Showing posts with label இராமேச்சுரம் - (ராமேஸ்வரம்). Show all posts
Showing posts with label இராமேச்சுரம் - (ராமேஸ்வரம்). Show all posts

Tuesday, July 8, 2025

P.420 - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்) - பார்த்தன் தவம்நோக்கி

2017-12-25

P.420 - இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)

---------------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

பார்த்தன் தவ(ம்)நோக்கிப் பாசு பதமீந்தாய்

தீர்த்தங் களிலாடித் திருவார் தமிழ்பாடி

ஏத்தி அடியார்சேர் இராமேச் சுர(ம்)மேயாய்

ஆர்த்த வினைநீக்கி அடியேற் கருளாயே.


பார்த்தன் தவம் நோக்கிப் பாசுபதம் ஈந்தாய் - அர்ஜுனன் செய்த தவம் கண்டு அவனுக்குப் பாசுபதாஸ்திரத்தை அளித்தவனே;

தீர்த்தங்களில் ஆடித் திரு ஆர் தமிழ் பாடி ஏத்தி அடியார் சேர் இராமேச்சுர(ம்) மேயாய் - பல தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து தேவாரம் திருவாசகம் பாடி அடியவர்கள் வழிபடும் ராமேஸ்வரத்தில் உறைகின்ற பெருமானே;

ஆர்த்த வினை நீக்கி அடியேற்கு அருளாயே - என்னைப் பிணித்துள்ள வினைகளைத் தீர்த்து அடியேனுக்கு அருள்வாயாக; (ஆர்த்தல் - பிணித்தல்; கட்டுதல்);


2)

முடியா முதலானாய் முக்கட் பெருமானே

கொடிபோல் இடையாளைக் கூறா மகிழ்வோனே

இடியார் குரலேற்றாய் இராமேச் சுர(ம்)மேய

அடிகேள் திரிசூலா அடியேற் கருளாயே.


முடியா முதல் ஆனாய் - அழிவற்ற ஆதியே;

முக்கட் பெருமானே - முக்கண்ணனே;

கொடி போல் இடையாளைக் கூறா மகிழ்வோனே - கொடியிடை உமையை ஒரு கூறாக உடையவனே;

இடி ஆர் குரல் ஏற்றாய் - இடி போல் குரலுடைய எருதை வாகனமாக உடையவனே;

இராமேச்சுர(ம்) மேய அடிகேள் - ராமேஸ்வரத்தில் உறைகின்ற கடவுளே;

திரிசூலா அடியேற்கு அருளாயே - திரிசூலத்தை ஏந்தியவனே, அடியேனுக்கு அருள்வாயாக;


3)

பண்ணார் மொழிமாதோர் பாகம் உடையானே

கண்ணார் நுதலானே கையிற் சிலையேந்தி

எண்ணார் புரமெய்தாய் இராமேச் சுர(ம்)மேய

அண்ணா அழல்வண்ணா அடியேற் கருளாயே.


பண் ஆர் மொழி மாது ஓர் பாகம் உடையானே - இன்மொழி பேசும் உமையை ஒரு பாகத்தில் உடையவனே;

கண் ஆர் நுதலானே - நெற்றிக்கண்ணனே;

கையில் சிலை ஏந்தி எண்ணார் புரம் எய்தாய் - கையில் வில்லைத் தாங்கிப் பகைவர்களது முப்புரங்களை எரித்தவனே; (சிலை - வில்); (எண்ணார் - பகைவர்);

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

அண்ணா அழல் வண்ணா - அண்ணலே, தீப்போல் செம்மேனியனே;

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


4)

பொறிகள் திகழ்நாகம் பூண்ட திருமார்பா

மறியைக் கரமேந்தீ மலைமா தொருபங்கா

எறியும் திரைசூழ்ந்த இராமேச் சுர(ம்)மேய

அறிவின் வடிவோனே அடியேற் கருளாயே.


பொறிகள் திகழ் நாகம் பூண்ட திருமார்பா - புள்ளிகள் திகழும் பாம்பை மார்பில் அணிந்தவனே;

மறியைக் கரம் ஏந்தீ - மான்கன்றைக் கையில் ஏந்தியவனே;

மலைமாது ஒரு பங்கா - உமைபங்கனே;

எறியும் திரை சூழ்ந்த – அலைமோதும் கடலால் சூழப்பெற்ற;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

அறிவின் வடிவோனே - ஞானமூர்த்தியே;

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


5)

போற்றற் குரியானே பூதப் படையானே

கூற்றைக் குமைகாலா கோல உமைபங்கா

ஏற்றுக் கொடியானே இராமேச் சுர(ம்)மேய

ஆற்றுச் சடையானே அடியேற் கருளாயே.


போற்றற்கு உரியானே - வணக்கத்திற்கு உரியவனே;

பூதப்படையானே - பூதகணப்படை உடையவனே;

கூற்றைக் குமை காலா - கூற்றை அழித்த காலனே; (குமைத்தல் - கொல்தல்);

கோல-உமைபங்கா - அழகிய உமையைப் பங்கில் உடையவனே;

ஏற்றுக்-கொடியானே - இடபக்கொடி உடையவனே;

ஆற்றுச்-சடையானே - கங்கையைச் சடையில் அடைத்தவனே;


6)

பரவை உமிழ்நஞ்சைப் பழம்போல் அமுதுண்டாய்

கரவில் அருளாளா கையில் தலையேந்தி

இரவைப் புரிவோனே இராமேச் சுர(ம்)மேய

அரவச் சடையானே அடியேற் கருளாயே.


பரவை உமிழ் நஞ்சைப் பழம் போல் அமுது உண்டாய் - கடல் கக்கிய விஷத்தை நாவற்பழம் போல எடுத்து உண்டவனே; (பரவை - கடல்);

கரவு இல் அருளாளா - ஒளித்தல் இன்றி வழங்கும் அருள்பவனே;

கையில் தலை ஏந்தி இரவைப் புரிவோனே - கையில் மண்டையோட்டை ஏந்திப் பிச்சையெடுப்பவனே; (தலை - மண்டையோடு); (இரவு - யாசித்தல்);

அரவச்-சடையானே - சடையில் பாம்பை அணிந்தவனே;


7)

சீரார் கழல்போற்றித் தேவர் தொழுதேவா

நீரார் சடைமீது நிலவைப் புனைவோனே

ஏரார் மதில்சூழ்ந்த இராமேச் சுர(ம்)மேய

ஆரா அமுதானாய் அடியேற் கருளாயே.


சீர் ஆர் கழல் போற்றித் தேவர் தொழு தேவா - நன்மை மிக்க திருவடியைப் போற்றித் தேவர்கள் தொழும் தேவனே;

நீர் ஆர் சடைமீது நிலவைப் புனைவோனே - கங்கையையும் சந்திரனையும் சடையில் அணிந்தவனே;

ஏர் ஆர் மதில் சூழ்ந்த இராமேச்சுர(ம்) மேய – அழகிய மதிலால் சூழப்பெற்ற ராமேஸ்வரத்தில் உறைகின்ற;

ஆரா அமுது ஆனாய் - தெவிட்டா இன்னமுதம் ஆனவனே; (அப்பர் தேவாரம் - 6.44.2 - "சார்ந்தார்க்கு இன்னமுது ஆனானே");

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


8)

எங்கும் செருவில்லா இலங்கைக் கிறைகோபம்

பொங்கி மலைபேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய்

எங்கள் பெருமானே இராமேச் சுர(ம்)மேய

அங்கம் மறையோதீ அடியேற் கருளாயே.


எங்கும் செருல்லா இலங்கைக்கு இறை - எவ்விடத்திலும் (எதிர்த்துப் போரிட எவரும் அஞ்சியதால்) போர் இல்லாத இலங்கை மன்னனும்; (செரு - போர்); (இறை - அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 1.116.8 - "செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்தருள் செய்தவரே");

கோபம் பொங்கி மலை பேர்த்தான் புயங்கள் நெரிசெய்தாய் – மிகுந்த கோபத்தால் கயிலையைப் பெயர்த்து எறிய முயன்றவனுமான இராவணனது தோள்களை நசுக்கியவனே; (புயங்கள் - புஜங்கள்);

எங்கள் பெருமானே - எம்பெருமானே;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அங்கம் மறை ஓதீ - நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதியருளியவனே ; (அங்கம் - வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, வியாகரணம், முதலியன);

அடியேற்கு அருளாயே - அடியேனுக்கு அருள்வாயாக;


9)

மலையோர் குடையான மாலு(ம்) மலரானும்

தலைவா எனவேத்தத் தழலாய் உயர்வோனே

இலையார் திரிசூலா இராமேச் சுர(ம்)மேய

அலையார் சடையானே அடியேற் கருளாயே.


மலை ஓர் குடையான மாலும் மலரானும் - மலையைக் குடையாக ஏந்திய திருமாலும் பிரமனும்;

தலைவா என ஏத்தத் தழலாய் உயர்வோனே - "தலைவா" என்று போற்றுமாறு ஜோதியாகி நீண்டவனே;

இலை ஆர் திரிசூலா - இலை போன்ற நுனிகளை உடைய திரிசூலத்தை ஏந்தியவனே;

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அலை ஆர் சடையானே - கங்கையைச் சடையில் உடையவனே; (ஆர்தல் - பொருந்துதல்; மிகுதல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

பண்டை நெறிதன்னைப் பழித்துப் பலபொய்சொல்

மிண்டர் அறியாத மெய்யே சடையின்மேல்

இண்டை மதிசூடீ இராமேச் சுர(ம்)மேய

அண்டர் பெருமானே அடியேற் கருளாயே.


பண்டை நெறிதன்னை பழித்துப் பலபொய் சொல் மிண்டர் அறியாத மெய்யே - தொன்மையான வேதநெறியை எப்பொழுதும் இகழ்ந்து பேசும் கல்நெஞ்சர்களால் அறியப்படாத மெய்ப்பொருளே; (மிண்டர் - கல்நெஞ்சர்);

இண்டை மதிசூடீ - இண்டைமாலை போல் திங்களைச் சூடியவனே; (இண்டை - தலையில் அணியும் மாலைவகை);

இராமேச்சுர(ம்) மேய - ராமேஸ்வரத்தில் உறையும்;

அண்டர் பெருமானே - தேவதேவனே;


11)

கல்லால் நிழலண்ணல் கரியை உரிசெய்த

வல்லான் மதில்மூன்றை மாய்த்த மலைவில்லான்

எல்லாம் உடையெம்மான் இராமேச் சுர(ம்)மேயான்

சொல்லார் தமிழ்பாடித் தொழுவார் துணைதானே.


கல்லால்-நிழல் அண்ணல் - கல்லால-மரத்தடியில் வீற்றிருக்கும் ஐயன்;

கரியை உரிசெய்த வல்லான் - யானையின் தோலை உரித்த வல்லவன்;

மதில் மூன்றை மாய்த்த மலைவில்லான் - முப்புரங்களை அழித்த மேருவில் ஏந்தியவன்;

எல்லாம் உடை-எம்மான் - எல்லா உலகங்களையும் உடைய எம்பெருமான்;

இராமேச்சுரம் மேயான் - ராமேஸ்வரத்தில் உறைகின்றவன்;

சொல் ஆர் தமிழ் பாடித் தொழுவார் துணைதானே - தேவாரம் திருவாசகம் பாடி வழிபடும் பக்தர்களுக்கு அப்பெருமான் துணை ஆவான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Friday, August 21, 2015

01.71 – இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)


01.71 –
இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)



2010-05-23
இராமேச்சுரம் (ராமேஸ்வரம்)
----------------------------------------
(கலிவிருத்தம் - 'மா மாங்காய் மா மாங்காய்' - என்ற வாய்பாடு)
(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - 'கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே)



1)
பொய்ம்மான் தனையேவிப் புன்மை புரிந்தானை
வெம்மா கணையேவி வீட்ட இராமன்தான்
அம்மா வினைதீர அன்று வழிபட்ட
எம்மான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



புன்மை - இழிவு; குற்றம்;
பொய்ம்மான் தனை ஏவிப் புன்மை புரிந்தானை - மாரீசனை மாயமான் உருவில் அனுப்பிச் சீதையைக் கவர்ந்த இராவணனை;
வீட்டுதல் - கொல்லுதல்;
வெம் மா கணை ஏவி வீட்ட இராமன் - கொடிய பெரும் கணையைச் செலுத்தி அழித்த இராமன்;
அம் மா வினை தீர - அப்பெரும் பாவம் தீர்வதற்காக;
எம்மான் - எம் சுவாமி;
அமர்தல் - இருத்தல்; விரும்புதல்;
இராமேச்சுரம் - ராமேஸ்வரம்;


(சம்பந்தர் தேவாரம் - 3.10.2 -
தேவியை வவ்விய தென்னிலங் கைத்தச மாமுகன்
பூவிய லும்முடி பொன்றுவித் தபழி போயற
ஏவிய லுஞ்சிலை யண்ணல்செய் தவிரா மேச்சுரம்
மேவிய சிந்தையி னார்கள்தம் மேல்வினை வீடுமே. )



2)
நெய்தான் மிகஆடும் நிமலன் அடிபோற்றிப்
பொய்தான் அடையார்முன் புரிவல் வினைதீரச்
செய்தான் கணையொன்றால் திரியும் புரமூன்றும்
எய்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



நெய்யால் மிகவும் அபிஷேகம் செய்யப்பெறும் நிர்மலனான சிவன் திருவடியைத் தொழுதுபோற்றுகின்றவர்களும், பொய் அடையாதவர்களுமான பக்தர்களின் முன் செய்த வல்வினை எல்லாம் தீர்த்தருள்பவன்; விண்ணில் திரிந்த மூன்று புரங்களையும் ஓர் அம்பால் எய்தவன்; அப்பெருமான் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம் ஆகும்.



3)
பாசம் பிடிகாலன் பாய்ந்து வரும்போது
வாச மலர்த்தாளை மாணி உயிர்வாழ
வீசு பெருமானார் விண்ணார் மதிசூடும்
ஈசன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



மாணி - அந்தணச் சிறுவன் - இங்கே மார்க்கண்டேயர்;
மார்க்கண்டேயரைக் கொல்வதற்காகப் பாசத்தைப் பிடித்துக் காலன் விரைந்து வந்தபொழுது அடியவர் உயிர்வாழ்வதற்காகத் தன் வாசமலர் போன்ற திருவடியை வீசி எமனை அழித்த பெருமான்; வானத்து மதியை முடிமேல் அணியும் ஈசன் விரும்பி உறையும் கோயில் இராமேஸ்வரம்.



4)
பாய்ந்த விடம்கண்டு பயந்த இமையோர்க்கா
மாந்து மணிகண்டன் மதனின் உடல்வேவக்
காய்ந்த கனற்கண்ணன் கையில் தலையொன்றை
ஏந்தி அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



இமையோர்க்கா - இமையோர்க்காக - தேவர்களுக்காக;
மாந்துதல் - உண்ணுதல்;
மணிகண்டன் - கண்டத்தில் நீலமணியை உடையவன்;
மதன் - மன்மதன்;
காய்ந்த – கோபித்த; எரித்த;
கனற்கண்ணன் - கண்ணில் தீயை உடையவன்;
ஏந்தி - ஏந்துபவன்;



5)
ஆற்றும் பணியெல்லாம் அரனார்க் கெனவாழும்
தேற்ற மனத்தார்முன் செய்த வினைதீர்க்கும்
ஆற்றன் அணிதிங்கள் அரவு புனைகின்ற
ஏற்றன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தேற்றம் - தெளிவு;
ஆற்றும் பணி ல்லாம் அரனார்க்கு என வாழும் தேற்ற மனத்தார் - செய்யும் செயல் எல்லாம் சிவபெருமான் தொண்டாக வாழ்கின்ற தெளிந்த மனத்து அடியவர்கள்;
(திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.19 - “...எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க...”);
ஆற்றன் - கங்கையைத் தாங்கியவன்; ஆறாக (வழியாக) இருப்பவன்;
அணி திங்கள் அரவு புனைகின்ற ஏற்றன் - அழகிய சந்திரனையும் பாம்பையும் சூடுகின்றவன், இடப வாகனன்;



6)
"வளியாய்ப் புனல்தீயாய் மண்ணாய் வெளியானாய்;
ஒளிசேர் மதிசூடீ; ஒருவா; அருள்"என்றே
அளியோ டடிபோற்றும் அன்பர் தமக்கெல்லாம்
எளியான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



வளி - காற்று;
வெளி - ஆகாயம்;
ஆனாய் - ஆனவனே;
ஒளிசேர் மதிசூடீ - ஒளி பொருந்திய பிறையைச் சூடியவனே;
ஒருவா - ஒப்பற்றவனே; (ஒருவன் - ஒப்பற்றவன்);
அளி - அன்பு;
எளியான் - எளியவன் - எளிதில் அடையப்படுபவன்;



7)
உடலில் ஒருகூறா உமையை மகிழ்ஈசன்;
சுடலைப் பொடிபூசி; சூலப் படையேந்தி;
கடலின் விடமுண்ட கண்டன்; மழவெள்ளை
இடபன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



உடலில் ஒரு கூறா - திருமேனியில் ஒரு பாகமாக; (கூறா - கூறாக);
உமையை மகிழ் ஈசன் - உமையை விரும்பும் ஈசன்; (சுந்தரர் தேவாரம் - 7.67.3 - “ஆழியனாய் … உமையை மகிழ்ந்தானை வலிவலந்தனில் வந்து கண்டேனே.”); (மகிழ்தல் - விரும்புதல்);
சுடலைப் பொடிபூசி - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;
சூலப் படையேந்தி - சூலபாணி;
மழ வெள்ளை இடபன் - இளம் வெள்ளை ஏற்றை ஊர்தியாக உடையவன்; (மழ – இளமை); (இடபம் - ஏறு; இடபன் - ஏற்றை உடையவன்; சூலம் - சூலன், வேடம் - வேடன், இவற்றைப் போல இடபம் - இடபன்);



8)
பொருப்பாட் டரக்கன்தான் புலம்ப விரலூன்றி
விருப்போ டிசைகேட்டு மிகவும் அருள்செய்தான்
நெருப்போர் கரத்தேந்து நிருத்தன் அழிவின்றி
இருப்பான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



பொருப்பு ஆட்டு அரக்கன் - கயிலை மலையை ஆட்டிய இராவணன்;
நெருப்பு ஓர் கரத்து ஏந்து நிருத்தன் - தீயை ஒரு கையில் ஏந்தும் கூத்தன்;



9)
தடுத்தான் நதிதன்னைத்; தன்மேல் மலரம்பு
தொடுத்தான் தனைக்கண்ணால் சுட்டான்; அரவின்மேல்
படுத்தான் அறியாத பாதம் தனைஆட
எடுத்தான் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தடுத்தான், சுட்டான், படுத்தான், எடுத்தான் - தடுத்தவன், சுட்டவன், படுத்தவன், எடுத்தவன் (உயர்த்தியவன்);
அரவின்மேல் படுத்தான் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமால்;
எடுத்தல் - உயர்த்துதல்;
அரவின்மேல் படுத்தான் அறியாத பாதம்தனை ஆட எடுத்தான் - (அப்பர் தேவாரம் - 4.81.10 - "... நாரணன் நான்முகனுந் தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதம் ...")



10)
நிந்தித் துழல்மூடர் நெறியை அறியாமல்
நொந்து குழிவீழ்வார் நுவலும் வழிவிட்டு
வந்திக் கிறஅன்பர் மனத்தில் மகிழ்கின்ற
எந்தை அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



நிந்தித்து ழல் மூடர் - பழித்துப்பேசி உழல்கின்ற மூடர்கள்;
நெறியை அறியாமல் நொந்து குழி வீழ்வார் - உய்யும் நெறியை உணராமல் துன்புற்று வினைக்குழியில் விழுகின்றவர்கள்;
நுவலும் வழி விட்டு வந்திக்கிற அன்பர் மனத்தில் மகிழ்கின்ற எந்தை - அத்தகையோர் சொல்லும் பொய்ந்நெறிகளை நீங்கித் தன் திருவடியை வணங்குகின்ற பக்தர்கள் நெஞ்சில் விரும்பி உறையும் எம் தந்தையான சிவபெருமான்; (நுவல்தல் - சொல்லுதல்); (வழி - மார்க்கம்); (விடுதல் - நீங்குதல்);



11)
மறைகள் துதியீசன் மலர்த்தாள் தினந்தோறும்
முறையால் தொழுவோரின் முன்னை வினையோடு
குறைகள் அவைதீர்ப்பான் குளிர்வெண் மதிசூடும்
இறைவன் அமர்கோயில் இராமேச் சுரந்தானே.



தீர்ப்பான் - தீர்ப்பவன்;



அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



-------------------