06.04.026 – சுந்தரர் துதி - நீரிரு - மாமகிழ்வாய் - மடக்கு
2013-08-12
06.04.026) சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2013
நீரிரு - மாமகிழ்வாய் - மடக்கு
------------------------------
(வெண்பா)
நீரிரு வானதியை நீள்சடை வைத்தவரை
நீரிரு தாரத்தீர் சூளுறுங்கால் - நீரிரு
மாமகிழ்வாய் என்றுரைக்க வல்லவர்சொல் பாடவரும்
மாமகிழ்வாய் வந்தித்து வாழ்.
பதம் பிரித்து:
நீர் இரு வான் நதியை நீள்சடை வைத்தவரை,
"நீர் இரு தாரத்தீர்! சூளுறுங்கால் - நீர் இரும்
மா மகிழ்வாய்" என்று உரைக்க வல்லவர் சொல் பாட வரும்
மா மகிழ்வு; ஆய்; வந்தித்து வாழ்.
நீர் இரு-வான்-நதியை நீள்-சடை வைத்தவரை - நீர் நிறைந்த பெரிய கங்கையை நீண்ட சடையில் தாங்கியவரை; (வானதி - வான் நதி - கங்கை); (சம்பந்தர் தேவாரம் - 1.128 - திருவெழுகூற்றிருக்கை - "இருநதி யரவமோ டொருமதி சூடினை" - பெரிதாகிய கங்கையையும்...);
நீர் இரு தாரத்தீர் - நீங்கள் இரண்டு மனைவியரை உடையவர்;
சூளுறுங்கால் - (நான்) சபதஞ் செய்யும்போது;
நீர் இரும் மா மகிழ்-வாய் - நீங்கள் அழகிய மகிழமரத்தில் இருங்கள்; (வாய் - ஏழாம் வேற்றுமை உருபு);
என்று உரைக்க வல்லவர் சொல் பாட வரும் மா மகிழ்வு - என்று சொன்ன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தைப் பாடினால் பேரின்பம் வந்தடையும்;
ஆய்; வந்தித்து வாழ் - (இதனைச்) சிந்திப்பாயாக; சுந்தரரையும் சிவபெருமானையும் வந்தனைசெய்து வாழ்வாயாக.
இலக்கணக் குறிப்புகள்:
1) இருமை + வானதி = இருவானதி; (உதாரணம்: பெருமை - பெருங்கடல், பெருநகர், பெருவிருப்பு. அதுபோல், இருமை - இருங்கடல், இருநதி, இருவிசும்பு);
2) இரும் மா மகிழ்வாய் = இரு மா மகிழ்வாய்; (புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும்); (இரும் - இரு என்ற முன்னிலைப் பன்மை ஏவல் வினை);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment