Showing posts with label திலதைப்பதி - (செதலபதி). Show all posts
Showing posts with label திலதைப்பதி - (செதலபதி). Show all posts

Wednesday, February 19, 2025

P.353 - திலதைப்பதி - கண்ணீர் மல்கி

2016-07-24

P.353 - திலதைப்பதி

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார்")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன்

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் சாந்தம் அதுவாக

வெண்ணீ றணியும் வேத நாவன் விடையன் இடமென்பர்

தெண்ணீர் அரிசிற் கரையில் திகழும் திலதைப் பதிதானே.


கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன் - கண்ணீர் பெருக மனம் உருகி வழிபடுவாரைக் காக்கின்ற அருளாளன்;

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவன்;

சாந்தம் அதுவாக வெண்ணீறு அணியும் வேத-நாவன் - சந்தனம் போல வெண்-திருநீற்றைப் பூசிய, வேதங்களைப் பாடியருளியவன்;

விடையன் இடம் என்பர் - இடபவாகனன் உறையும் தலம் ஆவது;

தெண்ணீர் அரிசிற்-கரையில் திகழும் திலதைப்பதிதானே - தெளிந்த நீர் பாயும் அரிசிலாற்றின் கரையில் உள்ள திலதைப்பதி;


2)

பால்போல் நீறு பூசிப் பணியும் பத்தர் இடர்தீர்ப்பான்

நால்வே தத்தை ஓது நாவன் நாரி ஒருபங்கன்

நால்வாய் தன்னை உரித்துப் போர்த்த நாதன் இடமென்பர்

சேல்பாய் அரிசிற் றென்பால் திகழும் திலதைப் பதிதானே.


நால்வாய் - யானை; (தொங்கும் வாய்);

அரிசிற் றென்பால் - அரிசில் + தென்பால் - அரிசிலாற்றின் தென்கரையில்;


3)

அரையா அருளாய் என்று போற்றும் அன்பர்க் கணியாவான்

விரையார் கொன்றை வேணி மீது விரும்பிப் புனையீசன்

குரையார் கழலன் நரைவெள் ளேற்றுக் குழகன் இடமென்பர்

திரையார் அரிசில் தென்பால் திகழும் திலதைப் பதிதானே.


அரையா - அரசனே;

அணி ஆவான் - அருகு இருப்பான்;

விரை ஆர் கொன்றை - மணம் பொருந்திய கொன்றைமலர்;

வேணி - சடை;

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற கழலை அணிந்தவன்;

திரை ஆர் அரிசில் தென்பால் - அலை பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில்;


4)

நீறு பூசி நித்தல் ஏத்தும் நேயர்க் கருள்நாதன்

ஆறு சூடி அங்கை மழுவன் அம்பொற் கொடிகூறன்

ஏறு காட்டும் கொடியை உடைய எந்தை இடமென்பர்

சேறு காட்டும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அம் பொற்கொடி கூறன் - அழகிய பொற்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (* பொற்கொடியம்மை - திலதைப்பதியில் இறைவி திருநாமம்);

சேறு காட்டும் செய் அணிந்த - சேறு திகழும் வயல்கள் சூழ்ந்த; (செய் - வயல்);


5)

அன்ற லர்ந்த பூக்கள் தூவி அடியைத் தொழுவார்க்கு

நன்று நல்கும் நம்பன் இன்பன் நஞ்சம் அணிகண்டன்

மன்றில் மங்கை காண ஆடும் மன்னன் இடமென்பர்

தென்றல் தன்னில் வாசம் வீசு திலதைப் பதிதானே.


அன்று அலர்ந்த பூக்கள் - நாண்மலர்கள்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

நஞ்சம் - விஷம்;

மன்று - அரங்கு;

மங்கை - உமாதேவி;


6)

மறைசொல் மாணி வாழ நமனை மார்பில் உதைசெய்தான்

கறைகொள் கண்டன் அண்டர் அண்டன் கங்கைச் சடைமீது

குறைவெண் திங்கள் சூடி ஆடு கூத்தன் இடமென்பர்

சிறைவண் டறையும் நறையார் சோலைத் திலதைப் பதிதானே.


