06.02.178 – நாலூர் - நாணான் மேலோர் - (வண்ணம்)
2013-12-31
06.02.178 - நாணான் மேலோர் - (நாலூர்)
(நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்)
-------------------------
(வண்ணவிருத்தம்;
தானா தானா தானா தானா
தானா தானத் .. தனதான )
(தாமா தாமா லாபா லோகா - திருப்புகழ் - திருச்செங்கோடு)
நாணான் மேலோர் மேலாய் பேரே
.. நாவால் ஓதித் .. தமிழ்பாடி
வாணாள் வீணா காதே பூமேல்
.. வாழ்வே னாகப் .. பணியாயே
நாணா தூரூர் ஊணே தேர்வாய்
.. நாதா நேமிக் .. கரனேடச்
சேணார் தீயா னாய்தே னீயார்
.. சீர்நா லூரிற் .. பெருமானே.
பதம் பிரித்து:
நாள் நான் மேலோர் மேலாய் பேரே
.. நாவால் ஓதித் தமிழ் பாடி,
வாழ்நாள் வீண் ஆகாதே பூமேல்
.. வாழ்வேன் ஆகப் பணியாயே;
நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய்;
.. நாதா; நேமிக்-கரன் நேடச்
சேண் ஆர் தீ ஆனாய்; தேனீ ஆர்
.. சீர் நாலூரில் பெருமானே.
நாள் நான் மேலோர் மேலாய் பேரே நாவால் ஓதித் தமிழ் பாடி - மேலோர்க்கும் மேலான உன் திருநாமத்தையே நான் நாள்தோறும் நாவால் ஓதித், தேவாரம் திருவாசகம் முதலிய தெய்வத்தமிழ் பாடி; (நாள் - நாளும் - உம்மைத்தொகை); (மேலோர் - தேவர்);
வாழ்நாள் வீண் ஆகாதே பூமேல் வாழ்வேன் ஆகப் பணியாயே - என் வாழ்நாள் வீணாகாமல் இப்புவிமேல் பயனுள்ள வாழ்வு வாழ்வதற்கு அருள்புரிவாயாக; (பூ - பூமி); (பணித்தல் - அருளிச்செய்தல்; ஆணையிடுதல்);
நாணாது ஊர்ஊர் ஊணே தேர்வாய் - கூச்சமின்றிப் பல ஊர்களில் பிச்சை ஏற்பவனே; (ஊண் - உணவு); (தேர்தல் - தேடுதல்);
நாதா - தலைவனே;
நேமிக்-கரன் நேடச் சேண் ஆர் தீ ஆனாய் - சக்கராயுதத்தைக் கையில் தாங்கிய திருமால் தேடும்படி, வான் ஓங்கும் சோதி ஆனவனே; (நேமி - சக்கராயுதம்); (கரன் - கையினன்); (சம்பந்தர் தேவாரம் - 1.22.6 - "வடமுகம் உறைதரு கரன்" - வடவை முகத்தீ ஆகியன உறையும் திருக்கரங்களை உடையவன்); (நேடுதல் - தேடுதல்); (சேண் - உயரம்; ஆகாயம்); (ஆர்தல் - பொருந்துதல்);
தேனீ ஆர் சீர் நாலூரில் பெருமானே - தேனீக்கள் ஒலிக்கும் புகழ் உடைய நாலூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானே; (தேனீ - தேன் தொகுக்கும் வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்); (சீர் - புகழ்); (நாலூர் - பலாசவனநாதர் கோயில் - தேவார வைப்புத்தலம்);
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment