2019-01-19
V.059 - பனி மலிந்த தடவரை - தனிப்பாடல்
---------------------------------
(கட்டளைக் கலிப்பா)
(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும்");
(சம்பந்தர் தேவாரம் - 3.114.1 - "பாயு மால்விடை")
பனிம லிந்த தடவரை மன்னவன்
.. பயந்த பைங்கிளி பூங்கொடி மெல்லிடை
வனிதை தன்னையோர் பாகம் விரும்பினாய்
.. மறைவி ரிக்கக்கல் லாலமர் அண்ணலே
மனிதர் வானவர் வாச மலரிட்டு
.. வைக லும்தொழும் முக்கட் பரமனே
புனித னேஉன் புகழ்தனைச் செப்பினேன்
.. புன்மை ஆயின தீர்த்தருள் செய்திடே.
பனி மலிந்த தடவரை மன்னவன் பயந்த பைங்கிளி பூங்கொடி மெல்லிடை வனிதை தன்னை ஓர் பாகம் விரும்பினாய் - மலைமன்னனான இமவான் பெற்ற அழகிய கிளி போன்றவளும் கொடி போன்ற மெல்லிடையை உடைய பெண்னுமான உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனே;
மறை விரிக்கக் கல்லால் அமர் அண்ணலே - வேதங்களை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்த தலைவனே;
மனிதர் வானவர் வாசமலர் இட்டு வைகலும் தொழும் முக்கட் பரமனே - மனிதர்களும் தேவர்களும் நாள்தோறும் மணம் கமழ் பூக்களைத் தூவி வழிபடும் முக்கண்ணனே, பரமனே;
புனிதனே உன் புகழ்தனைச் செப்பினேன் புன்மை ஆயின தீர்த்தருள் செய்திடே - தூயனே, உன் புகழைச் சொல்லும் அடியேனுடைய குற்றங்களைத் தீர்த்து அருள்வாயாக;
பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:
கட்டளைக் கலிப்பா - திருக்குறுந்தொகை அமைப்பின் இரட்டித்த வடிவம். (அடிதோறும் 8 சீர்கள்).
அரையடியில் 4 சீர்கள். அரையடிகளின் அமைப்புத் திருக்குறுந்தொகைப் பாடல்களின் அடி அமைப்பில் இருக்கும்.
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment