2019-01-27
P.463 - அவிநாசி
-------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;
1)
முடிமிசைவெண் பிறையணிந்த முக்கணனே முழுமுதலே
கொடிமிசையோர் ஏறுடையாய் கூடல்நகர் தனிற்பிரம்பால்
அடியுணுமோர் அருட்கடலே அவிநாசி அப்பனே
அடிபரவும் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
முடிமிசை வெண்-பிறை அணிந்த முக்கணனே - தலைமேல் வெண்மையான பிறையைச் சூடிய முக்கண்ணனே;
முழுமுதலே - முழுமுதற்பொருளே;
கொடிமிசை ஓர் ஏறு உடையாய் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே;
கூடல்நகர்தனில் பிரம்பால் அடியுணும் ஓர் அருட்கடலே - மதுரையில் பிரம்படி பட்ட ஒப்பற்ற அருட்கடல் ஆனவனே; (கூடனகர் = கூடல் நகர்; கூடல் = மதுரை);
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அடி-பரவும் அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அப்பர் தேவாரம் - 6.47.10 - "அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே");
2)
திரளாகிச் சரண்புகுந்த தேவர்களுக் கமுதீந்த
கருளாரும் கண்டத்தாய் கதிர்மதியத் துண்டத்தாய்
அரைநாணா அரவுடையாய் அவிநாசி அப்பனே
அருளாளா அடியேனை அஞ்சேலென் றருளாயே.
திரளாகிச் சரண்புகுந்த தேவர்களுக்கு அமுது ஈந்த கருள் ஆரும் கண்டத்தாய் - திரண்டுவந்து சரணடைந்த தேவர்களுக்கு அமுதத்தை அருளி, ஆலகாலத்தை உண்டு கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே; (கருள் - கறுப்பு);
கதிர்மதியத் துண்டத்தாய் - நிலாத்துண்டத்தைச் சூடியவனே; (கதிர் - கிரணம்);
அரைநாணா அரவு உடையாய் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவனே; (நாணா - நாணாக);
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அருளாளா, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அருளாளனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
3)
கங்குலினில் ஆடுகின்ற கணநாதா கழல்தொழுத
திங்களணி செஞ்சடையில் திரைமலிந்த கங்கையினாய்
அங்கமணி ஆரழகா அவிநாசி அப்பனே
அங்கணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.
கங்குலினில் ஆடுகின்ற கணநாதா - இருளில் கூத்தாடுகின்றவனே, கணநாதனே; (கங்குல் - இரவு);
கழல் தொழுத திங்கள் அணி செஞ்சடையில் திரை மலிந்த கங்கையினாய் - திருவடியை வணங்கிய சந்திரனை அணிந்த சிவந்த சடையில் அலைமிக்க கங்கையைத் தாங்கியவனே; (திரை - அலை);
அங்கம் அணி ஆரழகா - எலும்பைப் பூணுகின்ற அரிய அழகனே; (அங்கம் - எலும்பு); (அப்பர் தேவாரம் - 6.60.5 - "அங்கம் அணி ஆகத்தானை"); (சுந்தரர் தேவாரம் - 7.84.7 - "அங்கம் அணிந்தவனை");
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அங்கணனே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அருள்நோக்கம் உடையவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
4)
கோலமங்கை கூறுடையாய் கும்பிட்ட மார்க்கண்டர்
பாலடைந்த கூற்றுதைத்த பைங்கழலாய் அறமுரைக்க
ஆலமர்ந்த பரங்குருவே அவிநாசி அப்பனே
ஆலமுண்டாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
கோல-மங்கை கூறு உடையாய் - அழகிய உமையை ஒரு கூறாக உடையவனே;
கும்பிட்ட மார்க்கண்டர்பால் அடைந்த கூற்று உதைத்த பைங்கழலாய் - வழிபட்ட மார்க்கண்டேயரிடம் வந்த காலனை உதைத்த திருவடியினனே;
அறம் உரைக்க ஆல் அமர்ந்த பரங்குருவே - சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தடியை நாடிய மேலான குருவே; (பரம் - மேலானது);
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
ஆலம் உண்டாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஆலகால விடத்தை உண்டவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
5)
வெஞ்சினவெள் விடையுடையாய் வெண்மழுவாட் படையுடையாய்
மஞ்சணவும் மலைமன்னன் மகளொருபால் மகிழ்ந்தவனே
அஞ்சடைமேல் அரவணிந்த அவிநாசி அப்பனே
அஞ்செழுத்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
வெஞ்சின வெள்-விடை உடையாய் - கொடிய சினமுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே;
வெண்மழுவாட்படை உடையாய் - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);
மஞ்சு அணவும் மலைமன்னன் மகள் ஒருபால் மகிழ்ந்தவனே - மேகம் பொருந்தும் மலைக்கு மன்னன் மகளான உமையை ஒரு பாகமாக விரும்பியவனே; (அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்);
அஞ்சடைமேல் அரவு அணிந்த அவிநாசி அப்பனே - அழகிய சடைமேல் பாம்பை அணிந்தவனே, அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே; (அம் - அழகு);
அஞ்செழுத்தாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஐந்தெழுத்து மந்திரம் ஆனவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (திருமந்திரம் - 10.4.2.55 - "உண்ணும் மருந்தும் .. .. எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே"); (ஒரு பெரியவர் சொன்னது: "தெய்வ நாமத்தைச் சொல்வது சுலபவழி! ... நாமத்தை உச்சரித்து அதனைக் கேட்கும்போது நாம் உணர்வது இறைவனையேதான்! ஏனெனில் அவரது உருவினில் ஒன்று நாமஉரு!");
6)
நீறணிந்த மேனிதனில் நேரிழையாள் தன்னையொரு
கூறணிந்த கொள்கையினாய் குழைக்காதா மறையங்கம்
ஆறறிந்தார் தொழுமிறையே அவிநாசி அப்பனே
ஆறணிந்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
நீறு அணிந்த மேனிதனில் நேரிழையாள்தன்னை ஒரு கூறு அணிந்த கொள்கையினாய் - திருநீற்றைப் பூசிய திருமேனியில் உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (சுந்தரர் தேவாரம் - 7.64.1 - "மடந்தை கூறு தாங்கிய கொள்கையினானை");
குழைக்காதா - காதில் குழையை அணிந்தவனே;
மறை அங்கம்-ஆறு அறிந்தார் தொழும் இறையே - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவர்களால் வழிபடப்பெறும் இறைவனே;
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
ஆறு அணிந்தாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - கங்கையை அணிந்தவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
7)
கவினுறுபூங் கணையெய்த காமனைமுன் காய்ந்தவனே
செவியினிலோர் தோடுடையாய் செருக்குடையான் வேள்விதனில்
அவியளியான் சிரமறுத்தாய் அவிநாசி அப்பனே
அவிர்சடையாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
கவினுறு பூங்கணை எய்த காமனை முன் காய்ந்தவனே - அழகிய மலர்க்கணையை எய்த மன்மதனை முன்பு கோபித்துச் சாம்பலாக்கியவனே; (காய்தல்- சினத்தல்; எரித்தல்);
செவியினில் ஓர் தோடு உடையாய் - ஒரு காதில் தோடு அணிந்தவனே;
செருக்கு உடையான், வேள்விதனில் அவி அளியான் சிரம் அறுத்தாய் - ஆணவம் மிக்கவனும், தான் செய்த யாகத்தில் சிவனுக்கு ஹவிர்பாகம் கொடாதவனுமான தக்கனது தலையை வெட்டியவனே;
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அவிர்-சடையாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஒளிவீசும் சடையை உடையவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அவிர்தல் - பிரகாசித்தல்);
8)
உழுவைத்தோல் உடையானே ஒள்ளெரியில் புரமூன்றை
விழவைத்த விறலுடையாய் வெற்பெடுத்த தசமுகனை
அழவைத்த விரலுடையாய் அவிநாசி அப்பனே
அழல்வண்ணா அடியேனை அஞ்சேலென் றருளாயே.
உழுவைத்தோல் உடையானே - புலித்தோலை உடையாக உடையவனே; (உழுவை - புலி);
ஒள்-எரியில் புரம்-மூன்றை விழவைத்த விறல் உடையாய் - ஒளிவீசும் தீயில் முப்புரங்களை விழச்செய்த வெற்றியுடையவனே; (விறல் - வெற்றி; வலிமை; பெருமை);
வெற்பு எடுத்த தசமுகனை அழவைத்த விரல் உடையாய் - கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனைத் திருப்பாத-விரலை ஊன்றி அழச்செய்தவனே;
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அழல்வண்ணா, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - தீவண்ணனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
9)
கைம்மாவை உரிசெய்த கண்ணுதலே கறைக்கண்டா
தம்மானை அறியாது தருக்கித்த சதுர்முகனும்
அம்மாலும் தேடநின்ற அவிநாசி அப்பனே
அம்மானே அடியேனை அஞ்சேலென் றருளாயே.
கைம்மாவை உரிசெய்த கண்ணுதலே - யானையின் தோலை உரித்த நெற்றிக்கண்ணனே; (கைம்மா - யானை);
கறைக்கண்டா - நீலகண்டனே;
தம்மானை அறியாது தருக்கித்த சதுர்முகனும் அம்மாலும் தேட நின்ற - தம் தலைவனை அறியாமல் வாதுசெய்த நான்முகனும் அந்தத் திருமாலும் தேடும்படி ஜோதியாகி ஓங்கி நின்ற; (மான் - தலைவன்); (தருக்கித்தல் - வாதஞ்செய்தல்); (அ - பண்டறிசுட்டு);
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அம்மானே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - பெருமானே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அம்மான் - இறைவன்);
10)
வெந்தபொடி அணியார்சொல் வெற்றுரையில் வீழாமல்
வந்துதொழும் அடியாரை வாழ்விப்பாய் சூலத்தால்
அந்தகனை அழித்தவனே அவிநாசி அப்பனே
அந்தணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.
வெந்த-பொடி அணியார் சொல் வெற்றுரையில் வீழாமல் வந்து தொழும் அடியாரை வாழ்விப்பாய் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வெற்றுப்பேச்சில் (அர்த்தமற்ற வார்த்தைகளில்) மயங்காமல், அன்போடு வந்து வழிபடும் பக்தர்களை இனிது வாழ்விப்பவனே;
சூலத்தால் அந்தகனை அழித்தவனே - சூலாயுதத்தால் அந்தகாசுரனைக் குத்தியவனே;
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
அந்தணனே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - குளிர்ந்த அருளுடைய சிவபெருமானே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அந்தணன் - குளிர்ந்த தண்ணளியைச் செய்பவன் - சிவன்); (அப்பர் தேவாரம் - 5.97.10 - "ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் மெய்யன்");
11)
பாடவலாய் நான்மறையைப் பார்த்தனுக்காப் பன்றிப்பின்
ஓடவலாய் ஊணிரக்க ஓடுடையாய் தோலல்லால்
ஆடையிலாய் அற்புதனே அவிநாசி அப்பனே
ஆடவலாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.
பாட வலாய் நான்மறையைப் - நால்வேதங்களைப் பாடியருளியவனே; (வலாய் - வல்லாய் - வல்லவனே);
பார்த்தனுக்காப் பன்றிப்பின் ஓட வலாய் - அர்ஜுனனுக்குப் பாசுபதம் அருள்வதற்காக ஒரு வேடனாகி ஒரு பன்றியைத் துரத்திச் சென்றவனே;
ஊண் இரக்க ஓடு உடையாய் - உணவை யாசிக்க மண்டையோட்டை ஏந்தியவனே; (ஊண் - உணவு);
தோல் அல்லால் ஆடை இலாய், அற்புதனே - தோலைத் தவிர வேறு ஆடை இல்லாதவனே, அற்புதனே;
அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;
ஆட வலாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - கூத்தாட வல்லவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment