06.02.172 – விசயமங்கை - தரையடைந்து வாடுகின்ற - (வண்ணம்)
2013-04-15
06.02.172 - தரையடைந்து வாடுகின்ற - விசயமங்கை
-------------------------
(வண்ணவிருத்தம்;
தனன தந்த தான தந்த
தனன தந்த தான தந்த
தனன தந்த தான தந்த .. தனதான )
தரைய டைந்து வாடு கின்ற
...... தமியன் என்றன் நாள்மு டிந்து
...... தனுவி ழுந்து பேரி ழந்து .. தமர்காவு
.. சடலம் என்ற பேர டைந்து
...... சடச டென்று மூளு கின்ற
...... தழல டைந்த கோலம் இங்கு .. நணுகாமுன்
கரைக டந்து பாயும் அன்பு
...... கருது நெஞ்சி லேப ரந்து
...... கழலி ரண்டில் ஏர்ம லிந்த .. மலர்தூவிக்
.. கரமி ரண்டு சேர நின்று
...... கரிய நஞ்சம் ஏறு கண்ட
...... களைக ணென்று பாடு பண்பை .. அருளாயே
விரைய தென்று நீற ணிந்து
...... விழியி ரண்டில் நீர்நி னைந்து
...... மிகவும் நைந்த தூய நெஞ்சம் .. உடையாராய்
.. விரவும் அன்பர் தீமை யின்றி
...... மிடியும் இன்றி வாழு கின்ற
...... விதம்வ ரங்கள் ஈயும் அங்கை .. உடையானே
விரைவு கொண்ட மேதி அந்தன்
...... விறல ழிந்து மாள இன்பம்
...... மிகவ டைந்து மாணி தங்க .. அளிபாதா
.. விடைய மர்ந்த தேவ வண்டு
...... விரவு கின்ற சோலை துன்று
...... விசய மங்கை மேவு கின்ற .. பெருமானே.
பதம் பிரித்து:
தரை அடைந்து வாடுகின்ற
...... தமியன் என்றன் நாள் முடிந்து,
...... தனு விழுந்து, பேர் இழந்து, .. தமர் காவு
.. சடலம் என்ற பேர் அடைந்து,
...... சடசடென்று மூளுகின்ற
...... தழல் அடைந்த கோலம் இங்கு .. நணுகாமுன்,
கரை கடந்து பாயும் அன்பு
...... கருது நெஞ்சிலே பரந்து,
...... கழல் இரண்டில் ஏர் மலிந்த .. மலர் தூவிக்,
.. கரம் இரண்டு சேர நின்று,
...... "கரிய நஞ்சம் ஏறு கண்ட;
...... களைகண்" என்று பாடு பண்பை .. அருளாயே;
விரையது என்று நீறு அணிந்து,
...... விழி இரண்டில் நீர், நினைந்து
...... மிகவும் நைந்த தூய நெஞ்சம் .. உடையாராய்,
.. விரவும் அன்பர் தீமை இன்றி,
...... மிடியும் இன்றி வாழுகின்ற
...... விதம் வரங்கள் ஈயும் அங்கை .. உடையானே;
விரைவு கொண்ட மேதி அந்தன்
...... விறல் அழிந்து மாள, இன்பம்
...... மிக அடைந்து மாணி தங்க .. அளி பாதா;
.. விடை அமர்ந்த தேவ; வண்டு
...... விரவுகின்ற சோலை துன்று
...... விசயமங்கை மேவுகின்ற .. பெருமானே.
தரை அடைந்து வாடுகின்ற தமியன் என்றன் நாள் முடிந்து - பூமியில் பிறந்து கதியின்றி வருந்துகின்ற என் ஆயுள் முடிந்து; (தரை - பூமி); (தமியன் - கதியற்றவன்); (நாள் - ஆயுள்);
தனு விழுந்து, பேர் இழந்து, தமர் காவு சடலம் என்ற பேர் அடைந்து - உடல் விழுந்து, பெயரை இழந்து, சுற்றத்தினரால் சுமக்கப்படுகின்ற சடலம் என்ற பெயரை அடைந்து; (தனு - உடல்); (தமர் - சுற்றத்தார்); (காவுதல் - சுமத்தல்);
சடசடென்று மூளுகின்ற தழல் அடைந்த கோலம் இங்கு நணுகாமுன் - சடசடவென்று மூண்டு எரியும் நெருப்பை அடைந்த நிலை இங்கே என்னை அடைவதன்முன்னமே; (சடசடெனல் - ஓர் ஒலிக்குறிப்பு);
கரை கடந்து பாயும் அன்பு கருது நெஞ்சிலே பரந்து - கரையைக் கடந்து பாயும் அன்புவெள்ளம் உன்னைக் கருதும் நெஞ்சில் பரவி; (கரை - எல்லை; நீர்க்கரை); (கடத்தல் - மேற்படுதல்); (பரத்தல் - பரவுதல்);
கழல் இரண்டில் ஏர் மலிந்த மலர் தூவிக், கரம் இரண்டு சேர நின்று - இரு திருவடிகளில் அழகு மிக்க பூக்களைத் தூவி, இரு கரங்களையும் குவித்து நின்று வணங்கி; (ஏர் - அழகு); (இரண்டு - இரண்டும் - உம்மைத்தொகை);
"கரிய நஞ்சம் ஏறு கண்ட; களைகண்" என்று பாடு பண்பை அருளாயே - "கரிய விடம் ஏறிய கண்டம் உடையவனே; என் பற்றுக்கோடே" என்று உன்னைப் போற்றிப் பாடும் பக்தியை எனக்கு அருள்வாயாக; (களைகண் - பற்றுக்கோடு; களைகண் என்பது அண்மைவிளியாக வந்தது);
விரையது என்று நீறு அணிந்து - வாசனையுடைய கலவைச்சாந்து போலத் திருநீற்றைப் பூசி; (விரை - கலவைச்சாந்து; வாசனை); (சம்பந்தர் தேவாரம் - 3.54.3 - "வெந்த சாம்பல் விரையெனப் பூசியே");
விழி இரண்டில் நீர், நினைந்து மிகவும் நைந்த தூய நெஞ்சம் உடையாராய் விரவும் அன்பர் - இருகண்களில் நீர் கசிய, உன்னை நினைந்து உருகுகின்ற தூய நெஞ்சத்தை உடையவர்களாகிச் சரணடைந்த பக்தர்கள்; (விரவுதல் - அடைதல்);
தீமை இன்றி, மிடியும் இன்றி வாழுகின்ற விதம் வரங்கள் ஈயும் அங்கை உடையானே - கேடு, துன்பம், வறுமை எவையும் இன்றி இன்புற்று வாழுமாறு வரங்கள் தரும் அழகிய கையை உடையவனே; (மிடி - வறுமை; துன்பம்); (அங்கை - அழகிய கை);
விரைவு கொண்ட மேதி அந்தன் விறல் அழிந்து மாள, இன்பம் மிக அடைந்து மாணி தங்க அளி பாதா - வேகம் உடைய எருமையை வாகனமாக உடைய காலன் வலிமை அழிந்து இறக்குமாறு அவனை உதைத்து, குறைவற்ற இன்பம் அடைந்து மார்க்கண்டேயர் என்றும் வாழ அருளிய திருவ்டியினனே; (மேதி - எருமை); (அந்தன் - காலன்); (விறல் - வலிமை; வெற்றி); (மாணி - அந்தணச்சிறுவன் - மார்க்கண்டேயர்); (தங்குதல் - உளதாதல்);
விடை அமர்ந்த தேவ - எருதை வாகனமாக விரும்பிய தேவனே; (அமர்தல் - விரும்புதல்);
வண்டு விரவுகின்ற சோலை துன்று விசயமங்கை மேவுகின்ற பெருமானே - வண்டுகள் பொருந்துகின்ற சோலை சூழ்ந்த விசயமங்கை என்ற தலத்தில் எழுந்தருளிய பெருமானே; (துன்றுதல் - செறிதல்; பொருந்துதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment