உறையும் தலம் ஆவது; (குழகன் - இளையோன்; அழகன்); (அப்பர் தேவாரம் - 4.86.3 - "குரவ நறுமலர் கோங்கம் அணிந்து குலாயசென்னி");
ஓங்கு தெங்கு ஆர் சோலை சூழ்ந்த ஓமாம்புலியூரே - ஓங்கி வளரும் தென்னைமரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (தெங்கு - தென்னை);
4)
நயந்த அமுதம் அடையக் கடைய நஞ்சே கடல்கக்கப்
பயந்த வானோர் பாதம் பரவிப் பணிய அவரெல்லாம்
வியந்து போற்ற விடத்தை உண்ட விமலன் இடமென்பர்
உயர்ந்த சோலை புடைசூழ்ந் திலங்கும் ஓமாம் புலியூரே.
நயந்த அமுதம் அடையக் கடைய நஞ்சே கடல் கக்கப் - விரும்பிய அமுதைப் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தபொழுது அக்கடலில் ஆலகாலமே தோன்றவும்; (நயத்தல் - விரும்புதல்);
பயந்த வானோர் பாதம் பரவிப் பணிய - அஞ்சிய தேவர்கள் ஈசன் திருவடியை வாழ்த்தி வணங்கவும்;
அவரெல்லாம் வியந்து போற்ற விடத்தை உண்ட விமலன் இடம் என்பர் - அத்தேவர்களெல்லாம் வியப்படைந்து போற்றும்படி அந்த ஆலகாலத்தை உண்டருளிய தூயன் உறையும் தலம் ஆவது;
உயர்ந்த சோலை புடை சூழ்ந்து இலங்கும் ஓமாம்புலியூரே - உயர்ந்த சோலை சூழ்ந்து விளங்குகின்ற ஓமாம்புலியூர்;
5)
போதி னாலும் புனலி னாலும் போற்றும் அடியார்க்குத்
தீதி லாத செல்வம் நல்கும் தேவன் சிவனெம்மான்
பாதி மேனி பாவைக் களித்த பரமன் இடமென்பர்
ஊதி வரிவண் டுலவும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
போதினாலும் புனலினாலும் போற்றும் அடியார்க்குத் - பூக்களாலும் நீராலும் வழிபாடு செய்து வணங்கும் அடியவர்களுக்கு; (போது - பூ);
தீது-இலாத செல்வம் நல்கும் தேவன் சிவன் எம்மான் - குற்றமற்ற செல்வத்தை அருளும் தேவன், சிவன், எம்பெருமான்;
பாதி மேனி பாவைக்கு அளித்த பரமன் இடம் என்பர் - தன் திருமேனியில் ஒரு பாதியை உமைக்குத் தந்த பரமன் உறையும் தலம் ஆவது; (பாவை - பெண்);
ஊதி வரிவண்டு உலவும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வரிகளையுடைய வண்டுகள் ஒலிசெய்து உலாவுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஊதுதல் - வண்டு முதலியன ஒலித்தல்);
6)
தண்ணன் மலரால் தாளைத் தொழுவார் தங்கள் துயர்தீர்ப்பான்
விண்முன் பணிந்து மிகவும் இறைஞ்ச மேருச் சிலையேந்தித்
திண்மும் மதில்கள் தம்மை எய்த தீரன் இடமென்பர்
ஒண்வெண் திங்கள் தீண்டும் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
தண்-நன்-மலரால் தாளைத் தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பான் - குளிர்ந்த சிறந்த பூக்களைத் தூவித் திருவடியைத் தொழும் அன்பர்களது துயரத்தைத் தீர்ப்பவன்; (* துயரந்தீர்த்தநாதர் - ஓமாம்புலியூரில் இறைவன் திருநாமம்);
விண் முன் பணிந்து மிகவும் இறைஞ்ச மேருச்-சிலை ஏந்தித் - முன்பு தேவர்கள் பணிந்து மிகவும் வேண்டி இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கி மேருமலையை வில்லாக ஏந்தி; (சிலை - வில்);
திண்-மும்மதில்கள் தம்மை எய்த தீரன் இடம் என்பர் - வலிய முப்புரங்களை எய்து அழித்த வீரன் உறையும் தலம் ஆவது; (தீரன் - மனத்திடமுள்ளவன்);
ஒண்-வெண்-திங்கள் தீண்டும் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - ஒளியுடைய வெண்மையான சந்திரன் தொடும்படி உயர்ந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஒண்வெண் - ஒருபொருட்பன்மொழி என்றும் கொள்ளலாம்);
7)
வம்பு நாறும் மலர்கள் தூவி வணங்கும் அடியார்தம்
கம்பம் நீக்கி இன்பம் அருளும் கருணைக் கடலெம்மான்
கொம்பன் னாளோர் கூறா மகிழும் கூத்தன் இடமென்பர்
உம்பர்ச் செல்லும் மதிதோய் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
வம்பு நாறும் மலர்கள் தூவி வணங்கும் அடியார்தம் கம்பம் நீக்கி இன்பம் அருளும் கருணைக்-கடல் எம்மான் - மணம் கமழும் பூக்களைத் தூவி வணங்கும் அடியவர்களுடைய நடுக்கத்தைப் போக்கி, இன்பம் அருளும் கருணைக்கடல் ஆனவன் எம்பெருமான்; (வம்பு - வாசனை); (கம்பம் - நடுக்கம்; அச்சம்);
கொம்பு அன்னாள் ஓர் கூறா மகிழும் கூத்தன் இடம் என்பர் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக மகிழும் கூத்தன் உறையும் தலம் ஆவது; (கூறா - கூறாக);
உம்பர்ச் செல்லும் மதி தோய் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - வானில் செல்லும் சந்திரன் தொடுகின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (உம்பர் - ஆகாயம்); (தோய்தல் - பொருந்துதல்);
8)
கொச்சை வார்த்தை பலவும் சொல்லிக் குன்றைப் பெயர்மூடன்
அச்சம் கொள்ள விரலை ஊன்றி அடர்த்த அருளாளன்
நச்ச ராவை நாணா வீக்கும் நம்பன் இடமென்பர்
உச்சி திங்கள் தீண்டு பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
கொச்சை வார்த்தை பலவும் சொல்லிக் குன்றைப் பெயர் மூடன் அச்சம் கொள்ள விரலை ஊன்றி அடர்த்த அருளாளன் - இழிந்த சொற்கள் பல சொல்லிக் கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணன் அஞ்சும்படி திருப்பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய அருளாளன்; (கொச்சை - இழிவு); (அடர்த்தல் - நசுக்குதல்);
நச்சுஅராவை நாணா வீக்கும் நம்பன் இடம் என்பர் - விஷப்பாம்பை அரைநாணாகக் கட்டியவனும் நம்பன் என்ற திருநாமம் உடையவனுமான சிவபெருமான் உறையும் தலம் ஆவது; (வீக்குதல் - கட்டுதல்); (நம்பன் - விரும்பத்தக்கவன்);
உச்சி திங்கள் தீண்டு பொழில்சூழ் ஓமாம் புலியூரே - உச்சியைச் சந்திரன் தொடும்படி உயர்ந்த சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்;
9)
அகழும் அரியும் உயரும் அயனும் அறியா அழல்வண்ணன்
திகழும் மதியும் சீறும் அரவும் சேரும் சடையண்ணல்
இகழும் தக்கன் வேள்வி செற்ற இறைவன் இடமென்பர்
உகளும் மீன்கள் திகழும் புனலார் ஓமாம் புலியூரே.
அகழும் அரியும் உயரும் அயனும் அறியா அழல்வண்ணன் - பன்றி வடிவில் நிலத்தை அகழ்ந்த திருமால் அன்னப்பறவை வடிவில் மேலே சென்ற பிரமன் இவர்களால் அறிய ஒண்ணாத தீவண்ணன்;
திகழும் மதியும் சீறும் அரவும் சேரும் சடை அண்ணல் - ஒளிவீசும் பிறையையும் சீறுகின்ற பாம்பையும் சடைமேல் ஒன்றாகச் சேர்த்த அண்ணல்;
இகழும் தக்கன் வேள்வி செற்ற இறைவன் இடம் என்பர் - இகழ்ந்த தக்கன் செய்த வேள்வியை அழித்த இறைவன் உறையும் தலம் ஆவது; (செறுதல் - அழித்தல்);
உகளும் மீன்கள் திகழும் புனல் ஆர் ஓமாம்புலியூரே - பாயும் மீன்கள் விளங்குகின்ற நீர் மிக்க ஓமாம்புலியூர்; (உகள்தல் - தாவுதல்; பாய்தல்);
10)
முண்டம் நீறு தரியா மூர்க்கர் மொழியும் நெறிநீங்கும்
கண்டம் கரியன் கையிற் சூலன் காமன் உடல்வேவக்
கண்ட கடவுள் அண்டர் அண்டன் கருதும் இடமென்பர்
உண்ட வண்டு பண்செய் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
முண்டம் நீறு தரியா மூர்க்கர் மொழியும் நெறி நீங்கும் - நெற்றியில் திருநீற்றைப் பூசாத மூர்க்கர்கள் சொல்கின்ற மார்க்கம் நீங்குங்கள்; (முண்டம் - நெற்றி);
கண்டம் கரியன், கையில் சூலன் - நீலகண்டன், திரிசூலத்தை ஏந்தியவன்;
காமன் உடல் வேவக் கண்ட கடவுள் - மன்மதனது உடல் வெந்து சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் நோக்கிய கடவுள்;
அண்டர்-அண்டன் கருதும் இடம் என்பர் - தேவதேவன் விரும்பி உறையும் தலம் ஆவது;
உண்ட வண்டு பண்செய் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - மது உண்ட வண்டு இனிய இசையை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்;
11)
பூவால் புனலால் மணமார் புகையால் புகழும் தமிழாரும்
பாவால் போற்றிப் பாதம் பணியும் பத்தர்க் கருளீசன்
சேவார் கொடியன் கல்லால் நீழற் செல்வன் இடமென்பர்
ஓவா தளியின் இசையார் பொழில்சூழ் ஓமாம் புலியூரே.
பூவால், புனலால், மணம் ஆர் புகையால், புகழும் தமிழ் ஆரும் பாவால், போற்றிப் பாதம் பணியும் பத்தர்க்கு அருள் ஈசன் - பூக்கள், நீர், நறும்புகை (தூபம்), தேவாரம் முதலிய தமிழ்ப்பாமாலைகள் இவற்றால் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களுக்கு அருள்கின்ற ஈசன்;
சே ஆர் கொடியன் - இடபக்கொடியை உடையவன்; (சே - எருது);
கல்லால்நீழல் செல்வன் இடம் என்பர் - கல்லாலமரத்தின்கீழ் வீற்றிருக்கும் செல்வன் உறையும் தலம் ஆவது;
ஓவாது அளியின் இசை ஆர் பொழில் சூழ் ஓமாம்புலியூரே - எப்பொழுதும் வண்டுகளின் இசை ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த ஓமாம்புலியூர்; (ஓவுதல் - முடிதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்); (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment