Showing posts with label திருச்செங்கோடு. Show all posts
Showing posts with label திருச்செங்கோடு. Show all posts

Tuesday, July 15, 2025

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு) - பூவினால் நறுந்தூபத்தால்

2018-02-28

P.425 - செங்கோடு (திருச்செங்கோடு)

(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - வேதியா வேத கீதா)


முற்குறிப்பு - இப்பதிகத்தில் எல்லாப் பாடல்களிலும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கூறப்பெறுகின்றது.


1)

பூவினால் நறுந்தூ பத்தால் .. புனலினால் புரைதீர் செஞ்சொற்

பாவினால் போற்றும் அன்பர் .. பழவினை தீர்க்கும் பண்பன்

ஏவினால் முப்பு ரங்கள் .. எய்தவன் ஏற தேறி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பூவினால், றுந்-தூபத்தால், புனலினால், - பூக்களாலும் நறும்புகையினாலும், நீராலும்;

புரை தீர் செஞ்சொல் பாவினால் போற்றும் அன்பர் பழவினை தீர்க்கும் பண்பன் - குற்றமற்ற செந்தமிழ்ப் பாமாலைகளாலும் வழிபடும் அடியவர்களது பழைய வினைகளைத் தீர்க்கின்ற பண்பு உடையவன்; (புரை - குற்றம்);

ஏவினால் முப்புரங்கள் எய்தவன் - ஓர் அம்பினால் முப்புரங்களை எய்தவன்; (ஏ – அம்பு);

து ஏறி - இடபவாகனன்; (ஏறு - எருது; அது - பகுதிப்பொருள்விகுதி);

தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சேண் - உயரம்; ஆகாயம்);


2)

கல்வியின் பயன றிந்து .. கற்றவர் போற்றும் ஈசன்

சொல்விர(வு) இன்த மிழ்ப்பாச் .. சொல்லிய தொண்டர் தம்மை

வல்வினை தொடரா வண்ணம் .. மகிழ்ந்தருள் செய்ம்மா தேவன்

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


கல்வியின் பயன் அறிந்து கற்றவர் போற்றும் ஈசன் - ;

சொல் விரவு இன்-தமிழ்ப்-பாச் சொல்லிய தொண்டர்-தம்மை - செஞ்சொற்கள் பொருந்திய இனிய தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வழிபடும் தொண்டர்களை;

வல்வினை தொடரா-வண்ணம் மகிழ்ந்துஅருள் செய்ம் மாதேவன் - வலிய வினைகள் தொடராதபடி இன்னருள் செய்யும் மகாதேவன்; (செய்ம்மாதேவன் - புணர்ச்சியில் மகரஒற்று மிகும்);

செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


3)

வாயினில் நூலைக் கொண்டு .. வலையொரு சிலந்தி பின்ன

மாயிரு ஞாலம் ஆளும் .. மன்னவன் ஆக்கும் எந்தை

தாயினும் நல்லன் கையில் .. தழல்மழு சூலம் ஏந்தி

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாயினில் நூலைக் கொண்டு வலை ஒரு சிலந்தி பின்ன(திருவானைக்காவில்) ஒரு சிலந்தி தன் வாய்நூலால் வலை பின்னி ஈசனை வழிபடவும்;

மாயிருஞாலம் ஆளும் மன்னவன் ஆக்கும் எந்தை - இந்தப் பெரிய நிலவுலகை ஆளும் சோழமன்னன் ஆக்கிய எம் தந்தை; (அப்பர் தேவாரம் - 4.56.1 - "மாயிரு ஞாலமெல்லா(ம்) மலரடி வணங்கும்"); (* கோச்செங்கட்சோழ நாயனார் வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

தாயினும் நல்லன் - தாயைவிட நல்லவன்;

கையில் தழல் மழு சூலம் ஏந்தி - கையில் தீ, மழு, சூலாயுதம் இவற்றையெல்லாம் ஏந்தியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


4)

வருந்திய வானோர் வந்து .. மலரடி வாழ்த்த நஞ்சை

அருந்திய கண்டன் நால்வர்க்(கு) .. அருமறை விரிக்க ஆல்கீழ்

இருந்தவன் ஓடொன் றேந்தி .. இரந்தவன் இமவான் பெற்ற

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வருந்திய வானோர் வந்து மலரடி வாழ்த்த நஞ்சை அருந்திய கண்டன் - வருந்தி வந்து திருவடியை வழிபட்ட தேவர்கள் உய்ய ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

நால்வர்க்கு அருமறை விரிக்க ஆல்கீழ் இருந்தவன் - சனகாதியர்களுக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்தவன்;

ஓடு ஒன்று ஏந்தி இரந்தவன் - பிரமனது மண்டையோட்டை ஏந்திப் பிச்சை ஏற்றவன்;

இமவான் பெற்ற திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் பெண்ணான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


5)

மலைதனை ஒருவில் லாக்கி .. மாற்றலர் புர(ம்)மூன் றெய்தான்

தலைமலி மாலை தன்னைத் .. தலைக்கணி தலைவன் ஆர்க்கும்

அலைமலி கங்கை தன்னை .. அஞ்சடை அடைத்த அண்ணல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


மலைதனை ஒரு வில் ஆக்கி, மாற்றலர் புரம்-மூன்று எய்தான் - மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (மாற்றலர் - பகைவர்);

தலை மலி மாலைதன்னைத் தலைக்கு அணி தலைவன் - தலைக்குத் தலைமாலை அணிந்த தலைவன்;

ஆர்க்கும் அலை மலி கங்கைதன்னை அஞ்சடை அடைத்த அண்ணல் - ஒலிக்கின்ற அலைகள் மிக்க கங்கையை அழகிய சடையில் அடைத்த அண்ணல்; (ஆர்த்தல் - ஒலித்தல்); (அஞ்சடை - அம் சடை - அழகிய சடை);

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை); (திருப்புகழ் - திருத்தணிகை - "கலைமடவார்தம் .. .. சிலைமகள் நாயன் கலைமகள் நாயன்");


6)

வாவியார் பங்க யம்போல் .. மலர்விழி மாலிட் டேத்த

ஓவிலா வென்றி ஆழி .. உகந்தருள் பெம்மான் கொக்கின்

தூவியார் சென்னித் தூயன் .. சுரும்பினம் அமரும் ஓதித்

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வாவி ஆர் பங்கயம்போல் மலர்விழி மால் இட்டு ஏத்த - குளத்தில் திகழும் தாமரைப்பூப் போலத் தன் மலர்க்கண்ணை இடந்து பூவாகத் திருவடியில் இட்டுத் திருமால் வழிபாடு செய்ய;

ஓவு இலா வென்றி ஆழி உகந்துஅருள் பெம்மான் - நீங்குதல் இல்லாத வெற்றியுடைய சக்கராயுதத்தை அருளிய பெருமான்; (ஓவு - நீங்குதல்; முடிதல்); (வென்றி - வெற்றி); (சம்பந்தர் தேவாரம் - 3.116.5 - "ஓவிலாதிடுங் கரணமே");

கொக்கின் தூவி ஆர் சென்னித் தூயன் - கொக்கின் இறகைத் திருமுடிமேல் சூடிய தூயவன்; (தூவி - இறகு); (கொக்கிறகு - ஒரு பூ; குரண்டாசுரனை அழித்த அடையாளம்);

சுரும்பு-இனம் அமரும் ஓதித் தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - வண்டுகள் விரும்பும் கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (ஓதி - பெண்களின் கூந்தல்; ஓதித் தேவி - ஓதியை உடைய தேவி); (சம்பந்தர் தேவாரம் - 3.22.8 - "வண்டமர் ஓதி மடந்தை பேணின"); (பெரியபுராணம் - திருஞானசம்பந்தர் புராணம் - 12.28.669 - "தெள்ளு நீர்விழித் தெரிவையார்")


7)

வில்விச யனுக்கு நல்க .. வேடனாய்ச் சென்ற வேந்தன்

வெல்விடை யான்வன் தொண்டர் .. வேண்டவும் ஆரூர் தன்னில்

நெல்விசும்(பு) அணாவத் தந்த .. நீர்மையன் மலையான் பெற்ற

செல்வியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


வில்விசயனுக்கு நல்க வேடனாய்ச் சென்ற வேந்தன் - வில்வித்தையில் சிறந்த அர்ஜுனனுக்குப் பாசுபதாஸ்திரம் அருள்வதற்கு ஒரு வேடன் உருவில் சென்ற வேந்தன்;

வெல்விடையான் - வெற்றியுடைய இடபத்தை வாகனமாக உடையவன்;

வன்தொண்டர் வேண்டவும் ஆரூர் தன்னில் நெல் விசும்பு அணாவத் தந்த நீர்மையன் - வன்தொண்டர் (சுந்தரர்) வேண்டியபடி திருவாரூரில் வானளாவ நெல்லைத் தந்தருளியவன்; (அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்); (நீர்மை - தன்மை; சௌலப்பியம்); (* சுந்தரருக்குக் குண்டையூரில் நெல்மலை அளித்துப் பின் அவர் வேண்டியபடி ஈசன் அந்த நெல்மலையைத் திருவாரூரில் ஈந்த வரலாற்றைப் பெரியபுராணத்தில் காண்க);

மலையான் பெற்ற செல்வி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலையரசன் மகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


8)

போயிரு வரையி டந்தான் .. பொன்முடி பத்த டர்த்து

வாயிரும் புகழைப் பாட .. வாளொடு நாளும் ஈந்தான்

ஆயிரம் பெயர்கள் உள்ளான் .. அரையினிற் புலியின் தோலன்

சேயிழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


போய் இரு-வரை இடந்தான் பொன்முடி பத்து அடர்த்து - சென்று பெரிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது கிரீடம் அணிந்த பத்துத்-தலைகளையும் நசுக்கி; (இருமை - பெருமை); (இடத்தல் - பெயர்த்தல்);

