Showing posts with label அகவல். Show all posts
Showing posts with label அகவல். Show all posts

Thursday, April 21, 2022

06.04.010 – திருநாளைப் போவார் துதி - மாதவம் செய்த

06.04.010 – திருநாளைப் போவார் துதி - மாதவம் செய்த


2010-04-15

6.4.10) திருநாளைப் போவார் அகவல்

----------------------------------------

மாதவம் செய்த வண்தமிழ் நாட்டில்

ஆதனூர் அதனில் அரனடி மறவாப்

புனிதர் நந்தனார் புலைப்பாடி தன்னுள்

மனித குலமும் வாழ வந்தார்

எத்தொழில் செய்யினும் ஈசன் தொண்டெனில்      5

உய்த்திடும் ஆறென உணர்ந்தவர் என்றும்

சிந்தையில் சிவனவன் திருப்பெயர் ஆன

ஐந்தெழுத் தோதி அவர்குலத் தொழிலே

செய்து வாழ்வார் தினம்தினம் கோயில்

வாத்தியங் களுக்கா வார்தோல் நரம்பு               10


சேர்த்துத் தருவார் திருப்புன் கூர்போய்ச்

சிவனைத் தரிசனம் செய்ய விரும்பினார்

அவர்குலத் தாலே அத்தளி யுட்புகார்

தெருவினில் நின்றே தேவனைக் காண

ஒருவிடை வழிமறைத் துளதே என்றே          15

உருகித் தொழுதார் உமைகோன் ஏற்றினை

ஒருபுடை நகர்என உரைக்கவும் கண்ணால்

திருவுருக் கண்டு சேவித் துவந்தார்

அருகொரு குளமும் அமைத்து மகிழ்ந்தார்

பலதலம் போற்றிப் பணிந்து வந்தார்               20


அலகில் சோதி ஆடு கின்ற

திருவார் தில்லைச் சிற்றம் பலம்தொழக்

கருவின் வேரும் கருகும் என்றே

பெருவிருப் போடு பேசி நின்றார்

புலையராய் இருப்பதால் போக லாகா           25

நிலையை எண்ணுவார் நிதம்அவர் வாயோ

நாளைப் போவேன் நானங் கென்னும்

வேளைப் பொடிசெய் விமலனைக் காண

ஒருநாள் தில்லை ஊரின் எல்லை

அருகே வந்தார் அவர்பிறப் பெண்ணி           30


நெருங்கார் விதியை நினைந்து நகரின்

மருங்கே நின்றார் மனத்தில் காதல்

பாயப் பதியைப் பன்முறை சுற்றிநாள்

ஓய மரத்தடி ஒன்றில் உறங்கினார்

அந்தணர் கனவில் ஐயன் தோன்றி          35

வந்தனன் அன்பன் நந்தனுக் காகச்

செந்தழல் செய்து சீக்கிரம் அவனை

அழைத்து வருகவென் றருளினார் அன்பு

தழைக்க நந்தனார் தமக்கும் சொன்னார்

அப்படி அந்தணர் அமைத்த எரிப்புகும்          40


செப்பற் கரிய செம்மையார் ஆன

நந்தனார் நானிலம் வந்தனை செய்ய

முந்தை உருப்போய் முனியுரு வோடே

வெண்பொடி பூசி விடையமர் கின்ற

கண்பொலி நெற்றியன் கருணையைப் பாடிக்      45

கரங்கள் இரண்டும் சிரம்மேல் கூப்பி

அரகர என்றே அருகுளோர் ஏத்தத்

தீயினின் றெழுந்து தாயிடம் ஓடும்

கன்றினைப் போல மன்றினை நோக்கி

வேதியர் சூழ விரைந்து சென்றார்                   50


ஆதியும் அந்தமும் ஆன அண்ணலின்

திருநடம் கண்டு பெருமகிழ் வெய்தி

இருவரும் காணா ஒருவனோ டிரண்டறக்

கலந்து நின்றார் கழலிணை போற்றி

கலங்கரை விளக்கமாய் இலங்கியிவ் வுலகோர்          55

உய்ந்நெறி காட்டுவார் ஒண்கழல் போற்றி

ஐந்தெழுத் ததனை அனுதினம் ஓதிக்

காள கண்டரை நீள நினைந்த

நாளைப் போவார் நற்பதம் போற்றி.          59


சொற்பொருள்:

வண்மை - வளம்;

புலைப்பாடி - புலையர்கள் சேரி;

உய்த்திடும் ஆறு - உய்வைத் தரும் வழி;

தளி - கோயில்;

விடை - இடபம்; எருது;

புடை - பக்கம்;

சேவித்து உவந்தார் - கும்பிட்டு மகிழ்ந்தார்;

அலகு இல் சோதி - அளவு இல்லாத ஜோதி;

திரு ஆர் - நன்மை பொருந்திய; அழகிய;

வேள் - மன்மதன்;

மருங்கு - பக்கம்; எல்லை;

பதி - தலம்; ஊர்;

ஏத்துதல் - துதித்தல்;

மன்று - அம்பலம்;

இருவரும் - திருமாலும் பிரமனும்;

இலங்குதல் - பிரகாசித்தல்;

உய்ந்நெறி - உய்யும் வழி;

ஒண் கழல் - ஒளி வீசும் திருவடி;

காள கண்டர் - நீலகண்டன்;

நீள நினைதல் - இடைவிடாது எண்ணுதல்; (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "நீள நினைந்தடியேன் உனை நித்தலும் கைதொழுவேன்"):


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------