06.04.023 – திருஞான சம்பந்தர் துதி - முந்தும் பினுமானான்
2013-05-25
06.04.023 - திருஞான சம்பந்தர் துதி - சம்பந்தர் குருபூஜை - வைகாசி மூலம் - 2013
----------------------------------
1) --- (வண்ணவிருத்தம்) ---
தந்தந் .. தனதான
முந்தும் பினுமானான்
.. முண்டம் பலிதேர்வான்
கந்தங் கமழ்தாளன்
.. கண்டந் தனில்நீலன்
வந்தங் கமுதீயும்
.. மந்தந் திகழ்காழிப்
பந்தன் தமிழ்பாடப்
.. பந்தம் பொடியாமே.
முந்தும் பினும் ஆனான் - முன்னும் பின்னும் உள்ளவன்; (முந்து - முன்பு; ஆதி); (பினும் - பின்னும்); (அப்பர் தேவாரம் - 6.48.8: "முன்னவன்காண் பின்னவன்காண் ....");
முண்டம் பலி தேர்வான் - பிரமன் தலையில் பிச்சை ஏற்பவன்; (முண்டம் - தலை; கபாலம்);
கந்தம் கமழ் தாளன் - வாசம் கமழும் மலர்ப்பாதன்;
கண்டந்தனில் நீலன் - கண்டத்தில் கருமையை உடையவன் - நீலகண்டன்; (5.72.4 - "ஆலநஞ்சுண்ட கண்டத்தமர் நீலன்");
வந்து அங்கு அமுது ஈயும் - அப்பெருமான் தானே வந்து அங்கு (குளக்கரையில்) அமுதம் அளித்த;
மந்தம் திகழ் காழிப் பந்தன் தமிழ்பாடப் பந்தம் பொடி ஆமே - தென்றல் திகழும் சீகாழிப் பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் அருளிய தேவாரத்தைப் பாடினால், நம் வினைப்பந்தம் அற்றுப்போகும். (மந்தம் - தென்றல்); (பந்தன் - ஞானசம்பந்தன்; இலக்கணக்குறிப்பு: ஒருபுடைப் பெயர்; நாம ஏகதேசம்);
2) --- (வண்ணவிருத்தம்) ---
தந்தந்த தனத்தன தந்தந்த தனத்தன
தந்தந்த தனத்தன .. தனதான
(ஓரளவு இதனை ஒத்த சந்தம் உள்ள திருப்புகழ் - "என்பந்த வினைத்தொடர் போக்கிவி சையமாகி")
அம்பொன்று தொடுக்கவொர் குன்றன்று வளைத்தவன்
.. அங்கொன்றை எருக்கிள .. மதிசூடி
பம்பம்ப மெனப்பறை சங்கங்க ளொலிப்பொடு
.. பண்டங்க நடிப்பவ .. னுமைகேள்வன்
கம்பங்கொள் சுரர்க்கருள் நஞ்சுண்ட மிடற்றினன்
.. நம்பன்ற னடித்தல .. மதுநாடிச்
சம்பந்த னுரைத்தருள் சந்தங்கொள் தமிழ்த்தொடை
.. தஞ்சிந்தை நினைப்பவர் .. வினைபோமே.
பதம் பிரித்து:
அம்பு ஒன்று தொடுக்க ஒர் குன்று அன்று வளைத்தவன்;
.. அம் கொன்றை, எருக்கு, இள மதி சூடி;
"பம் பம் பம்" எனப் பறை சங்கங்கள் ஒலிப்பொடு
.. பண்டங்கம் நடிப்பவன்; உமைகேள்வன்;
கம்பம்கொள் சுரர்க்கு அருள் நஞ்சு உண்ட மிடற்றினன்;
.. நம்பன்றன் அடித்தலம் அது நாடிச்
சம்பந்தன் உரைத்து அருள் சந்தம்கொள் தமிழ்த்தொடை
.. தம் சிந்தை நினைப்பவர் வினை போமே.
அம்பு ஒன்று தொடுக்க ஒர் குன்று அன்று வளைத்தவன் - முப்புரங்களை எரித்த நாளில் தீக்கணையை எய்ய மேருமலையை வில்லாக வளைத்தவன்; (ஒர் - ஓர் - குறுக்கல் விகாரம்);
அம் கொன்றை, எருக்கு, இள மதி சூடி - அழகிய கொன்றைமலரையும், எருக்கமலரையும், இளம்பிறையையும் அணிந்தவன்; (அம் - அழகு);
"பம் பம் பம்" எனப் பறை சங்கங்கள் ஒலிப்பொடு பண்டங்கம் நடிப்பவன், உமைகேள்வன் - 'பம் பம் பம்' என்று பல பறைவாத்தியங்களும், சங்குகளும் ஒலிக்கப் பண்டரங்கம் என்ற திருக்கூத்து இயற்றுகின்ற உமாபதி; (பண்டங்கம் - பண்டரங்கம் - சிவன் கூத்து); (சம்பந்தர் தேவாரம் - 2.6.12: "பலிதிரிந்துழல் பண்டங்கன்" - பண்டங்கன் - பாண்டரங்கம் என்னுந்திருக்கூத்தை ஆடுபவன்); (நடித்தல் - கூத்தாடுதல்);
கம்பம்கொள் சுரர்க்கு அருள் நஞ்சு உண்ட மிடற்றினன் - அஞ்சி நடுங்கிய தேவர்களுக்கு அருள்புரிந்து ஆலகால விடத்தை உண்ட நீலகண்டன்; (கம்பம் - நடுக்கம் - இங்கே அச்சத்தைச் சுட்டியது); (சுரர் - தேவர்);
நம்பன்-தன் அடித்தலம்-அது நாடிச் சம்பந்தன் உரைத்து அருள் சந்தம்கொள் தமிழ்த்தொடை தம் சிந்தை நினைப்பவர் வினை போமே - சிவபெருமான் மலர்ப்பாதத்தை நாடித் திருஞான சம்பந்தர் பாடியருளிய சந்தம் மிக்க தமிழ்ப்பாமாலைகளைத் தம் மனத்தில் எண்ணும் அடியவர்களின் பழவினைகள் எல்லாம் தீரும். (நம்பன் - சிவன் திருநாமம்); (அடித்தலம் - பாதம்); (அடித்தலமது - அடித்தலம் அது / அடித்தல மது; (மது - தேன்)); (சம்பந்தர் தேவாரம் - 3.68.11 - "எந்தையடி வந்தணுகு சந்தமொடு செந்தமிழி சைந்தபுகலிப் பந்தனுரை சிந்தைசெய வந்தவினை நைந்துபர லோகமெளிதே");
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment