2018-08-30
P.447 - இடையாறு
-------------------------------
(சந்தக் கலிவிருத்தம் - தானதன தானதன தானதன தானா) (திருவிராகம் அமைப்பு)
(சம்பந்தர் தேவாரம் - 2.29.1 - திருவிராகம் - "முன்னிய கலைப்பொருளும்")
* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;
1)
செந்தழலை ஒத்தநிற வேணிதிகழ் செல்வன்
இந்துதனை இண்டையென ஏற்றருளும் ஏந்தல்
இந்திரனு(ம்) மாலயனும் ஈசனென ஏத்தும்
எந்தையிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.
செந்தழலை ஒத்த நிற வேணி திகழ் செல்வன் - சிவந்த நெருப்புப் போன்ற நிறமுடைய சடையை உடைய செல்வன்; (வேணி - சடை);
இந்துதனை இண்டை என ஏற்று அருளும் ஏந்தல் - திங்களை இண்டைமாலை போலச் சூடிய தலைவன்; (இந்து - சந்திரன்); (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);
இந்திரனும் மால்-அயனும் ஈசன் என ஏத்தும் - இந்திரன், திருமால், பிரமன் இவர்களால் "ஈசன்" என்று போற்றி வழிபடப்பெறும்;
எந்தை இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - எம் தந்தையான சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஈரம் - நீர்ப்பற்று; குளிர்ச்சி); (ஈரவயல் - தண்வயல் என்பதனை ஒத்த பிரயோகம்; சம்பந்தர் தேவாரம் - 2.45.11 - "தண்வயல்சூழ் காழி");
2)
வாச(ம்)மலி கொன்றையணி வார்சடையன் நாளும்
நேச(ம்)மிக ஏத்துமவர் நெஞ்சிலுறை தேசன்
நாசமிலி பார்த்தனவன் நாடுபடை ஈந்த
ஈசனிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.
வாசம் மலி கொன்றை அணி வார்-சடையன் - மணம் மிக்க கொன்றைமலரை நீள்சடையில் அணிந்தவன்; (வார்தல் - நீள்தல்);
நாளும் நேசம் மிக ஏத்தும் அவர் நெஞ்சில் உறை தேசன் - தினமும் அன்போடு துதிப்பவர் நெஞ்சில் உறைகின்ற ஒளிவடிவினன்;
நாசமிலி - அழிவற்றவன்;
பார்த்தனவன் நாடு-படை ஈந்த - அர்ஜுனன் விரும்பிய பாசுபதாஸ்திரத்தை அருளிய; (பார்த்தன் - அர்ஜுனன்; அவன் - பகுதிப்பொருள்விகுதி); (நாடுதல் - விரும்புதல்); (படை - ஆயுதம்);
ஈசன் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும்.
3)
சாந்தமென நீறுதனை மார்பிலணி தந்தை
சேர்ந்துசுரர் ஏத்தவருள் செய்துபெரு நஞ்சை
மாந்துமணி கண்டனுமை மங்கையொரு கூறாம்
ஏந்தலிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.
சாந்தம் என நீறுதனை மார்பில் அணி தந்தை - சந்தனம் போலத் திருநீற்றை மார்பில் பூசிய தந்தை; (சாந்தம் - சந்தனம்);
சேர்ந்து சுரர் ஏத்த அருள்செய்து பெரு-நஞ்சை மாந்து மணிகண்டன் - தேவர்களெல்லாம் கூடி இறைஞ்ச, அவர்களுக்கு அருள்செய்து, ஆலகாலத்தை உண்ட நீலமணிகண்டம் உடையவன்; (மாந்துதல் - உண்ணுதல்);
உமை மங்கை ஒரு கூறு ஆம் - திருமேனியில் உமாதேவி இடப்பக்கம் ஒரு பாகம் ஆகிய;
ஏந்தல் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - பெருமையுடையவனான சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஏந்தல் - பெருமையிற் சிறந்தோன்; அரசன்);
4)
போற்றுமுனி பொன்றுதினம் என்றுவரு பொல்லாக்
கூற்றையுதை செய்தவிறை கூவிளமும் ஆறும்
சீற்ற(ம்)மலி பாம்புமணி செஞ்சடையன் வெள்ளை
ஏற்றனிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.
போற்று முனி பொன்று தினம் என்று வரு பொல்லாக் கூற்றை உதைசெய்த இறை - திருவடியைப் போற்றி வணங்கிய மார்க்கண்டேயர் இறக்கும் நாள் என்று வந்த கொடிய கூற்றுவனை உதைத்த இறைவன்; (முனி - முனிவர்); (பொன்றுதல் - சாதல்);
கூவிளமும் ஆறும் சீற்றம் மலி பாம்பும் அணி செஞ்சடையன் - செஞ்சடையில் வில்வம், கங்கை, சினம் மிக்க பாம்பு இவற்றையெல்லாம் அணிந்தவன்; (கூவிளம் - வில்வம்);
வெள்ளை-ஏற்றன் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடைய சிவபெருமான் உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (ஏறு - இடபம்);
5)
பருக்கையுடை வேழமது பற்றியுரி செய்த
திருக்கையினன் ஆரமென நாகமணி தேவன்
இருக்குதனை ஓதியவன் என்றுமக லாதே
இருக்குமிடம் ஈரவயல் சூழுமிடை யாறே.
பருக்-கையுடை வேழம்அது பற்றி உரிசெய்த திருக்-கையினன் - பருத்த துதிக்கையை உடைய யானையைப் பிடித்து அதன் தோலைக் கையால் உரித்தவன்;
ஆரம் என நாகம் அணி தேவன் - பாம்பை மாலையாக அணிகின்ற தேவன்;
இருக்குதனை ஓதியவன் - வேதங்களைப் பாடியருளியவன்; (இருக்கு - ரிக் - வேதம்);
என்றும் அகலாதே இருக்கும் இடம் ஈர-வயல் சூழும் இடையாறே - அச்சிவபெருமான் நீங்காது உறையும் தலம் ஈரம் மிக்க வயல் சூழ்ந்த இடையாறு ஆகும். (அகல்தல் - நீங்குதல்);
6)
கண்திகழு(ம்) நெற்றிகொடு காமனையெ ரித்தான்
பெண்திகழு(ம்) மேனியினன் நாளுமடி பேணித்
தெண்டனிடும் அன்பரிடர் தீர்க்குமிறை திங்கள்
இண்டையனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.
கண் திகழும் நெற்றிகொடு காமனை எரித்தான் - நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்தவன்; (கண்டிகழும் = கண் + திகழும்); (கண் திகழும் நெற்றி = நெற்றிக்கண்);
பெண் திகழும் மேனியினன் - உமை ஒரு பங்கன்; (பெண்டிகழும் = பெண் + திகழும்);
நாளும் அடி பேணித் தெண்டனிடும் அன்பர் இடர் தீர்க்கும் இறை - தினமும் திருவடியைப் போற்றி வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் இறைவன்;
திங்கள்-இண்டையன் இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - சந்திரனைத் திருமுடிமேல் இண்டைமாலை போல அணிந்த சிவபெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (இண்டை - தலையில் அணியும் மாலைவகை); (ஏர் - அழகு);
7)
நீற்றையணி நேயரிடர் நீக்கியருள் நாதன்
தோற்றமிலி அந்தமிலி தூயசடை மீது
நாற்ற(ம்)மலி கொன்றையொடு நச்சரவு திங்கள்
ஏற்றவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.
நீற்றை அணி நேயர் இடர் நீக்கி அருள் நாதன் - திருநீற்றைப் பூசி வழிபடும் பக்தர்களது துன்பங்களைத் தீர்த்து அருளும் தலைவன்;
தோற்றமிலி அந்தமிலி - பிறப்பும் இறப்பும் இல்லாதவன்;
தூய சடைமீது நாற்றம் மலி கொன்றையொடு நச்சரவு திங்கள் - தூய சடையின்மேல் மணம் மிக்க கொன்றைமலர், விஷப்பாம்பு, சந்திரன் இவற்றையெல்லாம்;
ஏற்றவன் இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அணிந்த சிவபெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);
8)
திருத்தகுபொ ருப்பெறிசெ ருக்கனழ ஊன்றி
நெரித்தினிய கீதமது கேட்டருள்நி ருத்தன்
மருத்திகழும் அம்புதொடு மன்மதனை முன்னம்
எரித்தவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.
திருத்தகு பொருப்பு எறி செருக்கன் அழ ஊன்றி நெரித்து - திரு மிக்க அழகிய கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்றவனான செருக்குடைய இராவணனை அவன் அழும்படி ஒரு விரலை ஊன்றி நசுக்கி; (திருத்தகுதல் - பரிசுத்தம் பொருந்துதல்; அழகு தகுதல்); (பொருப்பு - மலை); (செருக்கன் - கர்வம் மிக்கவன்); (நெரித்தல் - நசுக்குதல்);
இனிய கீதம்அது கேட்டு அருள் நிருத்தன் - அவன் இசைபாடக் கேட்டு இரங்கி அருள்புரிந்த கூத்தன்; (நிருத்தன் - கூத்தன்);
மருத் திகழும் அம்பு தொடு மன்மதனை முன்னம் எரித்தவன் - வாசனையுடைய மலர்-அம்புகளைத் தொடுக்கின்ற மன்மதனை முற்காலத்தில் எரித்தவன்; (மரு - வாசனை);
இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);
9)
அயன்திருவின் நாயகன கழ்ந்துயர ஏறி
முயன்றிடவ ளர்ந்தவெரி முன்பணியும் அன்பர்
வியன்புவனம் ஆளவருள் நல்குமரன் எல்லாம்
இயன்றவனி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.
அயன் திருவின் நாயகன் அகழ்ந்து உயர ஏறி முயன்றிட வளர்ந்த எரி - பிரமனும் திருமகள் தலைவனான திருமாலும் நிலத்தை அகழ்ந்தும் வானில் பறந்து உயர்ந்தும் தேடும்படி ஓங்கிய ஜோதிவடிவினன்; (அயன்றிருவின் = அயன் + திருவின்); (திருமால் பிரமன் இவர்கள் அடிமுடி தேடியது எதிர்நிரனிறையாக வந்தது);
முன் பணியும் அன்பர் வியன் புவனம் ஆள அருள் நல்கும் அரன் - திருமுன்பு வணங்குகின்ற பக்தர்கள் அகன்ற பெரிய உலகெல்லாம் ஆளும்படி அருள்கின்ற ஹரன்;
எல்லாம் இயன்றவன் - எல்லாம் செய்ய வல்லவன்;
இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);
10)
பொய்ம்மொழிகள் நாளுமுரை புல்லருரை பேணேல்
கொய்ம்மலர்கள் இட்டுருகு நெஞ்சர்குறை தீர்ப்பான்
அம்மையொரு பங்கமரும் அத்தனர வார்த்த
எம்மிறையி ருக்குமிடம் ஏர்கொளிடை யாறே.
பொய்ம்மொழிகள் நாளும் உரை புல்லர் உரை பேணேல் - பொய்களையே தினந்தோறும் பேசுகின்ற கீழோர்களது வார்த்தைகளை மதிக்கவேண்டா;
கொய்ம்மலர்கள் இட்டு உருகு நெஞ்சர் குறை தீர்ப்பான் - பறித்த மலர்களைத் தூவி உருகுகின்ற மனம் உடைய அன்பர்களது குறைகளையெல்லாம் தீர்ப்பவன்; (கொய்தல் - பறித்தல்);
அம்மை ஒரு பங்கு அமரும் அத்தன் - உமையம்மையை ஒரு பங்கில் விரும்பும் அப்பன் - அம்மையப்பன்;
அரவு ஆர்த்த எம் இறை - பாம்பை நாணாகக் கட்டிய எம் இறைவன்; (ஆர்த்தல் - கட்டுதல்);
இருக்கும் இடம் ஏர்கொள் இடையாறே - அப்பெருமான் உறையும் தலம் அழகிய இடையாறு ஆகும். (ஏர் - அழகு);
11)
சிற்றிடைம டக்கொடியை வாம(ம்)மகிழ் தேவன்
வெற்றிவிடை மீதுவரு வேந்தனிரு தாளைப்
பற்றியவர் உற்றதுணை மேயபதி பெண்ணை
எற்றுதிரை எய்துகரை ஏர்கொளிடை யாறே.
சிற்றிடை மடக்கொடியை வாமம் மகிழ் தேவன் - சிற்றிடையை உடையவளும் இளங்கொடி போன்றவளுமான உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பக்கம் ஒரு பாகமாக விரும்பிய தேவன்; (மகிழ்தல் - விரும்புதல்); (* சிற்றிடை நாயகி - இத்தலத்து இறைவி திருநாமம்);
வெற்றி-விடைமீது வரு வேந்தன் - வெற்றியை உடைய இடபத்தை வாகனமாக உடைய அரசன்;
இரு-தாளைப் பற்றியவர் உற்ற துணை மேய பதி - தன் இரு-திருவடிகளைப் பற்றிய அடியவர்களுக்குச் சிறந்த துணைவன் ஆன சிவபெருமான் விரும்பி உறையும் தலம்; (மேய - மேவிய); (பதி - தலம்);
பெண்ணை எற்று திரை எய்து கரை ஏர்கொள் இடையாறே - பெண்ணையாற்றின் மோதுகின்ற அலைகள் அடைகின்ற கரையில் உள்ள அழகிய இடையாறு ஆகும். (பெண்ணை - பெண்ணையாறு); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை); (ஏர் - அழகு);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment