06.01 – சிவன் சிலேடைகள்
2013-03-26 (பங்குனி உத்தரம்)
06.01.139 - சிவன் - முருகன் - சிலேடை
-------------------------------------------------------
நெற்றிக்கண் தோன்றிடும் நீர்தாங்கும் இவ்வுலகு
சுற்றிவரு மான்மலரான் தோத்திரிக்கும் - பெற்றியினன்
காவடி வேலன்பன் மாமலையாள் மைந்தனவன்
சேவற் கொடியன் சிவன்.
சொற்பொருள்:
மான்மலரான் - 1. மான் மலரான்; / 2. மால் மலரான்;
மான் - பெரியோன்; தலைவன்; (எம்மான் முதலிய பிரயோகங்களைக் காண்க);
தோத்திரித்தல் - துதித்தல்;
காவடிவேலன்பன்மா - 1. கா வடிவேலன், பல் மா; / 2. கா வடிவு ஏல் அன்பன், மா;
கா - காத்தல்;
வடி - கூர்மை;
ஏல் - ஏற்றல்;
மலையாள் - 1. மலை ஆள் (மலையை ஆளும்); / 2. மலையாள் (பார்வதி);
மைந்தன் - 1. மகன்; இளைஞன்; / 2. கணவன்;
முருகன்:
நெற்றிக்கண் தோன்றிடும், நீர் தாங்கும்; இவ்வுலகு
சுற்றிவரு மான்; மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;
கா வடிவேலன்; பல் மா மலை ஆள் மைந்தன்; அவன்
சேவற் கொடியன் சிவன்.
(ஈசனின்) நெற்றிக்கண்ணில் பொறியாகத் தோன்றியவன், கங்கையால் தாங்கப்பெற்றவன்; (கனி வேண்டி மயில்மேல் ஏறி) உலகைச் சுற்றிவந்த பெருமான்; (பிரணவப் பொருளை அறியாத பிரமனைச் சிறையில் அடைத்துப்பின்) பிரமனால் துதிக்கப்படும் பெருமையை உடையவன்;
காக்கும் கூரிய வேலை உடையவன்; பல மலைகளில் வீற்றிருக்கும் குமரன் (குன்றுதோறாடும் குமரன்); சேவற்கொடி உடைய முருகன்.
(இவ்வுலகு சுற்றிவருமான்மலரான் = "இவ்வுலகு சுற்றிவருமால்; மலரான்" என்றும் கொள்ளலாம். 'சுற்றிவருமால்' என்பதில் 'ஆல்' என்பதை அசையாகக் கொள்ளலாம்);
சிவன்:
நெற்றிக்கண் தோன்றிடும்; நீர் தாங்கும்; இவ்வுலகு
சுற்றிவரும்; மால், மலரான் தோத்திரிக்கும் பெற்றியினன்;
கா வடிவு ஏல் அன்பன்; மாமலையாள் மைந்தன்; அவன்
சேவற் கொடியன் சிவன்.
நெற்றியிற் கண் தோன்ற, முடிமேல் கங்கையைத் தாங்குவான்; உலக மக்கள் வலம்செய்து வணங்குவர்; (அடிமுடி தேடிய) திருமாலாலும் பிரமனாலும் துதிக்கப்படும் பெருமையினான்; (அன்பர் விரும்பிய வண்ணம் அவர்களைக்) காக்கும் உருவம் ஏற்கும் அன்புடையவன்; அழகிய மலைமகள் கணவன்; சிவபெருமான்;
வி. சுப்பிரமணியன்
-------------------------------- -------------------------------
No comments:
Post a Comment