Tuesday, November 15, 2022

06.04.024 – சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

06.04.024 – சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

2013-05-31

06.04.024) சுந்தரர் துதி - திசைமாற்றிய திருப்பங்கள்

-------------------------

1) ---- (கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ----

இசைவாத்தியம் மறைமந்திரம் ஒலிபந்தரின் இடையே

அசையாவரன் முதியோனென அங்குற்றது தடுத்து

வசைவாக்குரை ஆரூரரை இசைபாடிடு மாறு

திசைமாற்றிய வரலாற்றினை நசையால்மொழி வேனே.


மறைமந்திரம் - வேதமந்திரங்கள்;

பந்தர் - பந்தல்; (ஒலிபந்தர் - வினைத்தொகை - ஒலித்த பந்தல்);

அசையா அரன் - அசலன் ஆகிய சிவபெருமான்;

அங்கு உற்று அது தடுத்து - அங்கு அடைந்து அத்திருமணத்தைத் தடுத்து;

வசை வாக்கு உரை ஆரூரரை - இழித்துப் பேசிய சுந்தரரை;

இசை - புகழ்;

நசை - அன்பு; ஆசை;


2) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

இருநிலனை ஆள்மன்னன் செல்லும்போ தெதிரேயத்

தெருவினிலே தேருருட்டும் சிறுவன்மேல் மனம்செல்ல

அருமறையோன் மகனவனை அரசகுமா ரனுமாக்கி

இருவழக்கும் கற்பித்தான் இதுவுமரன் விளையாட்டே.


இரு வழக்கு - அரச, அந்தணப் பழக்கவொழுக்கங்கள்; (வழக்கு - பழக்கவொழுக்கம்);


3)

மணவயது வந்தெய்தச் சடங்கவியார் மகளென்ற

குணவதியைக் குலப்பெரியோர் நிச்சயித்தார் மணநாளில்

பணைமுலையாள் பங்கனொரு பல்லில்லா வடிவிற்கோல்

துணையெனக்கொண் டணைந்ததனை நிறுத்துமென வழக்கிட்டான்.


பல் இல்லா வடிவில் கோல் துணை எனக் கொண்டு அணைந்து - பற்களை இழந்த முதியவன் கோலத்தில் ஒரு கைக்கோலைத் தாங்கி அங்கு வந்தடைந்து;


4) ---- (அறுசீர் விருத்தம் - 'காய் காய் காய் காய் மா தேமா' என்ற வாய்பாடு) ----

பித்தரிவர் என்றிகழப் பெருங்குழப்பம் விளைந்ததன்றால் பேசா மல்வா

பத்திரமாய் உளதடிமை ஓலையெனக் கேட்டவர்மேல் பாயக் கண்டு

கத்தியவர் காவணத்தி னிடையோடிக் கடைசியிற்கால் களைக்க அந்தப்

பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்தெறிந்தார் பத்து நூறா.


பதம் பிரித்து:

"பித்தர் இவர்" என்று இகழப் பெரும் குழப்பம் விளைந்தது அன்றால்; "பேசாமல் வா;

பத்திரமாய் உளது அடிமை ஓலை" எனக் கேட்டு, அவர்மேல் பாயக் கண்டு,

கத்தி அவர் காவணத்தினிடை ஓடிக் கடைசியில் கால் களைக்க, அந்தப்

பத்திரத்தை ஆரூரர் பற்றிக் கிழித்து எறிந்தார் பத்து நூறா.


பத்திரம் - 1. பாதுகாப்பு; 2. சாசனம்/ஓலை;

காவணம் - பந்தல்;

பத்து நூறு - ஆயிரம்; (நூறா - நூறாக);


5) ---- (நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா) ----

பிச்சனென இவனென்னைப் பேசிடினும் பெரியோரே

இச்செயலே இவனடிமை எனக்கென்று காட்டியது

நிச்சயமா என்றுரைத்தார் நிலவியது குழப்பமொன்றே

அச்சமயம் ஆரூரர் அதுகண்டோர் முடிவெடுத்தார்.


பிச்சன் - பித்தன்;


6) ---- (நேரிசை வெண்பா) ----

மறையவரே உங்கள் வழக்கை முடித்தே

பிறைநுதற் பெண்ணை மணப்பேன் - பறையுநும்மூர்

என்றார்க் கியம்பினார் எம்மூர்வெண் ணெய்நல்லூர்

மன்றார்முன் சொல்வோம் வழக்கு.


பிறை நுதல் பெண் - பிறை போலத் திகழும் நெற்றியை உடைய பெண்;

பறையுநும்மூர் - பறையும் நும் ஊர் - உங்கள் ஊரைச் சொல்லுங்கள்;

மன்றார் - சபையோர்;


7) ----வெண்ணெய்நல்லூரில் -- (அறுசீர் விருத்தம் - 'விளம் விளம் காய்' என்ற அரையடி வாய்பாடு) ----

முன்னிவன் அழித்தது படியோலை

.. மூலமிங் குள்ளது சபையோரே

என்னவும் அதிலுள எழுத்தெல்லாம்

.. ஏற்புடைத் தாவென மிகவாய்ந்து

பின்னவர் அடிமையே இவனென்றார்

.. பித்தரைத் தொடர்ந்துநா வலர்கோனும்

சென்னிமேற் கரங்குவித் துடன்சென்றார்

.. சிவனுறை கோயிலை அணைந்தாரே.


"முன் இவன் அழித்தது படி-ஓலை; மூலம் இங்கு உள்ளது சபையோரே" என்னவும், அதில் உள எழுத்தெல்லாம் ஏற்புடைத்தா என மிக ஆய்ந்து, பின், "அவர் அடிமையே இவன்" என்றார்; பித்தரைத் தொடர்ந்து நாவலர்கோனும் சென்னிமேல் கரம் குவித்து உடன் சென்றார்; சிவன் உறை கோயிலை அணைந்தாரே.


படி ஓலை - பிரதி/நகல் (copy);

மிக ஆய்ந்து - மிகவும் ஆராய்ச்சி செய்து;


8) ---- (அறுசீர் விருத்தம் - 'மா கூவிளம் மா விளம் விளம் மா' என்ற வாய்பாடு) ----

வென்ற வேதியர் மறைந்தார் விண்ணிடை விடைமிசைத் தெரிந்தார்

அன்று சொன்னவா றுன்னை ஆண்டுகொண் டருளினோம் என்றார்

இன்ற மிழ்த்தொடை அஃதே எனக்கருச் சனையெனக் கேட்டு

மன்றில் ஆடியைப் பித்தா என்றெடுத் தோதினார் தொண்டர்.


இன் தமிழ்த்தொடை அஃதே எனக்கு அருச்சனை - இனிய தமிழ்ப்பாமாலை அதுவே எனக்கு அர்ச்சனை;


(பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் - 216:

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம்

பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க

அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச்

சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.)


9) ---- (அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு) ----

சடையனார் மகனாய்த் தோன்றிச்

.. சடையனுக் கடிமை ஆகி

விடையினன் தோழ னாகி

.. வேட்டவர் இருவர் தம்மை

அடையவும் அவனை நாடி

.. அரும்பொருள் பெறவும் பாடிக்

கடையினில் ஆனை ஏறிக்

.. கயிலைசென் றவர்தாள் போற்றி.


10) ---- (அறுசீர் விருத்தம் - "மா மா மா மா மா மா" என்ற வாய்பாடு) ----

சின்ன வயதில் தெருவில் ஆடும் போதோர் திருப்பம்

பின்னர்த் திரும ணத்தைப் பெரியோன் நிறுத்தும் திருப்பம்

மின்னல் இடையாள் பரவை தன்னை வேட்டல் திருப்பம்

கன்னல் மொழியாள் சங்கி லியார்பால் காதல் திருப்பம்

சொன்ன சூளை மீறிக் குருடாம் துக்கம் திருப்பம்

முன்னும் பின்னும் முதல்வன் தூது சென்ற திருப்பம்

பொன்னை இழந்து பெற்ற முருகன் பூண்டித் திருப்பம்

இன்னும் உன்னில் ஊரர் வாழ்விங் கீயும் திருப்பம்.


வேட்டல் - விரும்புதல்;

கன்னல் - கரும்பு;

சூள் - சபதம்;

உன்னில் - சிந்தித்தால்; எண்ணினால்;

ஊரர் - நம்பியாரூரர்; (சுந்தரமூர்த்திநாயனார்);

இன்னும் உன்னில் ஊரர் வாழ்வு இங்கு ஈயும் திருப்பம் - சுந்தரர் திருவரலாற்றைச் சிந்தித்தால், அது அவர்களை நல்வழியில் திருப்பும்;


11) ---- (கலிவிருத்தம் - 'மாங்கனி மாங்கனி மாங்கனி மா' என்ற வாய்பாடு) ----

கருப்பம்பல புகுதீவினை கழலும்திருக் கயிலைப்

பொருப்பன்புரி சடையான்அருள் புரிவான்அவன் தோழர்

திருப்பம்பல நிகழ்வாகிய திருவாழ்வது தன்னை

விருப்பங்கொடு சிந்தித்திடும் நெஞ்சத்தவர் கட்கே.


கருப்பம் - கர்ப்பம் - பிறவி;

புகுதீவினை - புகுத்தும் தீய வினை;

கழலும் - நீங்கும்;

பொருப்பு - மலை;

புரிதல் - முறுக்குறுதல்;


தம்பிரான் தோழரான நம்பியாரூரரின் பல திருப்பங்கள் நிறைந்த சரிதத்தை விரும்பிச் சிந்திக்கும் மனம் உடைய அன்பர்களுக்குக், கயிலைமலையான், முறுக்கிய சடையை உடைய சிவபெருமான் அருள்புரிவான்; பல பிறவிகளைக் கொடுக்கும் தீயவினைகள் எல்லாம் விலகும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment