Showing posts with label சிலேடை. Show all posts
Showing posts with label சிலேடை. Show all posts

Friday, May 3, 2024

08.01.149 - சிவன் - விமானம் - சிலேடை

08.01 – சிவன் சிலேடைகள்

2016-03-15

08.01.149 - சிவன் - விமானம் - சிலேடை

----------------------------------

உள்ளமர்ந்த பாரோர்கட் கும்பரூர் இன்பளிக்கும்

வெள்ளிய பூச்சிருக்கும் மிக்கொலித்துத் - தெள்ளு

திரைமேலே ஓடுகின்ற சீரார் விமானம்

குரைகழலால் கூற்றுதைத்த கோன்.


சொற்பொருள்:

உள் - 1. உள்ளே; / 2. உள்ளம்;

அமர்தல் - 1. இருத்தல் (உட்கார்தல்); / 2. விரும்புதல்;

உம்பர் - 1. ஆகாயம்; / 2. தேவர்; தேவலோகம்; சிவலோகம்;

ஊர் - 1. Going, riding; ஊர்கை. / 2. வசிக்கும் ஊர்; இடம்;

ஊர்தல் - நகர்தல்; To ride, as a horse; to drive, as a vehicle; ஏறிநடத்துதல்.

இன்பு - இன்பம்;

வெள்ளி - வெண்மை;

பூச்சு - 1. Coating, gilding, plating, tinning; plastering; மேற் பூசுகை; / 2. Daubing, smearing, anointing; தடவுகை;

தெள்ளுதல் - தெளிவாதல்;

திரை - 1. கடல்; / 2. நதி; அலை;

மேல் - 1. ஏழாம் வேற்றுமை உருபு; / 2. தலை;

- அசை;

ஓடுதல் - 1. விரைந்து செல்லுதல்; / 2. நதி பாய்தல்;


விமானம்:

உள் அமர்ந்த பாரோர்கட்கு உம்பர் ஊர் இன்பு அளிக்கும் - உள்ளே உட்கார்ந்திருக்கும் மனிதர்களுக்கு வானில் செல்கின்ற இன்பத்தைத் தரும்;

வெள்ளிய பூச்சு இருக்கும் - வெள்ளைநிற வர்ணம் பூசிய தோற்றம் இருக்கும்;

மிக்கு ஒலித்துத் தெள்ளு திரைமேலே ஓடுகின்ற சீர் ஆர் விமானம் - மிகவும் ஒலியெழுப்பிக் கடல்மேலும் பறக்கின்ற பெருமை உடைய விமானம்; (திரைமேலே - உம்மைத்தொகையாக - திரைமேலும்); (உம் - எச்சவும்மை - நிலத்தின்மேலும் கடலின்மேலும்);


சிவன்:

உள் அமர்ந்த பாரோர்கட்கு உம்பரூர் இன்பு அளிக்கும் - மனம் விரும்பிய மண்ணுலகினருக்கு வானுலக இன்பம் (= சிவலோகத்தில் வாழும் பேரின்பம்) தருவான்;

வெள்ளிய பூச்சு இருக்கும் - வெண்ணிறத் திருநீற்றைப் பூசியவன்;

மிக்கு ஒலித்துத் தெள்ளு திரை மேலே ஓடுகின்ற சீர் ஆர் - மிகவும் ஒலிசெய்து தெளிந்த அலைகளையுடைய கங்கை தலையில் பாயும் புகழ் உடைய;

குரைகழலால் கூற்று உதைத்த கோன் - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியால் காலனை உதைத்த பெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Saturday, March 11, 2023

08.01.148 - சிவன் - நெல் - சிலேடை

08.01 – சிவன் சிலேடைகள்

2015-11-24

08.01.148 - சிவன் - நெல் - சிலேடை

-------------------------------------------------------

நீருண் முடிகாட்டும் நீர்மையுண்டு செய்வளரும்

சீருண்டு சோறீயும் சீர்மையுண்டு - பாருண்டு

பேருவகை கொண்டுரைக்கும் ஏருலா வும்பழனத்

தாரும்நெல் முக்கண் அரன்.


சொற்பொருள்:

நீருண்முடி - 1. நீருள் முடி / 2. நீர் உண் முடி;

(இலக்கணக் குறிப்பு: "ள் + = ண்ம" என்று புணரும்);

முடி - 1. தலை; உச்சி; / 2. நாற்றுமுடி (A small bundle of seedling for transplantation; ஒரு சேரக்கூடிய நாற்றின் முடிப்பு.);

நீர்மை - 1. சௌலப்யம் (Easiness of acquisition or attainment, accessibility, affability); சிறந்த குணம்; / 2. தன்மை;

செய் - 1. செம்மை; / 2. வயல்;

சீர் - இயல்பு; அழகு; பெருமை; புகழ்;

சீர்மை - சிறப்பு; புகழ்;

சோறு - 1. முக்தி; / 2. உணவு;

பாருண்டு பேருவகை கொண்டுரைக்கும் - 1. பேர், உவகைகொண்டு உரைக்கும் பார் உண்டு; / 2. பார் உண்டு, பேருவகைகொண்டு உரைக்கும்;

உரைத்தல் - சொல்லுதல்; புகழ்தல்;

ஏர் - 1. அழகு; / 2. கலப்பை;

பழனம் - 1. திருப்பழனம் என்ற தலம்; / 2. வயல்;

ஆர்தல் - 1. தங்குதல் (To abide, stay); / 2. நிறைதல்' பொருந்துதல்;


நெல்:

நீருள் முடி காட்டும் நீர்மை உண்டு - நீர்வளம் மிக்க இடத்தில் முளைக்கும்; (நீரில் நாற்றுமுடி இருக்கும்);

செய் வளரும் சீர் உண்டு - வயலில் வளரும் இயல்பு / அழகு உண்டு;

சோறு ஈயும் சீர்மை உண்டு - உணவு தரும் சிறப்பு உண்டு;

பார் உண்டு பேர் உவகைகொண்டு உரைக்கும் - உலகோர் அவ்வுணவை உண்டு, பெருமகிழ்ச்சியோடு புகழ்வர்;

ஏர் உலாவும் பழனத்து ஆரும் நெல் - கலப்பைகள் இயங்கும் வயலில் நிறையும்/பொருந்தும் நெல்;


சிவன்:

நீர் உண் முடி காட்டும் - நீரை உண்ட திருமுடி உடையவன் - கங்காதரன்;

நீர்மை உண்டு - சௌலப்பியன் - அன்பர்களால் எளிதில் அடையப்படுபவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.8.1 - "அவனது பெற்றி கண்டும் அவனீர்மை கண்டும் அகநேர்வர் தேவ ரவரே");

செய் வளரும் சீர் உண்டு - செம்மை மிகும் அழகு உண்டு - செம்மேனிப் பெருமான்;

சோறு ஈயும் சீர்மை உண்டு - முக்தி அளிக்கும் சிறப்பு உண்டு;

பார் உண்டு பேர் உவகைகொண்டு உரைக்கும் - "உவகைகொண்டு பேர் உரைக்கும் பார் உண்டு" என்று இயைக்க - மகிழ்வோடு அவன் திருநாமத்தைச் சொல்லும் உலகு உண்டு;

ஏர் உலாவும் பழனத்து ஆரும் முக்கண் அரன் - அழகு திகழும் திருப்பழனம் என்ற தலத்தில் உறைபவன், முக்கண் உடைய ஹரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Tuesday, December 13, 2022

06.01.147 - சிவன் - இட்டலி - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2015-02-01

06.01.147 - சிவன் - இட்டலி - சிலேடை

-------------------------------------------------------

வெண்மா விருப்பதால் மென்மலர்ப்ப தத்தினால்

கண்ணாரக் காணன்பர் வாயூறப் - பண்ணுவலம்

பெற்றதனால் விண்டு பெரிதேத்தும் சீருடைய

ஒற்றியரன் இட்டலி யோ.


சொற்பொருள்:

மாவிருப்பதால் - 1. மாவு இருப்பதால்; / 2a. மா விருப்பதால்; 2b. மா இருப்பதால்;

மா - விலங்கு; யானை;

விருப்பு - விருப்பம்;

இருப்பது - 1. உள்ளது; / 2. வீற்றிருத்தல்;

மென்மலர் - 1. மெல்லுகின்ற மலர் ; / 2. மென்மையான மலர்;

பதம் - 1. பக்குவம்; 2. பாதம்;

வாயூறுதல் - நீர் சுரத்தல்; (திருவெம்பாவை - 8.7.5 - "பாலூறு தேன்வாய்ப் படிறீ");

பண்ணுவலம் - 1. பண்ணுதல் + வலம்; 2. பண் நுவல் அம்;

நுவல்தல் - சொல்லுதல்;

அம் - அழகு; நீர்;

பெற்றதனால் - 1. உடையதால்; 2. பெற்று அதனால்; (பெற்று - பெற்றம் - இடபம்);

சீர் - பெருமை; இயல்பு;

விண்டு - 1. விள்ளுதல் - பிளத்தல்; சொல்லுதல்; 2. விஷ்ணு;

ஒற்றி - திருவொற்றியூர்;

- ஓகாரம் எதிர்மறை, வினா, அசைநிலை என்று பல பொருள்களில் வரும்.


இட்டலி:

வெண் மாவு இருப்பதால் - வெண்ணிற மாவு உடையதால்;

மெல் மலர்ப்பதத்தினால் - மென்று உண்ணக்கூடிய, பூப்போன்ற பக்குவம் உடையதால்; (மெல் + மலர் = மென்மலர்; இவ்விடத்தில் புணர்ச்சியால் லகர ஒற்று மகர ஒற்றாகத் திரியும்);

கண்ணாரக் காண் அன்பர் வாயூறப் பண்ணு வலம் பெற்றதனால் - கண்டு மகிழ்கின்றவர்களது வாயில் நீர் ஊறச்செய்யும் ஆற்றல் உடையதால்;

விண்டு பெரிதேத்தும் சீர் உடைய ... இட்டலி - உண்பவர்கள் அதனை விண்டு அதன் புகழை மிகவும் பேசவைக்கும் தன்மையுடைய இட்டலி; (விண்டு - வாய்திறந்து என்றும் பொருள்கொள்ளலாம்);


சிவன்:

வெண் மா விருப்பதால் / இருப்பதால் - வெண்ணிற இடபத்தை ஊர்தியாக விரும்புவதால்; வெள்ளை எருதின்மேல் வீற்றிருப்பதால்; ("மா = யானை" என்று கொண்டு, "ஐராவணம் என்ற வெள்ளையானையை உடையவன்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

(சுந்தரர் தேவாரம் - 7.100.5 - "வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே");

(அப்பர் தேவாரம் - 5.37.2 - "வெள்ளி மால்வரை போல்வதொர் ஆனையார்" - வெள்ளிமால்வரை போன்ற அயிராவணம் என்னும் ஒப்பற்ற ஆனையை உடையார்);

மென்மலர்ப்பதத்தினால் - மென்மையான மலர்போன்ற திருவடியால்;

கண்ணாரக் காண் அன்பர் வாயூறப் பண் நுவல் அம் பெற்றதனால் - தரிசிக்கும் பக்தர்கள் வாயில் அன்பு ஊறப் பண்கள் பாடிப் போற்றும் அழகு பெற்றதனால்;

விண்டு பெரிது ஏத்தும் சீருடைய ஒற்றி அரன் - விஷ்ணு மிகவும் போற்றுகின்ற பெருமையுடைய திருவொற்றியூரில் உறைகின்ற சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


06.01.146 - சிவன் - கொழுக்கட்டை - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

(பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி)

2014-08-29

06.01.146 - சிவன் - கொழுக்கட்டை - சிலேடை

-------------------------------------------------------

வெந்தபொடி மேல்மிளிரும் விண்டால் இனிமைதரும்

சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே - கந்தனுக்

கண்ணன் கரங்கூடும் அன்பரையஞ் சேலெனும்முக்

கண்ணன் கொழுக்கட்டை காண்.


சொற்பொருள்:

பொடி - 1. மாவு; / 2. திருநீறு;

விள்ளுதல் - 1. பிளத்தல்; / 2. சொல்லுதல்;

பூரணம் - 1. கொழுக்கட்டையினுள் இருக்கும் தேங்காய்ப்பூரணம்; / 2. நிறைவு; முழுமை;

அண்ணன் - தமையன்;

கரம் கூடுதல் - 1. கையில் பொருந்துதல்; / 2. கரங்கள் ஒன்றாக இணைதல் - வணங்குதல்;

அஞ்சேல் எனும் - 1. அஞ்சு ஏல் எனும்; / 2. அஞ்சேல் எனும் (அஞ்சாதே என்னும்);

ஏல் - 1. ஏற்றுக்கொள்; / 2. எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி;


கொழுக்கட்டை:

வெந்தபொடி மேல் மிளிரும் - வெளியே வெந்த மாவு இருக்கும்;

விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - பிளந்தால் இனிமை தருவதும் மனத்திற்கு மகிழ்ச்சியைத் தருவதுமான பூரணம் புலப்படும்;

கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகர் கையில் சேரும்;

அன்பரை அஞ்சு ஏல் எனும் - பிரியர்களை (ஒன்றிரண்டு கொழுக்கட்டையே போதும் என்று எண்ணவிடாமல்) ஐந்து ஏற்றுக்கொள் என்னும்;


சிவன்:

வெந்த பொடி மேல் மிளிரும் - சுட்ட திருநீறு மேனிமேல் திகழும்;

விண்டால் இனிமை தரும் சிந்தை மகிழ் பூரணம் தென்படுமே - (திருப்பெயரையும் திருப்புகழையும்) சொன்னால் இனிமை தருகின்ற, மனம் மகிழ்கின்ற நிறைவு புலப்படும்; ("பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்);

கந்தனுக்கு அண்ணன் கரம் கூடும் - விநாயகன் கரம்சேர்த்து வணங்கும் தந்தை;

கரம் கூடும் அன்பரை அஞ்சேல் எனும் முக்கண்ணன் - கைகளைச்சேர்த்து வணங்கும் பக்தர்களை அஞ்சேல் என்று அபயம் தரும் நெற்றிக்கண்ணன்; ("கரம் கூடும்" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்);


பிற்குறிப்புகள் :

1) ஈசனை "நிறைவு" என்று சுட்டும் பிரயோக உதாரணம்: - திருவாசகம் - 8.22.5 - "குறைவிலா நிறைவே கோதிலா அமுதே";


2) "விண்டால் இனிமைதரும் சிந்தைமகிழ் பூரணம் தென்படுமே" - "பூரணனாகிய சிவபெருமான் காட்சி தருவான்" என்றும் பொருள்படும்;

அப்பர் தேவாரம் - 4.112.9 -

சிவனெனு நாமம் தனக்கே உடையசெம் மேனிஎம்மான்

அவனெனை ஆட்கொண் டளித்திடு மாகில் அவன்றனையான்

பவனெனு நாமம் பிடித்துத் திரிந்துபன் னாளழைத்தால்

இவனெனைப் பன்னாள் அழைப்பொழி யானென் றெதிர்ப்படுமே.

-- சிவனை அடியேன் 'பவன்' என்னும் திருப்பெயர் முதலியவற்றை உள்ளத்திலும் சொல்லிலும் பற்றிப் பலநாளும் அழைத்தால், இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் தவறாது செய்கிறான் என்று திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான்.


3) "ஏல்" என்ற பிரயோகத்தின் உதாரணம்: - ஔவையார் - நல்வழி -

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்

இருநாளுக் கேலென்றால் ஏலாய் - ஒருநாளும்

என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது."

-- இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கான உணவை ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Sunday, December 4, 2022

06.01.145 - சிவன் - இராமன் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

இராமநவமி ஸ்பெஷல்!

2014-04-08

06.01.145 - சிவன் - இராமன் - சிலேடை

-------------------------------------------------------

ஏறு மரவுரியுந் தாங்கி இராவணன்தன்

வீறு கெடுத்த விறலுடையான் - நாறு

மலர்க்குழலி கூறுமான் மாய்வில்லான் திங்கள்

தலைக்கணிந்தான் தாசரதி தான்.


சொற்பொருள்:

ஏறு மரவுரியும் - 1. ஏறு, மரவுரியும்; / 2. ஏறும் அரவு உரியும்;

ஏறு - ஆண் சிங்கம் போன்றவன்; / இடபம்;

ஏறுதல் - மேலேறுதல்;

தாங்குதல் - சுமத்தல்; அணிதல்;

மரவுரி - மரப்பட்டையால் ஆன உடை;

உரி - தோல்;

வீறு - 1. வெற்றி; / 2. கருவம்; சிறப்பு;

விறல் - 1. வீரம்; / 2. வலிமை; (சிவனுக்குப் பொருள்கொள்ளும்போது, 'விரல்' என்பது சிலேடை நோக்கி 'விறல்' என்று வலித்தல் விகாரம் பெற்றது என்றும் கொள்ளலாம்);

கூறு - 1. கூறுதல்; / 2. பாகம்;

மான் - 1. மான் என்ற மிருகம்; / 2. பெரியோன்; தலைவன்;

மாய்வில்லான் - 1. மாய் + வில்லான் / 2. மாய்வு + இல்லான்;

மாய்த்தல் - கொல்லுதல்;

மாய்வு - சாவு;

தாசரதி - [தசரதர் புத்திரன்] இராமன்;


இராமன்:

ஏறு - ஆண் சிங்கம் போன்றவன்;

மரவுரியும் தாங்கி - மரவுரியும் தரித்தவன்; மரவுரியும் அணிந்து;

இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - போரில் இராவணனை வென்றவன்;

நாறு மலர்க்குழலி கூறு மான் மாய் வில்லான் - வாசம் கமழும் கூந்தலை உடைய சீதை சொன்ன மானை (விரட்டிச் சென்று முடிவில் அதனைக்) கொன்ற வில்லை ஏந்தியவன்;

தாசரதி - தசரதன் மகனான இராமன்.


சிவன்:

ஏறும் அரவு உரியும் தாங்கி - ஏறும் அரவு தாங்கி, உரியும் தாங்கி - ஏறுகின்ற பாம்பைத் தாங்கியவன்; தோலையும் தரித்தவன்; (அரவு - அரவும் - உம்மைத்தொகை);

இராவணன்தன் வீறு கெடுத்த விறல் உடையான் - இராவணனின் கர்வத்தை (மலர்ப்பாத விரலை ஊன்றி நசுக்கி) அழித்த வலிமை உடையவன்; (சிவனுக்குப் பொருள்கொள்ளும்போது, 'விரல்' என்பது சிலேடை நோக்கி 'விறல்' என்று வலித்தல் விகாரம் பெற்றது என்றும் கொண்டு பொருள்கொள்ளக்கூடும்);

நாறு மலர்க்குழலி கூறு மான் - வாசம் கமழும் கூந்தலை உடைய உமையை ஒரு கூறாக உடைய தலைவன்;

மாய்வு இல்லான் - இறப்பு இல்லாதவன்;

திங்கள் தலைக்கு அணிந்தான் - சந்திரசேகரன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Saturday, December 3, 2022

06.01.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2014-02-09

06.01.144 - சிவன் - செயற்கைக்கோள் (Satellite) - சிலேடை

-----------------------------------------------

மண்ணிருக்கும் காலெரியும் நீராகி வானண்ணும்

மண்ணிதம் சுற்றிவரும் வாழ்விக்கும் - திண்ணம்

முடிவில் நெருப்புருவம் பூணுமொரு முக்கண்

அடிகள் செயற்கைக்கோள் ஆங்கு.


சொற்பொருள்:

கால் - வாயு;

எரிதல் - தீப்பற்றி எரிதல்;

எரி - தீ;

வான் - 1. ஆகாயம்; 2. அழகு; பெருமை;

நண்ணுதல் - 1. அடைதல்; / 2. பொருந்துதல்;

மண் - 1. நிலம்; பூமி; / 2. உலகமக்கள்;

முடிவில் - 1. இறுதியில்; / 2. முடிவு இல் - எல்லையற்ற;

அடிகள் - கடவுள்;

ஆங்கு - 1. ஓர் உவமவுருபு; 2. ஓர் அசைச்சொல்;


செயற்கைக்கோள் (Satellite):

மண் இருக்கும் கால் எரியும், நீர் ஆகி, வான் நண்ணும் - பூமியில் இருக்கும் வாயுக்கள் (ஆக்ஸிஜன், ஹைட்ரஜன்) எரியும். அதனால் நீர் (நீராவி) உண்டாகி, (அதன் விளைவாக, ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்) ஆகாயத்தை அடையும்;

மண் நிதம் சுற்றிவரும் - எப்போதும் பூமியைச் சுற்றும்;

மண் வாழ்விக்கும் - மக்கள் இனிது வாழ உதவும்; ("மண்" என்ற சொல்லைத் தீவகமாகக் கொண்டு இப்படி இருமுறை இயைக்கலாம்);

("நிதம் சுற்றிவரும் மண் வாழ்விக்கும்" - என்றும் இயைக்கலாம் - தினமும் சுற்றிவருகின்ற மண்ணுலகை நல்லபடி வாழ்விக்கும்);

திண்ணம் முடிவில் நெருப்பு உருவம் பூணும் - நிச்சயம் கடைசியில் (சில ஆண்டுகளுக்குப்பின் பூமியை நோக்கி விழும்போது வாயுமண்டலத்தில் எரியும்பொழுது) தீயின் உருவத்தைக் கொள்ளும்;

செயற்கைக்கோள்.


சிவன்;

மண் இருக்கும்; கால் எரியும் நீர் ஆகி, வான் நண்ணும் - நிலத்தில் இருப்பவன்; காற்று, தீ, நீர் இவையும் ஆகி, வானிலும் பொருந்துபவன்; (ஐம்பூதங்களாகத் திகழ்பவன்); (கால் எரியும் நீர் - காலும் எரியும் நீரும் - உம்மைத்தொகை);

நண்ணும் மண் நிதம் சுற்றிவரும் - தொழுவதற்கு அடைந்த மக்கள் தினமும் வலம்செய்வார்கள்;

வாழ்விக்கும் திண்ணம் - (அவ்வடியார்களை) நிச்சயம் காத்து அருள்வான்;

முடிவு இல் நெருப்பு உருவம் பூணும் - எல்லையற்ற சோதி வடிவானவன்;

ஒரு முக்கண் அடிகள் - ஒப்பற்ற முக்கட்கடவுளான சிவபெருமான்.


இலக்கணக் குறிப்பு:

செய்யும் எனும் வாய்பாட்டு வினைமுற்று நிகழ்காலம் மட்டும் காட்டும். இது பலர்பால் படர்க்கை, முன்னிலை, தன்மை ஆகியவற்றில் வாராது. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் படர்க்கைப் பெயர்களோடு மட்டுமே பொருந்தி வரும்.

(.டு) அவன் உண்ணும், அவள் உண்ணும், அது உண்ணும், அவை உண்ணும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Wednesday, November 30, 2022

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2014-01-12

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

-----------------------------------------------

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும்

ஏந்துபணங் கைச்சேரும் இட்டதுண்ணும் - நாந்திகைக்கச்

சிற்சமயம் இல்லையென்னுஞ் சேர்த்துவைத்த செல்வநதிப்

பொற்சடையன் ஏடிஎம் போல்.


சொற்பொருள்:

சார்தல் - 1. சென்றடைதல்; / 2. புகலடைதல்;

தப்புதல் - 1. தவறுதல் (To err, mistake, blunder); / 2. செய்யத் தவறுதல் (To fail to do);

எண்ணிடுதல் - 1. எண்களை இடுதல்; / 2. சிந்தித்தல்;

ஏந்துதல் - 1. மிகுதல்; / 2. தாங்குதல்; தரித்தல்;

பணம் - 1. நிதி; / 2. பாம்பு;

சிற்சமயம் - 1. சில நேரம்; / 2. சில மதங்கள்; (சில் - 1. சில; 2. அற்பமான);

செல்வநதி - செல்வம்+நதி;


ஏடிஎம் (ATM) (Automated Teller Machine - தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம்):

சார்ந்தவர்கள் தப்பாமல் எண் இடத் தந்திடும் - சென்றடைந்தவர்கள் பிழையின்றித் தம் ரகசிய எண்ணை இட்டதும் கொடுக்கும்;

ஏந்து பணங் கைச் சேரும் - மிகுந்த பணம் கையைச் சேரும்;

இட்டது உண்ணும் நாம் திகைக்கச் சிற்சமயம் - அக்கருவியில் இட்ட நம் அட்டையை (ATM card) நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் விழுங்கிவிடும்;

நாம் திகைக்கச் சில் சமயம் இல்லை என்னும் சேர்த்து வைத்த செல்வம் - நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் நம் கணக்கில் பணம் இருந்தாலும் அது கொடாது. (நாந்திகைக்கச் சிற்சமயம் - இடைநிலைத் தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);


சிவன்:

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும் - புகலடைந்தவர்கள் தொடர்ந்து / முறைப்படி தியானிக்க அருள்புரிவான்;

ஏந்து பணம் கைச் சேரும் - தரிக்கின்ற பாம்பு கையில் இருக்கும்; (அப்பர் தேவாரம் - 6.97.7 - "பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்" - பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன்);

இட்டது உண்ணும் நாம் திகைக்க - நாம் வியப்புறும் வண்ணம் பிச்சை ஏற்று உண்பான்;

சில் சமயம் இல்லை என்னும் - சில சமயங்கள் சிவனை இல்லை என்று மறுக்கும்;

சேர்த்து வைத்த செல்வம் - அடியவர்களுக்கு அவன் வைப்புநிதி ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 2.64.5 - "வைத்த நிதியே மணியே" - வைத்தநிதி - சேமவைப்பாக வைக்கப்பெற்ற செல்வம்);

நதிப்பொற்சடையன் - கங்கையைத் தரித்த பொற்சடையை உடைய சிவபெருமான்.


இலக்கணக் குறிப்புகள்:

1. சில்சமயம் என்பது எதுகைநோக்கிச் சிற்சமயம் என்று திரிந்தது;

(சில்சமயம் என்ற பிரயோகத்தை ஒத்த பிரயோகங்கள் -

குசேலோபாக்கியானம் - "கண்ணன் றனைக்கண்... எனச் சில்பொழு துள்ளத் தெண்ணி";

நற்றிணை - 42 - கீரத்தனார் - "மறத்தற் கரிதால் பாக! ..... சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய");


2. செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று விகுதி:

"செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


Tuesday, November 29, 2022

06.01.142 - சிவன் - மேகம் - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-12-15

06.01.142 - சிவன் - மேகம் - சிலேடை

-----------------------------------------------

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும்

வாழ்வளிக்கும் மண்ணடைந்தால் மாவமரும் - கேழ்கிளரும்

மின்னிடை ஒன்றிடு மேன்மையுடை மேகமதி

சென்னிமிசை வைத்த சிவன்.


சொற்பொருள்:

ஆலம் - 1. நீர்; / 2. விடம்;

ஆர்தல் - உண்ணுதல்;

மண் - 1) தரை; 2) உலக மக்கள்;

அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண் புகுதல்;

மா - 1. கருமை; / 2a. அழகு; 2b. விலங்கு - இங்கே எருது; 2c. மாமரம்;

அமர்தல் - 1. இருத்தல்; / 2a. பொருந்துதல்; பொலிதல்; 2b. விரும்புதல்;

கேழ் - ஒளி;

கிளர்தல் - விளங்குதல்; மிகுதல்;

ஒன்றுதல் - பொருந்துதல்; ஒன்றாதல்;

மின் இடை ஒன்றிடுதல் - 1. மின்னல் இடையே பொருந்துதல்; 2. மின்னல் போன்ற நுண்ணிடையாள் (= ஆகுபெயராக உமையம்மை) ஒன்றாதல்;


மேகம்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - கடல் நீரைக் குடித்த அழகு உடையது;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - நிலத்தை அடைந்தால் உயிர்கள் தழைக்கும்;

மா அமரும் - கருமை திகழும்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.2 - "தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை..." - தூ மா மழை - தூய்மையான கரிய மேகம்);

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை மேகம் - ஒளி விளங்கும் மின்னல் இடையே பொருந்தியிருக்கும் சிறப்பு உடைய மேகம்.


சிவன்:

ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட அழகு (கண்டத்தில்) இருக்கும்;

வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - மண்ணுலகத்தோர் சரண்புகுந்தால் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவன்;

மா அமரும் - அழகு பொலியும்; / (ஊர்தியாக) இடபத்தை விரும்புபவன்;

("மண் அடைந்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, இருபுறமும் இயைத்து, "மண் அடைந்தால் மா அமரும்" என்று கொண்டு, "காஞ்சி - ப்ருத்வி ஸ்தலம். அங்கே மாமரத்தின்கீழ் ஏகாம்பரன்" என்றும் பொருள்கொள்ளக் கூடுமாறுபோல் அமைந்துள்ளது);

கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை - ஒளி மிகும் மின்னல் போன்ற இடையை உடைய உமையம்மை ஒன்றாகப் பொருந்தும் சிறப்புடைய; ("மா அமரும் கேழ் கிளரும் மின் இடை" என்று கொண்டு, "அழகிய ஒளி மிகும் மின்னல் போன்ற இடையுடைய உமாதேவி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மதி சென்னிமிசை வைத்த சிவன் - சந்திரனைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமான்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------