மறை - வேதம்;

மாணி - மார்க்கண்டேயர்;

அண்டர் அண்டன் - தேவதேவன்;

சிறை-வண்டு அறையும் நறை ஆர் சோலை - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற தேன் (/ வாசனை) நிறைந்த சோலை சூழ்ந்த; (நறை - தேன்; வாசனை);


7)

போதை இட்டுப் பொற்ப தத்தைப் போற்றும் அடியார்தம்

வாதை தீர்த்து வரம ளிக்கும் வள்ளல் ஒருபக்கம்

மாதை வைத்த முக்கட் பரமன் வைகும் இடமென்பர்

சீதை கேள்வன் வந்து வாழ்த்து திலதைப் பதிதானே.


போதை இட்டு - பூக்களைத் தூவி;

வாதை - துன்பம்;

வைகுதல் - தங்குதல்; உறைதல்;

சீதை கேள்வன் வந்து வாழ்த்து - இராமன் வந்து வழிபாடு செய்த; (வாழ்த்துதல் - துதித்தல்); (* இராமர் இத்தலத்தில் வழிபாடு, தர்ப்பணம் செய்தார் என்பது இத்தலபுராணச் செய்தி);


8)

வான்வெற் பசைத்த வல்ல ரக்கன் வாய்பத் தழவூன்று

கோன்கற் சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரமெய்தான்

நான்கி ரட்டி தோளன் நாக நாணன் இடமென்பர்

தேன்கள் ஆர்க்கும் சோலை சூழ்ந்த திலதைப் பதிதானே.


வான்-வெற்பு அசைத்த வல்-அரக்கன் வாய் பத்து அழ ஊன்று கோன் - பெருமை மிக்க உயர்ந்த கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணனின் வாய்கள் பத்தும் அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கிய தலைவன்;

கற்சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரம் எய்தான் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கல் - மலை); (சிலை - வில்); (கூடார் - பகைவர்);

நான்கு இரட்டி தோளன் - எட்டுப்-புஜங்கள் உடையவன்;

நாக-நாணன் - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

தேன்கள் ஆர்க்கும் - வண்டுகள் ஒலிக்கின்ற; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


9)

அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன்

சென்னி தாழ்த்தும் அன்பர் தங்கள் சிந்தை பிரியாதான்

கன்னல் வில்லி தன்னைக் காய்முக் கண்ணன் இடமென்பர்

செந்நெல் வளரும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன் - அன்னப்பறவையும் பன்றியும் ஆகிய பிரமன் திருமால் என்ற இருவரால் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினன்;

சென்னி - தலை;

கன்னல் வில்லி தன்னைக் காய் முக்கண்ணன் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (கன்னல் - கரும்பு); (வில்லி - வில்லை ஏந்தியவன்);

செந்நெல் வளரும் செய் அணிந்த - சிறந்த நெற்பயிர் வளர்கின்ற வயல் சூழ்ந்த; (செய் - வயல்);


10)

கோனைத் தெளியாக் குருடர் சொல்லும் குற்ற மொழிநீங்கும்

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான்வெங்

கானை ஆடும் களமென் றுடைய கருத்தன் இடமென்பர்

தேனை உண்டு வண்டு பாடு திலதைப் பதிதானே.


கோனைத் தெளியாக் குருடர் - இறைவனை அறியாதவர்கள்;

நீங்கும் - அவற்றை நீங்குங்கள்; ("அவை அழியும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான் - கையில் மான், மழு, நெருப்பு இவற்றை ஏந்திய, தேவர்கள் தலைவன்;

வெங்கானை ஆடும் களம் என்று உடைய கருத்தன் - சுடுகாட்டைத் திருநடம் செய்யும் சபை என்று உடைய கடவுள்; (வெங்கான் - கொடிய சுடுகாடு); (களம் - சபை; இடம்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்)


11)

மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள்

எவ்வ ரங்கள் இரப்ப ரேனும் என்றும் இலையென்னா(து)

அவ்வ ரங்கள் அருளும் சடையன் அமரும் இடமென்பர்

செவ்வ ழிப்பண் வண்டார் சோலைத் திலதைப் பதிதானே.


மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள் - மல்லிகை, நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவி வழிபடும் அடியவர்கள்; (மௌவல் - மல்லிகை); (அப்பர் தேவாரம் - 4.98.1 - "நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே");

எவ்வரங்கள் இரப்பரேனும் என்றும் இலை என்னாது - என்ன வரங்களை யாசித்தாலும், ஒருநாளும் "இல்லை" என்று சொல்லாமல்;

அவ்வரங்கள் அருளும் சடையன் அமரும் இடம் என்பர் - அந்த வரங்களையெல்லாம் அருள்கின்ற பெருமான், சடையை உடையவன் விரும்பி உறையும் தலம் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

செவ்வழிப் பண் வண்டு ஆர் சோலைத் திலதைப்பதிதானே - செவ்வழி என்ற பண்ணை வண்டுகள் பாடுகின்ற சோலை திகழும் திலதைப்பதி ஆகும்; (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);

(சம்பந்தர் தேவாரம் - 1.132.7 - "வண்டு வேறாய உரு ஆகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Sunday, December 25, 2022

05.43 – திலதைப்பதி - (செதலபதி)

05.43 – திலதைப்பதி - (செதலபதி)

2015-07-22

திலதைப்பதி - (இக்காலத்தில் - செதலபதி)

(மயிலாடுதுறை திருவாரூர் இடையே உள்ள தலம்)

------------------

(சந்தக் கலித்துறை - தானதன தனனா தனதானன தானா தனதானா - என்ற சந்தம்)

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானா தனதானா - என்றும் நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - "தோடுடைய செவியன்")


1)

கூருடைய இலையார் நுனைவேலுடைக் கூற்றம் குமையாமுன்

நீருடைய சடையன் பெயர்நித்தலும் நெஞ்சே நினைகண்டாய்

காருடைய மிடறன் மழுவாளொரு கையிற் றரியீசன்

சீருடைய திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


கூர் உடைய இலை ஆர் நுனை வேல்-உடைக் கூற்றம் குமையாமுன் - கூர்மையான திரிசூலத்தை ஏந்திய காலன் அழிப்பதன்முன்னம்;

நீர் உடைய சடையன் பெயர் நித்தலும் நெஞ்சே நினை கண்டாய் - மனமே, கங்கைச்சடையன் நாமத்தைத் தினந்தோறும் நினைவாயாக; (கண்டாய் - ஒரு முன்னிலை அசைச்சொல்); (சம்பந்தர் தேவாரம் - 2.41.3 - "நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய்");

கார் உடைய மிடறன், மழுவாள் ஒரு கையில் தரி ஈசன், - கரிய கண்டன், ஒரு கையில் மழுவாயுதத்தை ஏந்தும் ஈசன்;

சீர் உடைய திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய, பெருமைமிக்க திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (சம்பந்தர் தேவாரம் – 1.87.10 - "செருமால் விடையூரும் செம்மான்");


2)

பேரழிந்து பிணமாய்ப் பலரும்பல பேசா முனம்நெஞ்சே

நாரணிந்து தினமும் விடையூர்தியன் நாமம் நினைகண்டாய்

வாரணிந்த முலையாள் மலைமங்கையை வாமத் தமரீசன்

சீரணிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


பேர் அழிந்து பிணம் ஆய்ப் பலரும் பல பேசாமுனம் நெஞ்சே - மனமே! பெயரை நீக்கிப் பிணம் என்ற பெயர் ஆகிப், பலரும் பலவாறு பேசுவதன் முன்னமே; (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - 11.5.8 - "பெட்டப் பிணமென்று பேரிட்டு");

நார் அணிந்து தினமும் விடையூர்தியன் நாமம் நினை கண்டாய் - அன்பு பூண்டு, தினந்தோறும், இடபவாகனன் ஆன ஈசன் திருநாமத்தை நினைவாயாக; (நார் - அன்பு)

வார் அணிந்த முலையாள் மலைமங்கையை வாமத்து அமர் ஈசன் - கச்சு அணிந்த தனத்தை உடைய மலைமகளை இடப்பாகமாக விரும்பும் ஈசன்;

சீர் அணிந்த திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய, பெருமைமிக்க திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்;


3)

மையணிந்த சவமாய் இடுகாட்டெரி வையா முனம்நெஞ்சே

நெய்யணிந்த இலைமூன் றுடைவேலனை நித்தல் நினைகண்டாய்

பையணிந்த அரவைப் பனிவெண்மதிப் பக்கம் புனையீசன்

செய்யணிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


மை அணிந்த சவம் ஆய் இடுகாட்டு எரி வையா முனம், நெஞ்சே, - மனமே! மையால் அலங்கரிக்கப்பட்ட கண்ணுடைய பிணம் ஆகிச், சுடுகாட்டில் தீ வைக்கப்படுவதன் முன்னமே; (ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - சேத்திர வெண்பா - 11.5.6 - "மாலை தலைக்கணிந்து மையெழுதி");

நெய் அணிந்த இலை மூன்று உடை வேலனை நித்தல் நினை கண்டாய் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்திய பெருமானைத் தினந்தோறும் நினைவாயாக;

பை அணிந்த அரவைப் பனி வெண் மதிப் பக்கம் புனை ஈசன் - படத்தை உடைய பாம்பைக் குளிர்ந்த வெண்பிறைச்சந்திரனுக்கு அருகே அணியும் ஈசன்;

செய் அணிந்த திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - வயல்களால் சூழப்பெற்ற திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்;


4)

கான்பொருந்தி எரியிற் பொடியாகிடு காலம் அடையாமுன்

ஊன்பொருந்து தலையேந் தரனற்பெயர் உன்னாய் மடநெஞ்சே

மான்பொருந்து கரவன் பொடிபூசிய மார்பிற் புரிநூலன்

தேன்பொருந்து திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


கான் பொருந்தி எரியில் பொடி ஆகிடு காலம் அடையாமுன் - சுடுகாட்டை அடைந்து தீயில் சாம்பல் ஆகும் காலம் அடைவதன்முன்னே; (பொருந்துதல் - அடைதல்.)

ஊன் பொருந்து தலை ஏந்து அரன் நற்பெயர் உன்னாய் மட நெஞ்சே - புலால் பொருந்திய பிரமனது மண்டையோட்டை ஏந்துகின்ற ஹரனுடைய நல்ல நாமத்தைப், பேதை மனமே, சிந்திப்பாயாக; (உன்னுதல் - நினைத்தல்); (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "ஊனார் உடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்");

மான் பொருந்து கரவன், பொடி பூசிய மார்பில் புரி நூலன் - கையில் மானை ஏந்தியவன், திருநீறு பூசிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (கரவன் - கரத்தை உடையவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "உழையார் கரவா");

தேன் பொருந்து திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - (சோலைகளால் சூழப்பெற்றதால்) வாசம் கமழும் திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (தேன் - வாசனை; தேனீ / வண்டு);


5)

உருமெலிந்து வயதாய் அழியாமுனம் உன்னாய் மடநெஞ்சே

மருமலிந்த மலர்வெண் மதியம்புனை மைந்தன் திருநாமம்;

இருள்மலிந்த கரியின் உரிபோர்த்தவன், ஏரார் பொழில்சூழ்ந்த

திருமலிந்த திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


வயது ஆய் - வயது ஆகி - முதுமை அடைந்து;

உன்னாய் - சிந்திப்பாயாக;

மரு - வாசனை;

மலிதல் - மிகுதல்;

மைந்தன் - இளைஞன்; வீரன்;

இருள் மலிந்த கரியின் உரி போர்த்தவன் - கரிய ஆனையின் தோலை உரித்துப் போர்த்தவன்; (இருள் - கறுப்பு ); (கரியின் உரி - யானைத்தோல்);

ஏர் ஆர் - அழகிய;


6)

சங்கையற்று மகிழத் தவறாதிரு தாளைத் தொழுநெஞ்சே

அங்கமேற்ற அணிதோள் உடையான்மதன் ஆகம் பொடிசெய்தான்

கங்கையாற்றின் அயலே கமழ்போதொடு நாகம் கதிராரும்

திங்களேற்ற முடியன் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.


சங்கை அற்று மகிழத், தவறாது இரு தாளைத் தொழு நெஞ்சே - அச்சம் நீங்கி ஐயமின்றி இன்புறவேண்டில், என்றும் ஈசன் இணையடியை வணங்கு நெஞ்சமே; (சங்கை - அச்சம்; சந்தேகம்);

அங்கம் ஏற்ற அணி தோள் உடையான், மதன் ஆகம் பொடி செய்தான் - கங்காள வேடமுடையவன்; மன்மதனுடைய உடலைச் சாம்பலாக்கியவன்; (அங்கம் - எலும்பு; கங்காளம்); (ஆகம் - உடல்);

கங்கை ஆற்றின் அயலே, கமழ் போதொடு, நாகம், கதிர் ஆரும் திங்கள் ஏற்ற முடியன் - திருமுடிமேல் கங்கை நதியையும் வாசமலர்களையும் பாம்பையும் கிரணங்களை உடைய பிறைச்சந்திரனையும் அணிந்தவன்;

திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - .திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவன் அருள்புரிவான்;


7)

நீறணிந்த பெருமான் புகழேநிதம் நெஞ்சே நினைகண்டாய்

ஆறணிந்த சடையன் மழுவாளினன் அஞ்சொல் மடவாளோர்

கூறணிந்த வடிவன் துடியேந்திய கூத்தன் குளிர்சோலை

சேறணிந்த வயல்சூழ் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.


பதம் பிரித்து:

நீறு அணிந்த பெருமான் புகழே நிதம் நெஞ்சே நினை கண்டாய்;

ஆறு அணிந்த சடையன், மழுவாளினன், அம் சொல் மடவாள் ஓர்

கூறு அணிந்த வடிவன், துடி ஏந்திய கூத்தன், குளிர் சோலை

சேறு அணிந்த வயல் சூழ் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.


அம் சொல் மடவாள் - இனிய மொழி பேசும் உமையம்மை;

துடி - உடுக்கு;

குளிர் சோலை சேறு அணிந்த வயல் சூழ் - குளிர்ந்த பொழிலும் நீர்வளம் மிக்க வயலும் சூழ்ந்த;


8)

துன்னுகின்ற வினைகள் பறையத்தினம் உன்னித் துதிநெஞ்சே

முன்னிலங்கை அரையன் முடிபத்தடர் முக்கட் பெருமான்சீர்

பன்னவங்கு மிகுநாள் வரம்நல்கிய பாந்தட் சடைவள்ளல்

தென்னிலங்கு திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


துன்னுகின்ற வினைகள் பறையத் தினம் உன்னித் துதி நெஞ்சே - நெஞ்சமே, நெருங்கிச் சூழ்கின்ற வினைகளெல்லாம் அழியத், தினந்தோறும் எண்ணி வழிபடுவாயாக; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்); (பறைதல் - அழிதல்);

முன் இலங்கை அரையன் முடி பத்து அடர் முக்கட் பெருமான் சீர் பன்ன – முற்காலத்தில், இலங்கைக்கு அரசன் ஆன இராவணன் அவனுடைய பத்துத்தலைகளையும் நசுக்கிய முக்கண்ணனது புகழைப் பாட; (அரையன் - அரசன்); (அடர்த்தல் - நசுக்குதல்); (பன்னுதல் - பாடுதல்);

அங்கு மிகு நாள் வரம் நல்கிய பாந்தட் சடை வள்ளல் - அப்போது அவனுக்கு இரங்கி நீண்ட வாழ்நாள் வரம் கொடுத்த, சடையில் பாம்பை அணிந்த, வள்ளல்; (பாந்தள் - பாம்பு);

தென் இலங்கு திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அழகிய திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (தென் - அழகு);


9)

ஏலுமாறு தினமும் பணிசெய்திட எண்ணாய் மடநெஞ்சே

மாலுநாலு மறைசொல் லயனும்தொழ வானோங் கெரியானான்

பாலுநீரு மகிழும் பரமன்படை பார்த்தற் கருளீசன்

சேலுலாவும் கழனித் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.


ஏலுமாறு - இயன்ற வகையில்;

மாலும் நாலுமறை சொல் அயனும் - திருமாலும் பிரமனும்;

பாலும் நீரும் மகிழும் பரமன் - பால், நீர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் பரமன்;

படை பார்த்தற்கு அருள் ஈசன் - அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரத்தைக் கொடுத்த இறைவன்;

சேல் உலாவும் கழனித் திலதைப்பதி - வயலில் சேல்மீன்கள் உலாவுகின்ற திலதைப்பதி - நீர்வளம் மிக்க வயல்சூழ்ந்த திலதைப்பதி;


10)

பாவமற அரனைப் பணியார்உரை பாங்கில் மொழிநீங்கும்

காவலுடை எயிலெய் தவனற்கழல் கையால் தொழுதேத்தும்

தூவலணி முடியன் சுடுநீறணி தூயன் துணையில்லான்

சேவமரும் பெருமான் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே.


பாவம் அற அரனைப் பணியார் உரை பாங்கு-இல் மொழி நீங்கும் - ஹரனைத் தொழாதவர்கள் சொல்லும் பொருத்தமற்ற பேச்சை நீங்குங்கள்;

காவல்-உடை எயில் எய்தவன் நற்கழல் கையால் தொழுது ஏத்தும் - பாதுகாப்பு மிக்க முப்புரங்களையும் ஓர் அம்பால் எய்த பெருமானுடைய நல்ல திருவடிகளைக் கையால் தொழுது போற்றுங்கள்;

தூவல் அணி முடியன், சுடுநீறு அணி தூயன், துணை இல்லான் - (கொக்கின்) இறகை முடியில் அணிந்தவன், திருநீறு பூசிய தூயவன், ஒப்பற்றவன்; (தூவல் - இறகு); (துணை - ஒப்பு);

சே அமரும் பெருமான் திலதைப்பதிச் செம்மான் அருள்வானே - இடபவாகனம் உடைய பெருமான், திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (சே - எருது);


11)

இன்றுதுணை இலமென் றிளையாதிரு ஈடில் புகழாளன்

மன்றினடம் இடுவான் கழலேநிதம் வாழ்த்தாய் மடநெஞ்சே

இன்றமிழை மகிழ்வான் அரிசிற்கரை ஏரார் பொழில்வானைச்

சென்றணவு திலதைப் பதிமேவிய செம்மான் அருள்வானே.


இன்று துணை இலம் என்று இளையாது இரு - இன்று நமக்கு ஒரு துணை இல்லோம் என்று நீ வருந்தவேண்டா; (இளைத்தல் - சோர்தல்; மெலிதல்); (இலம் = இலேம் / இலோம் - எமக்கு இல்லோம்); (சம்பந்தர் தேவாரம் - 3.24.5 - "அடைவிலோம் என்றுநீ அயர்வொழி நெஞ்சமே"); (சம்பந்தர் தேவாரம் - 2.82.1 - "தேவூர் அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன் றிலமே");

ஈடு-இல் புகழாளன், மன்றில் நடம் இடுவான் கழலே நிதம் வாழ்த்தாய் மட நெஞ்சே - பேதை மனமே! ஒப்பற்ற புகழ் உடையவன், மன்றில் திருநடம் செய்பவன் திருவடியையே தினந்தோறும் வாழ்த்துவாயாக; (நடமிடுதல் - நடனம் ஆடுதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.76.5 - "நடமிட்ட ஒருவர்க்கிடம தென்பர்");

இன் தமிழை மகிழ்வான் - இனிய தமிழ்ப்பாமாலைகளை விரும்புபவன்;

அரிசிற் கரை ஏர் ஆர் பொழில் வானைச் சென்று அணவு திலதைப்பதி மேவிய செம்மான் அருள்வானே - அரிசிலாற்றின் கரையில் அழகிய சோலைகள் மேகத்தைத் தீண்டுகின்ற திலதைப்பதியில் வீற்றிருக்கும் செம்மேனியனான சிவபெருமான் அருள்புரிவான்; (ஏர் - அழகு); (வான் - மேகம்); (அணவுதல் - அணுகுதல்);


பிற்குறிப்புகள்:

1) யாப்புக் குறிப்பு -

  • சந்தக் கலித்துறை - தானதன தனனா தனதானன தானா தனதானா - என்ற சந்தம்;

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - தானன தானன தானன தானன தானா தனதானா - என்றும் நோக்கலாம்;

  • இந்தச் சந்தம் உள்ள பாடல்களில், சில பாடல்களில் முதற்சீர் "தானதான" / "தனனதான" என்றும் வரக்காணலாம்;


2) சம்பந்தர் தேவாரம் -

  • 1.1.1 - "தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்";

  • 1.1.2 - "முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு"

  • 1.1.7 - "சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------