வாய் இரும்-புகழைப் பாட, வாளொடு நாளும் ஈந்தான் - (பின் இராவணனது) வாய்கள் ஈசனது பெரும்புகழைப் பாடவும் கேட்டு இரங்கி, அவனுக்கு வாளும் நீண்ட ஆயுளும் கொடுத்தவன்;

ஆயிரம் பெயர்கள் உள்ளான் - ஆயிரம் திருநாமங்கள் உடையவன்;

அரையினில் புலியின் தோலன் - அரையில் புலித்தோலைக் கட்டியவன்;

சேயிழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


9)

பெருந்தொடர் வாது செய்த .. பிரமனு(ம்) மாலு(ம்) நேட

அருந்தழல் ஆனான் போற்றி .. அடைமணி வாச கர்க்குக்

குருந்தமர் குரவன் ஆனான் .. கொடியன மென்ம ருங்குல்

திருந்திழை பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பெரும்-தொடர்-வாது செய்த பிரமனும் மாலும் நேட அரும் தழல் ஆனான் - தொடர்ந்து மிகவும் வாது செய்த பிரமனும் திருமாலும் தேடுமாறு, அவர்களால் அறிவதற்கு அரிய ஜோதி ஆனவன்; (நேடுதல் - தேடுதல்);

போற்றி அடை மணிவாசகர்க்குக் குருந்து அமர் குரவன் ஆனான் - வணங்கி அடைந்த மாணிக்கவாசகருக்குக் குருந்தமரத்தின்கீழ்க் குரு ஆனவன்; (குரவன் - குரு);

கொடி அன மென் மருங்குல் திருந்திழை பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - கொடி போன்ற மெல்லிய இடையை உடைய உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (அன – அன்ன – ஒத்த); (மருங்குல் - இடை);


10)

பலபல பொய்கள் சொல்லிப் .. படுகுழித் தள்ளப் பார்க்கும்

கலதிகட் கெட்டா எந்தை .. கண்ணுதல் கழலை வாழ்த்தி

வலம்வரும் அன்பர்க் கின்பம் .. மல்கிட அருளும் வள்ளல்

சிலைமகள் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


பலபல பொய்கள் சொல்லிப், டுகுழித் தள்ளப் பார்க்கும் கலதிகட்கு எட்டா எந்தை கண்ணுதல் - பல பொய்களைச் சொல்லிப், (புன்னெறி என்ற) படுகுழியில் மக்களைத் தள்ள முயல்கின்ற தீயோருக்கு எட்டாதவன் நெற்றிக்கண்ணனான எம் தந்தை; (கலதி - தீக்குணம் உடையவன்);

கழலை வாழ்த்தி வலம்வரும் அன்பர்க்கு இன்பம் மல்கிட அருளும் வள்ளல் - திருவடியைப் போற்றிப் பிரதட்சிணம் செய்து வழிபடும் பக்தர்களுக்கு இன்பம் பொங்குமாறு அருள்கின்ற வள்ளல் அவன்;

சிலைமகள் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - மலைமகளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்; (சிலை - மலை);


11)

நாவினால் அஞ்செ ழுத்தை .. நாள்தொறும் நவிலும் அன்பர்

தீவினை ஆன தீர்த்துத் .. திருவருள் செய்யும் தேவன்

சேவினை விரும்பி ஏறி .. செங்கயல் அன்ன கண்ணி

தேவியோர் பங்கன் ஊராம் .. சேணுயர் திருச்செங் கோடே.


நாவினால் அஞ்செழுத்தை நாள்தொறும் நவிலும் அன்பர் தீவினை ஆன தீர்த்துத் திருவருள் செய்யும் தேவன் - தங்கள் நாக்கால் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் அடியவர்களது பாவங்களையெல்லாம் தீர்த்து இன்னருள் செய்யும் இறைவன்; (நவில்தல் - சொல்லுதல்);

சேவினை விரும்பி ஏறி - இடபவாகனத்தை விரும்பியவன்; (ஏறி - ஏறுபவன்);

செங்கயல் அன்ன கண்ணி தேவி ஓர் பங்கன் ஊர் ஆம் சேண் உயர் திருச்செங்கோடே - செங்கயல்மீன் போன்ற கண்களை உடையவளான உமையை ஒரு பங்கில் உடைய பெருமான் உறையும் ஊர், வானோங்கும் திருச்செங்கோடு ஆகும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Sunday, January 19, 2020

04.80 – கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் - திருச்செங்கோடு)


04.80கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் - திருச்செங்கோடு)

2014-10-30
கொடிமாடச் செங்குன்றூர் (இக்காலத்தில் 'திருச்செங்கோடு')
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்")

1)
வெளியபொடி திகழ்கின்ற மேனியனை வேதியனைத்
தளிர்மதியும் திரைபுனலும் சடைமீது தரித்தவனைக்
குளிர்மதியம் அணவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
எளியவனை இருபோதும் எண்ணிலிரு வினைவீடே.

வெளிய பொடி - வெண்திருநீறு; (சம்பந்தர் தேவாரம் - 1.2.5 - "செய்யமேனி வெளியபொடிப் பூசுவர்" - சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திருநீற்றைப் பூசுபவர்);
தளிர்மதி - முளைமதி; இளநிலா;
திரைபுனல் - திரைகின்ற புனல் - அலையெழும் கங்கை; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);
அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்; மேல் நோக்கிச் செல்லுதல் (To go upward, ascend);
கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு;
எளியவன் - அடியவர்க்கு எளியவன்;
இருபோதும் எண்ணில் இருவினை வீடே - இருவேளையும் எண்ணினால் இருவினைகள் அழியும்; (வீடு - நீக்கம்; முடிவு);

2)
ஏலமலர்க் குழலாளை இடப்பக்கம் உடையானை
ஆலமர நீழலில்நல் லறஞ்சொன்ன ஆரியனைக்
கோலமதி தடவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
நீலமணி மிடற்றானை நினையவிரு வினைவீடே.

ஏலமலர்க் குழலாள் - வாசமலர்க்கூந்தலை உடைய உமை;
ஆரியன் - குரு; பெரியவன்; ஞானி;
கோல மதி - அழகிய சந்திரன்;
நீலமணி மிடற்றானை நினைய இருவினை வீடே - நீலகண்டனை நினைந்தால் இருவினை நீங்கும்;

3)
இரக்கமுடைப் பெருமானை ஏந்திழையார் கடையிற்போய்
இரக்கவொரு சிரமேந்தும் எம்மானைச் செம்மானைக்
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர்
வரக்கரனை மறவாது வாழ்த்தவிரு வினைவீடே.

இரக்கமுடைப் பெருமானை - தயாபரனை;
ஏந்திழையார் கடையிற்போய் இரக்க ஒரு சிரம் ஏந்தும் எம்மானை - பெண்கள் வீட்டுவாயிலிற் சென்று யாசிக்க ஒரு மண்டையோட்டை ஏந்தும் எம்பெருமானை; (கடை - வீட்டுவாயில்);
செம்மானை - செம்மேனியனை; (சம்பந்தர் தேவாரம் - 1.87.10 - "செருமால் விடையூருஞ் செம்மான்" - போர் செய்யத்தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்தநிறத்தினர்);
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர் - குரங்குகள் குதித்து மகிழும் திருசெங்கோட்டில் உறைகின்ற; (குரக்கினங்கள் - குரங்குக் கூட்டங்கள்; செம்பு/செப்பு, இரும்பு/இருப்பு, என்பன போல் குரங்கு/குரக்கு என்று திரியும்);
வரக்கரனை மறவாது வாழ்த்த இருவினை வீடே - வரதஹஸ்தனான சிவபெருமானை என்றும் துதித்தால் இருவினை நீங்கும்; (வரக்கரன் - வரத்தை அருளும் கரத்தை உடையவன் - வரதஹஸ்தன்; வரம், கரம் என்ற சொற்களைத் தமிழ்ச்சொற்களாகக் கொண்டதால், புணர்ச்சியில் 'க்' மிக்கது. அன்றேல், "வரகரன்" - வரத்தைத் தருபவன் - என்ற வடசொல், எதுகைக்காக 'க்' மிக்கு வந்தது என்றும் கொள்ளல் ஆம்);
இலக்கணக் குறிப்பு : இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வரும் வலிமிகும்.
(சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய பெருவலி யினனல மலிதரு கரன்..." --- நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களை உடையவன்.);
(ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்டகம் - "நித்யானந்தகரீ வராபயகரீ ...."; வராபயகரீ = வரகரீ, அபயகரீ = Salutations to Mother Annapoorna, who always give joy to Her devotees, along with boons and assurance of fearlessness ); (करः 1 A hand; .....-9 A doer. )

4)
மட்டவிழும் மலர்க்குழலி மலைமகளோர் பங்குடையான்
இட்டமொடு நஞ்சுண்ட இருள்கண்டன் இமையவர்கோன்
குட்டியொடு மந்திதிரி கொடிமாடச் செங்குன்றூர்ச்
சிட்டனவன் திருநாமம் செப்பவிரு வினைவீடே

மட்டு - தேன்;
இட்டம் - இஷ்டம் - விருப்பம்;
இமையவர்கோன் - வானோர் தலைவன்;
சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; நீதிமுறை வழுவாதவன்; மேலானவன்;

5)
வண்டமரும் மலர்க்குழலி மருவுமிடப் பாகத்தன்
வெண்டிரையார் வேலைதனில் விளைநஞ்சை அமுதுண்ட
கொண்டலன கண்டத்தன் கொடிமாடச் செங்குன்றூர்
அண்டனடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே.

வண்டு அமரும் மலர்க்குழலி மருவும் இடப் பாகத்தன் - வண்டுகள் விரும்பும் மலர்க்கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (மருவுதல் - தழுவுதல்);
வெண் திரை ஆர் வேலைதனில் விளை நஞ்சை அமுதுண்ட கொண்டல் அன கண்டத்தன் - வெள்ளிய அலைகள் இருக்கும் பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை அமுதுபோல் உண்ட, மேகம் போன்ற கரிய நிறமுடைய கண்டத்தை உடையவன்; (திரை - அலை); (வேலை - கடல்); (கொண்டல் - மேகம்) (அன - அன்ன - இடைக்குறை);
கொடிமாடச் செங்குன்றூர் அண்டன் அடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே - திருச்செங்கோட்டில் உறைகின்ற கடவுளின் திருவடியை வழிபடுபவர்களை வினைகள் அடையமாட்டா; (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்);

6)
வாளனகண் மங்கைபங்கன் மலர்க்கணைகள் ஐந்துடைய
வேளையெரி கண்ணுதலான் விரிசடைமேல் வெண்மதியன்
கோளரவக் கச்சுடையான் கொடிமாடச் செங்குன்றூர்க்
காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே.

வாள் அன கண் மங்கைபங்கன் - வாள் போன்ற கண்ணையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அன - அன்ன);
மலர்க்கணைகள் ஐந்து உடைய வேளை எரி கண்ணுதலான் - ஐந்து மலரம்புகளை உடைய மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (வேள் - மன்மதன்);
விரிசடைமேல் வெண்மதியன் - விரித்த சடைமேல் பிறைச்சந்திரனைச் சூடியவன்;
கோள் அரவக் கச்சு உடையான் - கொடிய பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்;
கொடிமாடச் செங்குன்றூர்க் காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே - திருச்செங்கோட்டில் உறைகின்ற நீலகண்டனது இரு திருவடிகளை வழிபடும் அன்பர்களுக்குக் கவலை இல்லை; (காளகண்டன் - நீலகண்டன்);

7)
செம்பொன்னார் சடையுடையான் சிலைவில்லைக் கையேந்தி
அம்பொன்றால் அரண்மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான்
கொம்பன்னாள் ஒருகூறன் கொடிமாடச் செங்குன்றூர்
நம்பன்தாள் தொழுதேத்த நசியும்வல் வினைக்கட்டே.

செம்பொன் ஆர் சடை உடையான் - செம்பொன் போன்ற சடையை உடையவன்;
சிலைவில்லைக் கை ஏந்தி அம்பு ஒன்றால் அரண் மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான் - மேருமலை என்ற வில்லைக் கையில் ஏந்தி ஒரு கணையால் முப்புரங்களைத் தீப்புகச்செய்தவன்; (சிலை - மலை);
கொம்பு அன்னாள் ஒரு கூறன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு ப்கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் நம்பன் தாள் தொழுதேத்த நசியும் வல்வினைக்கட்டே - திருச்செங்கோட்டில் உறைகின்ற சிவபெருமானது திருவடியை வழிபட்டால் வலிய வினைக்கட்டு அழியும்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (நசிதல் - அழிதல்);

8)
வாராரும் முலைமங்கை ஒருபங்கன் மாமலையை
ஓராமல் அசைத்தவனை ஒருவிரலிட் டடர்த்தபரன்
கூராரும் சூலத்தன் கொடிமாடச் செங்குன்றூர்ப்
பேராமல் உறைவான்சீர் பேசவரும் பெரும்புகழே.

வார் ஆரும் முலை மங்கை ஒரு பங்கன் - கச்சு அணிந்த முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்;
மாமலையை ஓராமல் அசைத்தவனை - சற்றும் எண்ணாமல் கயிலைமலையை அசைத்த இராவணனை; (ஓர்தல் - எண்ணுதல்);
ஒரு விரல் இட்டு அடர்த்த பரன் - ஒரு விரலை ஊன்றி நசுக்கிய பரமன்;
கூர் ஆரும் சூலத்தன் - கூர்மை மிக்க திரிசூலத்தை உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர்ப் பேராமல் உறைவான் சீர் - திருச்செங்கோட்டில் நீங்காமல் உறைகின்ற பெருமான் புகழை; (இலக்கணக் குறிப்பு : ஏழாம் வேற்றுமைத் தொகையில் வரும் வலி மிகும் );
சீர் பேசவரும் பெரும்புகழே. - 1) சீர் பேச, வரும் பெரும்புகழே = அவன் சீரைப் பேசும் பக்தர்களுக்குப் ப்ரும்புகழ் வரும்; 2) சீர், பேச அரும் பெரும் புகழே = அவன் சீர் பேசுவதற்கு அரிய பெரிய புகழே = எல்லையற்ற புகழை உடையவன்;

9)
வெல்பவரார் என்றிருவர் மிகமுயன்ற பரஞ்சோதி
சில்பலிக்கென் றுழல்பெருமான் சேயிழையோர் பங்குடையான்
கொல்புலித்தோல் அரைக்கசைத்தான் கொடிமாடச் செங்குன்றூர்
நில்புனிதன் பாதமலர் நினைவார்தம் வினைவீடே.

வெல்பவர் ஆர் என்று இருவர் மிக முயன்ற பரஞ்சோதி - தம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடி மிக முயலுமாறு நின்ற மேலான சோதி;
சில்பலிக்கு என்று உழல் பெருமான் - பிச்சைக்காகத் திரியும் பெருமான்; (சில் - சில); ( பலி - பிச்சை);
சேயிழை ஓர் பங்கு உடையான் - உமையை ஒரு பங்கில் உடையவன்;
கொல்புலித்தோல் அரைக்கு அசைத்தான் - கொல்லும் புலியின் தோலை அரையில் கட்டியவன்;
கொடிமாடச் செங்குன்றூர் நில் புனிதன் - திருச்செங்கோட்டில் நீங்காமல் உறைகின்ற தூயவன்; (இலக்கணக் குறிப்பு : கொல்புலி, நில்புனிதன் - வினைத்தொகைகள். ஆகவே, ல் திரியாது);
பாதமலர் நினைவார்தம் வினை வீடே - அப்பெருமானது திருவடித்தாமரையைத் தியானிக்கும் அன்பர்களது வினைகள் நீங்கும்;

10)
செவியிருந்தும் சிவன்சீரைக் கேளாத செவிடருரை
அவிநெறிகள் அடையேன்மின் ஆதியந்தம் இல்லாதான்
குவிமுலையாள் பிரியாதான் கொடிமாடச் செங்குன்றூர்
அவிர்சடையான் திருநாமம் அணிநாவர்க் கரணாமே.

அவிநெறி - அழியும் மார்க்கம்; (அவிதல் - அழிதல்; அவித்தல் - அழித்தல்; கெடுத்தல்)
அடையேன்மின் - அடையாதீர்கள்; நீங்கள் சேரவேண்டா;
ஆதி அந்தம் இல்லாதான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
குவிமுலையாள் பிரியாதான் - குவிந்த முலைகளையுடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் அவிர்சடையான் - திருச்செங்கோட்டில் உறைகின்ற, ஒளிவீசும் சடையை உடையவன்; (அவிர்தல் - பிரகாசித்தல்);
திருநாமம் அணி-நாவர்க்கு அரண் ஆம் - அப்பெருமானது திருப்பெயரான திருவைந்தெழுத்தை அணிந்த நாவை உடையவர்க்கு அது சிறந்த பாதுகாவல் ஆகும்;
(அப்பர் தேவாரம்- 4.11.2 - "நாவினுக் கருங்கல நமச்சி வாயவே" - நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்);
(அப்பர் தேவாரம்- 4.81.8 - "படைக்கல மாகவுன் னாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டேன்" - தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் படைக்கருவியாக உன் திருநாமமாகிய திருவைந் தெழுத்தினையும் அடியேன் நாவினில் நீங்காது கொண்டுள்ளேன்);

11)
பொடியணிந்த திருமார்பன் பூதகணம் புடைசூழ்ந்து
துடியொலிக்கச் சுடலைதனிற் சுழன்றாடும் திருப்பாதன்
கொடியிடையாள் கூறுடையான் கொடிமாடச் செங்குன்றூர்
அடிகளையே அடிபரவும் அடியார்கட் கிடரிலையே.

பொடி அணிந்த திருமார்பன் - மார்பில் திருநீற்றைப் பூசியவன்;
பூதகணம் புடைசூழ்ந்து துடி ஒலிக்கச் சுடலைதனில் சுழன்று ஆடும் திருப்பாதன் - பூதகணங்கள் சூழ்ந்து உடுக்கைகளை ஒலிக்கச் சுடுகாட்டில் சுழன்று ஆடுகின்ற பாதத்தை உடையவன்; (துடி - உடுக்கை); (சுடலை - சுடுகாடு);
கொடியிடையாள் கூறு உடையான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்; அர்த்தநாரீஸ்வரன்;
கொடிமாடச் செங்குன்றூர் அடிகளையே அடிபரவும் அடியார்கட்கு இடர் இலையே - திருச்செங்கோட்டில் உறையும் சுவாமியையே வணங்கும் அடியவர்களுக்குத் துன்பம் இல்லை; (அடிகள் - கடவுள்); (அடிபரவுதல் - வணங்குதல்);

அன்பொடு,
வி. சுப்பிரமணியன்

பிற்குறிப்புகள் :
1) கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு - அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் தளத்தில்: http://temple.dinamalar.com/New.php?id=531
----------- --------------

Saturday, May 26, 2018

04.32 - செங்கோடு (திருச்செங்கோடு) - தேவியொரு பங்குடையாய்

04.32 - செங்கோடு (திருச்செங்கோடு) - தேவியொரு பங்குடையாய்

2013-12-16

செங்கோடு (திருச்செங்கோடு)

(தேவாரத்தில் - கொடிமாடச் செங்குன்றூர்)

----------------------------------

(12 பாடல்கள்)

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


1)

தேவியொரு பங்குடையாய் செங்கோடு மேயவனே

நாவினிலுன் நாமத்தை நவில்வார்க்கு நல்லரணே

ஆவினிலைந் துகந்தாடும் ஐயாநின் அடிபணிந்தேன்

தீவினையும் நோவினையும் தீர்த்தென்னைக் காத்தருளே.


* திருச்செங்கோட்டில்: சுவாமி அர்த்தநாரீசுவரர்; அம்மை பாகம்பிரியாள்;

செங்கோடு மேயவனே - திருச்செங்கோட்டில் விரும்பி உறைகின்றவனே;

அரண் - காவல்;

ஆவினில் ஐந்து உகந்து ஆடும் ஐயா - பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் அபிஷேகம் விரும்பும் தலைவனே;

தீவினையும் நோவினையும் தீர்த்து - தீவினையையும் நோவையும் தீர்த்து; (நோ - வலி; துன்பம்);


2)

தெரிவையொரு பங்குடையாய் செங்கோடு மேயவனே

பரிவினொடு நஞ்சுண்டு பாலித்த கண்டத்தாய்

புரிசடைமேல் புனலேற்றாய் பொன்னடியே போற்றிநின்றேன்

புரிவினைகள் துன்பங்கள் போக்கியினி தருளாயே.


தெரிவை - பெண்; புரிசடை - முறுக்கிய சடை; புரி-வினை - செய்த வினைகள்; (புரிதல் - செய்தல்);


3)

சேயிழையோர் பங்குடையாய் செங்கோடு மேயவனே

வாயினிலுன் வாழ்த்தணிய வல்லார்க்கு நல்லவனே

தீயினையோர் கண்தாங்கும் திருநுதலாய் அடிபணிந்தேன்

நோயினைவு தருவினையை நூறியெனைக் காத்தருளே.


சேயிழை - பெண்; நுதல் - நெற்றி; நோய் இனைவு தருவினையை நூறி எனைக் காத்தருளே - நோயையும் வருத்தத்தையும் தருகின்ற வினைகளையெல்லாம் அழித்து என்னைக் காத்து அருள்வாயாக; (இனைவு - வருத்தம்); (நூறுதல் - அழித்தல்);


4)

சிற்றிடையாள் பங்குடையாய் செங்கோடு மேயவனே

வெற்றிவிடைக் கொடியுடையாய் வெண்மழுவாட் படையுடையாய்

புற்றரவக் கச்சுடையாய் பொன்னடிகள் போற்றிநின்றேன்

பற்றவரும் பண்டைவினைப் பகைகடிந்து காத்தருளே.


கடிதல் - அழித்தல்;


5)

செல்வியொரு பங்குடையாய் செங்கோடு மேயவனே

வில்விசயற் கருள்செய்ய வேடுவனாய்ச் சென்றவனே

கொல்விடமார் கண்டத்தாய் குரைகழலே பரவிநின்றேன்

தொல்வினையில் ஆழாமல் தூக்கியெனைக் காத்தருளே.


செல்வி - உமாதேவி; (அப்பர் தேவாரம் - 4.43.8 - "செல்வியைப் பாகங் கொண்டார்");

வில்-விசயற்கு - வில்வித்தையில் சிறந்த அருச்சுனனுக்கு;

கொல்-விடம் ஆர் கண்டத்தாய் - கொல்லும் நஞ்சை உண்ட கண்டத்தை உடையவனே;

தொல்வினையில் ஆழாமல் - பழவினைக் கடலில் நான் மூழ்காதபடி;


6)

செந்துவர்வாய் உமைபங்கா செங்கோடு மேயவனே

வந்திறைஞ்சு வானவர்கள் மகிழமதில் மூன்றுமுடன்

வெந்துவிழக் கணைதொட்டாய் மென்மலர்த்தாள் போற்றிநின்றேன்

முந்தைவினைத் தொடரெல்லாம் முடியவருள் புரியாயே.


செம்-துவர் வாய் - செம்பவளம் போல் வாயை உடைய; (சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே");

கணை தொட்டாய் - அம்பு எய்தவனே;

முடிதல் - அழிதல்;


7)

தேனார்பூங் குழலிபங்கா செங்கோடு மேயவனே

ஊனாருந் தலையொன்றில் உண்பலிதேர்ந் துழல்வானே

மானாருங் கையானே மலரடியே போற்றிநின்றேன்

வானாரும் வழிகாட்டி வல்வினையைத் தீர்த்தருளே.


தேன் ஆர் பூங்குழலி - வண்டார்குழலி - வண்டு ஆர்க்கும் பூக்களை அணிந்த குழலை உடையவள் - உமாதேவி; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);

ஊன் ஆரும் தலை - மாமிசம் பொருந்திய மண்டையோடு;

பலி - பிச்சை;

மான் ஆரும் கையான் - மான்கன்றைக் கையில் ஏந்தியவன்;

வான் ஆரும் வழி - வானுலகைப் பொருந்தும் நெறி; (ஆர்தல் - பொருந்துதல்; பெறுதல்);


8)

சிலைப்பாவை பங்குடையாய் செங்கோடு மேயவனே

மலைக்கீழே வல்லரக்கன் வாடவிரல் வைத்தவனே

அலைத்தோடும் நதிச்சடையாய் அடியிணையே போற்றிநின்றேன்

கலக்கேசெய் கடுவினையைக் களைந்தென்னைக் காத்தருளே.


சிலைப்பாவை - மலைமகள்; (சிலை - மலை); ("சிலைமகள் நாயன்" - திருப்புகழ் - கலைமடவார்தம் - திருத்தணிகை); கலக்கு - கலக்கம் - துன்பம்; அச்சம்; கடுவினை - கொடுமையான வினை;


9)

சிலம்பரையன் மகள்பங்கா செங்கோடு மேயவனே

அலம்புநதிச் சடையுடையாய் அரிபிரமற் கரியவனே

நிலம்புனல்கால் நெருப்போடு நீள்விசும்பும் ஆயவனே

நலம்புரியும் சங்கரனே நாதாநின் கழல்போற்றி.


சிலம்பு-அரையன் மகள் பங்கா - மலையரசன் மகளான உமையம்மையைப் பங்காகக் கொண்டவனே; (சிலம்பு - மலை); (அரையன் - அரசன்); (அப்பர் தேவாரம் - 6.98.8 - "சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய்கின்ற நேசனை");

அலம்புதல் - ஒலித்தல்;

அரி பிரமற்கு அரியவனே - திருமாலுக்கும் பிரமனுக்கும் அரியவனே;

கால் - காற்று;

விசும்பு - ஆகாயம்;

நலம்புரியும் சங்கரனே - சங்கரன் என்ற நாமத்தின் பொருளை விரித்துச் சொன்னது; (சங்கரன் - சுகத்தைச் செய்பவன்);


10)

செவியினிலோர் தோடுடையாய் செங்கோடு மேயவனே

கவியிருள்சேர் கன்னெஞ்சக் கயவருரை பொய்விட்டுக்

குவிகரமும் கசிமனமும் கொண்டுதொழும் அடியார்க்குப்

புவியினிவா ராநிலையைப் புரப்பாய்நின் கழல்போற்றி.


செவியினில் ஓர் தோடு உடையாய் - அர்த்தநாரீஸ்வரனே; (சம்பந்தர் தேவாரம் - 1.1.1 - 'தோடுடைய செவியன்');

கவி இருள்சேர் கல்-நெஞ்சக் கயவர் உரை-பொய் விட்டு - மூடும் இருள் சேர்ந்த, கல் போன்ற நெஞ்சத்தை உடைய கயவர்கள் சொல்லும் பொய்களை நீங்கி; (கவி இருள்சேர் நெஞ்சம், கல் நெஞ்சம்); (கவிதல் - மூடுதல்);

குவிகரம் - குவித்த கரம்;

கசிமனம் - கசியும் மனம்;

புவி இனி வாரா நிலையைப் புரப்பாய் - இனிப் பூமியில் பிறவாத நிலையை அருள்பவனே;


11)

சியாமளையோர் பங்குடையாய் செங்கோடு மேயவனே

கயாசுரனை வதஞ்செய்த கணபதியைப் பெற்றவனே

தயாபரனே தாளிணையைச் சார்ந்தார்க்கு நன்மையன்றிச்

செயாதவனே சேவமரும் சேவகநின் கழல்போற்றி.


சியாமளை - சாமளை - [சாமள நிறமுடையவள்] பார்வதி;

கயாசுரனை வதஞ்செய்த கணபதியைப் பெற்றவனே - விநாயகக் கடவுளைத் தோற்றுவித்துக் கயமுகாசுரனை அழிப்பித்த வரலாற்றைக் கந்தபுராணத்துட் காண்க. (அப்பர் தேவாரம் - 6.53.4 -

"கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் கயாசுரனை அவனாற் கொல்வித்தார் போலும்");

தயாபரன் - [தயைமிக்கவன்] கடவுள்;

தாளிணையைச் சார்ந்தார்க்கு நன்மை அன்றிச் செயாதவனே - அடி அடைந்தவர்களுக்கு என்றும் நன்மையே செய்பவன்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

சே - எருது;

சேவகன் - வீரன்;


12)

சிறுமருங்குல் உமைபங்கா செங்கோடு மேயவனே

செறுநமனைச் செற்றவனே சேயவனைப் பெற்றவனே

நறுமலரான் சிரத்தினிலூண் நயந்தவனே அடியவர்க்கோர்

உறுதுணையே நீலகண்டம் உடையாய்நின் கழல்போற்றி.


மருங்குல் - இடை;

செறுதல் - கொல்லுதல்;

சேயவன் - முருகன்;

நறுமலரான் - தாமரைமேல் இருக்கும் பிரமன்;

ஊண் - உணவு; (அப்பர் தேவாரம் - 6.89.7 - "பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்");


வி. சுப்பிரமணியன்

----------- --------------