Sunday, January 10, 2016

02.59 – திருச்சோற்றுத்துறை

02.59 – திருச்சோற்றுத்துறை



2012-10-08
திருச்சோற்றுத்துறை
----------------------
(கலித்துறை - 'மா மா மா மா மாங்காய்' என்ற வாய்பாடு.
ஈற்றுச்சீர் பொதுவாகப் புளிமாங்காய். ஒரோவழி தேமாங்காய் ஆகவும் வரக்கூடும்);
(1,5 சீர்களில் மோனை. பெரும்பாலும் 4-ஆம் சீரிலும் மோனை அமைந்துள்ளது.)
(சம்பந்தர் தேவாரம் - 2.64.1 - "தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே")



1)
ஒற்றை வெள்ளை இடப ஊர்தி உடையானே
நெற்றி விழியாய் நீல கண்டா நிகரில்லாய்
சுற்றும் பசிய வயலார் சோற்றுத் துறையானே
பற்றி னேன்நின் பாதம் பாராய் பரிவோடே.



ஒற்றை - ஒப்பற்ற;
நிகர் இல்லாய் - ஒப்பற்றவனே;
சுற்றும் பசிய வயல் ஆர் சோற்றுத்துறையானே - நாலாபக்கமும் பசுமையான வயல்கள் பொருந்திய திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியவனே;



2)
யாப்பொன் றளித்துத் தருமிக் கம்பொன் அருள்செய்தாய்
மூப்பொன் றில்லா மூர்த்தீ முதலும் முடிவானாய்
தோப்பும் வயலும் சூழும் சோற்றுத் துறையானே
காப்புன் கழலென் றடைந்தேன் கவலை களையாயே.



யாப்பு ஒன்று அளித்துத் தருமிக்கு அம்பொன் அருள்செய்தாய்- தமிழ்ச்செய்யுள் ஒன்றைத் தந்து தருமிக்குச் சிறந்த பொன் அருள்புரிந்தாய்;
மூப்பு ஒன்று இல்லா மூர்த்தீ - என்றும் இளமையாக இருக்கின்ற மூர்த்தியே;
முதலும் முடிவு ஆனாய் - அனைத்திற்கும் முதலும் முடிவும் ஆனவனே;
தோப்பும் வயலும் சூழும் சோற்றுத் துறையானே - சோலைகளும் வயலும் சூழ்ந்த திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியவனே;
காப்பு உன் கழல் என்று அடைந்தேன் கவலை களையாயே - உன் திருவடியே காவல் என்று உன்னைச் சரணடைந்த என் கவலைகளைத் தீர்த்தருள்வாயாக.


* தருமிக்கு அருளியதைத் திருவிளையாடற் புராணத்திற் காண்க. அப்பர் தேவாரத்திலும் இச்செயல் குறிக்கப்பெற்றுள்ளது. (திருத்தாண்டகம் - 6.76.3 - "மின்காட்டுங் .... நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்");



3)
தழலார் மேனீ கங்கை தங்கும் சடையானே
நிழலார் மழுவா என்றும் நீங்கா நிதியானாய்
சுழலார் பொன்னிப் பாங்கர்ச் சோற்றுத் துறையானே
கழலார் பாதம் தொழுமென் கவலை களையாயே.



தழல் ஆர் மேனீ - தீப்போல் திகழும் செம்மேனி உடையவனே;
(சுந்தரர் தேவாரம் - 7.1.6 - "தண்ணார்மதி சூடீதழல் போலுந்திரு மேனீ " - நெருப்புப் போலும் திருமேனியை உடையவனே - 'திருமேனி' என்றது அடையடுத்த ஆகுபெயராய், அதனை உடையவனைக் குறித்தது.);
கங்கை தங்கும் சடையானே - சடையில் கங்கையை உடையவனே;
நிழல் ஆர் மழுவா - ஒளி திகழும் மழு உடையவனே;
என்றும் நீங்கா நிதி ஆனாய் - தொலையாச் செல்வனே; (தொலையாச் செல்வர் - திருச்சோற்றுத்துறையில் உறையும் ஈசன் திருப்பெயர்);
சுழல் ஆர் பொன்னிப் பாங்கர்ச் சோற்றுத் துறையானே - சுழன்று வரும் நீர் உடைய காவிரியின் கரையில் உள்ள திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியவனே;
கழல் ஆர் பாதம் தொழும் என் கவலை களையாயே - கழல் அணிந்த உன் திருவடியை வணங்கும் என் கவலைகளைத் தீர்த்தருள்வாயாக.



இலக்கணக் குறிப்பு: அடையடுத்த ஆகுபெயர்: வெற்றிலை நட்டான், மருக்கொழுந்து நட்டான், அறுபதம் முரலும் என்புழி, இலை, கொழுந்து, பதம் என்னும் சினைப்பெயர்கள், முறையே வெறுமை, மரு, ஆறு என்னும் அடை அடுத்து, முதற்பொருள்களுக்கு ஆதலால், அடையடுத்த ஆகுபெயர்.



4)
பெரும்பார் முதலா விண்ணிற் பிறங்கும் பிறவெல்லாம்
துரும்பாய்த் தோன்றும் பெரியாய் சொல்லத் துணையில்லாய்
சுரும்பார் சோலை சூழும் சோற்றுத் துறையானே
கரும்பே கழலே தொழுதேன் கவலை களையாயே.



பெரும் பார் - பெரிய பூமி;
பிறங்குதல் - விளங்குதல்; பிரகாசித்தல்;
பெரும் பார் முதலா விண்ணிற் பிறங்கும் பிற எல்லாம் துரும்பாய்த் தோன்றும் பெரியாய் - அண்டங்கள் எல்லாம் துரும்பு போலத் தோன்றுமாறு மிகப் பெரியவனே;
துணை - ஒப்பு (Comparison, similitude);
சொல்லத் துணை இல்லாய் - ஓர் உவமை அற்றவனே;
சுரும்பு ஆர் சோலை - வண்டுகள் ஒலிக்கும் பொழில்;
கரும்பே - உருவகம் - கரும்பு போல்பவனே;
கழலே தொழுதேன் கவலை களையாயே - உன் திருவடியையே தொழுத அடியேன் கவலைகளைத் தீர்த்தருள்வாயாக.



5)
மாலை யாகப் பாம்பை மகிழும் மணிகண்டா
சூலம் ஏந்தும் துணைவா துளங்காச் சுடரானே
சோலை சூழும் கவினார் சோற்றுத் துறையானே
கால காலா அடியேன் கவலை களையாயே.



துளங்காச் சுடரானே - அசைவில்லாத சோதியே;
(அப்பர் தேவாரம் - 6.5.10 - " துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி");
கவின் ஆர் - அழகிய;



6)
குளங்கண் ஆகிக் கைகள் கூப்பும் குணசீலர்
உளங்கள் கோயி லாக உகக்கும் உமைகோனே
துளங்கும் பிறையைச் சூடும் சோற்றுத் துறையானே
களங்கம் இல்லாய் அடியேன் கவலை களையாயே.



துளங்கும் - பிரகாசித்தல் (To shine; to be bright, luminous; to radiate);
(சம்பந்தர் தேவாரம் - 1.60.10 - "துளங்குமிளம் பிறையாளன்");


கண்கள் குளமாகிக் கைகூப்பித் தொழும் குணம் மிக்க சீலர்கள் உள்ளமே கோயிலாக விரும்புபவனே; பார்வதி நாயகனே; வெண்பிறையை அணிபவனே; திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியவனே; குற்றம் அற்றவனே; உன் திருவடியை வணங்கும் என் கவலைகளைத் தீர்த்தருள்வாயாக.



7)
ஏற மர்ந்தாய் பிறையை இண்டை எனவேற்றாய்
நீற மர்ந்தாய் எங்கும் நிறையும் நிலையானே
சோற ளிக்கும் வயல்சூழ் சோற்றுத் துறையானே
ஆற ணிந்த அண்ணா அடியேற் கருளாயே.



அமர்தல் - விரும்புதல்;
இண்டை - தலையில் சூடும் ஒருவகை மாலை;
நீறு அமர்ந்தாய் எங்கும் - திருமேனி எங்கும் வெண்ணீறு பூசியவனே;
எங்கும் நிறையும் நிலையான் - சர்வவியாபி (God, as Omnipresent);
சோறு - அன்னம்/உணவு; முக்தி;
அண்ணா - அண்ணல் என்பதன் விளியான 'அண்ணால்' என்பது அண்ணா என மருவியது;



8)
முன்னம் மலையை எடுக்க முயன்ற முடிபத்து
மன்னன் அழவோர் விரலை வைத்து வரமீந்தாய்
துன்னு சோலை சூழும் சோற்றுத் துறையானே
பன்னிப் பாதம் பணிந்தேன் பாராய் பரிவோடே



முடிபத்து மன்னன் - இராவணன்;
துன்னு சோலை - அடர்ந்த பொழில்; (துன்னுதல் - செறிதல் - To be thick, crowded; to press close);
பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்;



9)
அரியும் அயனும் முடியும் அடியும் அடையாத
எரியும் எரியாய் அவர்கள் இடையே எழுமீசா
சொரியும் முகிலார் பொழில்சூழ் சோற்றுத் துறையானே
பரியும் உன்னைப் பணிவேன் பாவம் பறையாயே.



இலக்கணக் குறிப்பு: அரியும் அயனும் முடியும் அடியும் - எதிர்நிரனிறையாக வந்தது;
எரியும் எரியாய் - எரிகின்ற நெருப்பு ஆகி;
சொரியும் முகில் ஆர் பொழில் சூழ் - மழையைப் பொழியும் மேகம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த;
பறைத்தல் - நீக்குதல்;
பரியும் உன்னைப் பணிவேன் பாவம் பறையாயே - இரங்கும் உன்னைத் தொழும் என் பாவங்களைத் தீர்த்தருள்வாயாக .
(சம்பந்தர் தேவாரம் - 3.46.6
மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே.
---- அவர் வண்ணம் எரியும் நெருப்புப் போன்ற சிவந்த வண்ணமாகும்.)



10)
பண்டை வேத நெறியைப் பழித்துப் பலவாறு
மிண்டு மொழிவார்க் கருளா வெள்ளை விடையானே
தொண்டர் துதித்து மகிழும் சோற்றுத் துறையானே
கண்டம் கரியாய் அடியேன் கவலை களையாயே.



பண்டை - பழைய;
மிண்டு - இடக்கர்ப் பேச்சு (Vulgar talk; vulgarity); செருக்கிக் கூறும் மொழி (Presumptuous speech);
கண்டம் கரியாய் - நீலகண்டனே;



11)
கணையால் புரங்கள் சுடுமுக் கண்ணா கரைசேர்க்கும்
புணையா னவனே மறையின் பொருளே புகழ்வார்க்குத்
துணையா னவனே வயல்சூழ் சோற்றுத் துறையானே
அணையா னவனே கங்கைக் கடியேற் கருளாயே.



கணையால் புரங்கள் சுடு முக்கண்ணா - ஓர் அம்பால் முப்புரங்களையும் எரித்த முக்கண்ணனே;
கரைசேர்க்கும் புணை ஆனவனே - பிறவிக்கடல் கடப்பிக்கும் படகு போன்றவனே;
மறையின் பொருளே - வேதப்பொருளே;
புகழ்வார்க்குத் துணை ஆனவனே - துதிப்பவர்களுக்குத் துணையாக இருப்பவனே;
வயல்சூழ் சோற்றுத் துறையானே - வயல் சூழ்ந்த திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியவனே;
அணை ஆனவனே கங்கைக்கு, அடியேற்கு அருளாயே - கங்கைக்கு அணை ஆகிச் சடையில் தாங்கியவனே, அடியேனுக்கு அருள்வாயாக.



அன்போடு,
வி. சுப்பிரமணியன்



------------------ Some Q&A on this set --------------
Question fron a reader: on song 9: /அரியும் அயனும் முடியும் அடியும் அடையாத/ -- அரி அடியையும் அயன் முடியையும் தேடியதால், இந்த அடி "அரியும் அயனும் அடியும் முடியும் அடையாத" என்றிருந்தால் சிறக்கும் என்று தோன்றுகிறது.
My response: ஆம், பொதுவாக அப்படியே இருக்கும். இத்தொடரில் உள்ள பாடல்களில் 1,4,5 சீர்களில் மோனை அமைந்துள்ளதால், யாப்பு நோக்கி இவ்வடியில் இப்படி எதிர்நிரனிறையாக வந்தது.
எதிர்நிரனிறை = எதிர்நிரல்நிரை = Reversed sequence, a syntactical arrangement of a series of predicates in an order which is the reverse of that in which their respective nominatives stand; முறைமாறி வரும் நிரனிறை.






பிற்குறிப்பு :
1) யாப்புக் குறிப்பு :
கலித்துறை - 'மா மா மா மா மாங்காய்' என்ற வாய்பாடு.
ஈற்றுச்சீர் பொதுவாகப் புளிமாங்காய். ஒரோவழி தேமாங்காய் ஆகவும் வரக்கூடும்;
1,5 சீர்களில் மோனை. பெரும்பாலும் 4-ஆம் சீரிலும் மோனை அமைந்துள்ளது.



2) சம்பந்தர் தேவாரம் - 2.64.1 -
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்
ஓவா உவரி கொள்ள உயர்ந்தாய் என்றேத்தி
மூவா முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே



3) திருச்சோற்றுத்துறை - ஓதனவனேஸ்வரர் கோயில் தகவல்கள் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=371

-------------- --------------

No comments:

Post a Comment