06.02.175 – கற்குடி (திருக்கற்குடி) - அந்தோ சென்றீர் - (வண்ணம்)
2013-10-17
06.02.175 - அந்தோ சென்றீர் - கற்குடி (திருக்கற்குடி)
(இக்காலத்தில் "உய்யக்கொண்டான்மலை") (திருச்சிராப்பள்ளி அருகே உள்ளது)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தந்தா தந்தா தந்தா தந்தா
தந்தா தந்தத் .. தனதான )
(தண்டேனுண்டே வண்டார் - திருப்புகழ் - திருச்செந்தூர்)
அந்தோ சென்றீர் என்றே பெண்டோ
.. .. டன்பா ரும்புத் .. திரர்கூவி
.. அம்போ தென்றே கந்தூய் வெங்கான்
.. .. அங்கே கொண்டிட் .. டெரியாமுன்
செந்தேன் மென்பூ இன்பால் கொண்டே
.. .. செந்தாள் வந்தித் .. திடுவேனே
.. தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய்
.. .. திண்போர் வெங்கட் .. பசுவேறீ
நந்தாய் அன்றோ என்றார் தஞ்சாய்
.. .. நஞ்சார் கண்டக் .. கறையானே
.. நம்பா எண்டோள் அண்டா என்றே
.. .. நைந்தார் தங்கட் .. கணியாகி
வந்தே தந்தீர் எந்தாய் தண்சேர்
.. .. மஞ்சா ருங்கற் .. குடியானே
.. மைந்தா பெண்பா கஞ்சேர் பண்பா
.. .. மங்கா இன்பப் .. பெருமானே.
பதம் பிரித்து:
"அந்தோ, சென்றீர்" என்றே பெண்டோடு
அன்பு ஆரும் புத்திரர் கூவி,
அம் போது என் தேகம் தூய், வெங்கான்
அங்கே கொண்டு இட்டு எரியாமுன்,
செந்தேன் மென்-பூ இன்-பால் கொண்டே
செந்தாள் வந்தித்திடுவேனே;
தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய்;
திண்-போர் வெங்கட் பசுவேறீ;
"நம் தாய் அன்றோ" என்றார் தஞ்சாய்,
நஞ்சு ஆர் கண்டக்-கறையானே;
"நம்பா, எண்-தோள் அண்டா" என்றே
நைந்தார் தங்கட்கு அணி ஆகி
வந்து ஏதம் தீர் எந்தாய்; தண்-சேர்
மஞ்சு ஆரும் கற்குடியானே;
மைந்தா; பெண் பாகஞ் சேர் பண்பா;
மங்கா இன்பப் பெருமானே.
"அந்தோ, சென்றீர்" என்றே பெண்டோடு அன்பு ஆரும் புத்திரர் கூவி - "ஐயோ போய்விட்டீரே" என்று மனைவியும் அன்புடைய மகன்களும் கூவி அழுது; (அந்தோ - அதிசய இரக்கச் சொல்); (பெண்டு - பெண்; மனைவி);
அம் போது என் தேகம் தூய் - அழகிய பூக்களை என் உடம்பின்மேல் தூவி; (அம் - அழகிய); (போது - பூ); (தூய் - தூவி); (அப்பர் தேவாரம் - 6.61.2 - "கடிமலர்தூய்த் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே");
வெங்கான் அங்கே கொண்டு இட்டு எரியாமுன் - கொடிய சுடுகாட்டில் கொண்டு வைத்து எரிப்பதன்முன்னமே; (வெம் கான் - கொடிய சுடுகாடு); (அப்பர் தேவாரம் - 5.47.3 - "வெங்கானி லாடுவர் கச்சி யேகம்பரே"); (அங்கே - அசை என்று கொள்ளலாம்);
செந்தேன் மென்-பூ இன்-பால் கொண்டே செந்தாள் வந்தித்திடுவேனே - சிறந்த தேன், மென்மையான பூக்கள், இனிய பால் இவற்றால் உன் சிவந்த திருவடியை வழிபடுவேன்; (கொண்டு - மூன்றாம் வேற்றுமை உருபு);
தென்பால் வெங்கோன் நெஞ்சே விண்டாய் - தென்திசைக்குத் தலைவனும் கொடியவனுமான காலனது மார்பை உதைத்துப் பிளந்தவனே; (தென் பால் - தென் திசை); (வெம்மை - கொடுமை); (விள்தல் - பிளத்தல்);
திண்-போர் வெங்கட் பசுவேறீ - வலிய, போர்செய்யும் சினம் மிக்க எருதை வாகனமாக உடையவனே; (திண் - வலிய); (வெங்கட்பசு - வெங்கண்+பசு); (வெங்கண் - கோபம் மிக்க); (பசு - இங்கே எருது என்ற பொருளில்); (சம்பந்தர் தேவாரம் - 2.85.9 - "பசுவேறும் எங்கள் பரமன்"); (ஏறீ - ஏறியவனே);
"நம் தாய் அன்றோ" என்றார் தஞ்சாய், நஞ்சு ஆர் கண்டக்-கறையானே - "எங்கள் தாயன்றோ நீ" என்று இறைஞ்சிய தேவர்களுக்குத் தஞ்சம் அளித்து, நஞ்சை உண்ட நீலகண்டனே; (தஞ்சு - தஞ்சம்; பற்றுக்கோடு); (ஆர்தல் - உண்தல்);
"நம்பா, எண்-தோள் அண்டா" என்றே நைந்தார் தங்கட்கு அணி ஆகி வந்து ஏதம் தீர் எந்தாய் - "நம்பனே, எட்டுப் புஜங்கள் உடைய கடவுளே" என்று மனம் உருகியவர்களுக்குப் பக்கத்தில் இருந்து அவர்களது துன்பத்தைத் தீர்க்கும் எம் தந்தையே; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்); (நைதல் - மனம் உருகுதல்); (அணி - சமீபத்தில்); (ஏதம் - துன்பம்; குற்றம்);
தண்-சேர் மஞ்சு ஆரும் கற்குடியானே - குளிர்ச்சி பொருந்திய மேகம் வந்தடையும் கற்குடி மலைமேல் எழுந்தருளியவனே; (தண் - குளிர்ச்சி); (மஞ்சு - மேகம்);
மைந்தா - வீரனே; அழகனே; (மைந்தன் - இளையோன்; வீரன்);
பெண் பாகஞ் சேர் பண்பா - உமையை ஒரு பாகமாக உடையவனே;
மங்கா இன்பப் பெருமானே - அழியாத இன்பமே வடிவமாக உடைய பெருமானே; (மங்குதல் - குறைதல்; கெடுதல்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment