06.02.177 – ஆரூர் - காவார் பாலே - (வண்ணம்)
2013-12-30
06.02.177 - காவார் பாலே - (ஆரூர் - திருவாரூர்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானா தானா தானா தானா
தானா தானத் .. தனதான )
(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)
காவார் பாலே போய்நா ணாதே
.. .. காசே நாடித் .. திரியாமல்
.. காவார் நாலூர் தேனார் ஆவூர்
.. .. கானூர் நீலக் .. குடிமேயாய்
நாவார் பாவால் வீறார் தாளே
.. .. நாணா னோதிப் .. பணிவேனே
.. நாவா யாவா யானே றூர்வாய்
.. .. ஞானா கோலச் .. சடையானே
சாவாய் மூவாய் வானோர் கோனே
.. .. சாரா தாருக் .. கருளானே
.. தாரா மார்போர் நாகா மூலா
.. .. தாதார் போதைப் .. புனைவோனே
ஏவான் மேவார் மூவூர் தீவா
.. .. யேகா வீழப் .. பொருதோனே
.. ஈசா மானேர் மாதோர் பாகா
.. .. ஏரா ரூரிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
காவார்பாலே போய் நாணாதே
.. .. காசே நாடித் திரியாமல்,
.. கா ஆர் நாலூர் தேன் ஆர் ஆவூர்
.. .. கானூர் நீலக்குடி மேயாய்,
நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே
.. .. நாள் நான் ஓதிப் பணிவேனே;
.. நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்;
.. .. ஞானா; கோலச் சடையானே;
சாவாய்; மூவாய்; வானோர் கோனே;
.. .. சாராதாருக்கு அருளானே;
.. தாரா மார்பு ஓர் நாகா; மூலா;
.. .. தாது ஆர் போதைப் புனைவோனே;
ஏவால் மேவார் மூ ஊர் தீவாய்
.. .. ஏகா வீழப் பொருதோனே;
.. ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா;
.. .. ஏர் ஆரூரில் பெருமானே.
காவார்பாலே போய் நாணாதே காசே நாடித் திரியாமல் - என்னைக் காப்பாற்றாதவர்களிடம்போய் வெட்கமின்றிப் பணத்திற்காக அலையாமல்;
கா ஆர் நாலூர் தேன் ஆர் ஆவூர் கானூர் நீலக்குடி மேயாய் - சோலை சூழ்ந்த நாலூர், வண்டுகள் ஒலிக்கும் ஆவூர், திருக்கானூர், திருநீலக்குடி என்ற தலங்களில் உறைபவனே; (கா - சோலை); (ஆர்தல் - பொருந்துதல்; உண்ணுதல்); (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்); (ஆவூர், கானூர், நீலக்குடி - தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்);
நா ஆர் பாவால் வீறு ஆர் தாளே நாள் நான் ஓதிப் பணிவேனே - நாவில் பொருந்திய நற்றமிழ்ப் பாக்களால், மேன்மை மிக்க திருவடியையே நாள்தோறும் நான் போற்றிப் பணிவேன்; (வீறு - தனிப்பட்ட சிறப்பு; வெற்றி; அழகு);
நாவாய் ஆவாய்; ஆன் ஏறு ஊர்வாய்; - பிறவிக்கடலைக் கடப்பிக்கும் மரக்கலம் ஆனவனே; இடப வாகனனே; (நாவாய் - மரக்கலம்); (ஆன் ஏறு - இடபம்); (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்);
ஞானா; கோலச் சடையானே - ஞான வடிவினனே; அழகிய சடையை உடையவனே; (திருவாசகம் - திருவுந்தியார் - 8.14.17 - "கோலச் சடையற்கே யுந்தீபற");
சாவாய்; மூவாய்; வானோர் கோனே; - இறப்பும் மூப்பும் இல்லாதவனே; தேவர்களுக்கு எல்லாம் தலைவனே; (அப்பர் தேவாரம் - 6.55.9 - "மூவாய் பிறவாய் இறவாய் போற்றி...");
சாராதாருக்கு அருளானே - அடையாதவர்களுக்கு அருள்புரியாதவனே; (சார்தல் - அடைதல்; சரண்புகுதல்); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன்...");
தாரா மார்பு ஓர் நாகா; மூலா; - மாலையாக மார்பில் ஒரு நாகத்தை அணிந்தவனே; முதற்பொருளே; (தாரா - தாராக என்பது கடைக்குறையாக வந்தது); (தார் - மாலை); (நாகா - நாகம் அணிந்தவனே); (சம்பந்தர் தேவாரம் - 3.117.1 - "யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா" - நாகா - பாம்புகளை உடையவனே.);
தாது ஆர் போதைப் புனைவோனே - மகரந்தம் பொருந்திய மலர்களைச் சூடியவனே; (தாது - மகரந்தம்); (போது - பூ);
ஏவால் மேவார் மூ ஊர் தீவாய் ஏகா வீழப் பொருதோனே - அம்பினால் பகைவர்களது முப்புரங்களும் தீயின்கண் புகுந்து அழியும்படி போர் செய்தவனே; (ஏ - அம்பு); (மேவார் - பகைவர்); (தீ வாய் - தீயின்கண்); (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு); (ஏகா வீழ - ஏகி வீழ - சென்று/புகுந்து அழிய; - செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்);
ஈசா; மான் நேர் மாது ஓர் பாகா - ஈசனே; மான் போன்ற மங்கையை ஒரு பாகமாக உடையவனே; (நேர் - உவமை; போன்ற);
ஏர் ஆரூரில் பெருமானே - அழகிய திருவாரூரில் உறையும் சிவபெருமானே.
இலக்கணக் குறிப்பு: செய்யா என்ற வாய்பாட்டு வினையெச்சம்: எதிர்மறைச்சொல் போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.
(எ.கா) பெய்யாக் கொடுக்கும் - (பெய்து கொடுக்கும் என்பது பொருள்)
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment