Saturday, January 30, 2016

02.69 – திருப்பழனம்

02.69 – திருப்பழனம் 



2012-12-05
திருப்பழனம்
------------------
(திருவிருக்குக்குறள் அமைப்பில் - “மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு - வஞ்சித்துறை)
(சம்பந்தர் தேவாரம் - 1.93.6 - “மொய்யார் முதுகுன்றில்”)



1)
நச்சுப் பணிபூணும்
உச்சிப் பழனத்தாய்
நச்சும் அடியேன்றன்
அச்சம் களையாயே.



நச்சுப் பணி - விஷம் உடைய நாகப்பாம்பு;
உச்சி - தலை;
நச்சுப் பணி பூணும் உச்சிப் பழனத்தாய் - விஷப்பாம்பைத் தலையில் அணிந்த, திருப்பழனத்து ஈசனே;
நச்சும் அடியேன்றன் - உன்னை விரும்பும் அடியேனுடைய;
அச்சம் களையாய் - அச்சத்தைப் போக்கி அருள்வாயாக;
- ஈற்றசை (Expletive at the end of a line or sentence in a verse or at the end of a word);
(அப்பர் தேவாரம் - 4.66.1 - "கச்சைசே ரரவர் போலுங் ... தம்மை நச்சுவார்க் கினியர் போலும் நாகவீச் சரவ னாரே");



2)
மங்கை ஒருகூறா
கங்கை முடிமீது
தங்கும் பழனத்தாய்
சங்கை களையாயே.



சங்கை - அச்சம்;



3)
காடும் திருநட்டம்
ஆடும் இடமாக
நாடும் பழனத்தாய்
பாடு களையாயே.



பாடு - கஷ்டம்; வருத்தம் (Affiction, suffering, hardship);



4)
வற்றல் தலையேந்தி
ஒற்றை விடையேறிச்
சுற்றும் பழனத்தாய்
உற்ற துணைநீயே.



வற்றல் தலைந்தி - பிரமனது உலர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்தி;
ஒற்றை விடைறி - ஒப்பற்ற இடப வாகனத்தின்மேல் ஏறி;



5)
விழியார் நுதலானே
அழியாப் புகழானே
பொழிலார் பழனத்தாய்
அழகா அருளாயே.



விழி ஆர் நுதலான் - நெற்றிக்கண்ணன்;
அழியாப் புகழானே - என்றும் அழியாதவனாய், நிலைத்த புகழை உடையவனே;
பொழில் ஆர் பழனத்தாய் - சோலைகள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;
அழகா அருளாய் - அழகனே, அருள்புரிவாயாக;



6)
சேவார் கொடியானே
பூவார் முடியானே
காவார் பழனத்தாய்
தேவா அருளாயே.



சே ஆர் கொடி - இடபக்கொடி;
பூர் முடியானே - தலையில் மலர்கள் அணிந்தவனே;
கா ஆர் பழனத்தாய் - சோலைகள் சூழ்ந்த திருப்பழனத்தில் உறைபவனே;



7)
மழையார் மிடறானே
உழையார் கரத்தானே
பழையா பழனத்தாய்
அழகா அருளாயே.



மழை ஆர் மிடறானே - மேகம் போன்ற கண்டம் உடையவனே; (ஆர்தல் - ஒத்தல்);
உழை ஆர் கரத்தானே - கையில் மானை ஏந்தியவனே;
பழையா - பழையவனே; புராணனே;



8)
சிலம்பை அசைமூடன்
புலம்ப நெரித்தாய்புள்
அலம்பும் பழனத்தாய்
நலங்கள் அருளாயே.



சிலம்பு - மலை;
சிலம்பை அசை மூடன் - கயிலைமலையை அசைத்த அறிவில்லா அரக்கன் இராவணன்;
புலம்ப நெரித்தாய் - வருந்தி அழும்படி அவனை நெரித்தவனே;
புள் அலம்பும் பழனத்தாய் - பறவைகள் ஒலிக்கும் திருப்பழனத்தில் உறைபவனே;
(புள் - பறவை); (அலம்புதல் - ஒலித்தல்);
நலங்கள் - பலவகைச் செல்வ நலன்கள்; (சம்பந்தர் தேவாரம் - 3.120.11 - "பன்னலம் புணரும் பாண்டிமாதேவி...");



9)
அயன்மால் அறியாத
உயர்தீ உருவானாய்
வயலார் பழனத்தாய்
துயர்தீர்த் தருளாயே.



அயன் மால் அறியாத - பிரமனாலும் விஷ்ணுவாலும் அறிய இயலாத;
உயர் தீ உரு ஆனாய் - உயர்ந்த சோதி வடிவம் ஆனவனே;
வயல் ஆர் பழனத்தாய் - வயல்கள் நிறைந்த திருப்பழனத்தில் உறைபவனே;



10)
இகழ்வார்க் கிலனானாய்
புகழ்வார் புகலானாய்
பகவா பழனத்தாய்
சுகவாழ் வருளாயே.



இகழ்வார்க்கு இலன் ஆனாய் - இகழ்பவர்களுக்கு இல்லாதவன் ஆனவனே; (இகழ்வார்க்கு அருள் இல்லாதவன்);
புகழ்வார் புகல் ஆனாய் - துதிப்பவர்களுக்கு அடைக்கலம் ஆனவனே;
பகவா பழனத்தாய் - பகவனே; திருப்பழனத்தில் உறைபவனே;
சுக வாழ்வு அருளாயே - அடியேனுக்கு இன்ப வாழ்வு அருள்வாயாக;



11)
குவியாக் கரத்தானே
செவியோர் குழையானே
கவினார் பழனத்தாய்
பவநோய் களையாயே.



தனக்கு ஒரு தலைவன் இன்மையால் குவியாத கரங்களை உடையவனே; ஒரு காதில் குழையை அணிந்தவனே; அழகிய திருப்பழனத்தில் உறைபவனே; என் பிறவிப்பிணியைக் களைவாயாக.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) இப்பதிகத்தின் யாப்புக் குறிப்பு:
  • தேவாரத்தில் உள்ள திருவிருக்குக்குறள் அமைப்பை ஒட்டியது.
  • தமிழ் யாப்பிலக்கணத்தில் "வஞ்சித்துறை";
  • இப்பதிகத்தில் "மா புளிமாங்காய்" என்ற வாய்பாடு பயில்கின்றது.



2) திருவிருக்குக்குறள் (திரு இருக்குக்குறள் ) அமைப்பு - வஞ்சித்துறை;
  • நான்கு அடிகள்; ஒவ்வோர் அடியிலும் இரண்டு சீர்கள் - (குறளடி நான்கு);
  • எவ்வித வாய்பாட்டிலும் இருக்கலாம். (வஞ்சித்துறை பல்வேறு ஓசை அமைப்புகளில் வரும்);
  • சம்பந்தர் தேவாரம் - 1.93.6 -
மொய்யார் முதுகுன்றில்
ஐயா எனவல்லார்
பொய்யார் இரவோர்க்குச்
செய்யாள் அணியாளே”.



3) A blog post on "சம்பந்தர் தேவாரத்தில் வஞ்சித்துறை”: http://mohanawritings.blogspot.com/2011/06/blog-post_21.html
4) திருப்பழனம் - ஆபத்சகாயேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=959

-------------- --------------

02.68 – கானூர் (திருக்கானூர்)

02.68 – கானூர் (திருக்கானூர்)



2012-12-05
திருக்கானூர்
" கானூர்க் கரும்பு "
----------------------
(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)
(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.76.1 - “திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை)



1)
பிறையார் செஞ்சடைப் பிஞ்ஞக னைப்பண்டு
மறையால் கீழ்விரிப் பானை மணிபோலக்
கறையார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
மறவா நெஞ்சர்க் குறவாய் வருவனே.



பிறை ஆர் செஞ்சடைப் பிஞ்ஞகனை - செஞ்சடைமேல் பிறைசூடிய பிஞ்ஞகனை;
பண்டு மறை ஆல்கீழ் விரிப்பானை - முன்பு கல்லால மரத்தின்கீழ் மறைப்பொருள் சொல்பவனை;
மணி போலக் கறை ஆர் கண்டனை - நீலமணி போல் கறை திகழும் கண்டம் உடையவனை;
கானூர்க் கரும்பினை - திருக்கானூரில் எழுந்தருளியிருக்கும் கரும்பு போல்பவனை;
மறவா நெஞ்சர்க்கு உறவாய் வருவனே - மறவாத மனம் உடையவர்க்கு அவன் உறவாகி வருவான்.



2)
நீரார் செஞ்சடை மீது நிரைகொன்றை
ஏரார் வெண்மதி இண்டை புனைவானைக்
காரார் கண்டனைக் கானூர்க் கரும்பினை
ஓராய் நெஞ்சே ஒழியும் வினைகளே.



ஆர்தல் - பொருந்துதல்;
நிரை கொன்றை - வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலை;
ஏர் - அழகு;
இண்டை - முடிக்கு அணியும் மாலை;
கார் - கருநிறம்;
ஓர்தல் - நினைதல்;



3)
நாளை எண்ணும் நமனவன் ஆருயிர்
மாள மார்பினில் அன்றுதை காலனைக்
காள கண்டனைக் கானூர்க் கரும்பினை
நீள எண்ணில் அரணென நிற்பனே.



நாளை எண்ணும் நமன் - நம் வாழ்நாளை எண்ணுகின்ற இயமன்;
நமனவன் ஆர் உயிர் மாள மார்பினில் அன்று உதை காலனை - நமனுடைய அரிய உயிர் நீங்குமாறு அவனுடைய மார்பில் உதைத்த திருவடியை உடைய சிவபெருமானை;
(சம்பந்தர் தேவாரம் - 1.76.3 - "பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும் காலனாம்...." - CKS எழுதிய திருத்தொண்டர் புராண உரையில் , சம்பந்தர் வரலாற்றில் "அங்குள்ள பிறபதியி னரிக்கரியார் கழல்வணங்கிப்" என்று தொடங்கும் பாடலின் குறிப்புரையில், இப்பதிகப்பாடற்குறிப்பில் "காலன் - காலை உடையவன்; காலத்தைச் செலுத்துபவன் (காலம் - கால தத்துவம்);" என்று விளக்குகின்றார்);
காளகண்டன் - நீலகண்டன்;
நீள எண்ணில் - இடைவிடாது நினைந்தால்;
(சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்" - ' நீள ' என்றது, ' கால எல்லை இன்றி ' என்னும் பொருளதாய், இடைவிடாமையைக் குறித்தது);
அரண் - காவல்;



4)
மங்கை பங்கனை வன்னிவண் கூவிளம்
திங்கள் நாகம் திகழும் முடிமிசைக்
கங்கை சூடியைக் கானூர்க் கரும்பினை
அங்கை யால்தொழ அல்லலொன் றில்லையே.



வன்னி - வன்னியிலை;
கூவிளம் - வில்வம்;
கங்கை சூடியை - கங்கையை அணிந்தவனை;



5)
நாட்டம் மூன்றுடை நம்பனைப் பல்பிணக்
காட்டில் ஆடும் கழலனைக் கார்விடம்
காட்டும் கண்டனைக் கானூர்க் கரும்பினைப்
பாட்டும் பாடிப் பரவிப் பணிநெஞ்சே.



நாட்டம் - கண்;
நம்பன் - சிவன்; (நம்புதல் - விரும்புதல்);
பல் பிணக் காட்டில் - பல பிணங்களையுடைய சுடுகாட்டில்;
(சுந்தரர் தேவாரம் - 7.98.4 - "பாடிய நான்மறையான் படு பல்பிணக் காடரங்கா ஆடிய மாநடத்தான்...");
பாட்டும் பாடிப் பரவி - உரையாற் சொல்லுதலேயன்றிப் பாட்டாலும் பாடித் துதித்து;
(சுந்தரர் தேவாரம் - 7.91.1 -
"பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் ....")



6)
பரந்த பாற்கடல் தோன்றிய நஞ்சினைக்
கரந்த கண்டனைக் கானூர்க் கரும்பினை
இரந்து கைதொழு தேத்திடும் அன்பரைப்
புரந்து நிற்பான் வரந்தரும் வள்ளலே.



பாற்கடற்றோன்றிய - பாற்கடல் + தோன்றிய - பாற்கடலில் தோன்றிய;
நஞ்சினைக் கரந்த கண்டனை - விடத்தைக் கண்டத்தில் ஒளித்தவனை; (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);
புரத்தல் - காத்தல்;



7)
ஆனில் அஞ்சுகந் தாடும் அடிகளை
வானில் ஓடு மதிபுனை மைந்தனைக்
கானில் ஆடியைக் கானூர்க் கரும்பினைப்
பாநல் மாலைகள் பாடிப் பணிநெஞ்சே.



ஆனில் அஞ்சு - பால், தயிர், நெய், முதலிய ஐந்து பொருள்கள்;
(சம்பந்தர் தேவாரம் - 3.92.5 - "ஏனவெண் கொம்பொடும் ... ஆனினல் ஐந்துகந் தாடுவர்..." - ஆனில் நல் ஐந்து - five good products of the cow - பசுவிற்கிடைப்பதாகிய நல்ல. பஞ்சகவ்வியத்தை);
அடிகள் - கடவுள்;
வானில் ஓடு மதி - வானில் உலவுகின்ற திங்கள்; (அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும் ... ஓடிள வெண்பிறை யானும் ..." - ஓடு இள வெண்பிறை - வானில் ஓடும் பிறை, இளம் பிறை, வெண்பிறை);
மைந்தன் - இளைஞன்; வீரன்;
கானில் ஆடியை - சுடுகாட்டில் ஆடுபவனை; (கான் - சுடுகாடு);
பாநல் மாலைகள் - நற்பாமாலைகள்;



8)
மாலி னால்மலை ஆட்டினான் வாய்பத்தும்
ஓல மேசெய ஓர்விரல் ஊன்றிய
கால காலனைக் கானூர்க் கரும்பினைச்
சூல பாணியைச் சொல்ல வினைவீடே.



மால் - மயக்கம்; அறியாமை;
மாலினால் மலை ஆட்டினான் - ஆணவத்தால் கயிலைமலையை ஆட்டிய இராவணன்;



9)
கண்ணன் நான்முகன் நேடியும் காணொணா
வண்ணம் நின்ற வரையிலாச் சோதியைக்
கண்ணிற் றீயனைக் கானூர்க் கரும்பினை
அண்ண லைத்தொழும் அன்பருக் கின்பமே.



கண்ணன் - திருமால்;
நேடியும் காணொணா - தேடியும் காண ஒண்ணாத;
வரை இலாச் சோதியை - எல்லை இல்லாத ஒளிப்பிழம்பை;;
கண்ணிற் றீயனை - கண்ணில் தீயனை;



10)
பூதி யைப்புனை யார்புகல் ஒன்றிலர்
ஆதி மூர்த்தியை ஆதிரை யானையோர்
காதில் தோடணி கானூர்க் கரும்பினைக்
காதல் செய்வார் வினைகள் கழலுமே.



பூதி - திருநீறு;
புனைதல் - அணிதல்;
பூதியைப் புனையார் - திருநீறு பூசாதவர்கள்;
புகல் - அடைக்கலம்;
ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவன்;
ஓர் காதில் தோடு அணி - ஒரு காதில் தோடு அணிகின் - அர்தநாரீஸ்வரன்;
காதல் - அன்பு;
கழலுதல் - நீங்குதல்;



11)
தலைவா நின்தாள் சரணெனும் உம்பர்க்காச்
சிலையால் முப்புரம் செற்ற பெருமானைக்
கலைமான் கையனைக் கானூர்க் கரும்பினைத்
தலையால் கும்பிடும் தன்மையர்க் கின்பமே.



உம்பர்க்கா - தேவர்களுக்காக; (கடைக்குறை விகாரம்);
சிலையால் முப்புரம் செற்ற - மேருமலை என்ற வில்லால் முப்புரங்களையும் அழித்த; (சிலை - மலை; வில்);
கலைமான் கையனை - கையில் மானை ஏந்தியவனை;
தலையால் கும்பிடுதல் - தலைதாழ்த்தி வணங்குதல்; (சம்பந்தர் தேவாரம் - 1.80.7 - "அலையார் புனல்சூடி ... சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையா னார்களே.");



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



பிற்குறிப்பு :
1) யாப்புக்குறிப்பு : திருக்குறுந்தொகை அமைப்பு :
  • கலிவிருத்தம் - 4 அடிகள்; அடிக்கு 4 சீர்கள்;
  • முதற்சீர் மாச்சீர்;
  • இரண்டாம் சீர் நேர்சையில் தொடங்கும்;
  • 2-3-4 சீர்களிடையே வெண்டளை பயிலும்.
  • அடி நேரசையில் தொடங்கினால் அடிக்குப் 11 எழுத்துகள்; அடி நிரையசையில் தொடங்கினால் அடிக்குப் 12 எழுத்துகள்;
2) அப்பர் தேவாரம் - 5.4.1 -
திருவின் நாதனும் செம்மலர் மேலுறை
உருவ னாயுல கத்தின் உயிர்க்கெலாம்
கருவ னாகி முளைத்தவன் கானூரில்
பரம னாய பரஞ்சுடர் காண்மினே.



3) திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.
4) திருக்கானூர் - செம்மேனிநாதர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=387
5) தலக்குறிப்பு: இறைவன் - செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்;
  • 'திருமுறைத் தலங்கள்' என்ற நூலில் பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதியது: 1924-ல் வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதும் மூடிவிட்டது. அதன்மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்கக்கண்டு, திரு. N. சுப்பிரமணிய ஐயர் என்பவர் முயன்று தோண்டிப் பார்த்தபோது கோயில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இப்பெருமானுக்கு கரும்பேஸ்வரர் என்று பெயராயிற்று.
  • தருமபுர ஆதீன உரையில் காண்பது: "சுவாமி பெயர் இட்சுபுரீசுவரர் என்று கல்வெட்டுக் குறிப்பாளர் எழுதுகிறார்".
  • திருநாவுக்கரசர் தேவாரம் - 4.15.2 - "ஆனைக் காவில் அணங்கினை .... கானூர் முளைத்த கரும்பினை ...")

-------------- --------------

02.67 – திருமழபாடி

02.67 – திருமழபாடி



2012-12-04
திருமழபாடி
------------------
(கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்)
(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு")



1)
ஆவினில் ஏறும் ஐயவென் றும்பர் அடிபோற்றிப்
பூவிட நஞ்சைப் போனகம் செய்து புரந்தானை
வாவிக ளோடு வார்பொழில் சூழ்ந்த மழபாடி
மேவிய வேந்தை மேவிவ ணங்க வினைவீடே.



ஆவினில் ஏறும் ஐயன்று - "இடப வாகனம் உடைய தலைவனே" என்று;
உம்பர் - தேவர்;
போனகம் செய்தல் - உண்ணுதல்;
புரத்தல் - காத்தல்;
வாவி - நீர்நிலை;
வார்பொழில் - உயர்ந்த சோலை;
மேவுதல் - 1) உறைதல்; 2) விரும்புதல்;
வேந்து - அரசன்;
வினை வீடு - வினை நீக்கம்;



2)
பெண்புடை யாகும் பெற்றியன் ஓர்வெண் பிறையோடு
தண்புனல் தன்னைத் தன்முடி வைத்த சடையண்ணல்
வண்புனல் பாயும் வயல்புடை சூழ்ந்த மழபாடிக்
கண்புனை நெற்றிக் கடவுளைப் போற்றல் கருமம்மே.



புடை - பக்கம்;
பெற்றி - தன்மை; பெருமை;
தண் புனல் - குளிர்ந்த நீர் - கங்கை;
வண் - வளப்பமான;
கண் புனை நெற்றிக் கடவுளை - நெற்றிக்கண்ணனை;
கருமம் - நாம் செய்தற்குரிய செயல்;
கருமம்மே - கருமமே - மகர ஒற்று விரித்தல் விகாரம்.



3)
முந்தலை ஊர்கள் மூன்றழல் மூண்டு முடிவெய்த
வெந்தலை அம்பை விட்டவன் வெள்ளை விடையேறி
வந்தலை மோதும் கொள்ளிடப் பாங்கர் மழபாடி
தந்தலை தாழ்த்தித் தொழுபவர் இங்குத் தவியாரே.



பதம் பிரித்து:
முந்து, அலை ஊர்கள் மூன்று அழல் மூண்டு முடிவு எய்த
வெம் தலை அம்பை விட்டவன்; வெள்ளை விடை ஏறி;
வந்து அலை மோதும் கொள்ளிடப் பாங்கர் மழபாடி
தம் தலை தாழ்த்தித் தொழுபவர் இங்குத் தவியாரே.


முந்து - முன்பு;
அலை ஊர்கள் மூன்று - திரியும் புரங்கள் மூன்று - முப்புரங்கள்;
வெம் தலை அம்பு - சுடுகின்ற நுனியை உடைய கணை;
விடுதல் - பிரயோகித்தல்;
பாங்கர் - பக்கம்;


முன்பு, திரியும் முப்புரங்களும் தீப்பற்றி அழியும்படி முனையில் தீயை உடைய கணையைத் தொடுத்தவன்; வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவன்; அலைமோதும் கொள்ளிட ஆற்றின் பக்கத்தில் உள்ள திருமழபாடியைத் தங்கள் தலையைத் தாழ்த்தி வணங்கும் பக்தர்கள் இவ்வுலகில் துன்பம் அடையமாட்டார்.



4)
கானலர் ஏவும் காமனைக் காய்ந்த கனற்கண்ணன்
தேனலர்க் கொன்றை திங்களும் சென்னித் திகழீசன்
வானம ளாவும் வண்பொழில் சூழ்ந்த மழபாடி
ஞானனை ஏத்த நலிவினை யான நணுகாவே.



கான் - வாசனை;
அலர் - பூ;
வானம் அளாவும் வண்பொழில் - வானத்தைத் தீண்டும் வளப்பமான சோலைகள்;
ஞானன் - ஞானஸ்வரூபி;
நலித்தல் - துன்புறுத்துதல் (To afflict, cause distress);
நலி வினை - நலிக்கும் வினை;
நணுகுதல் - நெருங்குதல் (To approach, draw nigh, arrive at);



5)
திங்களும் பாம்பும் திருமுடி மீது திகழ்பெம்மான்
கங்குலில் ஆடி கறைமலி கண்டன் கணநாதன்
மங்கையைப் பாகம் வைத்தும கிழ்ந்த மழபாடிச்
சங்கரன் தாளைச் சார்பவர்க் கின்பம் சதமாமே.



கங்குல் - இரவு; இருள்;
கங்குலில் ஆடி - நள்ளிரவில் ஆடுபவன்;
கறை மலி கண்டன் - நீலகண்டன்;
கணநாதன் - பூதகணங்கள் தலைவன்;
சதம் - நித்தியமானது (That which is perpetual, eternal);



6)
தூமலர் தூவித் தொழுமடி யாரின் துயர்நீக்கிச்
சேமம ளித்துக் காலனைச் செற்ற திருப்பாதன்
மாமறை நாவன் மாதொரு பாகன் மழபாடிக்
கோமக னாரின் நாமமு ரைக்கக் குறைபோமே.



தூ மலர் - தூய மலர்;
சேமம் - காவல்; நல்வாழ்வு;
செற்ற - அழித்த;
கோமகன் - அரசன்; தலைவன்;
இலக்கணக் குறிப்பு: பாதன், நாவன், பாகன், என்று சொல்லிப் பின்னர்க் கோமகனார் என்றது ஒருமை பன்மை மயக்கம்.
"கோமகன் நாரின் நாமம் உரைக்க" என்றும் பிரித்துப் பொருள்கொள்ளலாம் - 'தலைவன் நாமத்தை அன்பினால் உரைக்க'. (நார் - அன்பு);



7)
நெய்யணி சூலன் நிழல்மழு வாளன் நிலவோடு
பையர வூரும் படர்சடை அண்ணல் பசுவேறி
மையணி கண்டன் மான்விழி பங்கன் மழபாடிச்
செய்யவன் நாமம் சிந்தைசெய் வார்க்குத் திருவாமே.



நெய் அணி - நெய் பூசப்பெற்ற;
நிழல் - ஒளி;
பை அரவு ஊரும் - படம் உடைய நாகப்பாம்பு ஊருகின்ற;
பசு - எருது; (சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்");
மை - கருநிறம்;
செய்யவன் - செம்மேனியன்;



8)
ஆட்டிய வெற்பின் அடியில ரக்கன் அழவூன்றிப்
பாட்டினைக் கேட்டுப் படையருள் பண்பன் பரமேட்டி
வாட்டடங் கண்ணி பங்கமர் ஈசன் மழபாடி
நாட்டியம் ஆடி அடிதொழு தேத்த நலமாமே.



வெற்பு - மலை;
படை - ஆயுதம்; இங்கே, வாள்;
வாட்டடங்கண்ணி - வாள் தடம் கண்ணி - ஒளிவீசும் அகன்ற கண்கள் உடைய பார்வதி;
அமர்தல் - விரும்புதல்;
நாட்டியம் ஆடி - கூத்தன்;
நாட்டியம் ஆடி அடிதொழு தேத்த நலமாமே - ஆடிப் பாடி அடிதொழுதல் - (5.5.4 - "ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ ஓடிப் போகும்நம் மேலை வினைகளே.");


9)
மண்டனை உண்ட மாலொடு வேதன் மயலாலே
கண்டறி யாத கனலுரு வானைக் களியோடு
வண்டுகள் பாடும் வண்பொழில் சூழ்ந்த மழபாடி
அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அணுகாவே.



மண்டனை - மண் தனை - மண்ணை; பூமியை;
(அப்பர் தேவாரம் - 4.23.10 -
"மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்");
வேதன் - பிரமன்;
மயல் - மயக்கம் (Confusion; bewilderment; delusion);
(சம்பந்தர் தேவாரம் - 1.35.9 - "மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனா ரழலாகி..." - இருவர் மருள்செய்து மயலாக - மாலும் அயனும் அஞ்ஞானத்தால் மயங்க);
அண்டன் - உலகங்களை உடையவன்; கடவுள் (God, as Lord of the universe);
அண்டுதல் - சரண்புகுதல்; கிட்டுதல்;


மண்ணை உண்ட திருமாலும் பிரமனும் மயக்கத்தால் கண்டறிய ஒண்ணாத சோதியை, மகிழ்வோடு வண்டுகள் ரீங்காரம் செய்யும் வளம் மிக்க சோலைகள் சூழந்த மழபாடியில் உறையும் சர்வலோக நாயகனைச் சரணடைந்த பக்தர்களை அல்லல்கள் நெருங்கமாட்டா.



10)
அஞ்செழுத் தோத அஞ்சிடும் நெஞ்சர் அவர்கூறும்
வஞ்சனை வார்த்தை வலையினை நீங்கி வருவீரே
மஞ்சடை சோலை வயல்புடை சூழும் மழபாடி
நஞ்சடை கண்டன் நாமமு ரைக்க நலமாமே.



அஞ்செழுத்து ஓத அஞ்சிடும் - நமச்சிவாய என்ற திருவைந்தெழுத்தைச் சொல்ல மாட்டாத;
மஞ்சு அடை சோலை - வானளாவும் பொழில்;
நஞ்சு அடை கண்டன் - நீலகண்டன்;



11)
கண்ணிடந் திட்டுக் கைதொழு தேத்து கடல்வண்ணன்
எண்ணிய ஆழி இனிதருள் செய்த எரிவண்ணன்
மண்ணொடு விண்ணும் வந்தனை செய்யும் மழபாடி
அண்ணலை வாழ்த்தும் அடியவர் இன்பம் அடைவாரே.



இடத்தல் - தோண்டுதல்;
கடல்வண்ணன் - திருமால்;
ஆழி - சக்கரம்;
கண் இடந்து இட்டுக் கைதொழுது ஏத்து கடல்வண்ணன் எண்ணிய ஆழி - ஆயிரம் தாமரைப்பூக்களில் ஒரு பூக்குறையத் தன் மலர்க்கண்ணையே பூவாகத் தோண்டி எடுத்துத் திருவடியில் இட்டுப் பூசித்த விஷ்ணுவுக்கு அவன் விரும்பிய சக்கராயுதத்தை;
எரிவண்ணன் - தீவண்ணன் - செம்மேனியன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு:
கலித்துறை - "தானன தான தானன தான தனதான" என்ற சந்தம்;
தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்;

2) சம்பந்தர் தேவாரம் - 1.98.1 -
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ன்றுடையானை மையொருபாகம் உடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே.


3) திருமழபாடி - வயிரத்தூண் நாதர் / வஜ்ஜிரஸ்தம்பேஸ்வரர் / வைத்யநாதர் - கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=438

-------------- --------------