Showing posts with label கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்). Show all posts
Showing posts with label கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்). Show all posts

Saturday, September 25, 2021

P.270 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்) - ஏலக் குழலாளை

2015-01-19

P.270 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)

(நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(அறுசீர் விருத்தம் - "காய் காய் காய் காய் மா தேமா" அமைப்பு;

"மா காய் மா காய் மா தேமா" என்று நோக்கலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 2.72 - "பந்தார் விரன்மடவாள்")


1)

ஏலக் குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை எழில்மி டற்றில்

நீல மணியானை நேயர் மனக்கோயில் நீங்கா தானைச்

சூலத் தொடுமானும் சுடரும் தரித்தானைச் சுரும்பொ லிக்கும்

கோலப் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஏலக்குழலாளை இடப்பால் மகிழ்ந்தானை - மயிர்ச்சாந்து அணிந்த கூந்தலை உடைய உமையை இடப்பக்கம் விரும்பியவனை; (ஏலம் - மயிர்ச்சாந்து);

எழில்-மிடற்றில் நீல-மணியானை - அழகிய கண்டத்தில் கருமணி உடையவனை;

நேயர் மனக்கோயில் நீங்காதானை - பக்தர்களின் மனம் என்ற கோயிலில் என்றும் உறைபவனை;

சூலத்தொடு மானும் சுடரும் தரித்தானை - கையில் சூலத்தையும் மானையும் தீயையும் ஏந்தியவனை; (சுடர் - தீ);

சுரும்பு ஒலிக்கும் கோலப் பொழில் சூழ்ந்த கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - வண்டுகள் ரீங்காரம் செய்யும் அழகிய சோலை சூழ்ந்த திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக; (சுரும்பு - வண்டு);


2)

துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பலபாடித் தொழுபி ரானை

மன்றிற் றிருநட்டம் மகிழும் பெருமானை மழவெள் ளேற்று

வென்றிக் கொடியானை மேவார் புரமூன்றும் வேவ எய்த

குன்றச் சிலையானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


துன்றிச் சுரரெல்லாம் துதிகள் பல பாடித் தொழு-பிரானை - நெருங்கித் தேவர்களெல்லாம் பல துதிகள் பாடி தொழும் தலைவனை;

மன்றில் திருநட்டம் மகிழும் பெருமானை - அம்பலத்தில் திருக்கூத்து ஆடும் பெருமானை; (நட்டம் - நடனம்);

மழ-வெள்-ஏற்று வென்றிக் கொடியானை - இளைய, வெண்ணிற இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடி உடையவனை; (மழ - இளைய); (வென்றி - வெற்றி);

மேவார் புரம் மூன்றும் வேவ எய்த குன்றச்-சிலையானைக் - பகைத்த அசுரர்களது முப்புரமும் வெந்து அழியும்படி எய்த மேருவில்லை ஏந்தியவனைக்; (மேவார் - பகைவர்); (சிலை - வில்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


3)

பன்றி மருப்பணிந்த பவளத் திருமார்பில் பாம்பு மாலை

ஒன்றும் உடையானை ஒற்றை விடையானை ஓது வார்க்கு

நன்று மிகநல்கும் நங்கள் பெருமானை நறவம் நாறு

கொன்றை முடியானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பன்றி-மருப்பு அணிந்த பவளத் திருமார்பில் பாம்பு-மாலை ஒன்றும் உடையானை - பன்றியின் கொம்பை அணிந்த அணிந்த பவளம் போன்ற திருமார்பில் பாம்பையும் மாலை போல அணிந்தவனை; (மருப்பு - கொம்பு);

ஒற்றை விடையானை - ஒப்பற்ற இடபவாகனம் உடையவனை; (ஒற்றை - ஒப்பற்ற);

ஓதுவார்க்கு நன்று மிக நல்கும் நங்கள் பெருமானை - துதிகள் பாடுவார்க்கு மிகுந்த நமையை அருளும் நம்பெருமானை; (அப்பர் தேவாரம் - 4.77.3 - "அளப்பில கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளுமாறே");

நறவம் நாறு கொன்றை முடியானை - வாசனை கமழும் கொன்றைமலரைச் சென்னியில் சூடியவனை; (நறவம் - வாசனை; தேன்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


4)

தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அருமுனிக்குத் துன்பம் செய்ய

அடுக்கும் அடற்கூற்றின் அகலம் தனிலுதைத்தங் கருளி னானைக்

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் கரவி லாது

கொடுக்கும் கரத்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


தொடுக்கும் சரம்சாத்தித் தொழுத அருமுனிக்குத் துன்பம் செய்ய அடுக்கும் அடல்-கூற்றின் அகலம்தனில் உதைத்து அங்கு அருளினானைக் - தொடுத்த மாலைகளைச் சூட்டி வணங்கிய அரிய முனிவரான மார்க்கண்டேயரைக் கொல்ல நெருங்கிய வலிய கொடிய காலனது மார்பில் உதைத்து அருளியவனை; (சரம் - மாலை); (அடுத்தல் - நெருங்குதல்); (அடல் - கொலை; வலிமை); (அகலம் - மார்பு); (அங்கு - அவ்விடம்; அசை என்றும் கொள்ளலாம்);

கடுக்கும் கடல்நஞ்சைக் கரந்த மிடற்றானைக் - எவரும் வெறுக்கும் கசக்கின்ற ஆலகாலத்தை உண்டு ஒளித்த கண்டனை; (கடுத்தல் - மிகுதல்; வெறுத்தல்; கசத்தல்); (கரத்தல் - ஒளித்தல்); (மிடறு - கண்டம்);

கரவு இலாது கொடுக்கும் கரத்தானைக் - ஒளித்தல் இன்றி வாரி வழங்கும் கரத்தை உடையவனை; (கரவு - வஞ்சனை; மறைத்தல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


5)

இனியெம் துணைநீயென் றேத்தும் அடியார்உண் இன்பத் தேனைத்

தனிவெள் விடையானைத் தக்கன் பெருவேள்வி தனைய ழித்த

முனிவும் உடையானை முக்கட் பெருமானை முடியின் மீது

குனிவெண் மதிசூடும் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


"இனி எம் துணை நீ" என்று ஏத்தும் அடியார் உண்- இன்பத்தேனைத் - "இனி எங்கள் துணை நீயே" என்று போற்றி வணங்கும் பக்தர்கள் உண்ணும் இன்பத்தேன் ஆனவனை; - (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.3 - "நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள்நெக ஆனந்தத் தேன்சொரியும்");

தனி-வெள்-விடையானைத் - ஒப்பற்ற வெண்ணிட எருதை வாகனமாக உடையவனை; (தனி - ஒப்பற்ற);

தக்கன் பெருவேள்விதனை அழித்த முனிவும் உடையானை - தக்கன் செய்த பெரிய வேள்வியை அழித்த கோபம் உடையவனை; (முனிவு - கோபம் - மறக்கருணை); (உம் - அசை; எச்சவும்மை என்றும் கொள்ளல் ஆம்; அறக்கருணையும் மறக்கருணையும்);

முக்கட் பெருமானை - முக்கண்ணுடைய பெருமானை;

முடியின்மீது குனி-வெண்-மதி சூடும் - சென்னிமேல் வளைந்த வெண்திங்களைச் சூடிய; (குனிதல் - வளைதல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


6)

பாதி மலையான்றன் பாவை வடிவேற்ற பரமன் தன்னை

ஆதி நடுவாகி அந்தம் எனவாகும் அளவி லானைப்

பூதிப் பொலிவோடு பூக்கள் பலதூவிப் போற்றிப் பாடிக்

கோதில் அடியார்சேர் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பாதி மலையான்-தன் பாவை வடிவு ஏற்ற பரமன்-தன்னை - திருமேனியில் ஒரு பாதி மலைமங்கை வடிவம் ஏற்ற பரமனை; (2.42.3 - "மாமலையான்றன் மடந்தை தோள் ஆகம் பாகமாப் புல்கினான்");

ஆதி நடுவாகி அந்தம் என ஆகும் அளவு-இலானைப் - முதல் நடு இறுதி என்று ஆகும் அளவற்றவனை; (சிவபுராணம் - அடி-73 - "ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே");

பூதிப் பொலிவோடு பூக்கள் பல தூவிப் போற்றிப் பாடிக் கோது-இல் அடியார் சேர் - திருநீற்றைப் பூசிப் பல பூக்களத் தூவிப் போற்றி பாடிக் குற்றமற்ற அடியார்கள் சேர்கின்ற; (பூதி - சாம்பல் - திருநீறு); (கோது - குற்றம்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


7)

பறைகள் ஒலிக்கநடம் பயிலும் பசுபதியைப் பணிந்து வானோர்

இறைவ எமக்கருளாய் என்று துதிசெய்ய இரங்கி நஞ்சுண்

கறைகொள் மிடற்றானைக் கையால் மலர்தூவிக் கருது வார்தம்

குறைகள் களைவானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பறைகள் ஒலிக்க நடம்-பயிலும் பசுபதியைப் பணிந்து, வானோர் "இறைவ; எமக்கு அருளாய்" என்று துதிசெய்ய - பறைகள் ஒலிக்கக் கூத்தாடும் பசுபதியை வணங்கித் தேவர்கள் "இறைவனே! எங்களுக்கு அருள்க" என்று வேண்ட; (* பசுபதீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

இரங்கி நஞ்சு-ண் கறைகொள் மிடற்றானைக் - இரங்கி ஆலகாலத்தை உண்ட கறையணிந்த கண்டனை; (மிடறு - கண்டம்);

கையால் மலர் தூவிக் கருதுவார்தம் குறைகள் களைவானைக் - கையால் மலர்களைத் தூவித் தியானிப்பவர்களது குறைகளைத் தீர்ப்பவனை;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


8)

கருவம் மிகவாகிக் கயிலை மலைபேர்த்த கார ரக்கன்

வெருவ மலைமீது விரல்வைத் தடர்த்தானை வேதத் தானை

அரவம் மலிகங்கை அணிகூ விளமாலை அரவம் கொன்றை

குரவம் புனைந்தானைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


கருவம் மிகவாகிக் கயிலைமலை பேர்த்த கார்-ரக்கன் வெருவ மலைமீது விரல்வைத்து அடர்த்தானை - கர்வம் மிகுந்து கயிலைமலையைப் பெயர்த்த கரிய நிறத்து இராவணன் அஞ்சுமாறு கயிலைமலைமேல் திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவனை; (கார் - கரியநிறம்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வேதத்தானை - வேதத்தின் பொருள் ஆனவனை;

அரவம் மலி-கங்கை, அணி கூவிள-மாலை, அரவம், கொன்றை, குரவம் புனைந்தானை - ஒலி மிகுந்த கங்கையையும், அழகிய வில்வமாலையையும், பாம்பையும், கொன்றைமலரையும், குராமலரையும் சூடியவனை; (அரவம் - 1. ஒலி; 2. பாம்பு); (கூவிளம் - வில்வம்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


9)

நாற்ற மலர்மேலான் நாரா யணனிவர்கள் நண்ண ஒண்ணாத்

தோற்றச் சுடரானைச் சுடலைப் பொடியேறும் தோளி னானை

ஆற்றுச் சடையானை ஆல நிழலானை அன்பர் வாழக்

கூற்றை உதைகோனைக் கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


நாற்றமலர்-மேலான் நாராயணன் இவர்கள் நண்ண ஒண்ணாத் தோற்றச் சுடரானை - வாசத்தாமரைமேல் இருக்கும் பிரமன் திருமால் இவர்களால் அடைய இயலாத தோற்றம் உடைய தீ ஆனவனை; (தோற்றம் - புகழ்; வடிவம்);

சுடலைப் பொடிறும் தோளினானை - சுடுகாட்டுச் சாம்பலைப் புஜங்களில் பூசியவனை;

ஆற்றுச்-சடையானை - கங்கையை அணிந்த சடையினனை;

ஆலநிழலானை - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை;

அன்பர்க்காகக் கூற்றை உதை-கோனைக் - மார்க்கண்டேயர் என்றும் இறவாமல் வாழக் காலனை உதைத்த தலைவனை;

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


10)

பொக்கம் மலிநெஞ்சர் பொய்கள் பலசொல்லும் புல்லர் மார்க்கம்

துக்கம் மிகவாக்கும் துரிசர் உரைநீங்கித் தூவெண் ணீறும்

அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை அரவத் தோடு

கொக்கின் இறகுமணி கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


பொக்கம் மலி-நெஞ்சர் பொய்கள் பல சொல்லும் புல்லர் மார்க்கம் துக்கம் மிகக்கும் - ;(பொக்கம் - வஞ்சகம்); (புல்லர் - கீழோர்);

துரிசர் உரைநீங்கித் தூ-வெண்ணீறும் அக்கும் அணிவார்தம் அல்லல் களைவானை - ; (துரிசர் - குற்றம் உடையவர்; துரிசு - குற்றம்); (அக்கு - உருத்திராக்கம்);

அரவத்தோடு கொக்கின் இறகும் அணி - பாம்பையும் கொக்கிறகையும் அணிந்த; (கொக்கிறகு - 1. ஒரு பூவின் பெயர்; 2. கொக்கு வடிவுடைய குரண்டாசுரனைக் கொன்று அவ்விறகைச் சூடியது);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


11)

ஒளிகொள் பொடிபூசி ஒப்பில் தமிழ்பாடி உள்கில் ஆற்ற

எளியன் எனவாகி இன்னல் வினைதீர்க்கும் இறைவன் தன்னை

அளிகள் மண(ம்)நாறும் அலரின் மதுமாந்தி ஆர்த்து லாவும்

குளிரும் பொழில்சூழ்ந்த கொண்டீச் சரத்தானைக் கூறு நாவே.


ஒளிகொள் பொடி பூசி, ஒப்பு இல் தமிழ் பாடி உள்கில் ஆற்ற எளியன் என ஆகி இன்னல் வினை தீர்க்கும் இறைவன்தன்னை - ஒளியுடைய திருநீற்றைப் பூசி, ஒப்பற்ற தமிழ்ப்பாமாலைகளைப் பாடித் தியானித்தால், (அந்த அடியார்களல்) மிகவும் எளிதில் அடையப்படுபவன் ஆகித், துன்பம் செய்யும் வினையைத் தீர்க்கும் இறைவனை; (பொடி - திருநீறு); (உள்குதல் - நினைதல்); (ஆற்ற - மிக); (இன்னல் வினை - 1. துன்பம் செய்யும் வினை; 2. துன்பத்தையும் வினையையும்);

அளிகள் மண(ம்) நாறும் அலரின் மது மாந்தி ஆர்த்து உலாவும் குளிரும் பொழில் சூழ்ந்த - வண்டுகள் மணம் கமழும் பூக்களின் தேனை உண்டு ஒலித்து உலாவுகின்ற குளிர்ந்த சோலை சூழ்ந்த; (அளி - வண்டு); (அலர் - பூ); (மாந்துதல் - உண்தல்); (ஆர்த்தல் - ஒலித்தல்);

கொண்டீச்சரத்தானைக் கூறு நாவே - திருக்கொண்டீச்சரத்தில் உறைபவனை நாவே புகழ்வாயாக;


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு :

அறுசீர் விருத்தம் - மா காய் மா காய் மா தேமா - என்ற வாய்பாடு.

இதனில் 2-ஆம், 4-ஆம் சீர்கள் புளிமாங்காய் / கருவிளங்காய்.

இது - காய் காய் காய் காய் மா தேமா - என்ற அறுசீர் விருத்த அமைப்பை ஒட்டியது. ஆனால், அதனில் காய்ச்சீர் வரும் இடங்களுள், 1-ஆம், 3-ஆம் சீர்களில் பெரும்பாலும் மாச்சீர்கள் அமைய வருவது. அவ்வாய்பாட்டில் காய்ச்சீர் வரும் இடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும். அப்படி அமைந்தது இப்பதிகம். உதாரணங்கள்:

சம்பந்தர் தேவாரம் - 2.72.1 - "பந்தார் விரன்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறி";

சம்பந்தர் தேவாரம் - 1.130.1 - "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மே லுந்தி";


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

Tuesday, August 24, 2021

P.266 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்) - பண்டரங்கனை

2014-12-28

P.266 - கொண்டீச்சரம் (திருக்கொண்டீஸ்வரம்)

(நன்னிலத்தை அடுத்து உள்ள தலம்)

-----------------------

(கலிவிருத்தம் - திருக்குறுந்தொகை அமைப்பில்)

(திருநாவுக்கரசர் தேவாரம் - 5.81.1 - "சிட்டனைச் சிவனை");

(திருஞானசம்பந்தர் தேவாரம் - 3.50.1 - "விரும்புந் திங்களும்");



1)

பண்ட ரங்கனைப் பார்வதி பங்கனை

அண்டர் அண்டனை அன்பின் உருவனைக்

கொண்டற் கண்டனைக் கொண்டீச் சரவனைத்

தொண்ட ராய்த்தொழு வார்க்கிலை துன்பமே.


பண்டரங்கனைப் - பாண்டரங்கக் கூத்தனை; (பண்டரங்கன் - பாண்டரங்கக் கூத்தாடுவோன்); (பாண்டரங்கம் - கூத்துப் பதினொன்றனுள் திரிபுரத்தை அழித்த போது சிவபிரான் வெண்ணீறணிந்து ஆடியது);

பார்வதி பங்கனை - உமைபங்கனை;

அண்டர-அண்டனை - தேவதேவனை;

அன்பின் உருவனைக் - அன்பே வடிவானவனை;

கொண்டற் கண்டனைக் - மேகம் போன்ற நிறம் திகழும் கண்டத்தை உடையவனை; (கொண்டல் - மேகம்); (திருக்கோவையார் - 23.10 - "திண்டோட்கொண்டற் கண்டன்");

கொண்டீச்சரவனைத் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

தொண்டராய்த் தொழுவார்க்கு இலை துன்பமே - தொண்டர்களாகி வணங்குபவர்களுக்குத் துன்பம் இல்லை;


2)

சூல னைப்புலித் தோலனை முப்புரி

நூல னைப்பத்து நூறு பெயரனைக்

கோல வார்சடைக் கொண்டீச் சரவனை

ஏலு மாறு வணங்குவார்க் கின்பமே.


சூலனைப், புலித்தோலனை, முப்புரி நூலனைப் - சூலபாணியைப், புலித்தோல் ஆடை அணிந்தவனை, பூணூல் திகழும் மார்பினனை;

பத்து நூறு பெயரனை - ஆயிரம் திருநாமங்கள் உடையவனை; (சம்பந்தர் தேவாரம் - 1.56.11 - "பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரனை");

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

ஏலுமாறு வணங்குவார்க்கு இன்பமே - இயன்றவகையில் (/ பொருந்துமாறு) வணங்கும் பக்தர்களுக்கு இன்பமே; (அப்பர் தேவாரம் - 5.43.9 - "காலமான கழிவதன் முன்னமே ஏலுமாறு வணங்கிநின்று ஏத்துமின்");


3)

மன்றில் ஆடியை மாதவர் நெஞ்சினில்

நின்ற சோதியை நெற்றியிற் கண்ணனைக்

குன்ற வில்லியைக் கொண்டீச் சரவனைச்

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே.


மன்றில் ஆடியை - அம்பலக் கூத்தனை;

மாதவர் நெஞ்சினில் நின்ற சோதியை - பெரும்-தவத்தோர் நெஞ்சில் குடிகொண்ட ஜோதிவடிவினனை;

நெற்றியில் கண்ணனைக் - நெற்றிக்கண் உடையவனை;

குன்ற-வில்லியைக் - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

சென்று வாழ்த்திடத் தீவினை தீருமே - சென்று வழிபட்டால் தீவினை நீங்கும்;


4)

பெற்றம் ஏறும் பிரானைப் பெருவிடம்

துற்ற கண்டனைத் தூமதி சூடியைக்

குற்றம் இல்லியைக் கொண்டீச் சரவனைப்

பற்றி னார்தம் பழவினை பாறுமே.


பெற்றம் ஏறும் பிரானைப் - இடபவாகனனை; (பெற்றம் - இடபம்);

பெருவிடம் துற்ற கண்டனைத் - ஆலகாலத்தை உண்ட நீலகண்டனை; (துற்றுதல் - உண்ணுதல்);

தூமதி சூடியைக் - வெண்மையான சந்திரனைச் சூடியவனை;

குற்றம் இல்லியைக் - மாசற்றவனை;

கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

பற்றினார்தம் பழவினை பாறுமே - சரணடைந்த பக்தர்களது பழைய வினை அழியும்; (பாறுதல் - அழிதல்);


5)

போதை இட்டடி போற்றிய வானவர்

வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக்

கோதை பங்கனைக் கொண்டீச் சரவனை

வேத னைத்தொழ வீடும் வினைகளே.


போதை இட்டு அடி போற்றிய வானவர் வாதை தீர்த்த வரைச்சிலை ஏந்தியைக் - பூக்களைத் தூவி வழிபட்ட தேவர்களது துன்பத்தை தீர்த்த, மேருவில் ஏந்தியவனை; (போது - மலர்); (வாதை - துன்பம்); (வரை - மலை); (சிலை - வில்);

கோதை பங்கனைக் - உமைபங்கனை; (கோதை - பெண்);

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

வேதனைத் - வேதநாயகனை;

தொழ வீடும் வினைகளே - வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


6)

நாறு கூவிளம் நாகம் இளமதி

ஏறு செஞ்சடை ஏந்தலை மேனியிற்

கூறு பெண்ணனைக் கொண்டீச் சரவனைக்

கூறு வாரைக் குறுகா வினைகளே.


நாறு கூவிளம் நாகம் இளமதி ஏறு செஞ்சடை ஏந்தலை - மணம் கமழும் வில்வம், பாம்பு, பிறை இவற்றையெல்லாம் சிவந்த சடையின்மேல் அணிகின்ற தலைவனை; (கூவிளம் - வில்வம்); (ஏந்தல் - பெருமையிற் சிறந்தவன்);

மேனியில் கூறு பெண்ணனைக் - திருமேனியில் ஒரு பாதி பெண் ஆனவனை;

கொண்டீச்சரவனைக் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

கூறுவாரைக் குறுகா வினைகளே - துதிக்கும் பக்தர்களை வினைகள் நெருங்கமாட்டா; (குறுகுதல் - அணுகுதல்);


7)

அமரர் கோனை அடிதொழு மாணிக்கா

நமனைச் செற்றருள் நம்பனை மஞ்ஞையூர்

குமரன் தாதையைக் கொண்டீச் சரவனை

விமல னைத்தொழ வீடும் வினைகளே.


அமரர் கோனை - தேவர்கள் தலைவனை;

அடிதொழு மாணிக்கா நமனைச் செற்றருள் நம்பனை - வணங்கிய மார்க்கண்டேயரைக் காப்பதற்காகக் காலனை உதைத்த நம்பனை; (மாணிக்கா - மாணிக்காக - மார்க்கண்டேயருக்காக); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

மஞ்ஞை ஊர் குமரன் தாதையைக் - மயில்மேல் ஏறும் முருகனுக்குத் தந்தையை; (மஞ்ஞை - மயில்); (ஊர்தல் - ஏறுதல்); (தாதை - தந்தை);

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விமலனைத் தொழ வீடும் வினைகளே - தூயனை வழிபட்டால் வினை அழியும்; (வீடுதல் - அழிதல்);


8)

இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன்

முடிபத் திற்றிட ஊன்றிய மூர்த்தியைக்

கொடிமேல் ஏற்றனைக் கொண்டீச் சரவனை

அடிக ளைத்தொழும் அன்பருக் கின்பமே.


இடிபோல் கத்தி எழில்மலை பேர்த்தவன் - இடிபோலப் பெருமுழக்கம் செய்து அழகிய கயிலைமலையைப் பெயர்த்த இராவணனுடைய; (சம்பந்தர் தேவாரம் - 1.112.8 - "எழின்மலை எடுத்த வல்லிராவணன்றன் முழுவலி அடக்கிய முதல்வனகர்");

முடி பத்து இற்றிட ஊன்றிய மூர்த்தியைக் - பத்துத்தலைகளும் நசுங்கும்படி திருப்பாதவிரலை ஊன்றிய பெருமானை; (இறுதல் - அழிதல்);

கொடிமேல் ஏற்றனை - இடபச்-சின்னம் திகழும் கொடியை உடையவனை;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

அடிகளைத் தொழும் அன்பருக்கு இன்பமே. - இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு இன்பமே; (அடிகள் - கடவுள்);


9)

அரவின் மேல்துயில் அச்சுதன் நான்முகன்

பரவ நின்ற பரஞ்சுட ரைக்கொன்றை

குரவம் சூடிய கொண்டீச் சரவனை

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே.


அரவின்மேல் துயில் அச்சுதன் நான்முகன் பரவ நின்ற பரஞ்சுடரைக் - பாம்பின்மேல் பள்ளிகொள்ளும் திருமாலும் பிரமனும் (அடிமுடி தேடிப்) போற்றுமாறு ஓங்கிய மேலான ஜோதியை; (பரவுதல் - துதித்தல்);

கொன்றை குரவம் சூடிய - கொன்றைமலரையும் குராமலரையும் சூடிய;

கொண்டீச்சரவனை - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

விரவும் அன்பர்தம் வெவ்வினை வீடுமே - அடையும் பக்தர்களது கொடியவினை அழியும்; (விரவுதல் - அன்பு கலந்து ஒன்றாதல்); (சம்பந்தர் தேவாரம் - 2.94.5 - "பரவுவாரையும் உடையார் ... விரவுவாரையும் உடையார்");


10)

அல்லி ருக்கும் அகத்தினர் பொய்ம்மொழி

புல்லர் புன்னெறி அல்லற் புகுத்துமால்

கொல்லை ஏற்றனைக் கொண்டீச் சரவனைச்

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே.


அல் இருக்கும் அகத்தினர் - வஞ்சமும் அறியாமையும் நிறைந்த மனத்தை உடையவர்கள்; (அல் - இருள்; அறியாமை; மயக்கம்); (அகம் - மனம்);

பொய்ம்மொழி புல்லர் புன்னெறி - பொய்களையே உரைக்கும் கீழோர்களது சிறுநெறிகள்;

அல்லல் புகுத்துமால் - துன்பத்தில் சேர்க்கும்; (அல்லல் - துன்பம்); (ஆல் - அசைச்சொல்);

கொல்லை ஏற்றனைக் - இடபவாகனனை; (கொல்லை ஏறு - 1. "கொல்லேறு" என்பது ஐகாரச் சாரியை பெற்று , "கொல்லை ஏறு" என நின்றது. 2. கொல்லை - முல்லைநிலக்காடு; முல்லை நிலத்துக்குரிய இடபம். முல்லைக்குத் திருமால் தெய்வமாதலால் திருமாலை ஏறாக உடையவன் என்றும் அமையும்);

கொண்டீச்சரவனைச் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

சொல்ல வல்லவர் தொல்வினை தீருமே - துதிப்பவர்களது பழவினைகள் தீரும்;


11)

ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை

நாட்டம் மூன்றுடை யானை நகையினாற்

கோட்டை மூன்றெரி கொண்டீச் சரவனைப்

பாட்டி னால்தொழு வார்வினை பாறுமே.


ஓட்டை ஏந்தி உழலும் ஒருவனை - பிரமனது மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சைக்குத் திரியும் ஒப்பற்றவனை;

நாட்டம் மூன்று உடையானை - முக்கண்ணனை; (நாட்டம் - கண்);

நகையினால் கோட்டை மூன்று எரி - சிரிப்பினால் முப்புரங்களை எரித்த; (நகை - சிரிப்பு);

கொண்டீச்சரவனைப் - திருக்கொண்டீச்சரத்தில் உறைகின்ற பெருமானை;

பாட்டினால் தொழுவார் வினை பாறுமே - துதிகள் பாடி வழிபடுவார்களது வினைகள் அழியும்; (பாறுதல் - அழிதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.57.5 - "வேற்காடு பாட்டினாற் பணிந்தேத்திட வல்லவர் ஓட்டினார் வினை ஒல்லையே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------