Wednesday, November 30, 2022

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2014-01-12

06.01.143 - சிவன் - ஏடிஎம் (ATM) - சிலேடை

-----------------------------------------------

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும்

ஏந்துபணங் கைச்சேரும் இட்டதுண்ணும் - நாந்திகைக்கச்

சிற்சமயம் இல்லையென்னுஞ் சேர்த்துவைத்த செல்வநதிப்

பொற்சடையன் ஏடிஎம் போல்.


சொற்பொருள்:

சார்தல் - 1. சென்றடைதல்; / 2. புகலடைதல்;

தப்புதல் - 1. தவறுதல் (To err, mistake, blunder); / 2. செய்யத் தவறுதல் (To fail to do);

எண்ணிடுதல் - 1. எண்களை இடுதல்; / 2. சிந்தித்தல்;

ஏந்துதல் - 1. மிகுதல்; / 2. தாங்குதல்; தரித்தல்;

பணம் - 1. நிதி; / 2. பாம்பு;

சிற்சமயம் - 1. சில நேரம்; / 2. சில மதங்கள்; (சில் - 1. சில; 2. அற்பமான);

செல்வநதி - செல்வம்+நதி;


ஏடிஎம் (ATM) (Automated Teller Machine - தானியங்கிப் பணம் வழங்கு இயந்திரம்):

சார்ந்தவர்கள் தப்பாமல் எண் இடத் தந்திடும் - சென்றடைந்தவர்கள் பிழையின்றித் தம் ரகசிய எண்ணை இட்டதும் கொடுக்கும்;

ஏந்து பணங் கைச் சேரும் - மிகுந்த பணம் கையைச் சேரும்;

இட்டது உண்ணும் நாம் திகைக்கச் சிற்சமயம் - அக்கருவியில் இட்ட நம் அட்டையை (ATM card) நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் விழுங்கிவிடும்;

நாம் திகைக்கச் சில் சமயம் இல்லை என்னும் சேர்த்து வைத்த செல்வம் - நாம் திகைக்கும்படி அது சில சமயங்களில் நம் கணக்கில் பணம் இருந்தாலும் அது கொடாது. (நாந்திகைக்கச் சிற்சமயம் - இடைநிலைத் தீவகமாக இப்படி இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளலாம்);


சிவன்:

சார்ந்தவர்கள் தப்பாமல் எண்ணிடத் தந்திடும் - புகலடைந்தவர்கள் தொடர்ந்து / முறைப்படி தியானிக்க அருள்புரிவான்;

ஏந்து பணம் கைச் சேரும் - தரிக்கின்ற பாம்பு கையில் இருக்கும்; (அப்பர் தேவாரம் - 6.97.7 - "பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்" - பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன்);

இட்டது உண்ணும் நாம் திகைக்க - நாம் வியப்புறும் வண்ணம் பிச்சை ஏற்று உண்பான்;

சில் சமயம் இல்லை என்னும் - சில சமயங்கள் சிவனை இல்லை என்று மறுக்கும்;

சேர்த்து வைத்த செல்வம் - அடியவர்களுக்கு அவன் வைப்புநிதி ஆவான்; (சம்பந்தர் தேவாரம் - 2.64.5 - "வைத்த நிதியே மணியே" - வைத்தநிதி - சேமவைப்பாக வைக்கப்பெற்ற செல்வம்);

நதிப்பொற்சடையன் - கங்கையைத் தரித்த பொற்சடையை உடைய சிவபெருமான்.


இலக்கணக் குறிப்புகள்:

1. சில்சமயம் என்பது எதுகைநோக்கிச் சிற்சமயம் என்று திரிந்தது;

(சில்சமயம் என்ற பிரயோகத்தை ஒத்த பிரயோகங்கள் -

குசேலோபாக்கியானம் - "கண்ணன் றனைக்கண்... எனச் சில்பொழு துள்ளத் தெண்ணி";

நற்றிணை - 42 - கீரத்தனார் - "மறத்தற் கரிதால் பாக! ..... சில்போது கொண்டு பல்குரல் அழுத்திய");


2. செய்யும் என்ற வாய்பாட்டு வினைமுற்று விகுதி:

"செய்யும்" என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் உள்ள "உம்" விகுதி நிகழ்காலமும், எதிர்காலமும் உணர்த்தும். படர்க்கை ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றில் மட்டுமே இது இடம்பெறும்.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment