2018-08-26
P.446 - நாவலூர்
-------------------------------
(எண்சீர்ச் சந்தவிருத்தம் - தானன தான தான தனதான தான தனதான தான தனனா)
(சம்பந்தர் தேவாரம் - 2.85.1 - "வேயுறு தோளிபங்கன்")
(அப்பர் தேவாரம் - 4.14.1 - "பருவரை யொன்றுசுற்றி")
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
முத்தழல் ஓம்பி னார்கள் மறைநாலும் ஓதி முறையால்வ ணங்கு முதல்வன்
செத்தவர் என்பு தன்னை அணியாம கிழ்ந்த திருவாளன் ஒற்றை விடையன்
தெத்தென என்று வண்டு தினமூது கின்ற திருநாவ லூரில் உறையும்
அத்தனை எண்ணி நாளும் அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
முத்தழல் ஓம்பினார்கள் மறை நாலும் ஓதி முறையால் வணங்கு முதல்வன் - கார்ஹபத்யம், ஆஹவனீயம், தக்ஷிணாக்னி என்ற முத்தீ வளர்க்கும் அந்தணர்கள் நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதி முறைப்படி வழிபாடு செய்யும் முதல்வன்;
செத்தவர் என்புதன்னை அணியா மகிழ்ந்த திருவாளன் - மாண்டவர் எலும்பை மாலையாக அணிகின்ற செல்வன்; (அணியா - அணியாக);
ஒற்றை விடையன் - ஒப்பற்ற இடபவாகனன்;
தெத்தென என்று வண்டு தினம் ஊதுகின்ற திருநாவலூரில் உறையும் - தெத்தென என்று வண்டுகள் எந்நாளும் ஒலிக்கின்ற (சோலை சூழ்ந்த) திருநாவலூரில் உறைகின்ற;
அத்தனை எண்ணி நாளும் அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - தந்தையைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அத்தன் - தந்தை);
2)
மறைகொடு வாழ்த்து மாணி உயிர்கொல்ல நண்ணி வருகூற்று தைத்த கழலன்
நறைமலி கின்ற கொன்றை நளிர்திங்கள் நாக(ம்) நதிசூடு கின்ற சடையன்
சிறையணி வண்டி னங்கள் திரள்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
அறவனை எண்ணி நாளும் அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
மறைகொடு வாழ்த்து மாணி உயிர் கொல்ல நண்ணி வரு கூற்று உதைத்த கழலன் - வேதமந்திரங்களால் வழிபாடு செய்த மார்க்கண்டேயரது உயிரைக் கொல்வதற்கு நெருங்கி வந்த கூற்றுவனை உதைத்த கழல் அணிந்த திருவடியினன்; (நண்ணுதல் - கிட்டுதல்);
நறை மலிகின்ற கொன்றை நளிர்-திங்கள் நாகம் நதி சூடுகின்ற சடையன் - தேன் மிக்க கொன்றைமலர், குளிர்ந்த சந்திரன், பாம்பு, கங்கை இவற்றைச் சடையில் சூடியவன்; (நறை - தேன்; வாசனை); (நளிர்தல் - குளிர்தல்);
சிறை அணி வண்டினங்கள் திரள் சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - சிறகுகளையுடைய வண்டுகள் திரள்கின்ற பொழில் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற; (சிறை - சிறகு);
அறவனை எண்ணி நாளும் அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - அறவடிவினனான சிவபெருமானைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும்.
3)
சந்திரன் உய்யு மாறு தயையேபு ரிந்து சடைமீது சூடு பெருமான்
சுந்தரி பாகன் நீறு துதைமார்பன் எந்தை சுடர்சூலம் ஏந்தும் இறைவன்
தெந்தென என்று வண்டு மதுவுண்டு பாடு திருநாவ லூரில் உறையும்
அந்தரர் கோனை நாளும் அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
சந்திரன் உய்யுமாறு தயையே புரிந்து சடைமீது சூடு பெருமான் - சாபத்தால் தேய்ந்து அழியவிருந்த சந்திரன் உய்யும்படி மிக இரங்கி அருள்புரிந்து தன் சடைமேல் சூடிய பெருமான்;
சுந்தரி பாகன் - அழகிய உமையை ஒரு பாகமாக உடையவன்; (* சுந்தராம்பிகை - இத்தலத்து இறைவி திருநாமம்);
நீறு துதை மார்பன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்; (துதைதல் - மிகுதல்; படிதல்);
எந்தை - எம் தந்தை;
சுடர் சூலம் ஏந்தும் இறைவன் - கையில் நெருப்பையும் சூலத்தையும் ஏந்திய இறைவன்;
தெந்தென என்று வண்டு மது உண்டு பாடு திருநாவலூரில் உறையும் - பூக்களின் மதுவை உண்டு வண்டுகள் தெந்தென என்று ஒலிக்கின்ற திருநாவலூரில் உறைகின்ற;
அந்தரர் கோனை நாளும் அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - தேவர்கள் தலைவனான சிவபெருமானைத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும்.
4)
மாநகர் மூன்று(ம்) மாய மலைவில்லை ஏந்தி மணியார ரங்கம் எனவே
கானக(ம்) நாடும் எந்தை கலியார்ந்த கங்கை கடிநாறு கொன்றை புனைவான்
தேனலர் மல்கு சோலை தனில்வண்டு பாடு திருநாவ லூரில் உறையும்
வானவர் கோனை நாளு(ம்) மலர்தூவி ஏத்த மருவாவ ருத்து வினையே.
மாநகர் மூன்று(ம்) மாய மலைவில்லை ஏந்தி - பெரிய முப்புரங்களும் அழிய மேருமலையை வில்லாக ஏந்தியவன்;
மணி ஆர் அரங்கம் எனவே கானகம் நாடும் எந்தை - (கூத்தாட) அழகிய அரங்கமாகச் சுடுகாட்டை விரும்பும் எம் தந்தை; (மணி - அழகு); (ஆர்தல் - பொருந்துதல்);
கலி ஆர்ந்த கங்கை கடி நாறு கொன்றை புனைவான் - (அலைகளால்) ஒலி மிகுந்த கங்கையையும், வாசம் கமழும் கொன்றைமலரையும் அணிபவன்; (கலி - ஒலி); (கடி - வாசனை); (நாறுதல் - மணம்வீசுதல்);
தேன்-அலர் மல்கு சோலைதனில் வண்டு பாடு திருநாவலூரில் உறையும் - தேன் மிக்க பூக்கள் நிறைந்த பொழிலில் வண்டுகள் இசைபாடுகின்ற திருநாவலூரில் உறைகின்ற; (அலர் - பூ);
வானவர் கோனை நாளும் மலர் தூவி ஏத்த மருவா வருத்து வினையே - தேவர்கள் தலைவனான சிவபெருமானைத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம்மை வருத்துகின்ற பழவினைகள் எல்லாம் நெருங்கமாட்டா; (மருவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (வருத்துதல் - வருந்தச்செய்தல்);
5)
அன்றிகழ் தக்கன் வேள்வி அதுசெற்ற வீரன் அழகார்ந்த தில்லை நகரில்
மன்றினில் ஆடு கின்ற மலரொத்த பாதன் மலையான்ம டந்தை கணவன்
சென்றடை வண்டி னங்கள் மகிழ்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
மன்றனை எண்ணி நாளு(ம்) மலர்தூவி ஏத்த மருவாவ ருத்து வினையே.
அன்று இகழ் தக்கன் வேள்வி அது செற்ற வீரன் - முன்பு அவமதித்த தக்கன் செய்த வேள்வியை அழித்த வீரன்; (செறுதல் - அழித்தல்);
அழகு ஆர்ந்த தில்லை நகரில் மன்றினில் ஆடுகின்ற மலர் ஒத்த பாதன் - அழகிய தில்லையில் அம்பலத்தில் ஆடுகின்ற மலர்ப்பாதத்தை உடையவன்;
மலையான் மடந்தை கணவன் - பர்வதராஜன் மகளுக்குக் கணவன்;
சென்று அடை வண்டினங்கள் மகிழ் சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - வண்டுகள் சென்றடைந்து இன்புறுகின்ற பொழில் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற;
மன்-தனை எண்ணி நாளும் மலர் தூவி ஏத்த மருவா வருத்து வினையே - அரசனான சிவபெருமானைத் தியானித்துத் தினமும் பூக்களைத் தூவி வழிபட்டால், நம்மை வருத்துகின்ற பழவினைகள் எல்லாம் நெருங்கமாட்டா; (மன் - அரசன்; மன்றனை = மன்+தனை = அரசனை);
6)
சிரமொரு கையில் ஏந்தி வருவள்ளல் எந்தை திருநாமம் ஓதி அடியைப்
பரவிய கோடி தேவர் பய(ம்)நீக்கி மண்டு படுநஞ்சை உண்ட பரமன்
திரளறு காலி னங்கள் மகிழ்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
அரவணி மார்பி னானை அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
சிரம் ஒரு கையில் ஏந்தி வரு வள்ளல் - பிரமனது மண்டையோட்டை ஒரு கையில் ஏந்தி வரும் வள்ளல்;
எந்தை - எம் தந்தை;
திருநாமம் ஓதி அடியைப் பரவிய கோடி தேவர் பய(ம்) நீக்கி, மண்டு படுநஞ்சை உண்ட பரமன் - (ஆலகாலத்தைக் கண்டு அஞ்சித்) திருநாமத்தை ஓதித் திருவடியைப் போற்றிய எண்ணற்ற தேவர்களது பயத்தைத் தீர்த்துப், பெருகிய கொடிய விஷத்தை உண்ட பரமன்; (மண்டுதல் - மிகுதல்; திரள்தல்); (படு - கொடிய); (படுத்தல் - அழித்தல்); (அப்பர் தேவாரம் - 6.65.8 - "உண்டு படுவிடங் கண்டத் தொடுக்கினான் காண்" - படுவிடம் - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு);
திரள் அறுகால்-இனங்கள் மகிழ் சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - திரள்கின்ற வண்டுகள் மகிழ்கின்ற பொழில் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற; (அறுகால் - வண்டு);
அரவு அணி மார்பினானை அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - பாம்பை மார்பில் தார் (மாலை) போல அணிந்த சிவபெருமானைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அரவு - பாம்பு);
7)
வலியச லந்த ரன்றன் உடல்வெட்டும் ஆழி மணிவண்ணன் வேண்ட அருள்வான்
புலியதள் ஆடை மீது பொறிநாகம் ஆர்த்த புனிதன்பு ரங்கள் எரியச்
சிலைவளை வித்த எந்தை திகழ்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
அலைபுனல் வேணி யானை அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
வலிய சலந்தரன்தன் உடல் வெட்டும் ஆழி மணிவண்ணன் வேண்ட அருள்வான் - வலிமை மிக்க ஜலந்தராசுரனது உடலை வெட்டிய சக்கராயுதத்தை விரும்பிய திருமாலுக்குத் தந்தவன்; (ஆழி - சக்கரம்);
புலி-அதள் ஆடைமீது பொறி-நாகம் ஆர்த்த புனிதன் - புலித்தோலை ஆடையாக அணிந்து அதன்மீது புள்ளிகள் திகழும் பாம்பைக் கட்டிய தூயவன்; (அதள் - தோல்); (பொறி - புள்ளி); (ஆர்த்தல் - கட்டுதல்);
புரங்கள் எரியச் சிலை வளைவித்த எந்தை - முப்புரங்கள் எரியும்படி (மலையை வில்லாக வளைத்து அந்த) வில்லை வளைத்த எம் தந்தை; (சிலை - வில்; மலை); (வளைவித்தல் - வளையச் செய்தல்); (அப்பர் தேவாரம் - 6.47.4 - "சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவச் சிலைவளைவித் துமையவளை அஞ்ச நோக்கிக்");
திகழ் சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - அழகிய பொழில் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற;
அலை-புனல் வேணியானை அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - அலைக்கின்ற (& அலைகின்ற) கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமானைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அலைத்தல் - அலைமோதுதல்; அலைதல் - திரிதல்); (புனல் - நீர்; ஆறு);
8)
வெறிமிக வந்து வெற்பை எறிமூடன் வாட விரலூன்றி வாளும் அருள்வான்
மறியொரு கையில் ஏந்தி மணிமார்பில் நூலன் வலமார்ந்த வெள்ளை விடையன்
செறிதரு சோலை தன்னில் இசைவண்டு பாடு திருநாவ லூரில் உறையும்
அறிவுரு வாயி னானை அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
வெறி மிக வந்து வெற்பை எறி மூடன் வாட விரல் ஊன்றி வாளும் அருள்வான் - மிகுந்த சினத்தோடு வந்து கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்ற அறிவீனனான இராவணன் வருந்தும்படி ஒரு விரல் ஊன்றி அவனை நசுக்கிப் பின் அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற வாளையும் அருள்புரிந்தவன்; (வெறி - கோபம்); (வெற்பு - மலை);
மறி ஒரு கையில் ஏந்தி - மான்கன்றை ஒரு கரத்தில் ஏந்தியவன்; (மறி - மான்கன்று);
மணி-மார்பில் நூலன் - அழகிய பவளம் போன்ற திருமார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (மணி - அழகு; பவளம்);
வலம் ஆர்ந்த வெள்ளை விடையன் - வலிமையும் வெற்றியும் பொருந்திய வெள்ளை இடபத்தை வாகனமாக உடையவன்; (வலம் - வலிமை; வெற்றி); (ஆர்தல் - பொருந்துதல்);
செறிதரு சோலைதன்னில் இசை வண்டு பாடு திருநாவலூரில் உறையும் - அடர்ந்த சோலையில் வண்டுகள் இசைபாடுகின்ற திருநாவலூரில் உறைகின்ற; (செறிதல் - அடர்தல்; தருதல் - ஒரு துணைவினை);
அறிவுரு ஆயினானை அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - ஞானவடிவினனான சிவபெருமானைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அறிவுரு - அறிவு வடிவானவன் - கடவுள்);
9)
பங்கயன் ஆழி ஏந்தும் அரிநேட நின்ற பரமான சோதி உருவன்
அங்கயல் அன்ன கண்ணி அகலாமல் ஒன்றும் அழகாரும் மேனி உடையான்
திங்களை உச்சி தீண்ட உயர்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
அங்கணன் நற்ப தங்கள் அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
பங்கயன் ஆழி ஏந்தும் அரி நேட நின்ற பரம் ஆன சோதி உருவன் - தாமரைமேல் இருக்கும் பிரமனும் சக்கராயுதத்தை ஏந்தும் திருமாலும் தேடுமாறு ஓங்கிய மேலான ஜோதி வடிவினன்; (ஆழி - சக்கரம்; கடல்); (ஆழி ஏந்தும் அரி = "கடல்மீது இருக்கும் திருமால்" என்றும் பொருள்கொள்ளக் கூடும்);
அங்கயல் அன்ன கண்ணி அகலாமல் ஒன்றும் அழகு ஆரும் மேனி உடையான் - அழகிய கயல்மீன் போன்ற கண்களை உடைய உமாதேவி நீங்காமல் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அழகிய திருமேனியை உடையவன்; (ஒன்றுதல் - ஒன்றாதல்);
திங்களை உச்சி தீண்ட உயர்-சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - சந்திரனைத் தொடுமாறு ஓங்கி வளர்ந்த சோலைகள் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற;
அங்கணன் நற்பதங்கள் அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - அருட்கண்ணனான சிவபெருமானுடைய நல்ல திருவடிகளைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அங்கணன் - அருள்நோக்கம் உடையவன்);
10)
பொய்வழி தன்னை நன்று புகுமென்று வந்து புகலீனர் சொல்லை மதியேல்
மைவிழி மங்கை பங்கன் மறையோது நாவன் மணிநீல கண்டம் உடையான்
செவ்வழி பாடி வண்டு திரள்சோலை சூழ்ந்த திருநாவ லூரில் உறையும்
செவ்வழல் மேனி யானை நினைசிந்தை யாளர் திகழ்வானில் வாழ்வர் திடனே.
பொய்வழிதன்னை "நன்று; புகும்" என்று வந்து புகல் ஈனர் சொல்லை மதியேல் - பொய்ந்நெறியை, "நல்ல நெறி; வந்து சேருங்கள்" என்று வந்து சொல்கின்ற கீழோர்கள் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா; (புகல்தல் - சொல்தல்);
மைவிழி மங்கை பங்கன் - மை தீட்டப்பெற்ற கண்களையுடைய உமையை ஒரு பங்காக உடையவன்;
மறை ஓது நாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;
மணி-நீலகண்டம் உடையான் - அழகிய நீலகண்டத்தை உடையவன்;
செவ்வழி பாடி வண்டு திரள் சோலை சூழ்ந்த திருநாவலூரில் உறையும் - இனிய இசை பாடி வண்டுகள் திரள்கின்ற சோலைகள் சூழ்ந்த திருநாவலூரில் உறைகின்ற; (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்; நல்ல மார்க்கம்);
செவ்வழல் மேனியானை நினை சிந்தையாளர் திகழ் வானில் வாழ்வர் திடனே - செந்தீப் போன்ற செம்மேனியனான சிவபெருமானைத் தியானிக்கின்ற அடியவர்கள் சிவலோகத்தில் நிலைத்து வாழ்வது நிச்சயம்; (சிந்தை - மனம்); (திடன் - திடம் - உறுதி; நிச்சயம்);
11)
ஐம்மணி வீக்கள் ஏவு மதன்வேவ நோக்கும் அழலார்நு தற்க ணுடையார்
வெம்மணி நாக மாக ஒளிநீறு பூசி விடையூர்தி ஏறு விகிர்தர்
செம்மணி போன்றி லங்கு திருமேனி யாளர் திருநாவ லூரில் உறையும்
அம்மணி கண்ட னாரை அலர்தூவி ஏத்த அறு(ம்)முன்பு செய்த வினையே.
ஐம்-மணி வீக்கள் ஏவு மதன் வேவ நோக்கும் அழல் ஆர் நுதற்கண் உடையார் - ஐந்து அழகிய சிறந்த பூக்களை அம்பாக ஏவுகின்ற மன்மதன் வெந்து சாம்பலாகும்படி நோக்கிய தீ உமிழும் நெற்றிக்கண் உடையவர்; (மணி - அழகு; சிறந்தது); (வீ - மலர்); (நுதல் - நெற்றி);
வெம்-மணி நாகம் ஆக, ஒளி நீறு பூசி, விடையூர்தி ஏறு விகிர்தர் - விரும்பிய ஆபரணம் பாம்பே ஆக, ஒளி வீசும் திருநீற்றைப் பூசி, இடபவாகனத்தில் ஏறுகின்ற விகிர்தர்; (வெம்மை - விருப்பம்); (மணி - மணி-மாலை; ஆபரணம்); (விகிர்தர் - மாறுபட்ட செயலினர் - சிவன் திருநாமங்களுள் ஒன்று); (சம்பந்தர் தேவாரம் - 2.85.3 - "உருவளர் பவளமேனி ஒளிநீறணிந்து");
செம்-மணி போன்று இலங்கு திருமேனியாளர் - பவளம் போன்று விளங்கும் செம்மேனி உடையவர்;
திருநாவலூரில் உறையும் - திருநாவலூரில் உறைகின்ற;
அம்-மணிகண்டனாரை அலர் தூவி ஏத்த அறும் முன்பு செய்த வினையே - அந்த அழகிய மணிகண்டம் உடையவரான சிவபெருமானாரைப் பூக்களைத் தூவி வழிபட்டால், நம் பழவினைகள் எல்லாம் தீரும். (அ - அந்த - பண்டறிசுட்டு); (அம் - அழகு);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment