Showing posts with label மாங்கனி மாங்கனி மாங்கனி மா. Show all posts
Showing posts with label மாங்கனி மாங்கனி மாங்கனி மா. Show all posts

Wednesday, August 6, 2025

P.436 - பேரூர் - அலையார்நதி மதிகூவிளம்

2018-05-23

P.436 - பேரூர்

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

அலையார்நதி மதிகூவிளம் அணிசெஞ்சடை அடிகள்

மலையான்மகள் ஒருபங்கென மகிழும்பரன் எண்ணில்

பலபேரினன் பேரூருறை பட்டீசனைக் கண்டு

நலமார்தரு தமிழ்மாலைகள் நவில்வார்வினை அறுமே.


அலை ஆர் நதி, மதி, கூவிளம் அணி செஞ்சடை அடிகள் - அலை மிக்க கங்கை, சந்திரன், வில்வம் இவற்றை அணிந்த செஞ்சடைப் பெருமான்;

மலையான்மகள் ஒரு பங்கு என மகிழும் பரன் - உமையை ஒரு பாகமாக விரும்பும் பரமன்;

எண் இல் பல பேரினன் - எண்ணற்ற பல திருநாமங்களை உடையவன்;

பேரூர் உறை பட்டீசனைக் கண்டு நலம் ஆர்தரு தமிழ்மாலைகள் நவில்வார் வினை அறுமே - பேரூரில் உறைகின்ற பட்டீசன் என்ற திருநாமம் உடைய ஈசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும். (ஆர்தல் - நிறைதல்); (தருதல் - ஒரு துணைவினை);


2)

ஆரார்புரம் அவைவெந்திட அன்றோர்கணை தொட்டான்

நீரார்சடை மேல்வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான்

பாரோர்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீரார்தமிழ் சொல்வாரவர் தீராவினை அறுமே.


ஆரார் புரம்அவை வெந்திட அன்று ஓர் கணை தொட்டான் - பகைவர்களது முப்புரங்கள் வெந்து அழிய முன்பு ஒரு கணையை எய்தவன்; (ஆரார் - பகைவர்);

நீர் ஆர் சடைமேல் வெண்பிறை நிலைபெற்றிட வைத்தான் - கங்கைச்சடையின்மேல் வெண்திங்களை வைத்துக் காத்தவன்;

பாரோர் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு சீர் ஆர் தமிழ் சொல்வார் அவர் தீரா வினை அறுமே - உலகோர் தொழுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்து நன்மை மிக்க தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது தீராத வினைகளெல்லாம் அழியும்.


3)

ஓதந்தனில் எழுநஞ்சினை உண்டன்றருள் கண்டன்

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் அடியார்

பாதந்தொழப் பேரூருறை பட்டீசனைக் கண்டு

சீதந்திகழ் தமிழ்மாலைகள் செப்பக்கெடும் வினையே.


ஓதந்தனில் எழு நஞ்சினை உண்டு அன்று அருள் கண்டன் - கடலில் தோன்றிய ஆலகாலத்தை முன்னம் உண்டு அருள்செய்த நீலகண்டன்; (ஓதம் - கடல்);

வேதந்தனைக் கல்லால்நிழல் விரிசெய்தவன் - வேதங்களைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;

அடியார் பாதம் தொழப் பேரூர் உறை பட்டீசனைக் கண்டு, சீதம் திகழ் தமிழ்மாலைகள் செப்பக் கெடும் வினையே - அடியவர்கள் தன் திருவடியை வழிபடுமாறு பேரூரில் உறைகின்ற பட்டீசனைத் தரிசித்துக், குளிர்ச்சி பொருந்திய தேவாரம் திருவாசகம் முதலிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி வழிபடும் பக்தர்களது வினைகள் அழியும்.


4)

நாகத்தினை அணிமார்பினன் நரையேற்றினன் எரிபோல்

ஆகத்தினன் பச்சைக்கிளி அன்னாள்மலை மங்கை

பாகத்தினன் பேரூருறை பட்டீசனை வாழ்த்தச்

சோகத்தினைத் தருவல்வினைத் துரிசோய்வது திடனே.


நாகத்தினை அணி மார்பினன் - பாம்பை மாலை போல மார்பில் அணிந்தவன்;

நரை-ஏற்றினன் - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்;

எரி போல் ஆகத்தினன் - தீப்போல் செம்மேனியன்;

பச்சைக்கிளி அன்னாள் மலைமங்கை பாகத்தினன் - அழகிய பைங்கிளி போன்றவளான மலைமகளை ஒரு பாகத்தில் உடையவன்; (* இத்தலத்து இறைவி திருநாமம் பச்சைநாயகி);

பேரூர் உறை பட்டீசனை வாழ்த்தச் சோகத்தினைத் தரு வல்வினைத் துரிசு ஓய்வது திடனே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை வாழ்த்தினால், துன்பம் தரும் கொடிய வலிய வினைக்குற்றம் அழிவது நிச்சயம்; (துரிசு - குற்றம்); (ஓய்தல் - அழிதல்);


5)

தோடுங்குழை ஒன்றும்புனை தூயன்சுடு கானில்

ஆடும்புகழ் உடையான்புலி அதளான்மறை நாலும்

பாடும்பரன் பேரூருறை பட்டீசனை அன்பால்

நாடுங்குணம் உடையார்தமை நண்ணாவினை தானே.


தோடும் குழை ஒன்றும் புனை தூயன் - காதில் தோடும் ஒரு குழையும் அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

சுடுகானில் ஆடும் புகழ் உடையான் - சுடுகாட்டில் கூத்து ஆடுபவன்;

புலி-அதளான் - புலித்தோலை ஆடையாக அணிந்தவன்; (அதள் - தோல்); (அப்பர் தேவாரம் - 6.68.1 - "கொல்வேங்கை அதளானை");

மறை நாலும் பாடும் பரன் - நால்வேதங்களைப் பாடியவன்; நால்வேதங்களால் பாடப்படுபவன்;

பேரூர் உறை பட்டீசனை அன்பால் நாடும் குணம் உடையார்தமை நண்ணா வினைதானே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனை அன்போடு வழிபடுபவர்களை வினைகள் நெருங்கமாட்டா;


6)

மடமாதொரு கூறானவன் மதனைச்சுடு கண்ணான்

சுடர்சோதியை நிகர்மேனியன் தூவெண்மதி திகழும்

படர்வேணியன் பேரூருறை பட்டீசனை நாளும்

உடலால்மனம் வாக்கால்தொழ ஒழியும்பழ வினையே.


மடமாது ஒரு கூறு ஆனவன் - அழகிய உமையை ஒரு கூறாக உடையவன்;

மதனைச் சுடு கண்ணான் - மன்மதனைச் சுட்டெரித்த (நெற்றிக்)கண்ணினன்; (அப்பர் தேவாரம் - 4.43.4 - "காமனைக் காய்ந்த கண்ணார்");

சுடர்-சோதியை நிகர் மேனியன் - சுடர்விடும் தீப்போன்ற செம்மேனியை உடையவன்;

தூ-வெண்மதி திகழும் படர் வேணியன் - தூய வெண்பிறையைப் படரும் சடைமேல் சூடியவன்;

பேரூர் உறை பட்டீசனை நாளும் உடலால் மனம் வாக்கால் தொழ ஒழியும் பழவினையே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைத் தினமும் மனம், வாக்கு, காயம் இவை மூன்றாலும் வழிபடுபவர்களது பழைய வினைகள் அழியும். (மனம் - மனத்தால்);


7)

சடையான்திரி சூலப்படை தரிசங்கரன் கொடிமேல்

விடையான்கழல் விண்ணோர்தொழ விடமுண்டவன் பூதப்

படையானணி பேரூருறை பட்டீசனைப் போற்றி

அடைவாரவர் அருநோய்கெடும் அடைவாரமர் உலகே.


சடையான், திரிசூலப்படை தரி சங்கரன் - சடையை உடையவன், திரிசூலத்தை ஏந்திய சங்கரன்; (படை - ஆயுதம்);

கொடிமேல் விடையான் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவன்;

கழல் விண்ணோர் தொழ விடம் உண்டவன் - திருவடியைத் தேவர்கள் இறைஞ்ச அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்டவன்;

பூதப்படையான் - பூதகணப்-படை உடையவன்;

அணி பேரூர் உறை பட்டீசனைப் போற்றி அடைவாரர் அவர் அருநோய் கெடும்; அடைவார் அமர் உலகே - அழகிய பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அடைபவர்களது அரிய நோய் (உடற்பிணி / பிறவிப்பிணி) அழியும்; அவர்கள் விரும்பத்தக்க சிவலோகத்தை அடைவார்கள்; (அமர்தல் - விரும்புதல்);


8)

வலியேமிக உன்னித்திரு மலைபேர்த்தவன் அழுகை

ஒலியேமிக விரலூன்றிய உமைகோன்அயன் தலையிற்

பலிதேரிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பொலிமாமலர் இடுவாரவர் பொல்லாவினை அறுமே.


வலியே மிக உன்னித் திருமலை பேர்த்தவன் அழுகை ஒலியே மிக விரல் ஊன்றிய உமைகோன் - தன் வலிமையையே மிகவும் எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது அழுகை ஒலியே மிகும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றியவன், உமாபதி; (வலி - வலிமை); (உன்னுதல் - எண்ணுதல்);

அயன் தலையில் பலிதேர் இறை - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்கும் இறைவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிப் பொலி மாமலர் இடுவார்அவர் பொல்லாவினை அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி அழகிய பூக்களைத் தூவி வழிபடும் பக்தர்களது தீவினை அழியும்;


9)

சிசுபாலனை மாய்த்தான்அயன் தேடித்தொழு சோதி

சசிசேகரன் புரிநூலணி தடமார்பினில் நீற்றன்

பசுவேறிறை பேரூருறை பட்டீசனைப் போற்றிக்

கசிவாரவர் வினையாயின கழலப்பெறு வாரே.


சிசுபாலனை மாய்த்தான் அயன் தேடித் தொழு சோதி - சிசுபாலனைக் கொன்ற (கிருஷ்ணனாக அவதரித்த) திருமாலும் பிரமனும் அடிமுடி தேடித் தொழநின்ற தீப்பிழம்பு;

சசிசேகரன் - மதிசூடி; (சசி - சந்திரன்);

புரிநூல் அணி தட-மார்பினில் நீற்றன் - பூணூலை அணிந்த அகன்ற மார்பில் திருநீற்றைப் பூசியவன்;

பசு ஏறு இறை - இடபவாகனன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிக் கசிவார்அவர் வினை ஆயின கழலப் பெறுவாரே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி உருகும் பக்தர்களது வினைகள் நீங்கும்; (அப்பர் தேவாரம் - 5.83.2 - "வார்சடை ஈசனை ... கண்டலும் வினையான கழலுமே");


10)

கரவேமலி நெஞ்சத்தினர் கத்தித்திரி பொய்யர்

உரைநீங்கிடும் அடியார்தொழும் உருவேற்றருள் செய்யும்

பரமாபரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிச்

சுரமார்தமிழ் சொல்வாரவர் துயராயின அறுமே.


கரவே மலி நெஞ்சத்தினர் கத்தித் திரி பொய்யர் உரை நீங்கிடும் - வஞ்சமே நிறைந்த நெஞ்சம் உடையவர்கள், பொய்களைக் கத்தித் திரிகின்றவர்கள் இவர்களது பேச்சை நீங்குங்கள்;

அடியார் தொழும் உரு ஏற்று அருள்செய்யும் பரமாபரன் - பக்தர்கள் வழிபடும் எந்த உருவையும் ஏற்று அவ்வடிவில் வந்து அருள்கின்ற மிக-மேலானவன்;

பேரூர் உறை பட்டீசனைப் போற்றிச் சுரம் ஆர் தமிழ் சொல்வார் அவர் துயர் ஆயின அறுமே - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி இசை பொருந்திய தமிழ்ப்பாமாலைகளைச் சொல்லும் அன்பர்களது துன்பம் தீரும்; (சுரம் - ஸ்வரம் - ஏழிசை);


11)

மணிநீரலை சடையின்மிசை மதிகூவிளம் கொன்றை

அணிநீர்மையன் வரியார்தரும் அதளாடையின் மீது

பணியார்பரன் பேரூருறை பட்டீசனைப் போற்றிப்

பணிவாரவர் வினைதீர்ந்தினிப் படிமேல்பிற வாரே.


மணிநீர் அலை சடையின்மிசை மதி கூவிளம் கொன்றை அணி நீர்மையன் - தெளிந்த கங்கை அலைகின்ற (/ அலைக்கின்ற) அழகிய பவளம் போன்ற சடைமேல் சந்திரன் வில்வம் கொன்றைமலர் இவற்றை அணிந்த பெருமை உடையவன்; (மணி - அழகு; பவளம்; பளிங்கு); (மணி - நீருக்கும் அடைமொழி & சடைக்கும் அடைமொழி);

வரிர்தரும் அதள்-டையின் மீது பணிர்-பரன் - வரிகள் பொருந்திய (புலித்)தோலாடையின்மேல் பாம்பைக் கட்டிய பரமன்; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்); (அதள் - தோல்); (பணி - நாகம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பேரூர் உறை பட்டீசனைப் பேரூருறை பட்டீசனைப் போற்றிப் பணிவாரவர் - பேரூரில் உறையும் அந்தப் பட்டீசனைப் போற்றி வணங்கும் அன்பர்கள்;

வினை தீர்ந்து இனிப் படிமேல் பிறவாரே - தங்கள் வினையெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமியில் பிறவி இல்லாத நிலையை (= முக்தி) அடைவார்கள்; (படி - பூமி);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Monday, July 28, 2025

P.428 - வக்கரை (திருவக்கரை) - பொடியாடிய பெருமானருள்

2018-04-04

P.428 - வக்கரை (திருவக்கரை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


முற்குறிப்புகள் - * வடிவாம்பிகை - திருவக்கரையில் இறைவி திருநாமம்.

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்.


1)

பொடியாடிய பெருமானருள் புரியாயெனும் உம்பர்

மிடிநீங்கிட மதில்மூன்றெரி மேருச்சிலை யானை

வடிவாம்பிகை மணவாளனை மணிவக்கரை யானைக்

கடிமாமலர் தூவித்தொழக் கழலும்வினை தானே.


"பொடிடிய பெருமான்; ருள் புரியாய்" னும் உம்பர் மிடி நீங்கிட மதில்மூன்று எரி- மேருச்சிலையானை - "திருநீற்றைப் பூசிய பெருமானே! அருள்க" என்ற தேவர்களது துன்பம் தீர, முப்புரங்களை எரித்த மேருவில் ஏந்தியவனை; (பொடி - நீறு); (உம்பர் - தேவர்); (மிடி - துன்பம்); (சிலை - வில்);

வடிவாம்பிகை மணவாளனை - வடிவாம்பிகை என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனை;

மணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 5.52.4 - "மைந்தர்போல் மணி நாகேச்சரவரே");

கடி-மாமலர் தூவித் தொழக் கழலும் வினைதானே - அழகிய வாசமலர்கள் தூவி வழிபட்டால் வினை நீங்கும்;


2)

படமாரர விளவெண்பிறை பயிலுஞ்சடை யானை

அடலேறமர் பெருமான்றனை அணிவக்கரை யானை

மடமானன வடிவாம்பிகை மணவாளனைக் கானில்

நடமாடியை நம்பித்தொழ நலியாவினை தானே.


படம் ஆர் அரவு இளவெண்பிறை பயிலும் சடையானை - படம் உடைய நாகமும் இள-வெண்-திங்களும் இருக்கும் சடையானை;

அடல்-ஏறு அமர் பெருமான்-தனை - வலிய எருதை வாகனமாக விரும்பிய பெருமானை; (அடல் - வலிமை); (அமர்தல் - விரும்புதல்);

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (அணி - அழகு);

மடமான் அன வடிவாம்பிகை மணவாளனைக் - இளமான் போன்ற வடிவாம்பிகை கணவனை; (அன - போன்ற);

கானில் நடமாடியை - சுடுகாட்டில் கூத்தாடுபவனை;

நம்பித் தொழ நலியா வினைதானே - விரும்பி வழிபட்டால் வினைகள் துன்புறுத்தமாட்டா; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்); (நலித்தல் - துன்புறுத்துதல்);


3)

அண்டாமணி கண்டாபுலி அதளாய்அரு நஞ்சை

உண்டாயெனும் மார்க்கண்டரின் உயிர்காத்தபி ரானை

வண்டார்குழல் வடிவாம்பிகை மணவாளனை மல்லார்

எண்டோளனைத் தொழுவார்தமை எய்தாவினை தானே.


"அண்டா மணிகண்டா புலி-அதளாய், - "அண்டனே, நீலகண்டனே, புலித்தோலனே";

அரு-நஞ்சை உண்டாய்" எனும் மார்க்கண்டரின் உயிர் காத்த பிரானை - "கொடிய நஞ்சை உண்டவனே" என்று போற்றிய மார்க்கண்டேயரது உயிரக் காத்த தலைவனை;

வண்டு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வண்டுகள் பொருந்தி ஒலிக்கும் கூந்தலை உடைய வடிவாம்பிகை கணவனை; (ஆர்தல் - பொருந்துதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);

மல் ஆர் எண் தோளனைத் தொழுவார்தமை எய்தா வினைதானே - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடைய சிவபெருமானை வழிபடுபவர்களை வினைகள் அடையா; (மல் - வலிமை);


4)

பிணமாரிடு கானிற்பெரு நடமாடிடு பெற்றிக்

கணநாதனை மழுவாளனைக் கண்ணார்நுத லானை

மணமார்குழல் வடிவாம்பிகை மணவாளனைச் செந்தீ

வணவாகனை வாழ்த்தித்தொழ வல்லார்வினை விடுமே.


பிணம் ஆர் இடுகானில் பெருநடம் ஆடிடு பெற்றிக் கணநாதனை - பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் திருநடம் செய்பவனைக், கணங்களுக்குத் தலைவனை; (பெற்றி - பெருமை; தன்மை);

மழுவாளனைக் - மழுவை ஏந்தியவனை;

கண் ஆர் நுதலானை - நெற்றிக்கண்ணனை;

மணம் ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனைச் - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை;

செந்தீ-வண வாகனை வாழ்த்தித் தொழ வல்லார் வினை விடுமே - செந்தீப் போல் செம்மேனியனை வாழ்த்தி வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்; (தீவணவாகனை = 1. தீ வண்ண ஆகனை; 2. தீ வண்ண வாகனை); (ஆகன் - திருமேனியன்); (வாகன் - அழகுள்ளவன்); (ஆகம் - மேனி; மார்பு); (தொழவல்லார் வினை விடும் = 1. தொழுபவர்களது வினை நீங்கும்; 2. "தொழ வல் ஆர் வினை விடும்" - தொழுதால், வலிமை மிக்க வினைகள் நீங்கும்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதில் நீறது பூசிடும் ஆகனே");


5)

முளைமாமதி புனையீசனை முனிவர்க்குயர் இன்பம்

விளைசேவடி கொடுகூற்றினை விழுமாறுதை தேவை

வளையாரிறை வடிவாம்பிகை மணவாளனை அலகில்

விளையாடியை வழிபட்டவர் வினையாயின விடுமே.


முளை-மா-மதி புனை ஈசனை - அழகிய பிறையை அணிந்த ஈசனை;

முனிவர்க்கு உயர் இன்பம் விளை சேவடிகொடு கூற்றினை விழுமாறு உதை தேவை - முனிவர்களுக்கு ( / மார்க்கண்டேயருக்குப்) பேரின்பம் தரும் சேவடியால் காலனை உதைத்த கடவுளை;

வளை ஆர் இறை வடிவாம்பிகை மணவாளனை - முன்கையில் வளையல் அணிந்த வடிவாம்பிகை கணவனை; (இறை - முன்கை);

அலகு இல் விளையாடியை வழிபட்டவர் வினை ஆயின விடுமே - எல்லையற்ற திருவிளையாடல் புரிபவனை வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்;


6)

வானோர்சொல வந்தம்பெறி மதியில்மதன் நீறு

தானாகிடப் பார்த்தான்றனைச் சடைமேற்பிறை யானை

மானேர்விழி வடிவாம்பிகை மணவாளனைக் கையில்

ஊனார்தலை ஒன்றேந்தியை ஓதக்கெடும் வினையே.


வானோர் சொல வந்து அம்பு எறி மதி இல் மதன் நீறுதான் ஆகிடப் பார்த்தான்தனைச் - தேவர்களது பேச்சைக் கேட்டு அதன்படி ஈசன்மேல் கணை எய்த அறிவற்ற மன்மதனைச் சாம்பல் ஆகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனை;

சடைமேல் பிறையானை - சந்திரமவுலியை; (* சந்திரமௌலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

மான் ஏர் விழி வடிவாம்பிகை மணவாளனைக் - மான் போன்ற நோக்கு உடைய வடிவாம்பிகை கணவனை; (ஏர்தல் - ஒத்தல்);

கையில் ஊன் ஆர் தலை ஒன்று ஏந்தியை ஓதக் கெடும் வினையே - கையில் பிரமனது முடைநாறும் மண்டையோட்டை ஏந்தியவனைப் போற்றி வழிபட்டால் வினைகள் அழியும்;


7)

இன்பால்தயிர் நெய்யாடியை இளவெள்விடை யானைப்

பொன்போலொளிர் சடையான்தனைப் பொழில்வக்கரை யானை

வம்பார்குழல் வடிவாம்பிகை மணவாளனை நாளும்

நம்பாவென அன்பால்தொழ நலியாவினை தானே.


இன்-பால் தயிர் நெய் ஆடியை - இனிய பால், தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவனை;

இள-வெள்-விடையானைப் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

பொன் போல் ஒளிர் சடையான்தனைப் - பொன் போலத் திகழும் சடையை உடையவனை;

பொழில் வக்கரையானை - சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைபவனை;

வம்பு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை; (வம்பு - வாசனை);

நாளும் நம்பா என அன்பால் தொழ நலியா வினைதானே - தினமும் பக்தியோடு, "நம்பனே" என்று அவன் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவாரை வினைகள் வருத்தமாட்டா; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);


8)

முன(ம்)மாமலை பேர்த்தானவன் முடிபத்திறக் கமலம்

அனதாள்விரல் இட்டான்றனை அணிவக்கரை யானை

வனமாமுலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித்

தின(ம்)மாமலர் இடுவார்தமைச் சேராவினை தானே.


முனம் மாமலை பேர்த்தான் அவன் முடி பத்து இறக் கமலம் அன தாள்விரல் இட்டான்தனை - முன்பு கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்-தலைகளும் நசுங்கும்படி தாமரை போன்ற பாதத்தின் விரலை ஊன்றியவனை;

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை;

வன-மா-முலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித் - அழகிய பெரிய தனங்களை உடைய வடிவாம்பிகை கணவனைப் போற்றி; (வனம் - அழகு); (மா - அழகு; பெருமை);

தினம் மாமலர் இடுவார்தமைச் சேரா வினைதானே - தினமும் சிறந்த பூக்களை இட்டு வணங்கும் பக்தர்களை வினைகள் சேரமாட்டா;


9)

ஏரார்மலர் மேலானரி இவர்நேடியு(ம்) மேல்கீழ்

தேராவெரி ஆனான்றனைத் திருவக்கரை யானை

வாரார்முலை வடிவாம்பிகை மணவாளனைக் கண்ணில்

நீரார்தர நினைவார்வினை நில்லாதறும் உடனே.


ஏர் ஆர் மலர் மேலான் அரி இவர் நேடியும் மேல்கீழ் தேரா எரி ஆனான்தனைத் - அழகிய தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடியைத் தேடியும் அறியாத சோதி ஆனவனை; (நேடுதல் - தேடுதல்); (தேர்தல் - அறிதல்);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

வார் ஆர் முலை வடிவாம்பிகை மணவாளனைக் - முலைக்கச்சு அணிந்த வடிவாம்பிகை கணவனை;

கண்ணில் நீர் ஆர்தர நினைவார் வினை நில்லாது அறும் உடனே - கண்ணிர் மல்க நினைந்து வணங்குபவர்களது வினைகளெல்லாம் சீக்கிரம் அழியும்; (ஆர்தல் - நிறைதல்; தருதல் - ஒரு துணைவினை);


10)

நெஞ்சிற்கிறி மிக்கார்திரு நீற்றைப்புனைந் துய்யார்

வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச்

செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே.


நெஞ்சில் கிறி மிக்கார் திருநீற்றைப் புனைந்து உய்யார் - நெஞ்சில் வஞ்சம் மிகுந்தவர் திருநீற்றை அணிந்து உய்யமாட்டார்; (கிறி - பொய்);

வெஞ்சொற்களை விடுமின் - அத்தகையோர் சொல்லும் கொடிய சொற்களைப் பொருளாகக் கொள்ளாமல் நீங்குங்கள்; (மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

பொழில் விரி-வக்கரையானை - சோலை பரந்த திருவக்கரையில் உறைபவனை;

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச் - வஞ்சிக்கொடி போன்ற வடிவாம்பிகை கணவனைப் போற்றி;

செஞ்சொல்-தொடை இடுவார்தமைத் தீண்டா வினைதானே - பாமாலைகள் பாடி வணங்குபவர்களை வினைகள் தீண்டமாட்டா;


11)

இலையார்நுனை சூலப்படை ஏந்தும்பெரு மானைச்

சிலையாவொரு வரையேந்தியைத் திருவக்கரை யானை

மலையான்மகள் வடிவாம்பிகை மணவாளனைக் கங்கை

அலையார்சடை உடையான்றனை அடைவார்வினை அறுமே.


இலை ஆர் நுனை சூலப்படை ஏந்தும் பெருமானைச் - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலாயுதத்தை ஏந்திய பெருமானை;

சிலையா ஒரு வரை ஏந்தியைத் - வில்லாக ஒரு மலையை ஏந்தியவனை; (சிலை - வில்; சிலையா - சிலையாக); (வரை - மலை);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

மலையான்-மகள் வடிவாம்பிகை மணவாளனைக் - மலைமகளான வடிவாம்பிகை கணவனை;

கங்கை அலை ஆர் சடை உடையான்தனை அடைவார் வினை அறுமே - கங்கையைச் சடையில் உடையவனைச் சரணடைந்த அடியவர்களது வினைகள் அழியும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Saturday, July 5, 2025

P.417 - ஆடானை - குறையொன்றிலன் உலகைச்சுடு

2017-12-16

P.417 - ஆடானை - (திருவாடானை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


1)

குறையொன்றிலன் உலகைச்சுடு கொடுநஞ்சினை உண்டு

கறையொன்றிய கண்டத்தினன் கடியார்மலர் நாடி

அறைவண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

இறைவன்கழல் தொழுவார்துயர் இலராவது திடனே.


குறை ஒன்று இலன் - பூரணன்;

உலகைச் சுடு கொடுநஞ்சினை உண்டு கறை ஒன்றிய கண்டத்தினன் - உலகங்களையெல்லாம் சுட்டெரித்த கொடிய ஆலகாலத்தை உண்டு கறை பொருந்திய மிடற்றை உடையவன்;

கடி ஆர் மலர் நாடி அறை வண்டினம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - மணமலர்களை நாடி ஒலிக்கின்ற வண்டுகள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (கடி - வாசனை);

இறைவன் கழல் தொழுவார் துயர் இலர் ஆவது திடனே - சிவபெருமான் திருவடியை வணங்கும் அன்பர்களது துயரம் நீங்குவது உறுதி;


2)

முடைவெண்டலை ஏந்தித்திரி முதல்வன்சுரர் அசுரர்

கடையுங்கடல் உமிழ்நஞ்சடை கண்டன்மழை மேகம்

அடையும்மதில் சூழுந்திரு ஆடானையில் மழுவாட்

படையும்தரி பரமன்கழல் பணிவார்வினை படுமே.


முடை-வெண்-தலை ஏந்தித் திரி முதல்வன் - முடைநாற்றம் உடைய பிரமன் மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சையேற்றுத் திரியும் முதல்வன்;

சுரர் அசுரர் கடையும் கடல் உமிழ் நஞ்சு அடை கண்டன் - தேவர்களும் அசுரர்களும் கடைந்த பாற்கடல் உமிழ்ந்த விஷத்தைக் கண்டத்தில் அடைத்தவன்;

மழைமேகம் அடையும் மதில் சூழும் திருஆடானையில் - மழைமுகில் அடைகின்ற உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

மழுவாள்-படையும் தரி பரமன் கழல் பணிவார் வினை படுமே - (சூலம், மான், இவற்றோடு) மழுவாளையும் ஏந்திய பரமனது திருவடியைப் பணியும் பக்தர்களது வினை அழியும்;


3)

அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான்

வஞ்சிக்கொடி போல்மெல்லிடை மலைமாதொரு பாகன்

அஞ்சொற்கிளி பயிலும்பொழில் ஆடானையில் உறையும்

நஞ்சைக்களம் அணிவான்கழல் நம்பித்தொழ நலமே.


அஞ்சைக்களம் முண்டீச்சரம் அண்ணாமலை மேயான் - திருவஞ்சைக்களம், திருமுண்டீச்சரம், திருவண்ணாமலை முதலிய தலங்களில் உறைபவன்;

வஞ்சிக்கொடி போல் மெல்லிடை மலைமாது ஒரு பாகன் - வஞ்சிக்கொடி போன்ற நுண்ணிடையை உடைய மலைமங்கையை ஒரு பாகமாக உடையவன்;

அஞ்சொற்கிளி பயிலும் பொழில் ஆடானையில் உறையும் - அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறையும்;

நஞ்சைக் களம் அணிவான் கழல் நம்பித் தொழ நலமே - விஷத்தைக் கண்டத்தில் அணிந்த பெருமானது திருவடியை விரும்பித் தொழும் அன்பர்களுக்கு என்றும் நன்மையே; (களம் - கண்டம்);


4)

பாலுந்தயிர் ஆடும்பரன் பாலற்குயிர் தந்து

காலன்றனைக் காலாலுதை கடவுள்கறை மிடறன்

ஆலுங்குயில் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

சூலன்கழல் தனையன்பொடு தொழுவார்வினை தொலைவே.


பாலும் தயிர் ஆடும் பரன் - பாலாலும் தயிராலும் அபிஷேகம் செய்யப்பெறுபவன்;

பாலற்கு உயிர் தந்து காலன்தனைக் காலால் உதை கடவுள் - பாலகனுக்கு (மார்க்கண்டேயருக்கு) உயிர் கொடுத்துக் கூற்றுவனைக் காலால் உதைத்த கடவுள்; (பாலற்கு = பாலன்+கு = பாலனுக்கு);

கறை மிடறன் - நீலகண்டன்;

ஆலும் குயில் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற குயில்கள் அடைகின்ற சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

சூலன் கழல்தனை அன்பொடு தொழுவார் வினை தொலைவே - சூலபாணியின் திருவடியை அன்போடு தொழும் பக்தர்களது வினை அழியும்; (தொலைவு - அழிவு);


5)

மின்போலொளிர் சடையின்மிசை வெண்திங்களை வைத்தான்

இன்பேவுரு ஆனானவன் எல்லாம்செய வல்லான்

அன்பாயியை அகலாதவன் ஆடானையில் உறையும்

நம்பானடி தொழுதார்களை நலியாவினை தானே.


மின் போல் ஒளிர் சடையின்மிசை வெண்-திங்களை வைத்தான் - மின்னலைப் போல ஒளி வீசும் சடையின்மேல் வெண்பிறையைச் சூடியவன்;

இன்பே உரு ஆனான் அவன் - ஆனந்த வடிவினன்;

எல்லாம் செய-வல்லான் - சர்வ-வல்லமை உடையவன்; (செய - செய்ய);

அன்பாயியை அகலாதவன் - அன்பாயி என்ற திருநாமம் உடைய உமையைப் பிரியாதவன்; (* அன்பாயி - திருவாடானை இறைவி திருநாமம்);

ஆடானையில் உறையும் - திருவாடானையில் உறைகின்ற;

நம்பான் அடி தொழுதார்களை நலியா வினை தானே - சிவபெருமான் திருவடியைத் தொழுதவர்களை வினைகள் வருத்தமாட்டா; (நம்பான் / நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - உயிர்களால் விரும்பப்படுபவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.11.7 - "காழிநகர் மேய நம்பானை நண்ணவல்லார் வினை நாசமே");


6)

எழுதாமறை ஒதும்பொருள் இலைமாமலர் தூவித்

தொழுவாருணி துயர்தீர்த்தவன் தோடோர்செவி உடையான்

அழகார்பொழில் புடைசூழ்தரும் ஆடானையில் உறையும்

மழுவாளினன் அடியைத்தொழ மருவாவினை தானே.


எழுதாமறை ஒதும் பொருள் - வேதங்களை ஓதிய மெய்ப்பொருள்; வேதங்கள் பாடுகின்ற பொருள் ஆனவன்;

இலை மாமலர் தூவித் தொழு வாருணி துயர் தீர்த்தவன் - வில்வம் முதலிய இலைகளையும் சிறந்த மலர்களையும் தூவி வழிபட்ட வாருணிக்குச் சாபவிமோசனம் அளித்தவன்; (வாருணி - வருணன் மகன்); (* வாருணியின் சாபவிமோசனத்தைத் திருவாடானைத் தலவரலாற்றில் காண்க);

தோடு ஓர் செவி உடையான் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

அழகு ஆர் பொழில் புடை சூழ்தரும் ஆடானையில் உறையும் - அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற;

மழுவாளினன் அடியைத் தொழ மருவா வினை தானே - மழுவாள் ஏந்தும் சிவபெருமான் திருவடியை வணங்கினால் வினைகள் அடையமாட்டா;


7)

ஓர்வெண்டலை கலனாகிட ஊரூர்பலி திரிவான்

நீர்மண்டிய சடையின்மிசை நிலவைப்புனை நிமலன்

ஆர்வண்டினம் அடையும்பொழில் ஆடானையில் உறையும்

கூர்வெண்மழு உடையான்பெயர் கூறக்கெடும் வினையே.


ஓர் வெண்-தலை கலன் ஆகிட ஊர்-ஊர் பலி திரிவான் - ஒரு வெள்ளை மண்டையோடே பிச்சைப் பாத்திரம் ஆகப், பல்லூர்களில் பிச்சைக்கு உழல்பவன்; (பலி - பிச்சை);

நீர் மண்டிய சடையின்மிசை நிலவைப் புனை நிமலன் - கங்கை தங்கிய சடையின்மேல் சந்திரனை அணிந்த தூயன்;

ஆர் வண்டு-இனம் அடையும் பொழில் ஆடானையில் உறையும் - ஒலிக்கின்ற வண்டுகள் அடையும் சோலை சூழ்ந்த திருவாடானையில் உறைகின்ற; (ஆர்த்தல் - ஒலித்தல்);

கூர்-வெண்-மழு உடையான் பெயர் கூறக் கெடும் வினையே - கூர்மையான ஒளி வீசும் மழுவை ஏந்திய சிவபெருமானது திருப்பெயரைச் சொன்னால் வினை அழியும்;


8)

மலைபோற்புயம் நாலஞ்சினன் வாய்பத்தழு மாறே

மலரார்கழல் விரலூன்றிய வரதன்மழு வாளன்

அலையார்நதி அடைவேணியன் ஆடானையில் என்றும்

நிலையாகிய தலைவன்பெயர் நினைவார்துயர் கெடுமே.


மலைபோல் புயம் நாலஞ்சினன் வாய் பத்து அழுமாறே - மலைபோல் இருபது புஜங்களை உடைய இராவணனது பத்துவாய்களும் அழும்படி; (நாலஞ்சு = 4 x 5 = 20);

மலர் ஆர் கழல் விரல் ஊன்றிய வரதன் - தாமரைமலர் போன்ற திருவடியின் விரலைக் கயிலைமலைமேல் ஊன்றிய வரதன்; (வரதன் - வரம் தருபவன்);

மழுவாளன் - மழுவை ஏந்தியவன்;

அலை ஆர் நதி அடை வேணியன் - அலை மிக்க கங்கையைச் சடையில் அடைத்தவன்; (வேணி - சடை);

ஆடானையில் என்றும் நிலையாகிய தலைவன் பெயர் நினைவார் துயர் கெடுமே - திருவாடானையில் நீங்காது உறைகின்ற தலைவனான சிவபெருமானது திருப்பெயரை நினைக்கின்றவர்களது துயர் நீங்கும்;


9)

தக்கன்றலை துண்டித்தவன் சங்கேந்தியும் அயனும்

வெட்கும்படி உயர்சோதியன் வெண்ணூல்திகழ் மார்பன்

அக்கும்புனை அழகன்திரு ஆடானையில் உறையும்

முக்கண்திகழ் முதல்வன்புகழ் மொழிவார்துயர் கெடுமே.


தக்கன்-லை துண்டித்தவன் - தக்கனது வேள்வியை அழித்து அவனது தலையை வெட்டிய பெருமான்;

சங்கு-ஏந்தியும் அயனும் வெட்கும்படி உயர் சோதியன் - சங்கினை ஏந்தும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிக் காணாராய்) நாணும்படி உயர்ந்த ஜோதிப்பிழம்பு; (வெட்குதல் - நாணப்படுதல்; அஞ்சுதல்);

வெண்ணூல் திகழ் மார்பன் - திருமார்பில் வெண்ணூல் அணிந்தவன்;

அக்கும் புனை அழகன் - எலும்பையும் அணியும் அழகன்; (அக்கு - எலும்பு);

திருஆடானையில் உறையும் முக்கண் திகழ் முதல்வன் புகழ் மொழிவார் துயர் கெடுமே - திருவாடானையில் உறைகின்ற முக்கண்ணனது திருப்புகழைப் பேசும் (/பாடும்) அன்பர்களது துயர் நீங்கும்;


10)

கறையேமலி நெஞ்சத்தினர் பறைபொய்களை மதியேல்

பிறையோடிள நாகம்புனை பெருமான்சிறை வண்டின்

அறையார்பொழில் திகழும்திரு ஆடானையில் உறையும்

மறையோதியின் அடிவாழ்த்திட மறவார்மகிழ் வாரே.


கறையே மலி நெஞ்சத்தினர் பறை பொய்களை மதியேல் - குற்றமே மிகுந்த வஞ்சநெஞ்சர்கள் சொல்கின்ற பொய்களை மதிக்கவேண்டா;

பிறையோடு இளநாகம் புனை பெருமான் - பிறையையும் இளநாகத்தையும் அணிந்த பெருமான்;

சிறை-வண்டின் அறை ஆர் பொழில் திகழும் திருஆடானையில் உறையும் - சிறகுகளை உடைய வண்டுகளின் ஒலி மிக்க சோலை திகழும் திருவாடானையில் உறைகின்ற; (சிறை - சிறகு); (அறை - ஓசை); (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்; நிறைதல்);

மறை-தியின் அடி வாழ்த்திட மறவார் மகிழ்வாரே - மறைகளைப் பாடியருளிய சிவபெருமானது திருவடியை மறவாமல் வாழ்த்தும் அன்பர்கள் இன்பம் எய்துவார்கள்;


11)

மாலிந்திரன் மலர்மேலயன் வழிபாடுசெய் ஒருவன்

கோலந்திகழ் மதியந்தனைக் குஞ்சிப்புனை கூத்தன்

ஆலின்புடை மறைசொன்னவன் ஆடானையில் உறையும்

நீலந்திகழ் கண்டன்கழல் நினைவார்மகிழ் வாரே.


மால் இந்திரன் மலர்மேல்-அயன் வழிபாடுசெய் ஒருவன் - திருமாலாலும் இந்திரனாலும் தாமரைமேல் உறையும் பிரமனாலும் வழிபடப்படும் ஒப்பற்றவன்;

கோலம் திகழ் மதியம்தனைக் குஞ்சிப் புனை கூத்தன் - அழகிய சந்திரனைத் திருமுடிமேல் அணிந்த கூத்தன்; (குஞ்சி - தலை);

ஆலின்புடை மறை சொன்னவன் - கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி; (சம்பந்தர் தேவாரம் - 1.48.1 - "ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே");

ஆடானையில் உறையும் நீலம் திகழ் கண்டன் கழல் நினைவார் மகிழ்வாரே - திருவாடானையில் உறைகின்ற நீலகண்டனது திருவடியை எண்ணி வழிபடும் அன்பர்கள் இன்புறுவார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------