Thursday, November 17, 2022

06.02.173 – ஆக்கூர் - படியாப் பேய்மனம் - (வண்ணம்)

06.02.173 – ஆக்கூர் - படியாப் பேய்மனம் - (வண்ணம்)

2013-09-03

06.02.173 - படியாப் பேய்மனம் - ஆக்கூர்

(இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனனாத் தானன தானன .. தனதான )


படியாப் பேய்மனம் ஏவிட .. அதனாலே

.. பதராய்ப் பார்மிசை நாளவை .. அழியாமல்

விடியாப் பேரிரு ளேபுக .. விரையாமல்

.. வெளைநீற் றாயுனை ஓதுணர் .. வருளாயே

முடியாச் சோதிய தாகிய .. முதல்வோனே

.. முடிமேற் போழ்மதி வானதி .. புனைவோனே

அடியாற் காலனை மார்பினில் .. உதையீசா

.. அணியாக் கூரினில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

படியாப் பேய்-மனம் ஏவிட அதனாலே

.. பதராய்ப் பார்மிசை நாள்-அவை அழியாமல்,

விடியாப் பேர் இருளே புக விரையாமல்,

.. வெளை நீற்றாய் உனை ஓது உணர்வு அருளாயே;

முடியாச் சோதியது ஆகிய முதல்வோனே;

.. முடிமேற் போழ்-மதி, வானதி புனைவோனே;

அடியாற் காலனை மார்பினில் உதை ஈசா;

.. அணி ஆக்கூரினில் மேவிய பெருமானே.


படியாப் பேய்-மனம் ஏவிட அதனாலே - அடங்காத பேய் போன்ற மனம் என்னைச் செலுத்த, அதன் காரணமாக; (படிதல் - கீழ்ப்படிதல்; அடங்குதல்); (ஏவுதல் - கட்டளையிடுதல்; உந்துதல்);

பதராய்ப் பார்மிசை நாள்-அவை அழியாமல் - பயனிலியாகிப் பூமியில் வாழ்நாளை வீணாக்காமல் ; (பதர் - உபயோகமற்றவன்; உள்ளீடற்ற நெல்); (பார் மிசை - பூமிமேல்); (அழித்தல் - செலவழித்தல்; கெடுத்தல்);

விடியாப் பேர் இருளே புக விரையாமல் - விடிவே இல்லாத பெரும் துன்பத்தில் புகுவதற்கு விரைந்து செல்லாமல்; (விடிதல் - உதயம் ஆதல்; முடிவுறுதல்); (பேர் இருள் - பெரும் துன்பம்);

வெளை நீற்றாய், உனை ஓது உணர்வு அருளாயே - வெண்ணீறு பூசியவனே, உன்னை ஓதும் அறிவை அருள்வாயாக; (வெளை - வெள்ளை - என்பது இடைக்குறையாக வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 1.15.6 - "விடையார் கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும்");

முடியாச் சோதியது ஆகிய முதல்வோனே - எல்லையற்ற ஜோதி ஆகிய முதல்வனே; (முடியாச் சோதி - அந்தம் இல்லாத சோதி);

முடிமேல் போழ்-மதி, வான்-நதி புனைவோனே - சென்னிமேல் பிறைச்சந்திரனையும் கங்கையையும் அணிந்தவனே; (போழ் மதி - நிலாத் துண்டம்); (போழ் - துண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 3.4.2 - "போழிள மதிவைத்த புண்ணியனே"); (வானதி - வான் நதி - கங்கை);

அடியால் காலனை மார்பினில் உதை ஈசா - திருவடியால் காலனை மார்பில் உதைத்த ஈசனே; (அடி - திருவடி; பாதம்);

அணி ஆக்கூரினில் மேவிய பெருமானே - அழகிய ஆக்கூரில் எழுந்தருளிய பெருமானே;


இலக்கணக் குறிப்பு:

அழித்தல் - அழியாமல் :

திறத்தல் - திறவாது / திறவாமல், விழித்தல் - விழியாது / விழியாமல், என்று எதிர்மறைப் பிரயோகத்தில் வருகின்றாற்போல், கழித்தல் - கழியாமல், அழித்தல் - அழியாமல், என்று வரும்.

ஆகவே, அழிதல், அழித்தல் என்ற இரண்டு வினைச்சொற்களும் அழியாமல் (அழியாது) என்றே எதிர்மறைப் பிரயோகத்தில் வரும்.

உதாரணம்: அரிச்சந்திர புராணம் - 1091 - "அழியாத ... முகத்திலெதிர் விழியாது நில்லு மெனவே"

சுந்தரர் தேவாரம் - பழியேன் (7.15.8), திறவீர் (7.95.9) போன்ற பிரயோகங்களைக் காணலாம்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment