Sunday, July 1, 2018

03.06.031 - 03.06.035 - ஏழை - இடமிருக்கும் - மடக்கு

03.06 – மடக்கு

2007-10-17

3.6.31 - ஏழை - இடமிருக்கும் - மடக்கு

-------------------------------------------------

ஏழை மனமே! இறைஞ்சி அடிதொழாய்!

ஏழை பணக்காரன் என்னாமல் ஏழை

இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் விண்ணில்

இடமிருக்கும் இங்குமுண்(டு) இன்பு!


ஏழை - 1. அறியாமை; 2. வறியவன்; 3. பெண்; பார்வதி;

இறைஞ்சுதல் - வணங்குதல்;

இடம் - 1. இடப்-பக்கம்; 2. ஸ்தானம்;

இன்பு - இன்பம்;


ஏழை மனமே - அறிவில்லாத நெஞ்சே;

இறைஞ்சி அடிதொழாய் - (நீ) வணங்கி (அவன்) திருவடியைத் தொழுவாயாக!

ஏழை பணக்காரன் என்னாமல் - (அப்படி வணங்குபவர்) ஏழையா பணக்காரனா என்ற வேறுபாடின்றி;

ஏழை இடமிருக்கும் எம்பெருமான் வந்தருள்வான் - உமையாளை இடப்பக்கம் மகிழ்கின்ற சிவபெருமான் வந்து அருள்புரிவான்;

விண்ணில் இடம் இருக்கும் - (உனக்குச்) சிவலோகத்தில் ஓர் இடம் இருக்கும்;

இங்கும் உண்டு இன்பு - இவ்வுலகிலும் இன்பம் பெறுவாய்!

---------------------

2007-10-18

3.6.32 - திரியும் - அகத்தேற்று - மடக்கு

-------------------------------------------------

திரியும் வழிஒன்றே சிந்திப்ப தேனோ?

திரியும் மதில்எரித்தார்க்(கு) அற்புத் திரியும்

அகத்தேற்று நாதன் அருளால் அடைவாய்

அகத்தேற்று, முன்வினை அற்று.


திரிதல் - 1. கெடுதல் (perish); 2. அலைதல்; போதல்;

திரி - 3. விளக்கில் உள்ள திரி;

அற்புத்திரி - அன்பு+திரி; (எற்புடம்பு, எற்புமணி, அற்புத்தளை, என்பன ஒத்த பிரயோகம்);

அகத்தேற்று - 1. அகத்து + ஏற்று; 2. அகம்+தேற்று;

அகம் - மனம்;

தேற்று - தெளிவு;

அறுதல் - தீர்தல்; இல்லாமல் போதல்;


திரியும் வழிஒன்றே சிந்திப்பது ஏனோ - அழியும் வழியை மட்டுமே எண்ணுவது ஏன்?

திரியும் மதில் எரித்தார்க்கு அற்புத்-திரியும் அகத்து ஏற்று - விண்ணில் திரியும் முப்புரங்களை எரித்த சிவனுக்கு, மனத்துள் பக்தித்-திரியை ஏற்றுவாய்; (திரியும் - உம் எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்); (அப்பர் தேவாரம் - திருமுறை 4.31.1 - "உள்ளத்த திரியொன்(று) ஏற்றி உணருமா(று) உணர வல்லார் கள்ளத்தைக் கழிப்பர்");

நாதன் அருளால் முன்வினை அற்று அகத்-தேற்று அடைவாய் - தலைவனான சிவபெருமான் அருளால், பழவினைகள் தீர்ந்து மனத்தெளிவு பெறுவாய்!


இலக்கணக் குறிப்பு: ஆறுமுக நாவலரின் இலக்கணச் சுருக்கம்:

127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நாற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.


---------------------

2007-10-22

3.6.33 - உள்ளநிலை - எய்த - மடக்கு

-------------------------------------------------

உள்ளநிலை மாறி உவப்பதென்(று) என்றெண்ணும்

உள்ளநிலை மாறும் ஒருவனை உள்ளநிலை

எய்த எரிகணை ஒன்றினால் முப்புரங்கள்

எய்த இறைவனை ஏத்து.


பதம் பிரித்து:

"உள்ள நிலை மாறி உவப்பது என்று?" என்று எண்ணும்

உள்ளநிலை மாறும், ஒருவனை உள்ள; நிலை

எய்த, எரிகணை ஒன்றினால் முப்புரங்கள்

எய்த இறைவனை ஏத்து.


உள்ள - 1. இருக்கின்ற; 2. மனத்தின்; 3. எண்ண;

உள்ளம் - மனம்;

உள்ளுதல் - நினைத்தல்; ஆராய்தல்;

உள்ளநிலை - 1. இருக்கின்ற நிலைமை; 2. மனநிலை; 3. நினைக்க (உள்ள), நிலை;

ஒருவன் - ஒப்பற்றவன்; கடவுள்;

எய்த - 1. அடைய; (எய்துதல் - அடைதல்); 2. (அம்பு) ஏவிய; (எய்தல் - பாணம் பிரயோகித்தல்);


"உள்ள நிலை மாறி உவப்பது என்று" என்று எண்ணும் உள்ளநிலை மாறும், ஒருவனை உள்ள - "இப்பொழுது இருக்கும் (இந்த இழிந்த) நிலைமை மாறி மகிழ்வது எப்பொழுது" என்று சிந்திக்கும் மனநிலை மாறும், ஒப்பற்றவனான சிவபெருமானைத் தியானித்தால்;

நிலை எய்த - நல்ல நிலையை அடைய; (அப்பர் தேவாரம் - திருமுறை 6.31.3 - "நிலைபெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா");

எரிகணை ஒன்றினால் முப்புரங்கள் எய்த இறைவனை ஏத்து - எரிக்கின்ற ஓர் அம்பால் மூன்று கோட்டைகளை எய்த இறைவனைத் துதிப்பாயாக.

---------------------

2007-10-26

3.6.34 - சிறையுள - மாந்தரும் - மடக்கு

-------------------------------------------------

சிறையுள வண்டொலி செய்கின்ற, பொன்னிச்

சிறையுள ஆனைக்காத் தேவைச் சிறையுள

மாந்தரும் சிந்திக்கில் வல்வினை மாய்ந்தூறும்

மாந்தரும் தேனே மனத்து.


சிறை - 1. இறகு; 2. கரை; 3. சிறைச்சாலை;

உள - உள்ள என்பதன் இடைக்குறை;

தே / தேவு - தெய்வம்;

மாந்தரும் - 1. மாந்தர் + உம்; 2. மாந்து + அரும்;

மாந்துதல் - உண்ணுதல்; குடித்தல்; அனுபவித்தல்;


சிறை உள வண்டு ஒலி செய்கின்ற - இறகுகள் உடைய வண்டுகள் ரீங்காரம் செய்கின்ற;

பொன்னிச்-சிறை உள ஆனைக்காத் தேவைச் - காவிரிக்-கரையில் இருக்கும், திருவானைக்கா என்ற தலத்தில் உறையும் தெய்வத்தை;

சிறை உள மாந்தரும் சிந்திக்கில் - சிறையில் இருக்கும் (தீயன செய்த) குற்றவாளிகளே ஆயினும் அவர்கள் எண்ணினால்;

வல்வினை மாய்ந்து ஊறும் மாந்து-அரும் தேனே மனத்து - (அவர்களுடைய) கொடிய வினைகள் அழிந்து, (அவர்கள்) மனத்தில் உண்ணும் அருமையான (இன்பத்) தேனே ஊறும்;

(அப்பர் தேவாரம் - 6.87.1 - "கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண்);

(சம்பந்தர் தேவாரம் - 3.49.5 - "கொல்வாரேனும் குணம்பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே");

---------------------

2007-10-27

3.6.35 - பணம்நாடிச் - சோற்றுத்துறை - மடக்கு

-------------------------------------------------

பணம்நாடிச் சொல்லே பலர்வாயில் மூச்சும்

பணம்நாடிச் சும்பரால் பாழே பணம்நாடிச்

சோற்றுத் துறைப்படிப்பே போதுமா துன்பமறச்

சோற்றுத் துறையானைச் சொல்.


பதம் பிரித்து:

"பணம் நாடு"! இச்-சொல்லே பலர் வாயில்! மூச்சும்

பணம்! நாடு இச்-சும்பரால் பாழே! பணம் நாடிச்

சோற்றுத்-துறைப் படிப்பே போதுமா? துன்பம் அறச்

சோற்றுத்துறையானைச் சொல்.


நாடு - 1. தேடு; 2. தேசம்; 3. விரும்பு;

சும்பன் - மூடன்;

சோறு - 1. அன்னம் / உணவு; 2. முக்தி;

துறை - 1. கல்வியின் ஒரு பகுதி (branch of knowledge); 2. இறைவனை அடையும் வழி; இடம்;

சோற்றுத்துறை - 1. வயிற்றுப்பாட்டிற்கு உதவும் கல்வித்துறை; 2. ஒரு சிவத்தலத்தின் பெயர்;

சோற்றுத்துறையான் - திருச்சோற்றுத்துறை என்ற தலத்தில் உள்ள இறைவன்;

துன்பம் - மனவருத்தம், உடல்வருத்தம்; கெடுதி; வறுமை;

சொல்லுதல் - பேசுதல்; புகழ்தல்;


"பணம் நாடு"! இச்-சொல்லே பலர் வாயில் - "பணத்தைத் தேடு" என்ற இந்தச் சொல்லைத்தான் பலரும் சொல்கின்றார்கள்;

மூச்சும் பணம் - (அவர்களது) மூச்சும் பணமே; (பணமே அவர் மூச்சில் இழையோடுகின்றது).

இச்-சும்பரால் நாடு பாழே - இத்தகைய மூடர்களால், நாடு (அதன் கலாச்சாரம், சுற்றுப்புறம்) சீரழிகின்றது.

பணம் நாடிச் சோற்றுத்-துறைப் படிப்பே போதுமா - பணத்தை விரும்பி, வயிற்றுப்பாட்டிற்கு உதவும் துறைகளை மட்டுமே படித்தால் போதுமா?

துன்பம் அறச் சோற்றுத்துறையானைச் சொல் - எல்லாத் துன்பங்களும் விலகத் திருச்சோற்றுத்துறையில் உறையும் சிவனைத் துதிப்பாயாக! (அப்பர் தேவாரம் - திருமுறை 5.33.2 - முத்தியாக ஒருதவம் செய்திலை; அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை; தொத்து நின்றலர் சோற்றுத்துறையர்க்கே பத்தியாய்ப் பணிசெய் மடநெஞ்சமே);

---------------

வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------