06.01 – சிவன் சிலேடைகள்
2013-12-15
06.01.142 - சிவன் - மேகம் - சிலேடை
-----------------------------------------------
ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும்
வாழ்வளிக்கும் மண்ணடைந்தால் மாவமரும் - கேழ்கிளரும்
மின்னிடை ஒன்றிடு மேன்மையுடை மேகமதி
சென்னிமிசை வைத்த சிவன்.
சொற்பொருள்:
ஆலம் - 1. நீர்; / 2. விடம்;
ஆர்தல் - உண்ணுதல்;
மண் - 1) தரை; 2) உலக மக்கள்;
அடைதல் - 1. சேர்தல்; / 2. சரண் புகுதல்;
மா - 1. கருமை; / 2a. அழகு; 2b. விலங்கு - இங்கே எருது; 2c. மாமரம்;
அமர்தல் - 1. இருத்தல்; / 2a. பொருந்துதல்; பொலிதல்; 2b. விரும்புதல்;
கேழ் - ஒளி;
கிளர்தல் - விளங்குதல்; மிகுதல்;
ஒன்றுதல் - பொருந்துதல்; ஒன்றாதல்;
மின் இடை ஒன்றிடுதல் - 1. மின்னல் இடையே பொருந்துதல்; 2. மின்னல் போன்ற நுண்ணிடையாள் (= ஆகுபெயராக உமையம்மை) ஒன்றாதல்;
மேகம்:
ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - கடல் நீரைக் குடித்த அழகு உடையது;
வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - நிலத்தை அடைந்தால் உயிர்கள் தழைக்கும்;
மா அமரும் - கருமை திகழும்; (சம்பந்தர் தேவாரம் - 1.10.2 - "தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித் தூமாமழை..." - தூ மா மழை - தூய்மையான கரிய மேகம்);
கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை மேகம் - ஒளி விளங்கும் மின்னல் இடையே பொருந்தியிருக்கும் சிறப்பு உடைய மேகம்.
சிவன்:
ஆழ்கடல் ஆலத்தை ஆர்ந்த அழகிருக்கும் - பாற்கடலில் தோன்றிய நஞ்சை உண்ட அழகு (கண்டத்தில்) இருக்கும்;
வாழ்வு அளிக்கும் மண் அடைந்தால் - மண்ணுலகத்தோர் சரண்புகுந்தால் அவர்களுக்கு நல்வாழ்வு கொடுப்பவன்;
மா அமரும் - அழகு பொலியும்; / (ஊர்தியாக) இடபத்தை விரும்புபவன்;
("மண் அடைந்தால்" என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு, இருபுறமும் இயைத்து, "மண் அடைந்தால் மா அமரும்" என்று கொண்டு, "காஞ்சி - ப்ருத்வி ஸ்தலம். அங்கே மாமரத்தின்கீழ் ஏகாம்பரன்" என்றும் பொருள்கொள்ளக் கூடுமாறுபோல் அமைந்துள்ளது);
கேழ் கிளரும் மின் இடை ஒன்றிடும் மேன்மையுடை - ஒளி மிகும் மின்னல் போன்ற இடையை உடைய உமையம்மை ஒன்றாகப் பொருந்தும் சிறப்புடைய; ("மா அமரும் கேழ் கிளரும் மின் இடை" என்று கொண்டு, "அழகிய ஒளி மிகும் மின்னல் போன்ற இடையுடைய உமாதேவி" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);
மதி சென்னிமிசை வைத்த சிவன் - சந்திரனைத் தன் தலைமேல் அணிந்த சிவபெருமான்.
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment